Thursday 7 December 2017

அறிகுறிகள் அறிவோம்! -

வளைந்த நகங்கள்... ஐஸ் சாப்பிடும் ஆசை...


``வீட்டுல எவ்வளவோ ஸ்நாக்ஸ் இருக்கு. ஆனா, அதையெல்லாம் விட்டுட்டு வெளியில போய் எதை எதையோ திங்கிறான், மண்ணைக்கூட திங்கிறான்’’, ``என் மகன் ஸ்கூலுக்குப் போனா சாக்பீஸ், குச்சியையெல்லாம் திங்கிறான், எவ்வளவு அடிச்சாலும் கேட்க மாட்டேங்கிறான்’’ என்று புலம்பும் தாய்மார்கள் இங்கே அதிகம். 

``மழைக்காலமா இருந்தாக்கூட பரவாயில்லை. சம்மர்லகூட உதடு வெடிக்குது. எந்த கிரீம் போட்டாலும் போக மாட்டேங்குது’’ - இப்படிப் புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.
இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என்ன?

ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், ரத்தத் தட்டணுக்கள் ஆகியவை இருக்கும். இவற்றில் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை உடலுக்கு மிக முக்கியமானது. ஏனென்றால், ஹீமோகுளோபின்தான் நம் உடல் முழுக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் வேலையைச் செய்கிறது. நம் உடலில் உள்ள ஹீமோகுளோபினின் எண்ணிக்கை, உடலில் உள்ள இரும்புச்சத்தைப் பொறுத்தே அமைகிறது. இதன் மூலம் நம் உடலுக்கு இரும்புச்சத்து எவ்வளவு அவசியம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நம் உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா என்பதைச் சில அறிகுறிகள் மூலமே எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். அவை...

மண் சாப்பிடுதல்


நாம் ஏற்கெனவே சொன்னதுபோல குழந்தைகள் மண், சாக்பீஸ், பென்சில், பேப்பர் அட்டைகள் போன்றவற்றை மென்று தின்றுகொண்டிருப்பார்கள். நாமும் அவர்களை அடித்து, அதை வாயில் இருந்து எடுத்துவிடுவோம். ஆனால், இதுபோன்ற பிரச்னைகளுக்குக் காரணம் என்ன என்று யோசிப்பதில்லை. உடலில் இரும்புச்சத்து குறைவதால்தான் இதுபோன்ற உணவல்லாத மற்ற பொருள்களைக் குழந்தைகள் உட்கொள்கிறார்கள். உடனடியாக மருத்துவரை அணுகி, அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதும், இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதும்தான் இந்தக் குறைபாட்டைப் போக்குவதற்கான சிறந்த வழி.

நகங்கள் வளைந்து காணப்படுதல்

நம் நகங்கள் வளைந்து ஸ்பூன் மாதிரியோ அல்லது சீராக இல்லாமல் உடைந்தோ காணப்பட்டால், நிச்சயமாக நாம் இரும்புச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்துகொள்ளலாம். இதற்கு ‘கொய்லானிசியா’ (Koilonychia) என்று பெயர். இந்தச் சூழலில் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது மிக அவசியம்.

உதட்டில் விரிசல்

உதட்டில் விரிசல் ஏற்பட்டு, சிலரை பாடாய்ப்படுத்தும். பேச முடியாமலும் பல் துலக்க முடியாமலும் சாப்பிட முடியாமலும் அவதிப் படுவார்கள். இப்படி எண்ணற்ற தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி வரும். குளிர்காலத்தில் மட்டுமல்லாமல், எந்தக் காலத்திலும் உதட்டில் விரிசல் ஏற்பட்ட வண்ணமே இருந்தால், நிச்சயமாக அது இரும்புச்சத்துக் குறைபாட்டால்தான் ஏற்பட்டதாக இருக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தக் குறைபாட்டைச் சரிசெய்ய முடியும்.

