Thursday, 27 July 2017

அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி - நாகப்பட்டினம்

பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தரும் சிவமைந்தன் ; கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் ; வான்மீகர் என்ற சித்தர் சமாதியான முருகன் குடிக்கொண்டு இருக்கும் சிவஸ்தலம்..

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

தொலைப்பேசி : +91- 4366-245 426 ; 9489260955

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋


மூலவர் : சௌந்தரேஸ்வரர் , முருகன்


உற்சவர் : வேலவன்


அம்மன்/தாயார் : ஆனந்தவல்லி , வள்ளி , தெய்வயானை


தல விருட்சம் : வன்னி மரம் , எட்டி மரம்


தீர்த்தம் : சரவணப்பொய்கை தீர்த்தம்


பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்


புராண பெயர் : காஞ்சிரங்குடி , எட்டிப்பிடி , எட்டிக்குடி

ஊர் : எட்டுக்குடி


பாடியவர்கள்: அருணகிரிநாதர்

 
🅱 திருப்புகழ்:🅱


ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பு அயர்வேனை

ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய்

வாங்கி வெம் கணை சூரர் குல கொம்புகள் தாவி

வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா

மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும்

மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா

காங்கை அங்கு அறு பாசு இல் மனத்து அன்பர்கள் வாழ்வே

காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே. - அருணகிரிநாதர்

🅱 திருவிழாக்கள் :🅱
 
🌻 சித்ரா பவுர்ணமி திருவிழா இங்கு பத்து நாட்கள் நடக்கும்.
பவுர்ணமி நாளுக்கு முந்தைய நாளே நடை திறக்கப்பட்டு பாலபிஷேகம் துவங்கும். பவுர்ணமிக்கு மறுநாள் வரை தொடர்ந்து நடை அடைக்காமல் பாலபிஷேகம் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். பவுர்ணமிக்கு முதல் நாள் தேரோட்டம் நடத்தப்படும். இவ்விழாவில்   பால்காவடிகள் எடுத்து வருவது மிக விசேஷம்.

🌻 ஐப்பசியில் கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள்

🌻 வைகாசி விசாகம் ஒரு நாள் விழா

🌻 மார்கழி திருவாதிரை

🌻 மாத கார்த்திகை

🌻 தெய்வயானை மற்றும் வள்ளி திருக்கல்யாணங்கள்

🌻 நவராத்திரி

🌻 பங்குனி உத்திரம்
 
🅱 தல சிறப்பு:🅱
 
🎭   இது சிவத்தலம்  சுப்ரமணியசுவாமியே பிரதான இறைவனாக இருக்கிறார்.

🎭 மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் சௌந்தரேஸ்வரர்.

🎭 சுயம்பு மூர்த்தம் , ஔி வீசும் அழகிய தேஜோ மயத் திருமேனி.

🎭 எட்டி மரத்தின் கீழ் அமர்ந்து தவமிருந்த அம்பிகைக்கு அழகான திருமேனியுடன் தரிசனம் தந்ததால், சௌந்தரேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.

🎭 அம்பாள் ஆனந்தவல்லி மிகுந்த வரப்ரசாதி.

🎭 தவத்தின் பயனும் பலனும் உடனே கிடைத்ததால் ஆனந்தம் கொண்ட அம்பிகை என்பதால் ஆனந்தவல்லி எனும் பெயர் கொண்டாள்.

🎭 ஆறுமுகமும் பன்னிரெண்டு கரங்களும் கொண்டு, மயில் மீது அமர்ந்திருக்கும் வடிவேலன் அற்புதமான அழகுடன் காணப்படுகின்றார்.

🎭 இருபுறமும் வள்ளி - தெய்வயானை திருவுருவங்கள் நின்ற திருக்கோலம்.

🎭 ஒப்புயர்வு இல்லாத இந்த அழகு திருவுருவங்கள் சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

🎭 சிறப்பு மூர்த்தமான இவரால் இத்தலம் பெருமையும் பிரசித்தமும் பெற்றது.

🎭 இத்தலத்தில் முருக பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாக இருப்பதால் போர் கோலத்தில் காட்சி தருகிறார்.

🎭 வன்னி மரத்தடியில் வான்மீகரின் சமாதி உள்ளது.

🎭 எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கவுரி விரதத்தையும் ஒன்றாகக் கடைப்பிடிப்பது சிறப்பு.

🎭 தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான் என்பர்.

🎭 இங்குள்ள முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில்மீதமர்ந்து காட்சி தருகிறார்.

