Saturday, 1 July 2017

அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர்



மூலவர்: *பட்டீசுவரர் , தேனுபுரீசுவரர்*

அம்மன்/தாயார்: *ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீபல்வளைநாயகி*

தல விருட்சம்: *வன்னிமரம்*

தீர்த்தம்: *ஞானவாவி*

பழமை: *1000-2000 வருடங்களுக்கு முன்*

புராண பெயர்: *மழபாடி, பட்டீஸ்வரம், பட்டீச்சுரம்*

ஊர்: *பட்டீஸ்வரம்*

பாடியவர்கள்: *திருஞானசம்பந்தர்*



🅱 தேவாரப்பதிகம்:🅱

*பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார் துறவியெனும் உள்ளமுடை யார்கள் கொடி வீழியழ காயதொகுசீர் இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலாய் நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவரே.* - திருஞானசம்பந்தர்.

🌱 *தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 23வது தலம்..* 🌱

🅱 திருவிழாக்கள் :🅱

🌻 *விசாக விழா: வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் காலையில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் ஊர்வலமாகப் புறப்பட்டு திருமலைராஜன் ஆற்றிற்குச் சென்று தீர்த்தங் கொடுத்து அங்கிருந்து இரவில் மூர்த்திகள் விமானங்களில் புறப்பட்டுக் காட்சி கொடுத்து ஆலயத்திற்கு வந்து சேரும்.*

🌻 *முத்துப் பந்தல் விழா: ஆனி மாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும். இத்தலத்தின் சிறப்புவிழா இதுவேயாகும்.*

🌻 *மார்கழி விழா: மார்கழி அமாவாசை நாளில் பஞ்ச மூர்த்திகள் பல வாகனங்களில் புறப்பட்டு வீதிவலம் வந்து கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும். இராமருக்கு ஏற்பட்ட சாயஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஐதீகத்தின் காரணமாக இவ்விழா நடைபெறுகிறது.*

🌻 *ஆனி - முத்துப்பந்தல் விழா - ஆனிமாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பூத கணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும்.இதுவே இத்தலத்தின் சிறப்பு விழா. முத்துப்பந்தல் விழா நாளில் பகல் 12 மணிக்கு திருஞானசம்பந்தர் அடியார்களுடன் திருச்சத்திமுற்றம் கோயில் சன்னதியிலிருந்து முத்துப்பந்தல் நிழலில் எழுந்தருளி, பட்டீச்சரத்துக்கு வருதலும், பதிகம் பாடுதலும், திருமடத்துக்கு எழுந்தருளுதலும் ஆகிய காட்சிகள் நடைபெறும்.



🅱 தல சிறப்பு:🅱

🎭 *பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன..*

🎭 *ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அளித்து முத்துப்பந்தல் நிழலில் வரும் அழகைக்காண நந்தியை விலகி இருக்கும்படி பணித்த தலம்..*

🎭 *இங்கு துர்க்கை சாந்த சொரூபியாக , மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன், இடப்புறம் நோக்கிய சிம்ம வாகனத்துடன் அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்..*

🎭 *விசுவாமித்திர முனிவருக்கு காயத்திரி மந்திரம் சித்தி பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இத்தலத்தில் தான் என்கின்றனர்..*

🎭 *மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது..*

🎭 *வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை இராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொன்டார்.*

🎭 *இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது.*

🎭 *பட்டீஸ்வரம் தோன்றியதே பட்டீஸ்வரருக்காக என்றாலும் துர்க்கை உருவில் உள்ள பார்வதியே அதிக முக்கியத்துவம் பெற்று உள்ளாள்.*

🎭 *துர்க்கையம்மன் மிகவும் சக்தியுள்ள தேவதையாய் விளங்குவதால் வெளியிடங்களிலிருந்தும் பலர் தங்கள் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.*

🎭 *பராசக்தி தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்திற்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம்..*

🎭 *இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியேயுள்ளன.*

🎭 *மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்தில் உள்ள ஞான வாவியின் துளி பட்டமையால் சாபம் நீங்கப் பெற்றது இத்தலத்தில்தான்.*

🎭 *வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.*

🎭 *நாயக்கர் கால கலை அம்சம் பொருந்தியகோயில் இது.*

🎭 *மராட்டியர் கால ஓவியங்கள் கோயிலில் காணப்படுகின்றன.*

🎭 *மிகவும் பழமையான கோயில் இது.*

🎭 *இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.*

🎭 *சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 86 வது தேவாரத்தலம் ஆகும்..



