Saturday 29 July 2017

அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் (கணபதீஸ்வரர்) திருக்கோயில், கணபதீச்சரம், திருச்செங்காட்டங்குடி , திருப்புகலூர் – திருவாரூர்


இறைவன் சிறுத் தொண்ட நாயனார்க்குப் பைரவர் திருக்கோலத்தில் வந்து பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலம்.   மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீம் என்னும் பல பெயர்கள் கொண்ட ஸ்தலம் ; சிறுத் தொண்டர் வாழ்ந்த மாளிகை இன்று கோயிலாக உள்ள ஸ்தலம்..

🌸🌷🌸🌷 BRS🌸🌷🌸🌷🌸

தொலைபேசி எண் :  +91- 4366 - 270 278, 292 300, +91-94431 13025.

💦🌿💦🌿  BRS 💦🌿💦🌿💦

மூலவர் : கணபதீஸ்வரர், உதிராபதீசுவரர், ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்

உற்சவர் : உத்திராபசுபதீஸ்வரர்

அம்மன்/தாயார் : வாய்த்த திருகுகுழல் உமைநாயகி ( சூளிகாம்பாள்)

தல விருட்சம் : காட்டாத்தி, ஆத்தி

தீர்த்தம் : சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், சந்திர தீர்த்தம், இந்திர தீர்த்தம்,  இயம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்னும் 9 தீர்த்தங்கள்.

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கணபதீச்சரம்

ஊர் : திருச்செங்காட்டங்குடி

பாடியவர்கள் : சம்பந்தர், அப்பர், அருணகிரியார்

🅱 தேவாரப்பதிகம்:🅱

தோடுடையான் குழையுடையான் அரக்கன்தன் தோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும் காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே.  - திருஞானசம்பந்தர்

🌷 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 79வது தலம்.🌷

🅱 திருவிழாக்கள் :🅱

🔵 சித்திரை பரணியில் பிள்ளைக்கறி சமைத்த விழா,

🔵 மார்கழி சதயசஷ்டியில் கணபதி விழா,

🔵 சிவராத்திரி,

🔵 திருக்கார்த்திகை,

🔵 ஐப்பசியில் அன்னாபிஷேகம்.

🅱 தல சிறப்பு:🅱
 
🎭 இத்தல மூலவர் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 🎭 மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் உத்தராபசுபதீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். காவியுடை அணிந்து, கையில் திருவோடு, திரிசூலம், உடுக்கை வைத்திருக்கிறார்.

🎭 சிவன் சிலையாக மாறியபோது நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் செதுக்கவே ரத்தம் பீறிட்டது. கலங்கிய சிற்பிகள் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைத்தவுடன் ரத்தம் நின்றது. தற்போதும் நெற்றியில் இந்த காயத்துடன் உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார். சாயரட்சை பூஜையின்போது மட்டும் காயத்தில் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கின்றனர்.

🎭 சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை மாதப்பிறப்பன்றும், சித்திரை பரணி, வைகாசி திருவோணம், ஐப்பசி பரணி ஆகிய நாட்களில் 2 முறையும் என மொத்தம் வருடத்திற்கு பத்து நாட்கள் மட்டும் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

🎭 சிவபெருமான் ஆடிய நவதாண்டவங்களில் திருசெங்காட்டங்குடியில் ஆடியது உபயபாத நர்த்தனம் எனப்படுகிறது.

🎭 இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய நான்காலும் சிறப்புடையது.

🎭 கணபதி இறைவனை வழிபட்டதால் இக்கோயிலுக்கு "கணபதீச்சரம்" என்று பெயர். ஆலயம் கணபதீச்சுரம் எனவும், ஊர் திருச்செங்காட்டங்குடி எனவும் வங்கி வருகிறது.

🎭 விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

🎭 சிறுத் தொண்டர் அருள் பெற்றத் தலம்.

🎭 மந்திரபுரி, செங்காடு, சத்தியபுரி, பிரமபுரி, தந்திரபுரி, ஆத்திவனம், பாஸ்கரபுரி, சமுத்திரபுரி, கணபதீச்சரம் ஆகிய ஒன்பது திருநாமங்களைக் கொண்டு விளங்குகின்றது.

🎭 இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது.