🎭 இந்த மூவரும் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின்மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது அதிசயம் !

🎭 வான்மீகர் என்ற சித்தர் இங்கு தான் சமாதியானார்.

🎭 கோயிலுக்குள் வன்னி மரத்தடியில் இவரது சமாதி இருக்கிறது.

🎭 பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி.

🎭 அருணகிரிநாதரின் திருப்புகழ் கொண்ட ஸ்தலம்.
 
🅱 நடை திறப்பு:🅱
 
🗝 காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்..🗝

🌻 சிறப்பு பூஜை:🌻

💦 இங்கு சத்ரு சம்ஹார திரிசதை எனும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

💦 எதிரிகளால் ஏற்படும் துன்பம் தீர இப்பூஜையை நடத்துவார்கள். எதிரிகளால் ஏற்படும் நியாயமான துன்பங்களுக்காக மட்டுமே இப்பூஜையை செய்ய வேண்டும்.

💦 எதிரிகளை அழிக்கும் நோக்குடன் செய்தால் பலன் வேறு மாதிரியாக அமையும். தேய்பிறை சஷ்டி அல்லது அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இப்பூஜையை செய்வார்கள். இதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

🅱 பொது தகவல்:🅱

🦋 ஆறுபடை வீடுகொண்ட முருகப்பெருமான், அகில உலகத்தவருக்கும் அருளும் வகையில், எண்ணற்ற கோயில்களில் குடி கொண்டிருக்கிறார். அவற்றில், எட்டுக்குடி திருத்தலமும் ஒன்று !

🦋 ஆறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் சிக்கல், எட்டுக்குடி, எண்கண் திருத்தலங்கள் போற்றப்படுகின்றன.

🦋 இந்த வரிசையில் 8-வதாகத் திகழ்கிறது எட்டுக்குடி ஆலயம் !

🦋 பிரகாரத்தில் முருகனுடன் போருக்கு சென்ற நவ வீரர்களுக்கு சிலை இருக்கிறது.

🦋 கூத்தாடும் கணபதி, ஜுரதேவர், சீனிவாச சவுந்தராஜப்பெருமாள், ஆஞ்சநேயர், மனோன்மணி அம்மை, ஐயப்பன், மகாலட்சுமி, நவகிரகங்கள், சனிபகவான், பைரவர் ஆகியோரும் உள்ளனர்.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 சுவாமிக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
🅱 தலபெருமை:🅱

🔥 பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி. அதாவது குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார்.

🔥 கோயில் முன்புள்ள சரவணப்பொய்கை தீர்த்தத்தில் கைபட்டாலே பாவ நிவர்த்தியாகி விடும் சிறப்புடையது.

🔥 சௌந்தரேஸ்வரர் , ஆனந்தவல்லித் தாயார் ஆகியோர் முருகனின் தாய் தந்தையாக அருள்பாலிக்கின்றனர்.

🔥 பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான்.

🔥 சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

🅱 சித்தர் வான்மீகர் ஜீவசமாதி:🅱

🥀 வான்மிக சித்தர்க்கு எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதி உள்ளது. இங்குள்ள வன்னி மரத்தடியில் சமாதி பெற்றுள்ளார்..

🥀 வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்..

🥀 வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவரை சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார் .போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூறுக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும் ..
உலகிற்கு இராமாயணத்தை தந்தவர்.. தமிழ் புலமை மிக்கவர் காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார் ..

🥀 வான்மிக சித்தரின் மற்றொரு ஜீவசமாதி திருவான்மியூர் மருந்தீசர் சன்னதியில் உள்ளது.. அடுத்து இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயத்தின் ஸ்தல விருச்சம் சரக்கொன்றை மரத்தின் கீழ் வெகு காலம் தவம் செய்துள்ளார்.

🅱 எட்டுக்குடி முருகன் வரலாறு : 🅱

Ⓜ நாகப்பட்டினத்தின் அருகில் பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் சிற்பி ஒருவர் இருந்தார். இவர் சிறந்த முருகன் பக்தர். இவருடைய மனமும் நாவும், “ஓம் சரவண பவ” என்ற உச்சரித்து கொண்டே இருக்கும்.

Ⓜ அப்போது அவருக்கு ஒரு சமயம் முருகன் சிலை செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, அழகான முருகன் சிலையை செதுக்கிகொண்டு இருந்தார் சிற்பி.

