மழையைப் பொழிவித்து மாநிலம் காக்க மாரியம்மனாகவும், நோய் அகற்ற பத்ரகாளியாகவும், பகையை அழித்து வெற்றிதரும் துர்க்கையாகவும், இந்த மூன்று வடிவங்களும் ஒன்று சேர்ந்து முத்தாரம்மனாகவும் பல தலங்களில் பார்வதி தேவி சிவசொரூபமாய் திருக்காட்சி தருகிறாள். முத்தாரம்மன் சிவ சொரூபமாக காட்சிதருவதால், அனைத்து முத்தாரம்மன் ஆலயங்களிலும் குங்குமத்திற்குப் பதில் முதன்மை பிரசாதமாக திருநீறு அளிக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் அகத்திய முனிவருக்கு சிவபெருமான் கல்யாணக் காட்சி கொடுத்த, அகத்தீஸ்வரத்தில் உள்ள முத்தாரம்மன் ஆலயம்.
அகத்திய முனிவரின் காலடி பதிந்த திருத்தலம் இது. ஆம்! விடிந்தால் திருக்கயிலை மலையில் உலகாளும் ஈசனுக்கும், அன்னை உமையவளுக் கும் திருக்கல்யாணம். தேவர்களும், முனிவர் களும் மட்டுமன்றி உலகமே திரண்டிருந்தது வடதிசையில். அதன்காரணமாக வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. தன் மணம் காண வந்த அன்பர்களின் கனம் தாங்காது பூமி தாழ்ந்து விட்டதைக் கண்ட சிவபெருமான், அகத்தியரை அழைத்தார்.
‘அகத்தியா! பூமியை சமப்படுத்த வேண்டி நீ தென்பகுதிக்கு செல்’ என்றார்.
அகத்தியருக்கோ மன வருத்தம். தென்பகுதிக்கு சென்றுவிட்டால் ஈசனின் திருமணக் கோலத்தை தரிசிக்க முடியாமல் போய்விடுமே என்று நினைத்த அகத்தியர், இதுபற்றி சிவபெருமானிடம் கூறினார்.
ஆனால் ஈசனோ, ‘அகத்தியா! நீ விரும்பும் தலங்களில் எல்லாம், எமது திருமணக் கோலத்தை காட்டியருள்வேன்’ என்று அருளினார்.
இதையடுத்து தென்பகுதிக்கு புறப்பட்டார் அகத்தியர். பூமி சமமானது. அப்படி அகத்தியர் தென்பகுதிக்கு பொதிகை தாண்டி தெற்கில் வந்த போது, இத்தலத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து ஈசனை வழிபட்டார். இங்கேயே மீண்டும் ஈசனின் திருமணக்காட்சியை காணவேண்டி அகத்தியர் ஈசனை வேண்ட, இங்குள்ள அத்தி மரத்தின் கீழ் அகத்தியருக்கு ஈசன் தமது திருமணக்கோலக் காட்சியை காட்டியருளினார்.
பின்னாளில் வந்த பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன், இங்கு கோவில் எழுப்பிட, அகத்தியர் வழிபட்ட ஈசன் அகத்தீஸ்வரர் என்றும், இத்தலம் அகத்தீஸ்வரம் என்றும் அழைக்கப்படலாயிற்று. அகத்தீஸ்வரர் ஆலயத்தின் தென்பகுதியில், அகத்தீஸ்வரம் ஊரின் மத்தியில் நூறாண்டுகளுக்கும் மேலான அகத்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவில் இருக்கிறது. அன்னை உமையவள் முத்தாரம்மனாய் இந்த அகிலத்தைக் காத்து நிற்கும் அழகிய திருக்கோலம் தாங்கி இங்கு அருள்பாலிக்கிறாள்.
அழகிய ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றை வணங்கி ஆலயத்தினுள் சென்றால், நேராக கருவறையில் முத்தாரம்மன் அழகிய சிம்மாசனத்தின் மீது சுதை வடிவில் மூன்று திருமுகங்களுடனும், ஆறு திருக்கரங்களுடனும் வடக்கு பார்த்தவண்ணம் எழுந்தருளி இருக்கிறாள். இவளை ‘வடக்கு வாய் செல்வி’ என்றும் அழைக்கிறார்கள். அனல்காரி அம்மன், வேப்பங்குழைக்காரி, சொரிமுத்து என பல திருநாமங் களும் இந்த அம்மனுக்கு உண்டு. இவளது மூன்று வலக்கரங்களிலும் ஒடுக்கு, சூலம், வாள் முதலியனவும், இடக்கரங்கள் மூன்றிலும் கபாலம், அங்குசம், நாகம் முதலியனவும் உள்ளன. தமது வலது காலை மடித்து, இடது காலை மகிஷாசூரனின் தலை மீது வைத்திருக்கிறாள் அன்னை. இவளது வலது பாதத்தின் கீழ் நாகம் படமெடுத்தக் கோலத்தில் காணப் படுகிறது.
