Saturday 9 December 2017

கண்களுக்கு 10 கட்டளைகள்

ஐம்புலன்களில் முக்கியமானதும், நம் அன்றாட செயல்பாடுகள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைவதும் கண்கள்தான். கண்களை பத்திரமாகப் பாதுகாப்பது எளிதுதான்.

 
கம்ப்யூட்டர், லேப்டாப் கருவிகளைப் பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட இடைவெளியில் தள்ளிவைத்துப் பார்க்கவும். மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், குறைந்தது கையின் தூரத்துக்காவது தள்ளிவைத்துப் பார்க்க வேண்டும். கம்ப்யூட்டர் திரை, கண்ணின் மட்டத்துக்குக் கீழாக இருக்க வேண்டும்.
அடிக்கடி கண்களை சிமிட்டும்போது, கண்ணீர் கண்ணின் மேல் பகுதியை நனைத்து, எரிச்சல் பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன. எனவே, நிமிடத்துக்கு குறைந்தது 15 முதல் 20 முறை கண்களை சிமிட்ட வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் 20 அடி தூரத்தில் உள்ள பொருளை 20 விநாடிகளுக்கு (20:20:20) சிமிட்டியபடி பார்க்க வேண்டும்.
வெயிலில் செல்லும்போது, புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுக்கக்கூடிய தரமான கூலிங் கிளாஸ் அணிய வேண்டும். தூசி விழாமல் காக்க, இருசக்கர வாகனம் ஓட்டும்போது, கண்ணாடி கட்டாயம் அணிய வேண்டும். அது கூலிங் கிளாஸ் (அ) பவர் இல்லாத கண்ணாடியாகவும் இருக்கலாம்.
பார்வைக் குறைபாடு இருந்தால், டாக்டரை அணுகிப் பரிசோதித்து, கண்ணாடி அணிய வேண்டும். அடுத்தவர் கண்ணாடியைப் பயன்படுத்தக் கூடாது.
கேரட், பப்பாளி போன்ற ஆரஞ்சு நிறக் காய்கறி, பழங்களில் வைட்டமின் ஏ சத்து நிறைவாக உள்ளது. இது பார்வைத் திறன் ஆரோக்கியமாக இருக்க உதவும். மேலும், கீரை, கோஸ், புரோகோலி போன்ற காய்கறிகளிலும் பார்வைத் திறனை மேம்படுத்தும் வைட்டமின்கள் உள்ளன. இவற்றை, தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
அதிகப்படியான வெளிச்சம், குறைவான வெளிச்சம் இரண்டுமே கண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். வெளிச்சம் குறையும்போது, விளக்குகளை ஆன் செய்துவிட வேண்டும். குறிப்பாக, படிக்கும்போது நல்ல வெளிச்சமான சூழல் இருக்க வேண்டும். விளக்குகள் முகத்துக்கு நேராக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
படுத்துக்கொண்டே படிப்பது, ஒருக்களித்துப் படுத்தபடி படிப்பது, நடந்தபடி படிப்பது போன்றவை கூடாது. நேராக உட்கார்ந்து படிக்க வேண்டும். பயணங்களில் புத்தகம் படிப்பதும், கண்ணுக்கு அதிகப்படியான வேலை சுமையைக் கொடுத்து, பார்வைத் திறனைப் பாதிக்கும்.
ஏ.சி காற்று நேரடியாகக் கண்ணில் படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். பயணத்தில் கண்ணுக்கு அதிகம் ஸ்ட்ரெயின் கூடாது. 
 
கண்கள் உருத்தினால்,  டாக்டர் பரிந்துரை இன்றி எந்த ஒரு மருந்தையும் கண்ணில் விடக் கூடாது. டிராப்ஸ் ‘சீல்’ திறந்த ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஒரு மாதத்துக்குப் பிறகு பயன்படுத்தினால், அதுவே கண்ணில் தொற்று ஏற்படக் காரணமாகிவிடும்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதனால் குளுக்கோமா போன்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, பார்வை இழப்பைத் தடுக்க முடியும்.

No comments:

Post a Comment