Ⓜ அப்போது அந்த பக்கமாக வந்த அந்நாட்டுஅரசன் சிற்பி தயாரித்துக் கொண்டிருக்கும் முருகனின் சிலையில் உயிர் ஓட்டம் இருப்பதை உணர்ந்து அதிசயித்தார். இந்த சிற்பி இப்படி ஒரு உயிர் ஓட்டம் உள்ள சிலையை வேறு எங்கும் இது மாதிரி சிலையை உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில அந்த சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி விட்டார்.

🅱 மனம் தளராமல் சிற்பி செதுக்கப்பட்ட கற்சிலை மயில் பறந்தது:🅱

Ⓜ இனி இந்த ஊரில் இருக்கக்கூடாது என்ற முடிவு செய்த சிற்பி, அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றார். சோழமன்னரால்  சிற்பியின் கைகட்டைவிரலை வெட்டி ஊனமாக்க முடிந்ததே தவிர, சிற்பியின் தெய்வீக திறமையை மனதுணிவை ஊனமாக்க முடியவில்லை. வருவது வரட்டும். போவது போகட்டும். யாவும் இறைவனின் விருப்பம் அவனின் திருவிளையாடல் இது.

Ⓜ ஆகவே என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக அமையும் என்ற மன தெளிவோடு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு, “ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது” என்ற பழமொழிக்கேற்ப சிற்பி புதிதாக குடியேறிய அந்த கிராமத்திலும் ஒரு முருகன் சிலையை செய்ய வேணடும் என்று ஆவல் கொண்டார்.

Ⓜ அதனால் பல இடங்களின் முருகபெருமான் திருஉருவச்சிலையை செய்ய நல்ல உயிர் ஓட்டம் இருக்கிற கல்லை தேடினார். அவர் எதிர்பார்த்தது போல ஓர் இடத்தில் இரத்தம் போன்ற சிவப்பு ரேகை கொடிகளை கொண்டதும், நீலமும், கருமையும் கலந்ததுமான உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த கல்லை கண்டுபிடித்து அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார் சிற்பி.

Ⓜ இந்த கிராமத்தை முத்தரசன் என்ற குறுநில மன்னன் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார். அவரிடம் ஒருவர் சென்று,   “அரசே நம் ஊருக்கு ஒரு சிற்பி வந்திருக்கிறார். அவருக்கு கையில் கட்டைவிரல் இல்லை. இருந்தாலும் அவர் ஒரு முருகன் சிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறார். அந்த சிலையை பார்த்தால் முருகபெருமானே நேரில் காட்சி தருவது போல் அத்தனை தத்ரூபமாக இருக்கிறது” என்றார்.

Ⓜ இதை கேட்ட முத்தரசன், உடனே அதை காணவேண்டும் என்ற பேராவல் கொண்டு அந்த சிற்பியின் இருப்பிடத்திற்கு சென்றார். அரசர் வந்த சமயம் அந்த சிற்பி, மயில் சிலையை செதுக்கி கொண்டு இருந்தார். மன்னரை கண்டதும் கற்சிலை மயில் பறக்க ஆரம்பித்தது.

Ⓜ இதை கண்ட அரசர், தன் அருகில் இருந்த காவலர்களிடம் “மயிலை எட்டிப்பிடியுங்கள்“ என்றார். ஆனால் அந்த கற்சிலை மயில் காவலர்களுக்கு கொஞ்சம் வேடிக்கை காட்டியது. இதனால் சினம் அடைந்த காவலர்கள் கோபமாக அந்த கற்சிலை மயிலை பிடிக்க முயற்சித்ததால் அந்த கற்சிலை மயிலில் கால் சிறியதாக உடைந்தது. பிறகு தாமாகவே அந்த கற்சிலைமயில் முருகன் சிலை அருகே வந்து அமர்ந்தது.

Ⓜ இந்த முருகன் சிலை தான் எட்டுக்குடி சௌந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளது. (இதையடுத்து,  மூன்றாவதாகச் செய்த விக்கிரகம் குடிகொண்டிருப்பது, எண்கண் திருத்தலத்தில் என்பர். முதலாவது விக்கிரகம், சிக்கல் திருத்தலத்தில் உள்ளது)

Ⓜ ஐந்தரை அடி உயரத்தில் இருக்கும் இந்த முருகன், தன்  பக்தர்களின் எண்ணங்களுக்கேற்ப காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.

