Thursday, 6 July 2017

அதிகமாகத் தண்ணீர் குடிப்பது ஆபத்தா ?


ஹெல்த்/அமிர்தமும் அளவே..!

ங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற மணிகண்டனுக்கு திடீரென ஒருநாள் தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் எல்லாம் நார்மலாக இருந்தன. அவருக்கு சோடியம் உள்ளிட்ட எலக்ட்ரோலெட் அளவைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை செய்தபோது சோடியம் அளவு மிகக் குறைவாக இருந்தது. அவருக்கு ஹைப்போநேட்ரிமியா (Hyponatremia) எனும் பிரச்னை இருப்பதை டாக்டர் தெரிவித்தார்.
நம் உடலில் உள்ள ஓவ்வொரு செல்லைச் சுற்றியும் ‘சோடியம்’ எனும் தாதுஉப்பு படிந்து இருக்கும். உட‌லின் ரத்த அழுத்தத்தைச் சீராக‌ வைத்துக்கொள்ள‌வும், இத‌ய‌த் த‌சைக‌ள் ச‌ரியாக‌ இய‌ங்க‌வும், ர‌த்த‌த்தில் சோடிய‌த்தின் அள‌வு 135-145 மில்லிமோல்/லிட்ட‌ரில் இருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம். சோடியம் குறையும்போதுதான் ஹைப்போநேட்ரிமியா ஏற்படுகிறது.
எப்ப‌டி இந்த‌ நோய் ஏற்ப‌டுகிற‌து?
வயது அதிகரிக்கும்போது, இதய நோய், சர்க்கரை நோய், தூக்கமின்மை  போன்றவை மட்டும் இன்றி, வேறு சில பாதிப்புகளும்  ஏற்படுகின்றன. அதில், சோடியம் அளவு குறையும் ஹைப்போநேட்ரிமியாவும் ஒன்று.
யாரை அதிக‌ அள‌வில் பாதிக்கும்?
50 வ‌ய‌துக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கும், உயர் ர‌த்த‌ அழுத்த‌ப் பாதிப்பு உள்ள‌வ‌ர்க‌ளுக்கும்தான் பொதுவாக‌ இந்தப்‌ பாதிப்பு ஏற்ப‌டுகிற‌து. தவிர, அதிக அளவில் தண்ணீர் அருந்தும்போது, அது உடலில் உள்ள தாதுஉப்புக்களை நீர்த்துப்போகச்செய்து வெளியேற்றுகிறது. இதனாலும், ஹைப்போநேட்ரிமியா ஏற்படலாம். மிகக் குறைவாகத் தண்ணீர் குடிப்பதும், சிறுநீரகம், கல்லீரல் செயல் இழப்பு போன்ற காரணங்களாலும் இந்தப் பிரச்னை வரலாம்.
ஏன் இந்தக் குறைபாடு முதி்யவர்களை அதிக அளவில் பாதிக்கிறது?
வ‌யோதிக‌த்தின் கார‌ண‌மாக‌ உட‌லுறுப்புக‌ளின் செய‌ல்பாடுக‌ள் குறைந்துபோகும். முதிய‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ப் பாதிப்பு ஏற்ப‌டுவ‌த‌ற்கான‌ முதல் கார‌ண‌ம் இதுதான். சிறுநீர‌க‌த்தின் செய‌ல்பாடு மாறுப‌டும்போது அது வெளியேற்றும் சோடியம், பொட்டாசிய‌ம் போன்ற‌ த‌னிம‌ங்க‌ளின் அள‌வும் மாறுப‌டும். இதில், ஏதாவ‌து ஒன்று அதிக‌மாக‌ வெளியேறினாலும், குறைவாக‌ வெளியேறினாலும் பிர‌ச்னைதான். இவ‌ர்க‌ளைத் தாக்கும் ப‌ல வித‌மான‌ நோய்க‌ளும், அத‌ற்கு