Sunday 16 July 2017

இஞ்சிக்குடி ஈசனுக்கு வைகாசி பிரம்மோற்ஸவம் !


யிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ளது இஞ்சிக்குடி கிராமம். ஆதியில் சந்தனக் காடாகத் திகழ்ந்ததாம் இந்த ஊர். இங்கே, துர்வாச முனிவரின் தவத்தைக் கலைத்ததால், அவரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானாள், மதலோலை எனும் அரக்கி. அதன் விளைவாக அம்பரன், அம்பன் ஆகிய அசுரக் குழந்தைகளைப் பெற்றெடுத்தவள், ஈன்றதும் இறந்து போனாள்.
வளர்ந்து பெரியவர்களான அசுரர்கள், கொடுமைகள் பல புரிந்தனர். அதைப் பொறுக்க முடியாமல் சிவனாரிடம் தஞ்சம் புகுந்தனர் தேவர்கள். ஈசன் புன்னகையுடன் தன் தேவியைப் பார்த்தார். அவரின் குறிப்பறிந்த அம்பிகை,  அசுரர்களை அழிக்க, அழகிய கன்னிப் பெண்ணாக உருவெடுத்தவள், அரக்கர்கள் முன் தோன்றினாள். இருவரும் அவள் மீது மையல் கொண்டனர். இந்த நிலையில், வயோதிக அந்தணராக வந்தார் பெருமாள். அசுரர்களிடம் சென்று, ''ஒரு பெண்ணை நீங்கள் இருவரும் எப்படிச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்? உங்களில் வலிமையான ஒருவருக்கே அவள் சொந்தமாவாள்'' என்று கூறிச் சென்றார்.
அவ்வளவுதான்... அசுர சகோதரர்களுக்கு இடையே பலப்பரீட்சை துவங்கியது. அம்பன் அழிந்தான்; அம்பரன் ஜெயித்தான். அம்பாளைத் தேடி வந்தான். அப்போது, மகா காளியாக உருவெடுத்து நின்றாள் தேவி. பயந்து போன அசுரன், வடக்கு நோக்கி ஓடினான். அவனைத் துரத்திச் சென்று, தனது சூலாயுதத்துக்கு இரையாக்கினாள் அம்பிகை. அசுர வதம் முடிந்ததும், ''உக்கிரம் தணிந்து, மீண்டும் ஈசனின் இடப்பாகம் அடையவேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார் பெருமாள். தேவியும் உக்கிரம் தணிந்து, அருகில் இருந்த சந்தனமரக் காட்டுக்கு வந்து, மண்ணில் லிங்கம் பிடித்துவைத்து வழிபட ஆரம்பித்தாள். உரிய காலம் வந்ததும் சிவனார் தோன்றி, தேவியை தன் இடப்பாகத்தில் ஏற்றார். இப்படி, பார்வதிதேவியால் உருவாகி, அவளது வேண்டுதலுக்கு இணங்க இடப் பக்கத்தை வழங்கியதால், இந்தத் தலத்தின் ஈசனுக்கு ஸ்ரீபார்வதீஸ்வரர் என்று திருநாமம். அம்பாள்- ஸ்ரீதவக்கோல நாயகி. உக்கிர கோலம் கொண்டு, பிறகு சாந்தம் அடைந்ததால், ஸ்ரீசாந்த நாயகி என்றும் போற்றுவர். ஸ்ரீலலிதாம்பிகை என்றும் ஒரு பெயருண்டு. பெருமாளும் ஸ்ரீஆதிகேசவர் எனும் திருநாமத்துடன் தலத்தின் மேற்கில் தனிச் சந்நிதி கொண்டுள்ளார்.
அதுமட்டுமா? கண்ணையே அர்ப்பணித்த கண்ணப்ப நாயனார் சிவனருள் பெற்றதும், அருணகிரியாருக்கு முருகனின் திருக்காட்சி கிடைத்ததுமான அற்புதத் தலம் என்கின்றன புராணங்கள். குலோத்துங்க சோழனுக்கு நீண்ட காலமாக பிள்ளைச் செல்வம் இல்லையாம். இந்தத் தலத்து அம்பிகையின் அருளால் குழந்தை வரம் கிடைக்க, அம்மனுக்கு கொலுசு அணிவித்து வேண்டுதலை நிறைவேற்றினானாம் மன்னன். இன்றும் கால்களில் கொலுசுகளுடன் விசேஷ தரிசனம் தருகிறாள் அம்பிகை.
ராஜராஜ சோழனின் பேரன் விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், சூரியனும் சந்திரனும் அருகருகே காட்சி தருவது விசேஷ அமைப்பு. ஆகவே, இங்கு வந்து வழிபட, கிரகதோஷங்கள் விலகும் என்கிறார்கள். தவிர, இங்கு திருமணக் கோலத்தில், இல்லாள் ஸ்ரீசண்டிகேஸ்வரியுடன் காட்சி தருகிறார் ஸ்ரீசண்டிகேஸ்வரர். ஆக, இங்கு வந்து பிரார்த்திக்க, திருமண யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை. தினமும் நாகலிங்கப் பூக்களால் அர்ச்சனை நடைபெறுவது இத்தலத்தின் தனிச் சிறப்பு!  
வைகாசி மாதம் வெகுகோலாகலமாக பிரம்மோற்ஸவம் நடைபெறுகிறது இந்த க்ஷேத்திரத்தில். பெரும் புண்ணியம் நல்கும் திருவிழா இது என்கிறார்கள் பக்தர்கள்.

No comments:

Post a Comment