Sunday 16 July 2017

தீராத நோய் தீர்க்கும் தீர்த்தக் குளம்!



தொண்டை மண்டலத்தின் அந்த வனப்பகுதியில், தவம் புரிவதற்காக வந்த அகத்தியர், அந்த இடத்தில் சிறிதளவும் தண்ணீர் இல்லாமல் இருந்ததை அறிந்தார். நித்தியப்படி பூஜைகளுக்காகவும் இந்த வழியே வருவோரின் தாகம் தணிப்பதற்காகவும் தண்ணீர் வேண்டி, சிவனாரைத் தொழுது முறையிட்டார்.
அவரின் கோரிக்கையை ஏற்ற சிவனார், அந்தத் திருவிடத்தில் தீர்த்தக் குளத்தை உருவாக்கியதுடன், திருமணக் கோலத்திலும் அகத்தியருக்கு  காட்சி தந்தருளினார். இப்படி, திருக்காட்சி அருளியதாலும் வனமாகத் திகழ்ந்ததாலும் அந்தப் பகுதி காட்டூர் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
சென்னை- திருப்போரூருக்கு அருகில் உள்ளது இந்தத் திருத்தலம். மூலவரின் திருநாமம் - ஸ்ரீஉத்திர வைத்தியலிங்கேஸ்வரர். அம்பாள் - ஸ்ரீதையல்நாயகி.
ஒருகாலத்தில், மகரிஷிகளும் அந்தணர்களும் இங்கு வந்து தங்கி, வேதங்கள் ஒலிக்க, ஜபதபங்களில் ஈடுபட்டு, இறைவனின் பேரருளைப் பெற்றதால், இந்தத் தலத்துக்கு மறையூர் எனும் திருநாமமும் உண்டு. அதுமட்டுமா? பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ள ஆலயம், சிதம்பர சுவாமிகள் உள்ளிட்ட பலரும் வணங்கிய கோயில் எனப் பல பெருமைகள் கொண்டது, இந்தத் திருத்தலம்.
இத்தனை பெருமைகளும் சிறப்புகளும் கொண்ட இந்தக் கோயில், வழிபாடுகள் இல்லாமல், சிதிலம் அடைந்து காணப்பட்டதாம். இதையடுத்து மெய்யன்பர்கள் பலரும் ஒன்றுகூடி, கோயிலைப் புனர்நிர்மாணம் செய்து, பொலிவு படுத்தினர். அப்படிப் புனரமைக்கும்போது, பூமியில் இருந்து அம்பிகை வெளிப்பட்டாள் எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர் அன்பர்கள்!
கடந்த 98-ஆம் வருடம் திருப்பணிகள் துவங்கி, 2004-ஆம் வருடம், மிக விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலயத்தின் தீர்த்தக் குளம் ரொம்பவே விசேஷம். இங்கு வந்து, புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, வைத்தியலிங்கேஸ்வரரையும் ஸ்ரீதையல்நாயகியையும் வணங்கித் தொழுதால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்!
தீர்த்தக்குளத்தின் நீரை எடுத்துப் பருகினாலே, வியாதிகள் பறந்தோடிவிடும் என்கின்றனர் பக்தர்கள்!  
திருமணத் தடையால் கலங்கித் தவிப்பவர்களும் பிள்ளைப் பாக்கியம் இல்லையே எனக் கண்ணீர் விடுபவர் களும் வியாபாரத்தில் அடுத்தடுத்த நஷ்டத்தால் அல்லல் படுபவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்; பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறுவர்; நலிவுற்ற வியாபாரம் செழித்து விளங்கும்  என்பது ஐதீகம்!
கருவுற்ற பெண்கள், இங்கு வந்து தையல்நாயகியை மூன்று வெள்ளிக்கிழமைகள் நெய் தீபமேற்றி வழிபட்டால், சுகப்பிரசவம் உண்டாகும்; கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.
சிதம்பரம் அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், இங்கு வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாகச் சொல்வர்!

No comments:

Post a Comment