🅱 தல வரலாறு:🅱

⛱ ஒரு சமயம் திருக்கயிலைக்கு சிவ பெருமானை வழிபட வந்த பிருங்கி முனிவர், அங்கிருந்த பார்வதி தேவியை வழிபடாமல் வண்டு உருவம் எடுத்து, ஈசனை மட்டும் வலம் வந்து தொழுது சென்றார்..

⛱ ஈசனிடம் இருந்து தம்மை தனியாகப் பிரித்தது அம்பிகைக்குப் பிடிக்கவில்லை. ஈசன் திருமேனியில் தாமும் இடம் பெறவேண்டி பூலோகம் வந்து தவம் மேற்கொண்டார். பூலோகத்தில் ஓரிடத்தில் நான்கு வேதங்களும் ஈசனை வழிபட்டுக் கொண்டிருந்தன. அத்தலம் வேதாரண்யம். அதன் அருகில் எட்டி மரங்கள் நிறைந்த காட்டில் வால்மீகி முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த பார்வதிதேவி, ஈசனின் திருமேனியில் இடம்பெற வேண்டி, இங்கே தவம் புரிய வந்ததாகக் கூறினாள்.

⛱ 'கேதார கவுரி' விரதத்தை அனுஷ்டித்துப் பரமனை திருப்தி செய்து வேண்டிய வரம் பெறலாம்' என்று வழி சென்னார் வால்மீகி.
எட்டி வனத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து புரட்டாசி வளர்பிறை அஷ்டமி தொடங்கி, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாள் விரதம் இருந்து ஐப்பசி அமாவாசை அன்று 'கேதார கவுரி' விரதத்தை நிறைவு செய்தார் பார்வதி தேவி. உடனே ஈசன் அங்கு தோன்றி, தனது இடப்பாகத்தில் அன்னை பார்வதியை இருத்தினார்.
ஈசனும் அம்பாளும் ஒன்று சேர்ந்த அந்தத் திருவடிவே அர்த்த நாரீஸ்வரர். பார்வதி தேவி எட்டுக்குடியிலேயே கேதார கவுரி விரதத்தை அனுஷ்டித்து ஈசனின் சரிபாதி ஆனார் என்கிறது தலபுராணம்.

⛱ பார்வதிதேவி வழிபட்ட சிவலிங்கம் சௌந்தரேஸ்வரர் என்ற பெயரில் உள்ளது. இத்தல அம்பிகையின் திருநாமம் ஆனந்த வல்லி என்பதாகும்.

⛱ கேதார கவுரி விரதம் இருந்து எட்டுக்குடியில் ஈசனின் உடம்பில் உமையவள் சரிபாதி ஆனதால் இத்தல அம்பாள் ஆனந்த பரவச நிலையில் உள்ளாள். இவளிடம் கேட்டது உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ சிவ- பார்வதியர், ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசௌந்தரநாயகராக அருள்கின்றனர்.

♻ சூரபதுமனை அழிப்பதற்காகத் தோன்றியவர் என்பதால், அம்பறாத் தூணியில் இருந்து அம்பினை எடுக்கும் தோரணையில், வீர சௌந்தர்யத்துடன் காட்சி தருகிறார், ஸ்ரீசுப்ரமணியர்.

♻ சூரனை அழித்த கதையை குழந்தைகளுக்குச் சொல்லி, எட்டுக்குடி முருகனை மனதாரப் பிரார்த்தித்தால், குழந்தைகள் பயம் விலகி, தைரியம் மிக்கவர்களாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

♻ எல்லா முருகன் கோவில்களிலும் இருப்பது போல் இங்கும் காவடி எடுப்பது மிகவும் சிறப்பு.

♻ முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்கத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த மக்கள் மயிலை, 'எட்டிப்பிடி' எனக் கூச்சலிட மயிலைப் பிடித்து சிற்பியிடம் கொடுத்தனர்.

♻ சிறப்பு பெற்ற திருத்தலம் மயிலின் நகத்தில் அந்த சிற்பி சிறிது மாறுதல் செய்ததும் மயில் பறப்பது நின்றதாம். 'எட்டிப்பிடி' என்ற வார்த்தையே காலப்போக்கில் 'எட்டுக்குடி' என்று ஆனதாகவும் ஒரு கூற்று உள்ளது.

♻ இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள்.

♻ பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது.

♻ சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம் .கோவிலின் கன்னி மூலையில் மனோன்மணி தாயார் அருள் செய்கிறார்..

🅱 இருப்பிடம்:🅱

✈  நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது எட்டுக்குடி சிவஸ்தலம்.

✈ திருவாரூரில் இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில், சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டுக்குடி.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment