கல்லீரலில் ஏற்படக்கூடிய வீக்கத்தை ஹெபடைட்டிஸ் என்கிறோம். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஹெபடைட்டிஸ் ஏ முதல் இ வரை உள்ள வைரஸ் கிருமிகள்தான். ஹெபடைட்டிஸ் பி, சி தவிர மற்ற வகை கிருமிகளால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால், பி, சி வைரஸ் கிருமிகள் உயிரிழப்பு வரை கொண்டுவிடும். மற்ற வகை வைரஸ் கிருமிகளால் மஞ்சள் காமாலை ஏற்படும். அதை சரிபடுத்திவிட முடியும். இந்த வைரஸ் கிருமிகள் மாசடைந்த நீர், உணவுப் பொருட்கள் வழியாகப் பரவும். என்ன சாப்பிடுகிறோம், எங்கே சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தினாலே, இத்தகைய வைரஸ் கிருமித் தொற்றைத் தவிர்த்துவிடலாம். சுகாதாரமான முறையில் தயாரான உணவு மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரையே எப்போதும் அருந்துவது நல்லது.
மிக மோசமான பி மற்றும் சி வைரஸ் கிருமிகள் ரத்தம் மூலமாகவும் உடலுறவு மூலமாகவும் பரவுகின்றன. இதில், உடலுறவு மூலம் பரவுவது மிகக் குறைவுதான். பெரும்பான்மையானோருக்கு ரத்தம் மூலமாகவே இந்த வைரஸ் கிருமிகள் பரவுகின்றன.
பொதுவாக, பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தைப் பெறும்போதும், சரியாகச் சுத்தப்படுத்தப்படாத ஊசி உள்ளிட்ட அறுவைசிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்துவதாலும், இந்த இருவகை வைரஸும் பரவுகின்றன. ஹெபடைட்டிஸ் பி வைரஸ் மட்டும் கர்ப்பக் காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கும் மற்றும் உடலுறவு மூலமாகவும் பரவுகிறது. எனவே, கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தால், சிசுவுக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றைத் தடுக்க, குழந்தை பிறந்ததும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட வேண்டும். எந்த வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இப்போது, பச்சிளம் குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசி அட்டவணையிலேயே ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி சேர்க்கப்பட்டுவிட்டது. இதனால், எதிர்காலத்தில் இந்த வகை வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. ஹெபடைட்டிஸ் சி-க்கு தடுப்பூசி இல்லை. எனவே, இந்த வைரஸ் வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இந்தியாவில் 10 சதவிகித மக்களுக்கு ஏதாவது ஒரு சூழலில் இந்த ஏ முதல் இ வரையிலான வைரஸ் கிருமித் தொற்று வந்து சென்றிருக்கும். இதைச் சரியாகக் கண்டறிந்து, சிகிச்சை எடுக்காதபோது அது கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.
பாதுகாப்பற்ற ரத்தப் பரிமாற்றத்தைத் தவிர்த்தல், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசியைப் பயன்படுத்துதல், பாதுகாப்பான உடலுறவு போன்றவை ஹெபடைட்டிஸ் பி, சி பாதிப்பைத் தவிர்க்கும். தனிநபர் சுகாதாரம் பராமரிப்பது, சுகாதாரமற்ற இடங்களில் உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் ஹெபடைட்டிஸைத் தடுக்கலாம். இவை அனைத்தும் நம் கையில்தான் உள்ளன என்பதை உணர்ந்து செயல்பட்டால், ஹெபடைட்டிஸ் பாதிப்பை முற்றிலுமாக வெல்ல முடியும்.
No comments:
Post a Comment