🎭 விநாயகர், பிரமன், வாசுதேவன், சூரியன், சந்திரன், சத்யாஷாட முனிவர், சிறுத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வழிபாடு செய்து பேறு பெற்ற தலம்.

🎭 நாயன்மார்கள் வரலாற்றில், சரவணத்துத் தனயரான முருகப் பெருமானுடன் கூட இறைவியாரும் இறைவரும் சோமாஸ்கந்தர் திருக்கோலம் காட்டி அருளியது இத்திருத்தலத்தில்தான் என்ற தனிச் சிறப்பு பெற்றத் திருத்தலமாகும்.

🎭 சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. மூலவர் கணபதீச்சரமுடையார்.
இங்கு பேழையில் மரகத லிங்கம் உள்ளது.

🎭 சிறுத்தொண்டர் பல்லவ மன்னனின் தளபதியாக 'வாதாபி ' சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில்தான் பிரதிஷ்டை செய்துள்ளார்.

🎭 சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர் (உற்சவ காலங்களில் வீதி உலா வருபவர் இவரே), திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன.

🎭 இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனும் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும்; மக்கட்பேறில்லாதவர்கள் உத்ராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர்.

🎭 கல்வெட்டுக்களில் இறைவன், 'செங்காடுடைய நாயனார் ', 'கணபதீச்சரமுடைய மகாதேவர் ', 'கணபதீஸ்வரமுடையார் ' எனவும்; தலத்தின் பெயர் "கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி" என்று குறிப்பிடபடுகிறது.

🎭  சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 142 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடைதிறப்பு:🅱
 
 🔑  காலை 6.45 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱 பொது தகவல்:🅱
 
🦋  கிழக்கு நோக்கியுள்ள 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் உள்ளது. கோயில் வாயிலில் சத்திய தீர்த்தம் எனப்படும் திருக்குளம் உள்ளது. கோபுரத்தின் உட்புறம் தல விருட்சமான ஆத்தி மரம் உள்ளது. இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுது செய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. முன் மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். உட்பிராகாரத்தில் பிட்சாடனர், சிறுத்தொண்டர், அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளதேவர், அவரது வீட்டு பணியாள் சந்தனநங்கை ஆகியோர் மூலத் திருமேனிகளையும், 63 மூவர் திருமேனிகளையும் தரிசிக்கலாம். பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகிய சந்நிதிகள் அடுத்து உள்ளன. வாதாபி கணபதி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

🦋 இவ்வாலயத்திலுள்ள அஷ்டமூர்த்தி மண்டபம் கண்டு தொழத்தக்கது. துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனார், திரிபுராரி, பைரவர், விநாயகர் ஆகியோரின் அருமையான வேலைப்பாடுடைய மூலத் திருமேனிகள் இம் மண்டபத்தில் உள்ளன.

🦋 அட்ட வீரட்ட தலங்களிலுள்ள சுவாமிகளையும் இங்கு தரிசிக்கலாம். தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், அசுர மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். அருணகிரியாரால் திருப்புகழ் பாடப்பெற்றவர் இவர்.

🦋 சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள துர்க்கை எட்டு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறாள். இவள் ஒரு கையில் வில்லுடன் காட்சி தருவது சிறப்பு. சிறுதொண்டரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்ற சிற்பம், உள்ளது.

🦋 பிரகாரத்தில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, நால்வர், சங்கநிதி, பதுமநிதியுடன் நாகர், இரட்டை பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் உயர்ந்த பீடத்தில் காட்சி தருகிறார்.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்டுபவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

🌹 தோஷம், மனக்குழப்பங்கள் நீங்கவும் இங்கு வணங்கலாம். கர்ப்பிணிகள் அம்பிகையிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

 🅱 நேர்த்திக்கடன்:🅱
 
💥 சுவாமி, உத்திராபசுபதீஸ்வரர், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர.