கருவறையில் முத்தாரம்மனின் வலப்புறம் பெரியநாயகி அம்மனும், இடப்புறம் சிறியநாயகி அம்மனும் உள்ளனர். சந்தன மாரியம்மனும், உச்சினி மாகாளியம்மனும் அருள்கிறார்கள். கருவறை முன்மண்டபத்தில் பைரவர், பைரவி, வண்டிமலையான், வண்டி மலைச்சி, சாஸ்தாவும் உள்ளனர். கருவறையை அடுத்து கிழக்குப்புறமுள்ள பிரகாரமண்டபத்தில் மஞ்சள் மாரியம்மனும், வெள்ளை மாரியம்மனும் சுதை வடிவில் வடக்கு நோக்கியவண்ணம் அருள்பாலிக்கிறார்கள். இவர்கள், தங்களை வழிபடும் பக்தர்களுக்காக முத்தாரம்மனிடம் பரிந்துரை செய்வார்களாம்.
ஆலயத்தில் செங்கிடாக்காரன், கருங்கிடாக்காரன் ஆகியோர் காவல் தெய்வமாக அருள்கிறார்கள். ஆலயத்தின் எதிரில் தனி சன்னிதியில் தேரடி மாடன் எனும் சுடலைமாட சுவாமி கிழக்குப் பார்த்த வண்ணம் வீற்றிருக்கிறார். ஆலயத்தை சுற்றிலும் அரசு, வேம்பு, வில்வம் சூழ்ந்துள்ளது. பிரதோஷ நாட்களின் அந்திப்பொழுதில் இத்தல கருவறை அருகில் உள்ள வில்வ மரத்தையும், ஆலயத்தையும் தனித்தனியாக 11 முறை வலம் வந்து, கருவறை தீபத்தில் தூய பசுநெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து, சிவப்பு அரளி மாலை, மரிக்கொழுந்து சூட்டி, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து, குங்குமார்ச்சனை செய்து வந்தால், நம்மை அண்டிய தரித்திரம், கடன், வறுமை அகலும்.
இத்தல முத்தாரம்மனின் காலடியில் நாகம் உள்ளதால், அன்னையை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் எலுமிச்சைப் பழ தீபமேற்றி, சிவப்பு அரளி மாலை சூட்டி, 8 உதிரி எலுமிச்சைப் பழங்கள் வைத்து வழிபட்டால் நாகதோஷங்கள் விலகும். முத்தாரம்மனின் கடைக்கண் பார்வையில் இங்கு நவக்கிரக சன்னிதிகள் உள்ளது சிறப்பு. நவக்கிரக நாயகியாக முத்தாரம்மன் இங்கு அருள்கிறார். எனவே இங்கு அன்னையை முறைப்படி வழிபட்டால் கிரக தோஷங்களும் அகலுமாம். கண்பார்வை குறையுடையோர் அம்பிகைக்கு வெள்ளியில் கண் மலர் சாற்றி வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.
இத்தல விநாயகர் குலசேகர விநாயகர் எனும் பெயரில் ஆலயத்தின் தெற்கில் தனிச் சன்னிதியில் அருள்கிறார். வடமேற்கில் பாலசவுந்தரி பத்திரகாளி அம்மனும், கிழக்கில் எங்கோடிகண்டன் சாஸ்தாவும் வீற்றிருக்கிறார்கள். அகத்தீஸ்வரம் திருத்தலத்தின் மத்தியில் உறையும் அன்னை முத்தாரம்மனின் ஆலயத்தை சுற்றிலும் காவலாக வடக்கில் சுடலை மாடன், வடகிழக்கில் செங்கிடாக்காரனும், மாசானமும், தென்கிழக்கில் வண்ணார மாடனும், தென்மேற்கில் மன்னார் சுவாமியும் உள்ளனர்.
அகத்தீஸ்வரம் ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மஞ்சள் நீராட்டு விழாவும், சித்திரை மாதத்தில் 11 நாட்கள் பெருவிழாவும், நவராத்திரி, சிவராத்திரி, ஆடி செவ்வாய்க்கிழமை, மார்கழி அதிகாலை திருப்பாவை திருவெம்பாவை வழிபாடு, தை பொங்கல் வழிபாடு என சிறப்பாக விழாக்கள் நடைபெறுகின்றன. மாதாந்திர அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி தினங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் முத்தாரம்மனுக்கு நடைபெறும் மஞ்சள் நீர் திருவிழா சிறப்பானது. அன்று வீதி உலா வரும் முத்தாரம்மனுக்கு, பக்தர்கள் குடங்களில் அரைப்பு மஞ்சள் கலவை மற்றும் வேப்பிலை வைத்த புனித நீரால் அன்னையை நீராட்டி தங்கள் தோஷங்களை போக்கிக்கொள்கிறார்கள்.
நாகர்கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் நகரத்திற்கு அடுத்து கொட்டாரம் எனும் ஊர் வரும். அங்கிருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தூரத்தில் அகத்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment