தஞ்சை- அரியலூர் மார்க்கத்தில், திருவையாறிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது கீழப்பழுவூர். ஸ்ரீபிரம்மதேவன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தமாக புற்று மண்ணாலேயே திருவுருவம், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது என்று சிறப்புகள் பல கொண்ட இந்தத் தலத்துக்கு, ஸ்ரீபரசுராமன் வழிபட்டு வரம்பெற்ற தலம் என்ற பெருமையும் உண்டு!
தந்தை ஜமதக்னி முனிவரின் கட்டளைப்படி, தாய் ரேணுகா தேவியைக் கொன்றார் பரசுராமன். பிறகு, தந்தையிடம் வரம் கேட்டு, தாயை மீட்டெடுத்தார் என்றாலும், கொன்ற பாவத்தால்... தோஷத்துக்கு ஆளானார் பரசுராமன். எங்கெங்கோ சென்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடினார்; புண்ணிய தலங்களில் வழிபட்டார். ஒருகட்டத்தில், 'உமையவள், ஊசி முனையில் ஈசனை எண்ணித் தவமிருந்த தலத்துக்குச் சென்று வணங்கினால், பாவம் நீங்கும்’ என மகனுக்கு அருளினார் ஜமதக்னி. அதன்படி கீழப்பழுவூர் தலத்துக்கு வந்த பரசுராமன், 63 யாகக் கிணறுகளுடன் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அவற்றில் நீராடி, இறைவனைத் தொழுதார். அவருக்கு காட்சி தந்து, பாவம் நீக்கி அருளினார் ஈசன் என்கிறது ஸ்தல புராணம். பரசுராமன் உருவாக்கிய (பரசுராம) தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் விலகுமாம்!
இந்தத் தலத்தின் அம்பிகை- ஸ்ரீஅருந்தவ நாயகி!
ஈசனைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில், ஒற்றைக்காலில் நின்றபடி தவம் செய்த தலம் என்பதால், அப்படியே காட்சி தருகிறாள். ஆடி மாதத்தில், அம்பிகையை மனம் குளிரச் செய்ய... இளநீரால் அபிஷேகிப்பது இங்கு விசேஷம். இளநீரில் அபிஷேகம் செய்து, இளநீரையே நைவேத்தியமாகப் படைத்து வழிபட... விரைவில் திருமணப் பாக்கியம் கைகூடுமாம்!
வருடந்தோறும், பங்குனி மாதம் 18-ஆம் நாள், அதிகாலை 6 மணிக்கு சூரியனின் கதிர்கள், ஸ்வாமியின் திருப்பாதத்தில் விழுவது சிலிர்ப்புக்கு உரிய ஒன்று என்கின்றனர், பக்தர்கள்.
கருவறையின் விமானத்தில், சயனக் கோலத்தில் காட்சி தருகிறார், ஸ்ரீபரசுராமன்! சோமவாரத்தில் (திங்கட்கிழமை) இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீஆலந்துறையாரையும் ஸ்ரீஅருந்தவநாயகியையும் மனதார வணங்கி வழிபட்டால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும்; மனதுள் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும் என்பது ஐதீகம். தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள், இங்கு வந்து ஸ்வாமியின் திருப்பாதத்தில் விதைநெல்லை வைத்து வழிபட்டு, பூமியில் விதைத்தால்... அந்த முறை அமோக விளைச்சல் பெருகும் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர்!
இங்கே, நவக்கிரகங்களுக்கு சந்நிதி இல்லை; அவர்கள், இறைவனுடன் இரண்டறக் கலந்திருப்பதாக ஐதீகம். எனவே, கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது கீழப்பழுவூர் திருத்தலம். களத்திர தோஷத் தடை விலக, 108 தீபங்களும், சனி தோஷம் விலக, 27 தீபங்களும், திருமணம் இனிதே நடந்தேற 27 நெய் தீபங்களும் ஏற்றி, செவ்வாய்க்கிழமைகளில் வழிபட அனைத்து தோஷங்களும் விலகும்!
ஸ்ரீபரசுராமன் வழிபட்டு, பாவத்தில் இருந்து விடுபட்டது, பங்குனி உத்திரத் திருநாளில் என்பதால், அன்றைய தினம் சிறப்பு வழிபாடு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு என களைக்கட்டுமாம் ஆலயம்!
அருணகிரியாராலும் வள்ளலாராலும் பாடப்பெற்ற, இங்கு அருளும் ஸ்ரீமுருகப்பெருமானும் வரப்பிரசாதியானவர். இந்தக் கோயிலில் அருளும் ஸ்ரீதுர்கையை, ஸ்ரீகல்யாண துர்கை என்கின்றனர். தன்னை நாடி வருவோருக்கு மாங்கல்ய வரம் தருகிறாள் இந்த தேவி.
ஸ்ரீபரசுராமன் வழிபட்ட ஈசனைத் தரிசியுங்கள்; பாவமெல்லாம் பறந்தோடி, நிம்மதி பெறுவீர்கள்!
No comments:
Post a Comment