🅱 தலபெருமை:🅱
 
🍄 உத்திராபசுபதீஸ்வரர்:🍄

🔥 ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவ மன்னர் (63 நாயன்மார்களில் இவரும் ஒருவர்) சிறுத்தொண்டருக்கு இறைவன் காட்சி கொடுத்து அருளியதைக் கேள்விப்பட்டார். சிறுத்தொண்டருக்குக் காட்சி கொடுத்த இறைவனை தானும் தரிசிக்க விரும்பி வேண்டினார். இறைவனும் "சித்திரை திருவோணத்தில் உத்திராபதி உருவம் அமைத்து குடமுழுக்கு செய்தால் யாம் சணபகப் பூ மணம் வீச காட்சி தருகிறோம்" என்று அருளினார். மன்னரின் ஆணைப்படி கொல்லர்கள் உத்தராபசுபதீஸ்வரருக்கு சிலை வடித்தபோது, எவ்வளவு முயன்றும் சரியாக அமையவில்லை. அப்போது அங்கு வந்த அடியவர் ஒருவர், சிற்பிகளிடம் தண்ணீர் கேட்டார். அவர்கள் சிலை சரியாக அமையாத கோபத்தில், உலோக கலவையை கொடுத்துவிட்டனர். அதை பருகிய அடியார், அப்படியே சிலையாக மாறினார். சிவனே சிலையாக அமைந்ததைக் கண்டு மகிழ்ந்த மன்னர், அச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்தார். அவ்வேளையில் சிவன், செண்பகப்பூ மணம் கமழ காட்சி தந்தார். இந்த விழா சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தன்று நடக்கிறது. இதை, "செண்பகப்பூ விழா' என்று அழைக்கிறார்கள். இந்நாளில் சுவாமிக்கு பன்னீர் அபிஷேகமும், செண்பகப்பூ மாலையும் சாத்தி அலங்கரிக்கின்றனர்.

🅱 திருப்புகழ் தலம்: 🅱

🔥 இவ்வாலயத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

🅱 நான்கு அம்பாள்:🅱

🔥 முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவருக்கு குழந்தை இல்லை. சிவபக்தரான அவர் புத்திரப்பேறுக்காக சிவனை வேண்டி யாகம் நடத்தினார். சிவன் அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்றார். ஒருசமயம் வேட்டையாடச் சென்றபோது மன்னர் 4 பெண் குழந்தைகளை கண்டார். அக்குழந்தைகளை வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர்களை மணந்து கொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதியிலுள்ள நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அம்பிகை வாய்த்த திருகுகுழல் நாயகியாகவும், திருப்புகலூரில் கருந்தாழ்குழலியம்மை, கணபதீச்சரத்தில் சரிவார்குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார்குழலியம்மையாகவும் காட்சி தருகிறாள்.

🅱 தனிக்கோயில் அம்பிகை:🅱

🔥 அம்பிகையர் நால்வருக்கும்,  "சூலிகாம்பாள்'  என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமுற்றாள். ஒருநாள் இரவில் அவளது தாயார், ஆற்றைக் கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்பமுடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் "சூலிகாம்பாள்'  என்ற பெயரும் உண்டு. "சூல்'  என்றால் "கரு'வைக் குறிக்கும்.

🔥 பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமதமாக சென்றதால், அம்பிகை கோயிலுக்குள் செல்லாமல் வெளியில் நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது மட்டும் சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாத நைவேத்யம் படைப்பது விசேஷம்.

🅱 வாதாபி கணபதி:🅱

🔥 ஒருசமயம் பரஞ்ஜோதி, போருக்குச் சென்றபோது அங்கிருந்த விநாயகரை வணங்கி போர் புரிந்தார், வெற்றி பெற்றார். வெற்றியின் அடையாளமாக விநாயகரை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். கஜமுகாசுரனை அழித்ததற்காக விநாயகர் தோஷ நிவர்த்தி பெற்ற இத்தலத்தில், பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகே தமிழகத்தில் விநாயகருக்கு உருவ வழிபாடு உண்டானதாக சொல்வர். எனவே இவரை "ஆதிவிநாயகர்' என்றும் அழைக்கிறார்கள். தனிச்சன்னதியில் இருக்கும் இந்த விநாயகர், இரு கால்களையும் மடக்கி அமர்ந்திருக்கிறார். சதுர்த்தி திதியில் விசேஷ பூஜை நடக்கிறது. விநாயகருக்கு சிவன் ஒரு மார்கழி மாத சதயம் நட்சத்திரத்துடன் கூடிய, சஷ்டி திதியன்று தோஷ நிவர்த்தி செய்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் மார்கழி சதய நட்சத்திரத்தன்று சுவாமிக்கு விசேஷ பூஜை, வழிபாடு மற்றும் விநாயகர் புறப்பாடு நடக்கிறது.