நாக்கு வீக்கம் - வாய்ப்புண்

நாக்கில் திடீரென்று வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது நாக்கு பளபளப்புடன் சிவப்பாக இருந்தாலோ நம் உடலில் இரும்புச்சத்தின் தேவை இருக்கிறது என்று அர்த்தம். இந்த வீக்கத்தால் நம்மால் மெள்ளவோ, சாப்பிடவோ, பேசவோ முடியாது. அதேபோல் வாய்ப்புண்களும் இரும்புச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும். இது நமக்கு ஒருவித எரிச்சல் உணர்வைத் தரும்.

ஐஸ் சாப்பிடும் ஆசை

உடலில் இரும்புச்சத்துக் குறைபாடு அதிகமாக இருந்தால், நம் மனம் அடிக்கடி ஐஸ் கட்டிகளைச் சாப்பிடத் தூண்டும். இதற்கு ‘பேகோபேஜியா’ (Pagophagia) என்று பெயர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் கிலோ கணக்கில் ஐஸ் க்யூப்களை உள்ளே தள்ளக்கூடியவர்கள்.

கால்களில் நடுக்கம்

சேரில் உட்காரும்போது நம் கால்கள் ஒருவித நடுக்கத்துடன் ஆடினால், அது நிச்சயமாக இரும்புச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிதான். ஓய்வில்லாமல் வேலைகளைத் தொடர்ச்சியாகச் செய்தாலும்கூட இந்த மாதிரியான நடுக்கம் வரும். ஓய்வெடுத்த பின்னர் அது சரியாகிவிடும். நாம் களைப்பாக உணராத நேரங்களில்கூட நம் கால்கள் ஆடினால், நிச்சயமாக அது இரும்புச்சத்துக் குறைபாட்டினால்தான்.

முடி உதிர்தல்

உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு முடி உதிரும் பிரச்னை உண்டாகும். எந்த எண்ணெய் தடவினாலும் இது தீரப்போவதில்லை. இரும்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டுமே முடிஉதிர்வதைத் தடுக்க முடியும். இந்தப் பிரச்னை ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படலாம்.

எதிலும் கவனம் செலுத்த இயலாமை

இரும்புச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளால் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்த முடியாது. எப்போதும் சோர்வாகவே காணப்படுவார்கள். குழந்தைகளின் மன வளர்ச்சியும் தடைப்படும். இளைஞர்களால் வேலைகளைச் சரியாகச் செய்ய முடியாது. சுற்றியிருப்பவர்களுடன் தொடர்பில்லாமல், எப்போதும் தனியாக இருக்கவே விரும்புவார்கள்.


என்ன தீர்வு?

இந்திய அளவில் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் இரும்புச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இரும்புச்சத்துக்  குறைபாடு, நம் உடலில் ரத்தச்சோகை ஏற்படுவதற்கான முதன்மைக் காரணியாக இருக்கிறது. பொதுவாக மனித உடலில் 100 மி.லி ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 11 முதல் 15 கிராம் வரை இருந்தால் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில்  ஹீமோகுளோபின்,100 மி.லி ரத்தத்தில் 10-க்கும் குறைவாகவே இருக்கும்.

நாம் உண்ணும் உணவுகள் மூலம் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கச் செய்வதுதான் இதைச் சரிசெய்வதற்கான  தீர்வு. கீரை வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். குறிப்பாக முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, புதினா இலைகள், பீட்ரூட், தாமரைத்தண்டு, பேரீச்சம்பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிகமாக உட்கொண்டால் நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். முட்டை, மீன், ஆட்டு ஈரல், இறைச்சி ஆகியவையும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளே.

இரும்புச்சத்துக் குறைபாட்டால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகி அதற்குண்டான மருந்துகளை உட்கொள்வது சிறந்தது. கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருந்தால், பிறக்கும் குழந்தைகளுக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படும். நம் உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கவும் கூடாது. தேவைக்கதிகமாக அதிகரித்தாலும், எலும்புத் தேய்மானம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இரும்புச்சத்துள்ள மருந்துகளை உட்கொள்ளும்போது, வைட்டமின் சி உள்ள பொருள்களுடன் உட்கொள்வது நல்லது. சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. டீ, காபி போன்றவற்றுடன் இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொண்டால் நமக்கு எந்தப் பயனும் கிடைக்காது.

No comments:

Post a Comment