🅱 நடை திறப்பு:🅱

🗝 *காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.*🗝

*பூஜை விவரம் :* 6 கால பூஜை.

🅱 *பொது தகவல்:*🅱

🦋 *அஷ்டபுஜங்களுடன் அருள் பாலிக்கும் இவ்வன்னையை விஷ்ணு துர்க்கை, துர்க்கா லட்சுமி எனவும் அழைப்பர். நவசக்தி நாயகி, நவரத்ன நாயகி, நவயோக நாயகி, நவகிரக நாயகி , நவராத்திரி எனவும் போற்றப்படுகிறாள்.*

🦋 *மாமன்னன் இராஜராஜ சோழன் முதலான சோழ மன்னர்கள் அனைவராலும் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யப்பட்ட அம்பிகை இவளே. ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டீசுவரத்தின் வடபுறம் அமைந்திருந்த சோழன் மாளிகையில் சோழ மன்னர்களின் அரண்மனைக் காவல் தெய்வமாக அருள் பாலித்து வந்த தெய்வம். அரண்மனையின் வாயில்களில் முறையே விநாயகரும் முருகரும் பைரவரும் எழுந்தருளி அருள்பாலித்து வந்தனர். சோழமன்னர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும் இந்த தேவியின் அருள் வாக்கு பெற்ற பின்னரே செயல்படுவர்..*

🦋 *சோழ ராஜ்ஜியம் முடிவுக்கு வந்த பின்னர் துர்க்கையம்மனை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த துர்க்கை மற்ற தலங்களில் இருப்பது போல் அல்லாமல் சாந்த சொரூபியாக இருக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது. அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள்பாலிக்கிறாள்.*



🅱 *பிரார்த்தனை:*🅱

🌹 இங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு கேது செவ்வாய் தோசங்கள் நீங்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை கிடைக்கப் பெறலாம். ராகு கால நேரங்களிலும் முக்கியமாய் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுகிறார்கள்.

🌹 இத்தலத்து பைரவர் மிகவும் விசேசமானவர். சத்ரு தோசம், பிணிநீக்கம், விஷக்கடி, நாய்க்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பைரவரை வழிபட்டு பலன் அடைகிறார்கள்.

🌹 இத்தலத்து பட்டீசுவரனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

🅱 *நேர்த்திக்கடன்:*🅱

💥 துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்துகிறார்கள். எலுமிச்சை விளக்கு ஏற்றுகிறார்கள்.அம்மனுக்கு புடவை சாத்தியும் தங்கள் நேர்த்திகடனை செய்கிறார்கள்..

💥 பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று பைரவாஷ்டமி அபிசேகம் செய்கிறார்கள்.

💥 சுவாமிக்கு வஸ்திரம் சாத்துகிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள். சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திரவியப்பொடி, மாப்பொடி, எண்ணெய்,தேன் ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள்.

💥 கார்த்திகை சோம வாரம் சுவாமிக்கு 1008 சங்காபிசேகம் செய்கிறார்கள். இவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்கிறார்கள்.

💥 மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்கிறார்கள்.



🅱 *தலபெருமை:*🅱

🌷திருஞான சம்பந்தர் முத்துப்பந்தல் பெற்றது: 🌷

🔥 *திருஞானசம்பந்தர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபட்டு வரும் நேரத்தில் திருச்சத்திமுற்றத்தில் வழிபட்ட பின் இத்தலத்துக்கு வந்தார்.அப்போது வெயில் காலமாதலால் சூரியனின் கதிர்கள் சுட்டெரித்தன,*

🔥 *வெயிலின் கொடிய வெப்பத்தை தணிக்க இத்தலத்து பட்டீசர் பூதகணங்கள் மூலமாய் அழகிய முத்துப்பந்தலை அனுப்பி வைத்தார். ஞானசம்பந்தர் இறைவன் அருளை வியந்து பணிந்து போற்றி முத்துப்பந்தலின் நிழலில் வந்தார். ஞானசம்பந்தர் நடந்து வந்த அழகிய காட்சியை காணவும், திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்கவும் பெருமான் நந்தி தேவரை விலகி இருக்க கட்டளையிட்டார். நந்தியும் விலகியது.*

🔥 *ஞானசம்பந்தர் பரவசத்தில் இறைவனை வணங்கி ஆனந்தப்பெருவெள்ளத்தில் பாடல் மறை எனத்தொடங்கும் பாமாலையை பாடி தலத்தில் தங்கினார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் ஆனிமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.*

🌷சாந்த சொரூபிணி துர்க்கை  அம்மன் : 🌷

🔥 *பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள்.*

🔥 *சோழ மன்னர்கள் இந்த துர்க்கை வழிபாடு செய்து பின்னரே போருக்கு செல்வர். சிறு வியாபாரிகளும், பெரு வணிகர்களும் அவ்வாறே இந்த துர்க்கையை வழிபடுவர். நாயக்க வம்சத்தவரும், பல்லவர்களும் வழிபாடு செய்து பலகாரிய சித்திகளை பெற்றனர் என்கிறது நாடிச்சுவடி.*

🔥 *ஆலயத்தின் கருவறையின் வடக்கு பகுதியில், வட திசை நோக்கி, தன்னை நாடி வரும் பக்தர்களை காக்க வேண்டி, தானே முன் வந்து அழைக்க வருவதுபோல, தனது ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்து,ஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் ரோஜா மாலை அணிந்து காட்சி அளிக்கிறாள் . மூன்று கண்களைக் கொண்டவள். எட்டுக் கரங்களுடன், எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்து, நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். எட்டு கரங்களில் ஒன்றை அபயஹஸ்தமாகவும், மற்றொன்றை இடை மீது வைத்து கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறாள்.*

🔥 *பிற ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு சாந்தமாக போர் முடித்த கோலத்தில் காணக் கிடைக்கிறாள். இடப்பக்கம் நோக்கியுள்ள வாகன சிம்மத்தின் ரூபிணியாக விளங்குகிறாள். துர்க்கை இங்கு சாந்த சொரூபிணியாக இருப்பதை அவளது புன்னகை தவழும் முகமும், வலப்புறம் திரும்பியுள்ள சிம்ம வாகன முகமும் நிரூபிக்கிறது. பக்தர்களை வரவேற்கும் கோலத்தில் வெற்றி வாகை சூடிய நிலையில் இருக்கிறாள்.*

🔥 *இங்கு பார்வதி தேவி வந்து தவம் செய்ததினால் இது தவ வலிமை பெற்ற சக்திபூமி ஆனது. பார்வதி தேவி செய்துள்ள தவத்தினால் சக்தியை உள்ளடக்கிய பூமி ஆகிவிட்டது . இந்த இடமே அனைத்து தேவர்களாலும் பார்வதி தேவிக்காக உருவாக்கப்பட்டு உள்ளதினால் இது தெய்வ பூமி ஆயிற்று.  பார்வதியே  சிவனிடம் சாப விமோசனத்தை இந்த இடத்தில் பெற்றுள்ளார்.*

🔥 *அதனால் தான் ராமரும் இங்கு  வந்து  பார்வதி தேவி பூஜித்து தனது தோஷங்களை விலக்கிக் கொண்டு தனுஷ்கோடி கடலுக்கு சமமான  புனித தீர்த்ததையும் ஏற்படுத்தி உள்ளார்.*

🔥 *சிவன் பார்வதி தேவிடம் , இங்கு நீ வந்து தவம் செய்ததினால் இது தவ வலிமை பெற்ற பூமி ஆனது.  நீ செய்துள்ள தவத்தினால் உனது சக்தியை உள்ளடக்கிய பூமி ஆகிவிட்டது இது.  இந்த இடமே அனைத்து தேவர்களாலும் உனக்காக உருவாக்கப்பட்டு உள்ளதினால் இது தெய்வ பூமி ஆயிற்று.  நீயே என்னிடம் சாப விமோசனத்தை இந்த இடத்தில் பெற்றுள்ளாய்.*

🔥 *அதனால் தான் ராமரும் இங்கு  வந்து  என்னை பூஜித்து தனது தோஷங்களை விலக்கிக் கொண்டு தனுஷ்கோடி கடலுக்கு சமமான  புனித தீர்த்ததையும் ஏற்படுத்தி உள்ளார்.  இங்கு வந்து உன்னை ராகுவும் கேதுவும் வணங்குவார்கள். நீ  அவர்களால் ஏற்படும் தோஷங்களைக் களைந்து கொண்டு இருப்பாய்.  இத்தனை பெருமைகளையும் பெற்ற இந்தத் தலமே  என்னுள் பாதியாக உள்ள  உனக்கு பெருமை சேர்க்கும் தலமாக அமைந்து இருக்கும்.  ” எனக் கூறினார்.*

🔥 *நமது நாபியில்  இருந்து வெளியாகும்  சக்தி நமது பின்புற முதுகுத் தண்டில் போய்  அங்கிருந்து மூளையை சென்றடையும்போது ஞானம் பிறக்கும் , குண்டலினி சக்தி மேலும்பிச் செல்லும் என்ற  தாத்பர்யத்தை வெளிப்படுத்துவது ஒரு காரணம்.*

🔥 *அதனால் தான் புடவை மற்றும் வேஷ்டிகளின் ஒரு நுனி நாபிப்பகுதியிலும் மற்றொரு நுனி  இரண்டு கால்களிடையே சென்று பின்புற முதுகின் கீழ் பகுதியில் ஒரு பாதை போல அமைக்கப்பட்டு பின்னால்  வைக்கப்படுகின்றது .  இன்னொரு முக்கியக் காரணம்  இந்த துணிகளின் மடித்து மடித்து வைக்கப்பட்டு உள்ள  பகுதி இரண்டு கால்களின் இடையே புகுந்து செல்வதினால் ஆண் பெண் இருவரின்  காமத்தை  தடுத்து  நிறுத்தி விடுகின்றது என்பதே. காமத்தை தொலைத்து விட்டே நாம் இறைவனின் சன்னதிக்கு செல்ல வேண்டும்  என்பதை எப்போதுமே நினைவுறுத்திக் கொண்டு இருக்கும்  காட்சி  அது ).*

🔥 *துர்கையின் சன்னதியை சுற்றி வலம்  வரவும்,  தரையில் உருண்டு அங்கப் பிரதர்ஷணம் செய்ய உதவியாகவும் இருக்க  மேற்கூரை போடப்பட்ட பளிங்குக் கல்லால்  தரை போடப்பட்டு மண்டபம் உள்ளது. சன்னதியின் வலதுபுறம் ஹோம சாலையும் இடது புறம் துர்க்கைக்கு தீபம் ஏற்றும் ஒரு தனி இடமும் அமைக்கப்பட்டு உள்ளது.*

🔥 *ஆகவே இங்கு தாயாராக காட்சி அளிப்பவளுக்கு ஒன்பது கஜப் புடவையே சாத்தப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அம்மனின் சன்னதிக்கு வந்தாலே மனதில் உள்ள காமம், குரோதம் அடங்கி ஞானம் பெருகுமாம். இங்கு நமது தாயாராக காட்சி அளிப்பவள் ராகு பகவானுக்கும் தாயாராகவே காட்சி தருகிறாளாம்.*

🔥 *ஆகவே ராகு பகவான்  தினமும் இங்கு வந்து தனது அன்னையான துர்காவை பூஜிப்பதினால் ராகு பகவானின் பூஜை காலமான  அந்த ராகு காலத்தில் வந்து எவர் ஒருவர் துர்கையை பூஜிக்கின்றார்களோ அவர்களை தனது தாயாரான துர்கையின் பூசையுள் தன்னுடன் கலந்து கொள்ளும் பக்தர் எனக் கருதும் ராகு பகவான் அவர்களுக்கு எந்தக் கெடுதல்களையும் செய்யாது நல்லதே செய்வாராம்.*

🔥 *அதனால் தான் இந்த தளத்தில் ராகு காலத்தில் வந்து பூஜைகளை செய்து துர்கை வேண்டுவது வழக்கமாக உள்ளது. அது மட்டும் அல்லாது செய்வாய் கிரகமும் இங்கு வந்து அன்னைக்கு சிவப்பு பூக்களைப் போட்டு பூஜிக்கின்றாராம். அதனால் தான் இந்த துர்க்கைக்கு சிவப்பு மாலை சாத்தி வேண்டிக் கொண்டால் செய்வாய் தோஷமும் விலகுமாம்.*



🅱 ராமர் வழிப்பட்ட சிவலிங்கம் : 🅱

🔥 *விஷ்ணுவின் அவதாரமாக மனிதப் பிறவி எடுக்க வேண்டி இருந்த ராமபிரான் தனது மனிதப் பிறவியில் மூன்று தோஷங்களை பெற்றார். இராமாயண யுத்தத்தில் அவர் ராவணனைக் கொல்ல வேண்டி இருந்தது. ராவணன் அசுர குலத்தை சேர்ந்தவர் என்றாலும் பிறப்பால் அவர் ஒரு பிராமணர். மகா வித்வான். சிவ பக்தர். ஆகவே பிராமணரான ராவணனைக் கொன்றதற்காக பெற்ற பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொள்ள அவர் ராமேஸ்வரத்துக்குச் சென்று அங்குள்ள மணல்கரையில் சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை பூஜை செய்து தனது பிரும்மஹத்தி தோஷத்தைக் களைந்து கொண்டார்..*

🔥 *அடுத்து ராவணன் மாபெரும் வீரன், வீணை வாசிப்பதில் அபார திறமை கொண்டவன், சிவ பக்தன். ஒரு மாபெரும் வீரனைக் கொன்றதினால் ஏற்பட்ட வீரஹட்டி என்ற தோஷத்தைப் போக்கிக் கொள்ள  வேதாரண்யம் சென்று அங்கு ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை பூஜித்து அந்த தோஷத்தில் இருந்து விடுதலை அடைந்தார்..*

🔥 *அதுபோல வீரன், கலைஞர், சிவ பக்தர் போன்ற மிக நல்ல அம்சங்களை கொண்டவர் ராவணன் அல்லவா. அந்த நல்ல அம்ச குணங்களை சாயை என்பார்கள். சாயை என்றால் நிழல் அல்லது ஒளி என்றும் பெயர் உண்டாம்.  அந்த நல்ல அம்சங்களைக் கொண்டு அனைவர் முன்னும் வாழ்கையில் ஒரு ஒளி  வீசியபடி இருந்தவரே ராவணன். (சீதை விஷயத்தை தவிர  வேறு  எதிலுமே  களங்கம் அடையாதவர்). அப்படிப்பட்ட நல்ல அம்சத்தைக் கொண்ட வீரனைக் கொன்ற பாவத்துக்காக சாயஹத்தி தோஷம் ஏற்பட்டது. மேலும் ராவணனைக் கொல்லச் சென்ற ராமர்  வாலியை மரத்தின் பின்னால் நின்று அம்பு எய்திக் கொன்றார். ஒரு பெரிய வீரனை தனது வீரத்தைக் காட்டி நேரிலே நின்று கொல்ல முடியாமல் மர நிழலில் மறைந்து கொண்டு வாலியைக் கொன்றதினாலும் இன்னமும் அதிக  அளவில் சாயஹத்தி (நிழல்) தோஷத்தை ஏற்படுத்தியது ..*

🔥 *ஆகா இரண்டு விதங்களில் சாயஹத்தி தோஷத்தைப் பெற்றவர் பட்டீஸ்வர ஆலயத்துக்கு வந்து அங்கு ஒரு சிவலிங்கத்தை நிறுவி சிவனை பூஜித்து சாயஹத்தி தோஷத்தை விலக்கிக் கொண்டார். அப்போது அங்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் கிடைக்காததினால் தனது வில்லின்  நுனியால் ஒரு இடத்தைக்  கீறி அங்கு தண்ணீரை  தோற்றுவித்து அபிஷேகம் செய்தாராம். ராமேஸ்வரத்தில் இருந்த தனுஷ்கோடி தீர்த்தத்தை அங்கு அவர்  வரவழைத்ததாகவே நம்பப்படுகின்றது. இப்படியாக அந்த ஆலயத்தில் ராம தீர்த்தமும் அமைந்தது..*

🅱 கோவில் அமைப்பு: 🅱

🌤 *தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் எனபட்டது.*

🔥 *திருமலைராய ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்திலுள்ள சிவாலயம் கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது. 5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிரகாரங்களும் உடையது.*

🔥 *பிரதான கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் உடையன. கோவிலின் முதல் பிரகாரத்தில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் பட்டீசுவரர் சந்நிதி இருக்கிறது.*

🔥 *வெளியில் சோமச்கந்தரும், சுற்றிலும் சப்த கன்னிகைகள், மகாலிங்கம், இராமலிங்கம், லக்ஷ்மி, சண்டிகேசுவரர், நடராஜர், சூரியன், ரேணுகாதேவி, சுவர்ண விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள் முதலானோர் சந்நிதிகள் உள்ளன.*

🔥 *வடபுறத்தில் அம்மன் ஞானாம்பிகை சந்நிதி இருக்கிறது. அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் கலையம்சம் வாய்ந்தது. இம்மண்டத் தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன.*

🔥 *மண்டபத்தின் நடுவில் மேலே கல்லாலான ஊஞ்சல் சங்கிலி உள்ளது. ஒரே கல்லாலான சக்கரம் சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலையம்சம் பொருந்திய பல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.*



🅱 கல்வெட்டு: 🅱

🔥 *இக்கோயிலில் ஐந்து கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றுள் இரண்டாம் கோபுரத்தின் உட்பக்கம் இருக்கும் கல்வெட்டு தஞ்சை நாயக்கர் காலத்தில் ஏற்பட்டதாகும். இவ்வூரில் திருமணம் நிகழும்போது தாம்பூலத்தை முதலில் இவ்வூரினர்களாகிய செட்டியார்கள், பட்டுநூல்காரர்கள் என்போருள் எவர்களுக்கு முதலில் கொடுப்பது என்ற தகராறு எழுந்தது. முடிவில் இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்மனுக்கு ஒரு புடைவையையும் வெற்றிலை பாக்கையும் முதலில் கொடுத்துவிட்டுப் பின்னர் அவ்விருவகுப்பாரும் எடுத்துக் கொள்வது என்னும் முடிவுபற்றியதே அது. கிரந்தத்தில் உள்ள கல்வெட்டு கோயிலைப் பழுது பார்த்ததைப்பற்றிக் கூறுகின்றது.*

🔥 *கிரந்தத்திலுள்ள இரண்டு செய்யுள்கள், புனித இடங்களாகிய விருத்தாசலம், கமலாலயம், வெண்காடு, சாய்க்காடு, கைலாசம் இவைகளைப் போல் பட்டீச்சரமும் ஒன்று என்று குறிப்பிடுகின்றன.*

🔥 *வெளிப் பிராகாரத்தில் பலிபீடத்தின்அடிப்பகுதியிலுள்ள கல்வெட்டு, திருஞானசம்பந்தர் மடம், திருநாவுக்கரசு மடம், திருமூலதேவர் திருமடம் என்பவை பற்றிக் குறிப்பிடுகின்றது.*

🅱 தல வரலாறு:🅱

⛱  *பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர்.தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது.*

⛱ *தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக் கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.*

⛱ *இவ்வனத்தின் பெருமையையும், தூய்மையையும் பட்டி உணர்ந்ததால் தானும் பெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் ஓர் லிங்கம் அமைத்து நாள்தோறும் விதிப்படி பூசித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக் கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு மகிழ்ந்து மணலினால் ஆகிய லிங்கத்தில் என்றும் நிலையாய் அமர்ந்தருளினார். பட்டிக்கன்று வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.*

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ *அதிசயத்தின் அடிப்படையில்:*

♻ இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ பராசக்தியே தவம் செய்து வழிபட்ட தலம்.

♻ திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் முதல் பாடலில் *"மாட மழபாடியுறை பட்டிசர மேயகடி கட்டர வினார்"* என்று குறிப்பிட்டதால் இத்தலத்திற்குப் பண்டைநாளில் மழபாடி என்ற பெயர் இருந்ததாகத் தெரிகின்றது.

♻ சம்பந்தர் இப்பாடலில் இவ்வாலயத்து இறைவனை நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில், மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில், திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் என்று குறிப்பிடுகிறார்..

♻ மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றினாலும் சிறப்பு பெற்றது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் ஆகும்.

♻ காம்பீலி நகரத்து அரசன் சித்திரசேன மகாராஜா புத்திரகாமேஷ்டி யாகம் செய்து குழந்தை வரம் பெற்ற தலம்.

♻ பராசக்தி இங்கே வந்து தவம் செய்தமையால் தேவி வனம் என்றும்,பட்டிக் கன்று வழிபட்டதால் பட்டீஸ்வரம் என்றும் இந்த இடத்தின் பெயர் மாறியது.தேனுபுரீஸ்வரருக்கு பட்டீஸ்வரர் என்ற பெயர் உருவானது.

🅱 *இருப்பிடம்:*🅱

✈ கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மி. தொலைவில் பட்டீஸ்வரம் இருக்கிறது.

✈ சுவாமிமலை முருகன் கோவிலில் இருந்து 3 கி.மி. தொலைவில் உள்ளது.

✈ பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர் ஆலயத்திற்கு அருகில் திருசத்திமுற்றம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணம் - ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை யடையலாம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

🏹 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🏹

No comments:

Post a Comment