இத்தல அம்மனிடம் நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாத பெண்கள் வேண்டிக்கொள்கின்றனர். அம்மன் வயிற்றில் முளை கட்டிய பாசிப் பயிரை வைத்து கட்டி பூஜை செய்து வேண்டிக் கொள்ள, அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவதும், அவர்களுக்கு விரைந்து குழந்தை பிறப்பதும் நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.
மணப்பாறையில் உள்ளது, நாகநாத சுவாமி ஆலயம். இத்தல இறைவனின் பெயர் நாகநாத சுவாமி. இறைவியின் பெயர் மாதுளாம்பிகை.
இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நீண்ட அகன்ற திருச்சுற்று. அதன் வடக்கில் பைரவர் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கிழக்கில் நவக்கிரக நாயகர்கள் சன்னிதியும், தெற்கில் நால்வர் சன்னிதியும் உள்ளன.
மேற்கு திருச்சுற்றில் கன்னிமூலை கணபதி தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். அரசமர நிழலில் இளைப்பாறும் இந்த கணபதியை வேண்டி, மரத்தடியில் முட்டையையும் பாலையும் வைத்து விட்டுச் செல்கின்றனர் பெண்கள். மரத்தின் பொந்தில் குடி கொண்டிருக்கும் நாகநாதர், அந்த பாலைப்பருகி முட்டையை உறிஞ்சி செல்வது வழக்கமாம். இதனால் அந்தப் பெண்களை பற்றியிருக்கும் நாகதோஷம் விலகும் என்பது அவர்களது நம்பிக்கை.
ஆறுமுக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் மேற்கு திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது. தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரது திருமேனிகள் உள்ளன.
இறைவன் சன்னிதியை நோக்கி நாம் நடக்கும் போது, முதலில் 16 கால் மண்டபம் உள்ளது. நடுவே பலிபீடமும், நந்தியும் இருக்க, கீழ் திசையில் சூரிய-சந்திரர்கள் அருள்பாலிக்கின்றனர். துவார பாலகர்கள் இருபுறமும் கொலுவிருக்க, அடுத்துள்ளது மகா மண்டபம்.
மண்டபத்தின் வலதுபுறம் அன்னை மாதுளாம்பிகையின் சன்னிதி உள்ளது. நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்புரியும் அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தாமரை மலரையும், அட்சமாலையையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்புரியும் அன்னையின் அழகே அழகு.
மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் இறைவன் நாகநாதசுவாமி லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் மகா கணபதியும், வலது புறம் முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் மாதப் பிரதோஷம், சிவராத்திரி, மார்கழியில் 30 நாட்கள் பூஜை, கார்த்திகை சோம வாரங்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகம் காண பக்தர்கள் திரளாக வருகின்றனர்.
ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று அன்னைக்கு சிறப்பு வளையல் அலங்காரமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று வரும் பக்தர்களுக்கு வளையலை பிரசாதமாகத் தரும் பழக்கம் உள்ளது.
ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து திங்கட்கிழமைகளில் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்க, அவர்களின் தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் தல விருட்சம் வில்வம்.
ஆடி மாதம் இரண்டாவது வாரம் ஆலயத்தின் எதிரே உள்ள நினைவரங்கத்தில் மூன்று நாட்கள் இசைவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
இங்கு உற்சவர் சிலைகள் இல்லை. எனவே இறைவன் இறைவி வீதியுலா வருவதில்லை. இங்குள்ள முருகப் பெருமானுக்கு சஷ்டியின் போது விசேஷ அலங்காரங்கள் நடைபெறுவதுடன் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகிறது. கார்த்திகை மாத கார்த்திகை அன்று சொக்கப்பனை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
மனதில் வேண்டும் பிரார்த்தனை பலிக்க, கார்த்திகை மாதம் 30 நாட்களில் திருச்சுற்றை 1008 முறை சுற்றி வர வேண்டும். அவ்வாறு செய்தால் நினைத்த காரியம் நிச்சயம் கைகூடும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
அன்னைக்கு பவுர்ணமி அன்று அபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால் திருமணம் நடப்பதும் குழந்தை பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தினசரி மூன்று கால பூஜை நடக்கும் இந்த ஆலயம் இந்து அற நிலையத் துறையின் நிர்வாகத்திற்கு உட்பட்டது.
இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
No comments:
Post a Comment