🌺 சிறுத்தொண்டர் வரலாறு:🌺

🎸 இந்த நாயனாரின் இயற்பெயர் - பரஞ்சோதியார்; ஆயுர்வேதக்கலையும் அலகில் வட நூற்கலையும், தூய படைக்கலத் தொழிலும், பயின்றவர்; மதயானையையும், குதிரையையும் ஏறி நடத்துவிக்கும் ஆற்றலில் தேவர்களிலும், மண்ணுலகத்தோர்களிலும் மேம்பட்ட நிலையினர். பலகலைகளையும் பயின்றதன் முடிவாக சிவபெருமானின் கழல் அடைவதே ஞானம் என்ற உணர்வு ஓங்க, இறைவன் கழலுக்கு இவர்பால் பெருகிய அன்பு பள்ளத்தில் வீழும் நீர் போல அமைந்த பண்பினர். ஈசன் அடியார்க்கு இயல்பாகப் பணிசெய்யும் நலத்தவர்.

🎸 மன்னவனுக்குப் போர்த் தலைவராகச் சென்று பல நாடுகளை வென்று, பின் வாதாபியையும் வென்று, பெரும்பொருள் கொணர்ந்து குவித்தார். சிவனடிமைத் திறத்தினர் என்ற இவர் நிலை அறிந்த மன்னன், தன் தவறை உணர்ந்து நிறைந்த நிதிக் குவியல்களைக் கொடுத்து சிவத் தொண்டு சிறப்பாக செய்க என விடை கொடுத்து அனுப்பினான். முன்போல கணபதீச்சரத்தில் தொண்டுகள் செய்தார். சிவனடியார்களுக்கு சிறந்த பணி செய்ய திருவெண்காட்டுநங்கை என்ற நற்குண நங்கையை மணந்தார். சிவனடியார்களை நாள்தோறும் அமுது செய்வித்து அகமகிழ்ந்துப் பின் தான் உண்ணும் உயர்ந்த தவத்தை மேற்கொண்டு, நியதி வழுவாமல் வாழ்ந்து வந்தார். வரும் சிவனடியார்களை இனிய மொழிகள் கூறித் தாழ்ந்து வணங்கிப் போற்றி வழிபடுதலால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார். இவ்வாறு சிறந்த இவரது மனையறத்தின் வேராக விளங்கிய திருவெண்காட்டுநங்கை வழி சீராளர் எனும் மைந்தர் அவதரித்தார். இவரது செயற்கரிய பக்தியின் நிலையை உலகறியச் செய்யும் பெருங்கருணையுண்டன் வயிரவக் கோலத்துடன் திருச்செங்காட்டங்குடி வந்து சேர்ந்தார் சிவபெருமான்.

🎸 பெரும் பசியுடையவர் போல சிறுத்தொண்டர் இல்லம் சென்று "தொண்டனார்க்கு எந்நாளும் சோறளிக்கும் திருத்தொண்டர் வண்டார் பூந்தாரார் இம்மனைக் குள்ளாரோ?"  என வினவினார். இவரது கோலம் கண்டு, மாதவம் மிக்கவர் இவரென சந்தனத் தாதையார் உணர்ந்து அவரிடம்  "அமுது செய்விக்க எல்லையில் புகழ் அடியவரைத் தேடி அவர் சென்றுள்ளார்; எம்மை ஆளுடையவரே இல்லத்தில் எழுந்தருளி இரும்"  என்றார். "பெண்கள் தனித்திருக்கும் இடத்தில் தனியாக நாம் புகோம்"  என அகலும் நிலையில், திருவெண்காட்டுநங்கையார் முன்வந்து  "அம்பலவர் அடியவர் எவரையும் அமுது செய்விக்கக் காணாதவராய் தேடிப் போயுள்ளார்; உடன் வந்துவிடுவார்; எழுந்தருள்க!"  எனக் கூறினார். இறைவனார் அவரிடம் "ஒப்பில் மனையறம் புரப்பீர் உத்திராபதியுள்ளோம்; செப்பருஞ்சீர் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம்; எப்பரிசு அவர் ஒழிய இங்கு இரோம்; கணபதீச்சரத்தின் கண் வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம்; மற்றவர் தாம் நண்ணினால் நாமிருந்த பரிசுரைப்பீர்"  எனக் கூறி அகன்றார்.

