கய்கறி, பழங்களை உண்ணும் பழக்கம் குறைந்துவிட்டது. அப்படியே உண்டாலும், குறிப்பிட்ட சில காய், கனிகளை மட்டுமே எடுத்துக்கொள்வது பலரது வாடிக்கை. தினசரி உணவில் அனைத்து நிறக் காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். எந்த உடல்நலக் குறைபாட்டுக்கு ஆலோசனை பெறச் சென்றால், ஊட்டச்சத்து ஆலோசகர்கள் சொல்லும் ஆலோசனையும் இதுதான். தினசரி ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்குப் பதில், நல்ல காய்கறி, பழங்களை எடுத்துக்கொண்டால், இயற்கையான முறையிலேயே உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும். நோய்களும் நெருங்காது.
சிவப்பு
சத்துக்கள்: ஆன்டிஆக்ஸிடன்ட், குவார்சிடின், வைட்டமின் ஏ, சி, ஆன்தோசயனின், லைக்கோபீன்.
பலன்கள்: புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. டி.என்.ஏ-வைப் பாதுகாக்கக்கூடியது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
உணவுகள்: தக்காளி, மாதுளை, பீட்ரூட், சிவப்பு கொய்யா, தர்ப்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி.
ஆரஞ்சு
சத்துக்கள்: பீட்டாகரோட்டின், ஒமேகா 3, வைட்டமின் பி, சி, ஃபோலேட், ஃபிளேவனாய்டு.
பலன்கள்: பார்வைத்திறன் மேம்படும். மாலைக்கண் உள்ளிட்ட அனைத்துவிதமான கண் பிரச்னைகளையும் தீர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு நல்லது. சரும ஆரோக்கியம் மேம்படும். சருமம் பொலிவு பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
உணவுகள்: கேரட், ஆரஞ்சு, பப்பாளி, பரங்கிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு.
வெள்ளை
சத்துக்கள்: அலிசின், ஃபிளேவனாய்டு, வைட்டமின் சி, கே, பீட்டா குளுகன்ஸ்.
பலன்கள்: உடல் எடை குறைப்போருக்கு சிறந்த தேர்வு. கொழுப்பைக் கரைக்கும். கழிவுகளை வெளியேற்றும். ஹார்மோன்களின் இயக்கத்தைச் சீராக்கும். இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கும். நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும். ப்ராஸ்டேட், மார்பகம், வயிற்றுப் புற்றுநோய்கள் வராமல் காக்கும்.
உணவுகள்: பூண்டு, வெங்காயம், காளான், ஆப்பிள், காலிஃபிளவர், முள்ளங்கி, வெள்ளரிக்காய், பூசணி.
பச்சை
சத்துக்கள்: ஆன்டிஆக்ஸிடன்ட், குளோரோபில், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட், வைட்டமின் ஏ, சி, கே, லுட்டின், நார்ச்சத்து.
பலன்கள்: நாட்பட்ட நோய்களைச் சரிசெய்யும். இனப்பெருக்க உறுப்புகளைப் பலப்படுத்தும். பிறவிக் குறைபாடுகளைத் தவிர்க்கும் என்பதால், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவும். ரத்தம் உறைதல் பிரச்னையைச் சரிசெய்யும். மூப்படைதல் தாமதமாகும். கண், நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்தும். ஈறுகளைப் பலப்படுத்தும். காயங்கள் ஆறத் துணைபுரியும்.
உணவுகள்: கீரைகள், பச்சைப் பட்டாணி, அவரை, பீன்ஸ், குடமிளகாய், வெண்டை, முருங்கை, புரோகோலி, கிவி.
கருநீலம்
சத்துக்கள்: ஆன்தோசயனின், குவார்சிடின், ஃபிளேவனாய்ட், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி.
பலன்கள்: வயதாவதால் வரும் மறதி நோயைத் தடுக்கும். இதயம் ஆரோக்கியமாகும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். செரிமான சக்தியை மேம்படுத்தும். சருமம் பொலிவு பெறும்.
உணவுகள்: கத்திரிக்காய், திராட்சை, நாவல் பழம், முட்டைகோஸ், பெர்ரி.
மஞ்சள்
சத்துக்கள்: கார்டினாய்டு, பயோஃபிளேவனாய்டு, மக்னீஷியம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள், குர்குமின் எனும் பாலிபீனால்.
பலன்கள்: செரிமான சக்திக்கு உதவும். தசைப்பிடிப்புப் பிரச்னை குறையும். சரும ஆரோக்கியம் மேம்படும். எலும்பு, பற்களின் ஆரோக்கியம் மேம்படும். பார்வைத்திறன் அதிகரிக்கும்.
உணவுகள்: வாழை, அன்னாசி, மெலன் வகைகள், மாம்பழம், சோளம், எலுமிச்சை.
No comments:
Post a Comment