Thursday 6 July 2017

பால் வேண்டாம்... ஆனால் பலன் வேண்டும் !


மக்கும் பாலுக்கும் இடையிலான உறவு நாம் பிறந்த சில நிமிடங்களிலேயே தொடங்கிவிடுகிறது. ஆனால் ‘பழகப் பழகப் பாலும் புளிக்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப குறிப்பிட்ட வயதில் சிலருக்குப் பால் பிடிக்காமல் போய்விடுகிறது. பால் குடிப்பதைத் தவிர்த்தால் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் கால்சியம் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். கால்சியம் நமக்குத் தேவையான அளவு தினமும் கிடைக்க வேண்டுமென்றால் பாலைத் தவிர வேறு எந்த உணவுப்பொருள்களை உட்கொள்ளலாம்?

யாருக்குப் பால் பிடிப்பதில்லை?

பாலின் மணம் பிடிக்காது என்பதால் சிலர் பால் குடிப்பதில்லை

*  சிலருக்குப் பிறப்பிலேயே லாக்டோஸ் இன்டோலரன்ஸ் (Lactose Intolerance) என்ற பிரச்னை இருக்கும். பால் குடித்தவுடன் மலம் கழிப்பதுபோன்ற உணர்வு, அஜீரணம் போன்றவை இவர்களுக்கு ஏற்படும். இவர்களின் உடல், பாலை ஏற்றுக்கொள்ளாது. இது மரபுரீதியாகவும் வரும்.

*  வீகன் உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள் விலங்கிலிருந்து கிடைக்கும் எந்த உணவையும் உட்கொள்ளமாட்டார்கள் என்பதால் அவர்கள் பால் குடிப்பதில்லை

*  பாலின் தரம் குறித்த சந்தேகம் காரணமாக சிலபேர் பால் குடிப்பதில்லை.

கால்சியம் என்றால் என்ன?

கால்சியம் என்பது ஒருவகைக் கனிமம் (mineral) ஆகும். வளர்ந்த மனிதர் ஒருவருக்கு ஒருநாள் 1000-1200 மி.கி என்ற அளவில்தான் கால்சியம் தேவைப்படும். ஆனால், இது மிகவும் முக்கியமானதாகும். கால்சியத்தை  நமது உடல் தானாகவே உற்பத்தி செய்யாது. கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் கால்சியத்தைப் பெறமுடியும்.
கால்சியம் ஏன் தேவை? 

*  பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு.

*  நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்பட. 

*  உடல் தசைகள் வலுப்பெற.

*  இதயம் நன்றாக இயங்க. 

*  உடலில் ஹார்மோன்கள் சரியாகச் செயல்பட. 

நம் உடல் தனக்குக் கிடைக்கும் கால்சியத்தில் 99 சதவீதத்தைப் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் மீதி ஒரு சதவீதத்தை மற்ற பணிகளுக்கும் செலவிடுகிறது. 

கால்சியம் குறைந்தால் என்னவாகும்?

*  பெண்களின் உடலில் கால்சியம் குறைந்தால் கூன்போடும் பழக்கத்துக்கு மாறுவர். மாதவிடாய் நின்றபிறகு இது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். 

*  ஆஸ்டியோபொரோஸிஸ் (Osteoporosis) என்ற எலும்பு சார்ந்த நோய் ஏற்படும். இதனால் எலும்புகள் வலுவிழப்பதால் கீழே விழுந்து அடிபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

*  குழந்தைகளின் வளர்ச்சியில் எலும்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன.  கால்சியம் குறைவு குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும். பற்கள் பாதிக்கப்படும். 

எலும்பின் அடர்த்தி குறைந்து, எலும்பு உடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். 

கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் என்னென்ன?

சோர்வு, கவனக்குறைவு, இணைப்புகளில் வலி, தசைகளில் வலி, மூச்சுத்திணறல், அடிக்கடி உடல் மரத்துப்போதல் போன்றவை.

பால் குடிக்காதவர்கள், கால்சியத்திற்கு என்ன செய்யலாம்?

பால் குடிக்காதவர்களுக்கு, கால்சியம் கிடைக்க ஏராளமான உணவு வகைகள் உள்ளன. அவற்றில் ஏதாவது   ஒன்றை,  தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். 

தானிய வகைகள்: கேழ்வரகு, சிவப்பு அவல், வரகு, கோதுமை, பனி வரகு. 

பருப்பு வகைகள்: கடலைப்பருப்பு, உடைத்த கடலை, கருப்பு உளுந்து, கொள்ளு, ராஜ்மா, துவரம் பருப்பு, பச்சைப்பயறு, பட்டாணி.
 
கீரை வகைகள்: அகத்திக்கீரை, பருப்புக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரை.

காய்கறிகள்: கேரட், பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாகற்காய், காலிஃபிளவர், முருங்கைக்காய் , சுண்டைக்காய், வாழைப்பூ.
பழ வகைகள் : கொய்யாப்பழம், நெல்லிக்காய், பேரீச்சம் பழம், திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி. 

இலை வகைகள்: கேரட் இலை,  முட்டைகோஸ் இலை, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, காலிஃபிளவர் இலை. 

விதை வகைகள்: சூரியகாந்தி விதை, தர்பூசணி விதை, எள்ளு உருண்டை, வால்நட், பாதாம் 

இவை தவிர பாதாம், வேர்க்கடலை போன்றவற்றைப் பத்து முதல் பதினாறு மணி நேரம் நீரில் ஊறவைத்து, அரைத்து தேங்காய்ப்பால் தயாரிப்பதுபோல் பிழிந்து, அதனைப் பாலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். இதன் பச்சையான சுவை பிடிக்காதவர்கள் சூடாக்கிப் பயன்படுத்தலாம். 

கால்சியம் - வைட்டமின் டி தொடர்பு

நாம் எடுத்துக்கொள்ளும் உணவுப் பொருள்களில் இருக்கும் கால்சியத்தை விரைவில் உடல் உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் டி (Vitamin D) தேவை. இந்த வைட்டமின் டி, சூரிய ஒளியில்தான் அதிகமாக உள்ளது. எனவே, தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியில் நிற்பது கால்சியத்தின் பயனைப் பெறுவதற்கு முக்கியமாகும். 

பால் குடித்தால் மட்டும்தான் கால்சியம் கிடைக்கும் என்பது தவறான நம்பிக்கை. பாலில் இருப்பதை விட அதிகக் கால்சியம் மற்ற பொருள்களில் இருக்கிறது. குறிப்பாக, அகத்திக் கீரையில் கால்சியத்தின் அளவு மிக அதிகம். பால் குடிக்கும்போது கிடைக்கும் கால்சியம், நமது உடலால் மிக வேகமாக உறிஞ்சப்படுகிறது என்பதால்தான், பால் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது, கண்டிப்பாகப் பால் குடிக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. 

No comments:

Post a Comment