Saturday, 1 July 2017

அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், வழுவூர் - நாகப்பட்டினம்



அஷ்டவீரட்டத் தலங்களில் கஜசம்காரம் நிகழ்ந்த தலம் ; தேவார வைப்புத் தலம் ; திருமாலின் வராக அவதார அம்சம் உடைய வராகி பூஜித்த கஜசம்ஹாரர், கிருத்தி வாசர், கரி உரித்த பெருமான் ஸ்தலம்.*

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵


மூலவர் : கிருத்திவாசர் (வீரட்டேசுவரர்)

அம்மன் / தாயார் : பாலகுராம்பிகை, இளங்கிளைநாயகி

தலவிருட்சம் : தேவதாரு, வன்னி

தீர்த்தம் : பாதாளகங்கை, பஞ்சமுக தீர்த்தம்.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : தாருகா வனம்

ஊர் : திருவழுவூர்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் ( வைப்புத்தலம்)

வைப்புத்தலப் பாடல்கள் : 1. உஞ்சேனை மாகாளம் (6-70-8),

2. காவிரியின் கரைக்கண்டி (6-71-2).

🅱 திருவிழா:🅱

🍁 மாசிமகம் - யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா - தினமும் இரண்டு வேளை வீதியுலா - 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி - 10 ம்நாள் தீர்த்த வாரி - இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

🍁 மார்கழி - திருவாதிரை - 3 நாட்கள் திருவிழா

🍁 புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாட்கள் திருவிழா

🍁 கார்த்திகை சோம வாரங்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும்,

🍁 இரவு தினந்தோறும் யந்திர பிரதிஷ்டைக்குப் பூஜை நடைபெறுகிறது. அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார்.

🍁 ஆடிப்பூரம், பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும். கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும்.

🍁 மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.

🍁 வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி,பொங்கல், தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

🅱 தல சிறப்பு:🅱

👉🏽 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

👉🏽 அட்ட வீரட்டத் தலங்களில் இது 6 வது தலம்.

👉🏽 சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.

👉🏽 சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம்.

👉🏽 அட்ட வீரட்டத்தலம்; எனினும் பாடல் பெற்ற தலத்தில் இஃது இடம் பெற வில்லை.

👉🏽 இத்தலத்துக்குரிய கஜசம்ஹார மூர்த்தியும், அவர் எழுந்தருளியுள்ள ஞான சபையும் சிறப்பானவை.

👉🏽 இது பிப்பிலவனம், சமீவனம், தாருகாவனம், பதரிகாவனம் ஆகிய நான்கு வனங்களால் சூழப்பட்ட வீரட்டானம் என்று சொல்லப்படுகிறது.

👉🏽 ஜேஷ்டா தேவி, நாகர்கள், பிடாரி, சப்த மாதாக்கள் வழிபட்ட லிங்கங்கள் பைரவர் சந்நிதிகள் உள்ளன.

👉🏽 கஜசம்ஹார மூர்த்தி அழகான மூர்த்தம்; அழகிய வேலைபாடமைந்தது.

👉🏽 அம்பாள் திருமேனி - இடுப்பில் முருகனுடன் காட்சி. முருகன் ஒருவிரலை பக்கத்திலுள்ள மூர்த்தியைச் சுட்டும் நிலையில் இருப்பதும், அம்பிகை ஒரு பாதத்தைத் திருப்பி நடந்து செல்ல முயலும் அமைப்பில் இருப்பதும் கண்டு மகிழத்தக்கது. இவ்வமைப்பு தலபுராணம் தொடர்புடையது.

👉🏽 மூலவர் - சுயம்பு மூர்த்தி; நாகாபரண அலங்காரத்தில் அழகு மிளிர காட்சித் தருகிறார்.

👉🏽 சுவாமி மண்டபத்தில் அட்ட வீரட்டச் செயல்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

👉🏽 மாசி மகத்தில் பெருவிழாவும், கஜசம்கார ஐதீக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

👉🏽 இக்கோயிலில் 10 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.

👉🏽 இது சோழநாட்டுத் தலம்.

👉🏽 சனீசுவரனுக்கு தனி சந்நிதி உள்ளது.

👉🏽 இங்கு சனீசுவரன் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது சிறப்பம்சம்.

🅱 திறக்கும் நேரம்:🅱

🗝 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.🗝

🅱 பொது தகவல்:🅱

🌺 இங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர்.

🔥 இத்தலத்தில் யானையை பிளந்து சிவபெருமான் வீரச்செயல் புரிந்துள்ளார்.

🔥 சனீசுவரனுக்கு இங்கு சாப நிவர்த்தி ஆன தலம்.

🔥 சிதம்பர ரகசியப் பிரதிஷ்டைபோல இங்கும் கஜசம்கார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது.

🔥 முதலில் நந்தி, பின்பு குளம், அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும்.

🔥 கஜ சம்கார மூர்த்தி உள்ள இடம் ஞானசபை ஆகும்.

🔥 கஜசம்கார நடனம் நவ தாண்டவத்தில் ஊர்த்துவ தாண்டவமாகப் போற்றப்படும் நடன சபையில் ஞானசபை என்று இது கூறப்படும்.

🔥 யானையைப் பிளந்து வீரநடனமாடி வரும் அப்பாவைப் பார்த்து அம்பாளின் இடுப்பில் இருக்கும் முருகப்பெருமான் அதோ அப்பா வருகிறார் என்று சுட்டிக் காட்டியபடி உள்ளார்.

🔥 48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் எனக் கூறப்படுகிறது.

🔥 தீர்த்தங்களில் சுவாமி சந்நிதிக்கு எதிரே உள்ள ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை விசேசமானது.

🔥 பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகா வனம் என்று குறிப்பிடப்படுகிறது.

🌺 திருஞான சம்பந்தர் எட்டு வீரட்டங்களைக் குறிப்பிட்டு அருளியுள்ள திருப்பாடல்களில் இத்தலத்தை குறிப்பாக அருளியுள்ளார்.

🌺 இது தேவார வைப்புத்தலம் என போற்றப்படுகிறது.

🌺 இத்தல விநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.

🅱 பிரார்த்தனை:🅱

🌿 அமாவாசை தோறும் சுவாமி சந்நிதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோசம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது.

🌿 திருமண வரம் , குழந்தை வரம் ஆகியவற்றை பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் நிறைவேறுகிறது.

🌿 இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் தெய்வீக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி , சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.

🌿 இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் கிருத்திவாசரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

☀ அமாவாசை அன்று தீர்த்தத்தில் நீராடி விட்டு சுவாமிக்கு அர்ச்சனைசெய்து வழிபடுகிறார்கள்

☀ கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல்,

☀ சுவாமிக்கு சங்காபிசேகமும்,கலசாபிசேகமும் செய்யலாம்

☀ அம்மனுக்கு புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

☀ சுவாமிக்கு மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.

☀ மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

🅱 தலபெருமை:🅱

🎭 கஜசம்கார மூர்த்தி : 🎭

🦋 இத்தலத்தின் விசேச மூர்த்தி இந்த கஜசம்கார மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மூர்த்தி போல் வேறு எந்த கோயில்களிலும் கஜசம்கார மூர்த்தியைக் காண முடியாது.

🦋 திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார்.

🦋 அருகில் குழந்தையான முருகனை தன் இடுப்பில் வைத்துள்ள உமையவள் அச்சத்தோடு திரும்பும் நிலையில் நிற்கிறார். கையிலுள்ள முருகனோ தன் தந்தையை ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டுகிறார்.

🦋 சிவனுக்கும், நந்திக்கும் இடையில் பஞ்சபிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது எங்குமில்லாத தனிசிறப்பு.

🦋 இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கினால், ஞானம் கிடைக்கும். அம்மன் சன்னதி முன்புள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் கல்வியறிவு பெருகும்.

🦋 சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது. அம்பாள் இளங்கிளை நாயகி எனப்படுகிறாள்.

🦋 பெருமான், உமையஞ்ச ஆனையை உரித்ததை இத்திரு உருவத்தில் காணலாம். சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம்.

🦋 சம்காரமூர்த்தி இருக்கும் இடம் ஞான சபை ஆகும்.

🎭 யானை : 🎭

🐘 அதி உன்னதமான அறிவாற்றலுக்கும், அளவற்ற வலிமைக்கும், வீரத்துக்கும் அடையாளம். சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கம் உடையது. காட்டு விலங்கு ஆயினும் மனிதருடன் நன்கு பழகும் யானை,சில நேரம் மதம் தலைக்கேறி தன்னை வளர்த்தவனையே கொன்றும் விடுகிறது. நமது சமய வழிபாட்டில் அறிவின் சின்னமாக யானை போற்றப்படுகிறது.

🐘 இறைவன், அறிவை விளக்கி நிற்கும் கோலத்தில்-யானை மீது பவனி வருபவனாகக் காட்டப்படுகிறார்.

🐘 அவர், அறியாமையையும் அகந்தையையும் அழிப்பவராக இருக்கும்போது யானையின் தோலை உரித்துக் கொல்பவனாகக் காட்டப் படுகிறார். இதற்கு, ‘சிவபராக்ரமம்‘ என்ற நூலில் அருமையான வரலாறு காணப்படுகிறது.

🎭 சனிபகவான் : 🎭

🦋 சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்கிறார். இதில் விக்கிரமராஜா தோற்றுப் போய்விடுகிறார்.

🦋 இத்தீர்த்தத்தில் வந்து விழுகிறார். தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபடுகிறார். சுவாமி அவருக்கு அருள் பாலிக்கிறார். சனி பகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

🅱 கோவில் அமைப்பு : 🅱

🔘 இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது - கிழக்கு நோக்கியது. அழகான ராஜகோபுரம். கோயிலின் முன்பு பஞ்சமுக தீர்த்தம் எனப்படும் குளம் உள்ளது. விசாலமான உள் இடம்.

🔘 உள்ளே நுழைந்தால் நந்தியும்,முன்னால் விநாயகரும் உள்ளனர். அடுத்துள்ள உள்வாயிலைத் தாண்டினால் வீரட்டேஸ்வர சுவாமி தரிசனம்.

🔘துவார கணபதி, துவாரசுப்பிரம ணியரை வணங்கி, வாயில் நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. கொடி மரத்து விநாயகர் உள்ளார்.

🔘 கொடிமரத்தின் வலதுபுறம் சஹஸ்ரலிங்கமும், வலக்கோடியில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளன.

🔘 உள் வாயிலில் உள்ள துவார கணபதியையும்,சுப்பிரமணியரையும் வணங்கி, இருபுறமும் சுதையாலான துவாரபாலகர்களையும் தொழுது, சென்றால் முன் மண்டபத்தை அடையலாம்.

🔘 உள் பிராகாரத்தில் வலம் வரும் போது, வரிசையாக சண்டேசுவரர், விநாயகர், நால்வர், இரு கணபதிகள், தொடர்ந்து அறுபத்து மூவரின் மூல உருவங்கள்,தல விநாயகர் ஆகியோர் உள்ளனர்.

🔘 அடுத்து, ‘உமைமுருகுடையான் சந்நிதி’ உள்ளது. தொடர்ந்து ஜேஷ்டாதேவி, நாகர்கள், பிடாரி, சப்தமாதர் வழிபட்ட லிங்கங்கள்,பைரவர்கள் சந்நிதிகள் உள்ளன.

🔘 அடுத்து வள்ளி தெய்வயானை சுப்பிரமணியரும், பக்கத்தில் பாலசுப்பிரமணியரும், கஜலட்சுமியும் உள்ளனர்.இவற்றையடுத்து பிராகாரச் சுற்றில் விக்கிரமசோழன் அருள் பெற்ற வரலாறு,அழகான வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களும் தற்போது அழிந்த நிலையில் உள்ளன.

🔘 தொடர்ந்து பிராகாரத்தில் சனிபகவான்,பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன.

🔘 முன்மண்டபத்தில் வலப்பால் பிட்சாடனர் உருவம் உள்ளது. பெரிய அருமையான திருமேனி. பக்கத்தில் மோகினி உருவம் உள்ளது. வாயில் நுழைந்ததும் வலப்பால் ‘கஜசம்ஹாரமூர்த்தி’ தரிசனம் தருகின்றார்.

🔘 இம்மூர்த்தி மிகவும் அழகு வாய்ந்ததாக உள்ளது. யானையின் தோலுரித்து, யானையை அழித்து, சிரசின் மீது சுற்றியவண்ணம், இறைவன் வீர நடனமாடுகின்றார். யானையின் வால்புறம் சிரசின் மீது தெரிகிறது. திருமேனி ஓங்கார வடிவில் அமைந்துள்ளது. கைவீசி திருவடிகள் முருக்கியவாறு, மடித்து, திருவடியின் உட்புறம் (புறங்கால் பகுதி) தெரியுமாறு நடனமாடுவது அற்புதம்.

🔘 புறங்கால் தரிசனத்தை இங்கு, இம்மூர்த்தியில் கண்டு தொழுது களிக்க முடிகிறது. இத்திருமேனிக்குப் பக்கத்தில் அம்பாளின் திருமேனி அதியற்புதத்தோடு திகழ்கின்றது. ஒரு பாதத்தைச் சற்று திருப்பி, நடந்து செல்ல முயலும் கோலத்தில் உள்ளது. அம்பாளின் இடுப்பில் முருகப்பெருமான் காட்சி தருகின்றார். அவருடைய ஒரு விரல் பக்கத்தில் உள்ள மூர்த்தியைச் சுட்டிக் காட்டும் அமைப்பில் உள்ளது. இதுவும் உற்று நோக்குவார்க்கு மகிழ்ச்சியளிக்கும்.

🔘 தன் கணவன் இல்லாமையால், வழியின்றித் திகைத்த அம்பிகை, தன் தந்தை வீட்டிற்குச் செல்வதற்கு முயன்றார். அப்போது இறைவன் எழுந்து வெளிப்படவே, குமரனாகிய முருகப் பெருமான், தன்தாய்க்கு, ‘இதோ தந்தையார்’ என்று சுட்டிக் காட்டினாராம். (வீட்டிற்குச் செல்ல புறப்படும் நிலையில் திருவடியைத் திருப்பி நிற்கும் அம்பிகையின் நிலையும்,தந்தையைச் சுட்டிக் காட்டும் அமைப்பில் இடுப்பில் உள்ள முருகனின் அமைப்பும் கண்டு வியத்தற்குரியது)

🔘 வெளியே வந்தால் நேரே மூலவர் தரிசனம். கிழக்கு நோக்கியது, சுயம்புத் திருமேனி. நாககவசத்தில் தரிசிக்க மிகவும் அருமை.

🔘 சுவாமி சந்நிதிக்கு இடப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது.தனிக்கோயில், அம்பாள் நின்ற கோலம், அபய வரதத்துடன் கூடிய அட்சமாலை, பத்மம் ஏந்திய நான்கு திருக்கரங்கள்.

🔘 ஆலயத்தில் நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. சுவாமி மண்டபத்தில் அட்ட வீரட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

🎭 வராஹி: 🎭

🐲 பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

🐲 அந்தகாசுரன் என்பவனை அழிக்க, சிவன் தனக்கு உதவியாக சப்தமாதர்களைத் தோற்றுவித்ததாக மத்ஸ்யபுராணம் சொல்கிறது.

🐲 சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் வதத்தின்போது, தனக்கு உதவியாக சப்தமாதர்களை சக்திதேவி தோற்றுவித்ததாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.

🐲 சப்தமாதர்களில் வாராஹியை தனிதெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது.

🐲 இவள் கருப்பு நிறம், பன்றி முகம், பெருவயிறுடன், ஆறு கைகளுடன் இருப்பதாக ஸ்ரீதத்வநிதி என்றநூல் வர்ணிக்கிறது.

🐲 வராஹியின் வரத, அபயஹஸ்தம் தவிர மற்ற கைகளில் சூலம், கபாலம், உலக்கை, நாகம் தாங்கியிக்கிறாள்.

🐲 சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, தசமி, துவாதசி, அமாவாசை திதிகள் வாராஹி வழிபாட்டிற்கு உகந்தவை.

🐲 சோழ அரசர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கிய வாராஹிக்கு தஞ்சை பெரியகோயிலில் சந்நிதி உள்ளது.

🐲 வாராஹி மாலை என்னும் நூலை எழுதிய சுந்தரேசர், சோழ மன்னரான குலோத்துங்கனின் படையில் குதிரைப்படைக்குத் தலைமை வகித்தவர். வாராஹியை வழிபடுபவருக்கு எதிரிகளின் தொல்லை நீங்கி, வளமான வாழ்வு உண்டாகும்.

🐲 இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். வராகி வழிபட்ட தலம் இத்தலமே.

🅱 தல வரலாறு:🅱

🌤 தாருகாவனத்தில் வாழ்ந்த ரிஷிகள், ‘வேதங்களில் கூறப்பட்டுள்ள யாக -ஹோமங்களைச் செய்தாலே போதும்; கடவுள் வழிபாடு தேவை இல்லை.யாக விதிகளைக் கடைப்பிடித்து அதனை ஒழுங்காகச் செய்து விட்டால்,அதற்குக் கட்டுப்பட்டு அந்த யாகத்துக்கு உரிய தேவர்கள், யாகம் செய்தவர்களுக்கு வேண்டியதைத் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்‘ என்ற கர்வத்தினால் சிவ வழிபாடும் அவசியம் இல்லை என்று கருதி,சிவபெருமானை அவமதிப்பவர்களாக இருந்தனர். ‘யாகத்தைத் தவிர வேறு தெய்வமில்லை‘ என்று கர்ம காண்டத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்ததால் அவர்கள் ‘கர்ம காண்டவாதிகள்‘ எனப்பட்டனர்.அவர்களது கர்வத்தை அகற்றி, உண்மையை உணர்த்த திருவுளம் கொண்டார் சிவபெருமான். அதன்படி திருமால், பெண் வேடத்தில் - மோகினியாக உடன் வர, தான் திகம்பரராக திருமேனி கொண்டு, ஆடியும், பாடியும் வரும் குள்ள பூதங்கள் சூழ தாருகாவனத்தை அடைந்தார் சிவனார். திகம்பரரின் பிரகாசமான அழகையும், வாலிப வனப்பையும் கண்டு அவரது பேரழகில் மயங்கிய ரிஷி பத்தினிகள், அவரைப் பின்தொடர்ந்தனர். மோகினி வடிவம் கொண்ட திருமால், ரிஷிகள் தவம் செய்யும் யாகசாலைக்குச் சென்று ஆடிப் பாடினார். மோகினியின் பேரழகில் தங்களை மறந்த ரிஷிகள் தம்வசம் இழந்தனர். அவர்கள் மனத்தில் மோகாக்னி மூண்டிருந்ததால், தாம் வளர்த்த யாகாக்னியை முற்றிலும் மறந்தனர். அந்த வேளையில் ஆணழகனான திகம்பரர் ஆடியும் பாடியும் அங்கு வர, அவர் பின்னால் முனிவர்களது மனைவியரும் உடன் வருவதைக் கண்டனர்.

