Thursday 7 December 2017

இனிப்பான ஆபத்து அறிவோம்


ரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு சர்க்கரையை அறவே தவிர்த்து விடுவார்கள் சிலர். ஆனாலும், அவர்கள் உட்கொள்ளும் பல உணவுகளிலும் மறைமுகமாகச் சர்க்கரையின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.   
ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ளக் கூடாது என்கிறது ஒரு பரிந்துரை. நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருள்களில் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கும் அதிகமாக மறைந்திருக்கிறது சர்க்கரை.
நேரடியாகச் சர்க்கரையைத் தவிர்ப்பதுடன், மறைமுகமாகவும் சர்க்கரையைத் தவிர்க்கும் வழிகளை அறிந்துகொள்ளுங்கள்.

செயற்கைக் குளிர்பானங்களைத் தவிர்க்கவும்!   
செயற்கைக் குளிர்பானங்களுக்கு `நோ’ சொல்வது ரத்தத்தில் சர்க்கரை சேரும் அளவை வெகுவாகக் குறைக்கும். அவற்றுக்குப் பதிலாகத் தண்ணீர் அல்லது மூலிகை டீ அருந்தலாம். `அது இயலாத காரியம்’ என்பவர்கள் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை அல்லது பிற பழரசங்களைக் குடிக்கலாம். 

செயற்கைச் சர்க்கரை வேண்டவே வேண்டாம்!  
இயற்கைச் சர்க்கரைக்கு மாற்றாகச் செயற்கைச் சர்க்கரையை உட்கொள்வது மிக மோசமான உத்தி. சர்க்கரையைவிட மோசமானது செயற்கைச் சர்க்கரை. இதைச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமே தவிர, குறையாது.

தேன் மாற்றல்ல!   
ஆபத்து வெள்ளைச் சர்க்கரையில்தான் பிற வகை இனிப்புகளில் பிரச்னை இல்லை என்று நினைக்காதீர்கள். சர்க்கரை எதிலிருந்தாலும் ஆரோக்கியக் கேடுதான். அது, வெள்ளைச் சர்க்கரையாக இருந்தாலும், தேனாக இருந்தாலும் ஒன்றுதான். இரண்டும் உடம்புக்கு குளுக்கோஸைத்தான் தரும்.  எனவே, வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகத் தேனைப் பயன்படுத்தி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

பானங்களில் சர்க்கரைச் சேர்ப்பதைத் தவிருங்கள்!  
நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் பானங்களின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டிய நேரம் இது. டீ, காபி போன்றவற்றில் சர்க்கரையின் அளவைச் சிறிது சிறிதாகக் குறைத்துக்கொண்டே வாருங்கள். பானங்களில் சர்க்கரை சேர்ப்பதைக் குறைத்துக்கொண்டே வந்தால் தேவைக்கு அதிகமான சர்க்கரையைச் சேர்ப்பது தானாகவே குறைத்துவிடும். உடலளவிலும் மாற்றங்களை உணர்வீர்கள்.

சுவை தரும் பிரச்னை!   

கடைகளில் விற்கப்படும் பாதாம் பால், ராகிமால்ட் போன்றவற்றை அருந்தும்போது கவனம் தேவை. சுவையை அதிகமாக்கிக் காட்டுவதற்காக அவற்றில் அதிகம் சர்க்கரை சேர்த்திருப்பார்கள். 

அலமாரிகள் சுத்தம் அவசியம்!  
முதல் வேலையாக, வீட்டில், அலமாரிகளில் இருக்கும் சாக்லேட், இனிப்புகளை எல்லாம் எடுத்து வெளியே போடுங்கள். ஒரு பழைய சொற்றொடர் உண்டு... `பார்வையில் படாதது, மனதிலும் படாது’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

அதிகப் பழங்கள் வேண்டாமே!   
கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அதிகஅளவில் பழங்களைச் சாப்பிடுவதும்கூட ரத்தச் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். அதற்குக் காரணம், பழத்தில் இருக்கும் `ஃப்ரக்டோஸ்’ (Fructose) என்கிற சர்க்கரைத் தன்மை. எனவே ஒரு நாளைக்கு இரு வேளை பழம் சாப்பிட்டால், அதை ஒரு வேளையாகக் குறைத்துக்கொள்ளலாம்.  பழங்கள் நன்மை தருபவை. இருந்தாலும், அவை நாம் சாப்பிடும் காய்களுக்கு மாற்றாகாதவை. எனவே விதவிதமான காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.. 

சாப்பாட்டிற்குப் பின்னர் இனிப்பு ஆகாது   
இரவு உணவுக்குப் பின்னர் செரிமானத்துக்கு உதவும் என்று நினைத்துப் பெரும்பாலானவர்கள் இனிப்புகளைச் சாப்பிடுவார்கள். அது நல்லதல்ல. இனிப்புக்குப் பதிலாக புதினா டீ போன்றவற்றைச் சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம் அல்லது மாலையிலேயே பல் துலக்கிவிட்டால், இரவு உணவுக்குப் பின் இனிப்புச் சாப்பிடும் வேட்கை குறைந்துவிடும்.

லேபிளைச் சரிபார்க்கவும்!    
பொருள்களை வாங்கும்போதே, லேபிளைப் பார்த்து அதில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரையின் அளவைத் தெரிந்துகொள்ளுங்கள். அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்கள். சர்க்கரை அளவைக் குறைக்க இதுவும் ஓர் எளிமையான, விரைவான வழி.

No comments:

Post a Comment