அவ‌ர்க‌ள் எடுத்துக்கொள்ளும் ப‌ல‌ ம‌ருந்துக‌ளும்தான் இந்த‌ப் பிர‌ச்னைக்கான‌ அடுத்த‌ கார‌ண‌ம். குறிப்பாக‌, சிறுநீர‌க‌ப் பாதிப்பு ம‌ற்றும், உயர் ர‌த்த‌ அழுத்த‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்குப் பாதிப்பும் ச‌ற்று அதிக‌மாக‌வே இருக்கும். ர‌த்த‌ அழுத்த‌த்தைக் குறைப்ப‌தற்காக‌க் கொடுக்க‌ப்ப‌டும் ‘டை யூரிட்டிக்ஸ்’ எனும் மாத்திரையின் ப‌க்க‌விளைவுக‌ளில் முக்கிய‌மான‌ ஒன்று, அதிக‌ப்ப‌டியான‌ சிறுநீரை வெளியேற்றுவ‌து. உயர் ர‌த்த‌ அழுத்த‌த்தைக் குறைப்ப‌த‌ற்காக உட‌லில் உள்ள‌  அதிக‌ப்ப‌டியான‌ நீரை வெளியேற்றும் இந்த‌ வ‌கை ம‌ருந்துக‌ள் அதிக‌மான‌ அள‌வில் சோடிய‌த்தையும் சிறுநீரோடு சேர்த்தே வெளியேற்றி விடுவதால், இந்த‌ப் பிர‌ச்னை ஏற்ப‌டுகிற‌து. 20 லிட்ட‌ர் சிறுநீரில் வெளியேற‌ வேண்டிய‌ சோடியம், 10 லிட்டரில் வெளியேறிவிடும்.
இதன் அறிகுறிகள் என்னென்ன?
குமட்டல் மற்றும் வாந்தி, தலைவலி, குழப்பமான மனநிலை, உடல் வலிமை குன்றிய மனநிலை அல்லது சோர்வு, எரிச்சலான மனநிலை போன்றவை இருந்தால் அது ஹைப்போநேட்ரிமியாவாக இருக்கலாம். சோடியம், 110-125 மில்லிமோல்/லிட்டர் வரை இருந்தால் இதே அறிகுறிகள் சற்று அதிகமாக இருக்கும். இந்த‌ அள‌வு 110-க்கும் கீழே செல்லும்போது, வலிப்பு உள்ளிட்ட  தீவிர‌மான‌ பாதிப்புகள் ஏற்படலாம். கவனிக்காமல்விட்டால், கோமா அல்லது உயிரிழப்புகூட ஏற்படலாம். இதை ர‌த்த‌ப் ப‌ரிசோத‌னை மூல‌ம் க‌ண்ட‌றிய‌லாம்.
எப்படித் தவிர்ப்பது?
வயதாகிவிட்டாலே உணவில் உப்பு சேர்க்கக் கூடாது எனும் எண்ணம் பரவிவருகிறது. எதுவாக‌ இருந்தாலும், அள‌வாக இருக்கும் வ‌ரை எந்த‌ப் பாதிப்பும் வராது. தினமும் நான்கைந்து கிராம் உப்பு கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதே போல் த‌ண்ணீரையும் அள‌வுக்கு அ‌திக‌மாக‌க் குடிக்காமல், சிறுநீர‌கத்தின் செய‌ல்பாட்டைப் பொறுத்துத்தான் குடிக்க‌ வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்தினால் போதுமானது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இயன்றவரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அள‌வுக்‌கு அதிகமாக விய‌ர்வை வெளியேறினாலும், சோடிய‌த்தின் அள‌வு குறைந்துபோகலாம். உப்பின் அள‌வைச் சாப்பாட்டில் குறைத்துக்கொள்ப‌வ‌ர்க‌ள், இய‌ற்கையாக‌வே சோடிய‌ம் உள்ள‌ கீரையை உண‌வில் சேர்த்துக்கொள்ள‌லாம். அள‌வாக இருக்கும் வ‌ரை எதுவுமே அமிர்த‌ம்தான்!

No comments:

Post a Comment