🌤 ”நாங்கள் தவம் செய்யும் இடத்துக்கு ஏன் வந்தாய்?” என்று திகம்பரரை நோக்கி ரிஷிகள் கேட்கவும், தாமும் தம் மனைவி மோகினியுடன் அங்கே தவம் செய்ய வந்ததாகக் கூறி, சிரித்தார்.

🌤 ”இவள் உன் மனைவியா? மற்றவர்களை மயக்கித் திரிகிறாளே. நன்றாக இருக்கிறது இவள் கற்பு” என்று பரிகசித்தனர் ரிஷிகள். உடனே திகம்பரர், ”நீங்கள் உங்கள் மனைவியோடு வாழ்ந்து கொண்டுதானே தவம் செய்கிறீர்கள்.உங்கள் மனைவியரது மன அடக்கத்தையும், கற்பின் திறனையும்தான் இப்போது நீங்களே பார்க்கிறீர்களே. நீங்கள் மட்டும் என்ன? என் மோகினியிடம் மயங்கி, உமது யாககாரியங்களை விட்டு ஓடி வந்து விட்டீர்கள். என் மனைவியின் கற்புக்கு என்ன பங்கம் வந்து விட்டது?” என்று கைகொட்டி சிரிக்கவும், ரிஷிகள் செய்வதறியாது திகைத்தனர்.

🌤 பிறகு, மோகினியுடன் அங்கிருந்து புறப்பட்ட திகம்பரர் வசிஷ்ட மகரிஷியின் ஆசிரமத்துக்குச் சென்றார். வந்தவர்கள் யார் என்று உணர்ந்த வசிஷ்டர் தம்பதியினர் அவர்களுக்கு ஆசனம் அளித்து, அமரச் செய்து பூஜை செய்தனர்.பிறகு, சிவபெருமானும் திருமாலும் தமது இருப் பிடம் சென்றனர். தம்மை அவமதித்த திகம்பரரது செயலையும், தம் மனைவியரது மன அடக்கம் கேலிக்கு உள்ளாக்கப்பட்டதையும் கண்ட ரிஷிகள் கோபம் கொண்டனர். தீய வேள்வி ஒன்று செய்து, அதிலிருந்து பெரிய பூதத்தைத் தோற்றுவித்து திகம்பரரை கொன்றுவிடத் திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் தொடங்கிய யாகத்தில் முதலில் ஒரு நெருப்புக் கோளம் வந்தது. அதை, திகம்பரரை அழிக்கும்படி ஏவினர் ரிஷிகள். திகம்பரராகிய சிவபெருமான் அதைத் தம் கையில் ஏந்தினார். தொடர்ந்து அவர்கள் அனுப்பிய பாம்பு, டமருகம் ஆகியவற்றையும் கைகளில் ஏந்தி, மண்டையோட்டை மாலையாகவும் அணிந்தார் சிவனார். இவை தவிர, யாகத்திலிருந்து அவர்கள் அனுப்பிய சிங்கத்தை உரித்து, தமது கச்சாக அணிந்தார். பிறகு, பெரிய கருவண்டு ஒன்றை அனுப்பினர். சிவ பெருமான், ஹூங்காரம் செய்து அதனைத் தமது நடனத்துக்கு சுருதி கூட்டுமாறு செய்தார். வலிமையான பூதத்தை அவர்கள் ஏவ, அதைத் தனக்கு ஏவலனாக ஆக்கினார். அறியாமையின் வடிவானவனும்,அநேக நோய்களை உண்டு பண்ணுபவனுமாகிய ‘முயலகன்‘ என்ற குட்டை பூதத்தை அனுப்பினர். பெருமான் அவனைத் தமது திருவடியின் கீழ் பாத மனையாக்கிக் கொண்டு, அவன் மேல் நடனமாடினார். தங்களது முயற்சி எதனாலும் சிவபெருமானை அடக்க முடியாத முனிவர்கள், யாகத் தீயிலிருந்து மிகப் பெரிய முரட்டு யானையைத் தோற்றுவித்து அனுப்பினர்.அது கயிலைக்குச் சென்று, அங்கு யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானைப் பற்றி எடுத்து தம் வாயில் போட்டு விழுங்கியது. சிவபெருமான் சிறிது நேரம் திருவிளையாடல் செய்யச் சித்தம் கொண்டார்.

🌤 அப்போது உலகமெங்கும் இருள் சூழ்ந்தது. தேவர்கள் பயந்தனர்.தாருகாவனத்து ரிஷிகள் வெற்றிக் களிப்பில் ஆடினர். சிவபெருமான் யானையின் வயிற்றில் கொடிய வெப்பத்தை உண்டாக்கினார். அது வயிற்று வலியால் துடித்துப் புரண்டது. பல இடங்களிலும் அலைந்து திரிந்து இறுதியில் பஞ்சப்பிரம்ம தீர்த்தத்தில் வீழ்ந்தது. பெருமான் தமது உடலைப் பெருக்கி யானையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்தார். அதன் தோலை உரித்து அதைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டார். இதனால் அவர் “கஜசம்ஹாரர், கிருத்தி வாசர், கரி உரித்த பெருமான்” என்று புகழப் பெற்றார். தீய வேள்விக்குத் துணை நின்ற வேத புருஷன், மான் வடிவம் கொண்டு சிவபெருமான் காலில் வீழ்ந்து, தன்னை மன்னிக்குமாறு வேண்ட,அந்த மானைத் தம் இடக்கரத்தில் ஏந்தி, எந்த நேரமும் தமது காதில் வேதம் ஓதுமாறு பணித்தார்.

வேத புருஷனும், யாக புருஷனும் தங்களை விட்டு விலகியதாலும்,சிவபெருமான் மற்றும் திருமாலை நிந்தித்த பாவத்தாலும் தீய வேள்வியின் பயனாலும் கடுமையான ஜுரம், நடுக்கம் முதலியன அடைந்து வருந்திய தாருகாவனத்து ரிஷிகள் இறுதியில் சிவனைச் சரணடைந்தனர். ஈசன் அவர்களை மன்னித்து சிவஞானம் உபதேசித்தார்.

🌤 சிவபெருமான் யானையை உரித்து, அதன் தோலைப் போர்வையாக அணிந்து கொண்டது, அட்ட வீரட்டச் செயல்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இது,சிவமகா புராணங்களிலும், திருமுறைகளிலும் விரிவாகக் குறிப்பிடப் பெறுகிறது. சில்பரத்தினம், சுப்ரபேதாகமம், அம்சுமத் பேதாகமம் முதலிய சிவாகமங்களில் கஜ சம்ஹார மூர்த்தியின் வடிவமைப்பு விளக்கப்பட்டுள்ளன.

🌤 அஷ்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான வழுவூரில், கஜசம்ஹாரம் நிகழ்ந்ததாக தல புராணம் விவரிக்கிறது. ‘வழுவை‘ என்பதற்கு யானை என்றும் ஒரு பொருள் உண்டு.

🌤 வழுவை- யானையை உரித்த ஊர்- வழுவூர் என்பர்.

🅱 சிறப்பம்சம்:🅱

🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

🤹🏻‍♀ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🤹🏼‍♂ சப்தகன்னியரில் வாராகி வழிபட்ட தலம் இது.

🤹🏼‍♂ அட்ட வீரட்டத் தலங்களில் இது 6 வது தலம்.

🔘 சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.

🅱 இருப்பிடம்:🅱

🚗 மயிலாடுதுறை - மங்கநல்லூர் பேருந்துச் சாலையில் எலந்தங்குடியை அடுத்து உள்ள நெய்க்குப்பையில் வழுவூர் கைகாட்டியில் இறங்கிச் சென்றால் எளிதில் கோயிலை அடையலாம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃

🌿 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🌿

No comments:

Post a Comment