🎸 அடியவர் எவரையும் காணாது வருந்தி மீண்ட சிறுத்தொண்டரிடம், மனைவியார் பயிரவர் கோலத்தில் வந்த அடியவர் விபரம் கூறினார். விரைந்து எய்தி பயிரவக் கோலம் கொண்டிருந்தவரைக் கண்டு திருப்பாதம் பணிந்து நின்ற சிறுத்தொண்டரை நோக்கி "நீரோ பெரிய சிறுத்தொண்டர்?!" என இறைவனார் வினவ, "நீறணிந்த அடியவருடன் போற்றப் போதேன்; ஆயிடினும் நாதன் அடியவர் கருணையோடு அப்படி அழைப்பர்"  எனச் சொல்லி  "அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும்" என்றார். அவரிடம் "பயிரவர் உத்திராபதியாகிய நாம் நிகழும் தவத்தீர், உமைக் காணும் படியால் வந்தோம்; எனக்குப் பரிந்தூட்டும் அரிய செய்கை உமக்கு இயலாது"  என்றார்.

🎸 "சிவபெருமான் அடியவர் தலைப்படின் தேடமுடியாததில்லை"  எனச் சொன்ன சிறுத்தொண்டரிடம்  "ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் உணவு கொள்வோம்; பசு வீழ்த்திட்டு உண்போம் அதற்கான நாள் இன்று; ஊட்ட உனக்கு அரிது"  என்றார். "விபரம் கூறினால் செய்வேன் எனக்கு அரியதில்லை"  என்றவரிடம் "ஐந்து வயதிற்குட்பட்ட உறுப்பில் குறையில்லாத குழந்தை, ஒரு குடிக்கு ஒரு மகனாகத் தந்தை அரியத் தாய் பிடிக்கும் போது அவர்கள் மனம் உவந்து குறையின்றி அமைக்கும் கறியே நாம் உண்பது" என்றார். "அடியேனுக்கு இதுவும் அரிதன்று, எம்பெருமான் அமுது செய்யப் பெறில்" என்ற சிறுத்தொண்டர் மனைவியாரிடம் விபரம் கூறினார். "பொருள் கொடுத்தால் குழந்தை தருவார் உளரோ?! குழந்தையை பெற்றோர் அரிவார் இல்லை; தாழாமல் நாம் பெற்ற மகனை அழைப்போம் நாம்" என்றார். பாடசாலையில் இருந்து சீராளனை அழைத்து வந்து அரியசெய்கை செய்து, அமுதாக்கி பயிரவர் கோலம் பூண்டுள்ள அடியவரை அமுதுக்கு எழுந்தருளச் செய்தபோது, "தலைக்கறி நாம் விரும்பி உண்பது"  எனத் தெரிவிக்க, சிறுத்தொண்டர் அது உதவாது என ஒதுக்கியதால் அஞ்ச, தாதியார் எதிர்பார்த்துத் தானே பக்குவம் செய்த தலைக்கறியை கொண்டு வந்து கொடுத்தார். "தனியே உண்ண மாட்டேன் ஈசன் அடியார் எவரேனும் இருப்பின் கொணர்க"  என்றார் அடியவர் சிறுத்தொண்டர் வெளியில் எவரையும் காணாது, மீள வந்து பயிரவக் கோலம் கொண்ட அடியவரிடம் "இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன்; யானுந் திருநீறு சகத்தில் இடுவார் தமைக்கண்டே இடுவேன்" எனத் தாழ்ந்து இறைஞ்சினார். "உம்மைப் போல் நீறிட்டார் உளரோ?! எம்முடன் உண்பீர் நீர்"  என்றார். அடியவரை உண்ணத் தொடங்குவிக்கும் நோக்குடன் சிறுத்தொண்டர் உண்ணத் தொடங்க, பயிரவர் வேடத்திலிருக்கும் இறைவர் தடுத்தருளி "ஆறு மாதத்திற்கு ஒருமுறை உண்ணும் நான் உண்ணத் தொடங்கும் அளவு பொறாது, நாளும் உண்ணும் நீ முன்பு உண்பதென்?! உன் மகனை அழை" என்றார். "இப்போது உதவான் அவன்" என்றவரிடம்,  "நாடி அழையும்"  என்று பயிரவர் சொல்ல, தொண்டர் தன் மனைவியாருடன் வெளியே வந்து  "மைந்தா வருவாய்"  என அழைத்தார்; அவர் மனைவியார்  "செய்ய மணியே சீராளா! வாராய் சிவனார் அடியார் யாம், உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார்" அழைத்தார். பாடசாலையினின்றும் வருபவன் போல் சீராளத்தேவர் ஓடிவர, எடுத்துத் தழுவிக் கணவன் கையில் கொடுக்க, இருவரும் உள்ள சென்றபோது, பயிரவர் மறைந்தருளி, மலை பயந்த தையலோடு சரவணத்துத் தனயரோடும் சோமாஸ்கந்தராக விண்ணில் காட்சியளித்து அவர்கள் அனைவருக்கும் சிவானந்த வீடுபேறு அருளினார் இறைவனார்.
 
🅱 தல வரலாறு:🅱
 
 ⛱  கஜமுகன் என்னும் யானை முகம் கொண்ட அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் கஜமுகாசுரனிடமுருந்து தங்களைக் காக்கும்படி சிவனை வேண்டினர். சிவபெருமான் கணபதியை அனுப்பி அசுரனை சம்ஹாரம் செய்தார்.

⛱ இதனால் கணபதிக்கு தோஷம் உண்டாகவே, பூலோகம் வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தவமிருந்தார். சிவன் அவரது தோஷம் நீக்கியருளினார். மேலும் அவரது வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த இடத்தில் லிங்கமாக எழுந்தருளி கணபதீஸ்வரர் என்றும் பெயர் பெற்றார்.

 ⛱ இத்தலமும் கணபதீச்சுரம் என்று பெயர் பெற்றது. விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி (ரத்தம்) இப்பகுதியில் காடாய்ப் பெருகியமையால் இத்தலம் "திருச்செங்காட்டங்குடி" எனப் பெயர் பெற்றது.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻  இத்தல இறைவன் சுயம்பு முர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻  விநாயகப் பெருமான் கஜமுகாசுரன் என்ற அசுரனை அழித்தபோது, அவன் உடம்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தம் அந்த இடம் முழுவதும் பரவியதால் செங்காடு என்று பெயர் பெற்றது. இங்கு விநாயகப் பெருமான் அத்தி மரத்தின்கீழ் பூசித்த சிவலிங்கம் உள்ளது.

♻ இறைவனார், அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் பாதம் தோய நடந்து அருள் செய்தத் திருத்தலங்களான சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருகுருகாவூர் வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய தலங்கள் வரிசையில் இத்தலம் இறைவன் உத்திராபதீஸ்வரராகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது.

♻ இவ்வாலயத்திற்கு சம்பந்தர் பதிகங்கள் இரண்டு, அப்பர் பதிகம் ஒன்று ஆக மொத்தம் மூன்று பதிகங்கள் இருக்கின்றன. சம்பந்தர் திருநாகைகைகாரோணம், கீழ்வேளூர் ஆகிய திருத்தலங்களை தரிசித்துக் கொண்டு திருசெங்காட்டங்குடி வந்தார். சிறுத்தொண்டர் சம்பந்தரை வரவேற்று அவருடன் திருக்கோவிலை அடைந்து இருவரும் இறைவனைப் பணிந்தனர். சம்பந்தர் தனது இரு பதிகங்களில் ஒன்றான "பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்" என்று தொடங்கும் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் சிறுத்தொண்டர் இவ்வாலய இறைவனுக்கு செய்து வந்த பணியினைப் போற்றி சிறப்பித்துப் பாடியுள்ளார்.


🅱 இருப்பிடம்:🅱

✈திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலத்தில் இருந்து நாகூர் செல்லும் சாலை வழியில் திருப்புகலூர் அடைந்து, அங்கிருந்து தெற்கே திருக்கண்ணபுரம் செல்லும் சாலை வழியாகச் சென்று திருசெங்காட்டங்குடி தலத்தை அடையலாம்.

✈ நன்னிலத்தில் இருந்து சுமார் 28 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருசெங்காட்டங்குடியில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசாத்தமங்கை, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம்.

✈ திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., தூரத்திலுள்ள திருப்புகலூர் சென்று அங்கிருந்து 4.5 கி.மீ. சென்று இக்கோயிலை அடையலாம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment