Thursday 28 December 2017

மணிவாசகரும், ஆவுடையார் கோயிலும் - திருவாதிரைச் சிறப்பு

CHIDAMBARAM_-_N

ஆவுடையார் திருக்கோயிலிருக்கும் சுவாமி ஆத்மநாதர். அம்பாள் யோகாம்பாள். மூர்த்தி மாணிக்கவாசகர். இங்கு, சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம் போன்றவையாகும். காமதேனுப் பசு வழிபட்ட மகிழமரம் தலவிருட்சமாக உள்ளது.
பொதுவாக, சிவபெருமான் திருக்கோவில்களில், இராஜகோபுரத்தை அடுத்து முதலில் பலிபீடம், நந்தி, கொடிமரம் இருக்கப் பெறும். மேலும், கோவில்களில் நடைபெறும் நாள்பூசை, விழாக்களில் நாதசுரம், மேளம், பேரிகை, சுத்தமத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்கப்படுவது உண்டு. இத்தகைய வாத்திய ஒலிகளை ஆவுடையார் திருக்கோயிலில் கேட்க முடியாது. திருச்சின்னம், சங்கு, மணி முதலியவற்றின் ஒலிகள் மட்டுமே ஒலிக்கச் செய்யப்படும்.
சிவன் இத்தலத்தில் கருவறையில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர வடிவிலும், (தலவிருட்சமாக) உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார்கள். இங்கு குருந்தமரத்தை சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாக நூற்றியெட்டு சங்காபிஷேகம்  நடக்கிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறார். இதன்மீது ஒரு குவளை சார்த்தப்பட்டிருக்கிறது. குவளை உடலாகவும், குவளையினுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக தானதாலும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு “ஆத்மநாதர்” என்று பெயர் உண்டானது.  
ஆறு கால பூஜையின்போதும், இவருக்கு நூற்றியெட்டு மூலிகைகள் கலந்த தைல முழுக்கு நடப்பது மிகச் சிறப்பு. தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, இப்பதியில் பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை  நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அம்பாள் சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரகத் தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. சூரிய, சந்திர கிரகணங்களின்போது எல்லாக் கோயில்களிலும் பூஜை செய்யமாட்டர்கள். ஆனால், இந்த ஆவுடையார் கோயிலில் கிரகண நாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. 
ஆவுடையார் கோவிலில்தான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார். இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்ககளுள் ஒன்றாகும். திருவில்லிப்புத்தூர் திருநெல்வேலி, திருவாரூர் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள  தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் ஐயாயிரம் பேர் கூடினால்தான் இழுக்க முடியும். இதில் அதன் அடங்காத் தன்மையின் வெளிப்பாடு.
அபூர்வ சிற்பங்கள்
டுண்டி விநாயகர் சிற்ப உருவம், உடும்பும் குரங்கும், கற்சங்கிலிகள், சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்.
ஆயிரத்தெட்டு சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள். பலநாட்டுக் குதிரையின் சிற்பங்கள். அனைத்து நட்சத்திர உருவச் சிற்பங்கள். நடனக்கலை முத்திரை பேதங்கள்.
சப்தஸ்வரக் கற்தூண்கள். கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுபவை.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடி வைத்த "கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோனாட்டிற் கெல்லையெனச் சொல்" எனவும், "வெள்ளாறது வடக்காம் மேற்குப் பெருவெளியாய் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளாரஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத்தறு காதம் பாண்டிநாட் டெல்லைப் பதி'" என்றும், கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த "தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது."
அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒரு சிறு பதிகத்தில் சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே, அந்த அடங்காமை இந்த ஆவுடையார் கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோவில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.
தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும். ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் கட்டிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத்தக்க ஒப்பற்ற திறனாகும். ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரையானது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக ஆக்கப்பட்டிருக்கிறது.
திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும். இதே மண்டபத்தில் பத்திலிருந்து பதினைந்து வளையங்கள் வரையான வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை.
மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை. இங்கு, புழுங்கல் அரிசியினால் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. ஆறு கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை. சமயக் குரவர்கள் நால்வருள் மணிவாசகர் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்களுள் இவரும் ஒருவர். 
பாண்டியவள நாட்டில் வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் "திருவாதவூர்" என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு வயதுக்கு முன்னமே இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, பொழுதேனும் கூறிக் கொண்டிருப்பார். இவரது அறிவாற்றலைப் பற்றி கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து "தென்னவன் பிரமராயன்" என்ற பட்டத்தை கொடுத்துப் பணிசெய்ய பணித்தான்.
பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை மட்டும் வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை சிந்தித்த வாதவூரர், சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றி ஒழுகினார். ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார். அப்போது, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த முடிவு எடுத்து விட்டார்.


அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் இங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார். வாதவூரர் ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார். இங்கு மூலஸ்தானத்தில் லிங்கத்திருவுரு கிடையாது. ஆண்டவன் உருவமில்லாது இருக்கிறார் என்று தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கத்திருவுரு கிடையாது. லிங்கத்திருவுரு இருக்க வேண்டிய இடத்தில், ஒரு குவளையை கவிழ்த்து வைத்திருக்கிறார்கள்.
வாதவூரர் இங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழமாக, கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார். அதன்பின், பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். இவர் முன் நெடுஞ்சான் கிடையாய் விழுந்து வணங்கி பாமாலை பாடினார். இவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்து விட்டார் போல....... இதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்துத் தீட்சை வழங்கினார்.
அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூரார் மெய் சிலிர்த்து பாடல்களைப் பாடத் தொடங்கிவிட்டார். பாடல்களைக் கேட்டு இறைவன் உருகிப் போன இறைவன்................
அப்பா!" நீ செந்தமிழால் என்னைத் பாடினாய். ஒவ்வொரு வரியும் முத்து... இல்லை இல்லை...... மாணிக்கம் போல் ஒளிர்ந்தன. நீ மாணிக்கப்பப்பா"..மாணிக்கவாசகனப்பா...நீ மாணிக்கவாசகன் என்றார் இறைவன்.
அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகினார். மாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, சிவன் மறைந்துவிட்டார். சிவன் காட்சி தந்த இந்த ஊரிலேயே தங்கியிருந்து சிவகைங்கர்யம் செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்த மாணிக்கவாசகர், குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதத்தில் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் போய்ச் சொல்லுங்கள். இப்போதே நீங்கள் எல்லாரும் ஊருக்கு புறப்படுங்கள் என்றார். 
அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின்பு, தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வம் கோவிலாகி நின்று வேகமாகக் கரைந்து போயின. இதனிடையே ஆடிமாதம் பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம..சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார்.
பாண்டியமன்னன், அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த மன்னன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான். ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார் மாணிக்க வாசகர். ஐயனே! மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உனக்குத் திருப்பணி செய்து அச்செல்வத்தை செலவழித்து விட்டேன். இப்போது, குதிரைகளுடன் அங்கு நான் சென்றாக வேண்டுமே! அதற்கு நீ தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைஞ்சினார்.
அப்போது அசரீரி ஒலித்தது. கவலைப்படாதே மாணிக்கவாசகா! விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பி வை. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில்,.......
மாணிக்கவாசகா! நீ உடனே மதுரைக்குச் செல். நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி வணங்கிக் கொண்டு, மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே! குதிரைகள் எங்கே? எத்தனை குதிரை வாங்கினீர்கள்? என்று கேட்ட மன்னனிடம், அரசே! தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர். 
நீண்டநாட்களாகியும் குதிரைகள் வராததால் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நம்மை ஏமாற்றிய இவனைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். காவலர்கள் வாதவூரரின் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றி கொடுமைபடுத்தினர். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் தண்டனை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். 

நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருகிறேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே புறப்பட்டுச் சென்றார். ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தது பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அந்த அழகான, விலைமதிக்க முடியாத குதிரைகளைக் கண்டு மன்னன் மகிழ்ந்தான். அன்று இரவே, அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறி ஊளையிட்டன. தன்னை ஏமாற்றி விட்ட மாணிக்கவாசகரை சுடுமணலில் நிற்க வைத்தான் மன்னன்.
தூரத்தில் தெரிந்த மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்து, இறைவா! இதென்ன சோதனை! குதிரைகள் ஏன்  நரிகளாகிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் உகுத்தார் மாணிக்கவாசகர். உடனே, சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில்  திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்து விடுபட்டன. எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது.
மன்னனின் செவிகளில், அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா! திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே! என்றார். தனது தவறை உணர்ந்து மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்கும்படி வேண்டினான். மாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். அங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதினார்.
எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார். அப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. ஞானநெறியைப் பின்பற்றிய மணிவாசகர் முப்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.
சிதம்பரத்தில், மணிவாசகர்
மார்கழித் திருவாதிரை உற்சவம் சிதம்பரத்தில் மிக விசேசமாக நடக்கும். இத்திருவிழாவில் ஒரு தனி விசேசம் என்னவென்றால், மாணிக்கவாசகருக்கு பத்து நாட்களிலும் சாயுங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் திருச்சந்நிதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வர். பத்தாம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும். 
சிதம்பரத் தேரும், சேந்தனாரும்
'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி அளி' என்பது சொல்வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை பயக்கும். திருவாதிரை தினத்தில் களிக்கும் தனி இடம் உண்டு. அத்தகைய சிறப்பான இடத்தை ‘களி’ பிடித்ததற்கான நேர்த்தி சேந்தனாரைச் சாரும். 
சேந்தனார் வரலாறு!
சிதம்பரத்தில் சேந்தனார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் பட்டினத்தாரிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். சேந்தனாரும், அவரது மனைவியும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கினர். தினமும் உணவு உட்கொள்ளும் முன்பாக சிவதொண்டர் களுக்கு உணவிட்ட பின்னரே அவர்கள் இருவரும் சாப்பிடுவார்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை உணர்ந்திருந்தனர் இருவரும். தவிர இயல்பாகவே, அந்த தம்பதியரிடம் ஈகை குணம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் பட்டினத்தார் அனைத்தையும் துறந்து துறவு வாழ்வுக்கு திரும்பி விட்டார். இதனால் அவரது சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார் சேந்தனார். இதில் தனக்கென்று எதுவும் எடுத்துக் கொள்ள வில்லை. விறகு வெட்டி அதனை விற்பனை செய்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தினர்  சேந்தனார் தம்பதியர். 
களி
அந்த ஏழ்மை நிலையிலும் சிவ தொண்டர்களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் நற்குணம் பெற்றவர்களாக சேந்தனாரும் அவர்மனைவியும் திகழ்ந்தனர். ஒருநாள் கடுமையான மழையின் காரணமாக விற்பனைக்காக கொண்டு சென்ற விறகுகள் ஒன்று கூட விற்பனையாகவில்லை. விறகுகளை விற்காததால் வீட்டில் சமையல் செய்ய இயலவில்லை. சிவதொண்டர்களுக்கு உணவளிக்க முடியாதோ? என்ற கவலையுடன் வீடு திரும்பினார் சேந்தனார். அவரது மனைவி வீட்டில் இருந்த உளுந்தை அரைத்து மாவாக்கி அதில் சுவையான களி சமைத்தார். பின்னர் தாங்கள் சமைத்த உணவுடன் சிவதொண்டர் யாராவது வருவார்களா? என்று காத்திருக்க தொடங்கினர்.
சேந்தனாருக்கு மனது ஒரு நிலையில் இல்லை. ‘இந்த மழைக்கு யார் வந்து உணவு கேட்கப் போகிறார்கள்? அப்படியே உணவுக்காக ஏதாவது ஒரு அடியார் வந்தாலும் கூட, அவருக்கு இந்த களி பிடிக்குமோ?, பிடிக்காதோ? அவர்கள் இதனை சாப்பிடுவார்களா? என நினைத்து கவலை கொண்டார். இதே மனநிலையுடன் தம்பதியர், அடியார் வருகைக்கு வெகு நேரம் காத்திருக்க தொடங்கினர். அப்போது ஒரு சிவ தொண்டர், சேந்தனாரின் வீட்டு வாசலில் மழைக்காக ஒதுங்கினார். பின்னர் அந்த அடியார், சேந்தனாரிடம், ‘ஐயா! உங்கள் வீட்டில் உண்பதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா?
என்று கேட்டார். 
இதனால் மகிழ்ச்சி அடைந்த சேந்தனார், அந்த அடியாரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மனைவியிடம் களியை எடுத்து பரிமாறும்படி கூறினார். களியை சாப்பிட்ட அடியார் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்து, மிக அருமையான சுவை! இதற்கு முன் இந்த மாதிரி உணவை சாப்பிட்டதில்லை இந்த களி, அமிர்தத்தையும் மிஞ்சிடும் சுவையில் இருக்கிறது என்று கூறினார். இதனை கேட்டதும் மனவருத்தத்தில் இருந்த சேந்தனாருக்கும், அவரது மனைவிக்கும் ஆனந்தம் தாளவில்லை. அந்த அடியார் மேலும் பேசத் தொடங்கினார். நீங்கள் சமைத்துள்ள இந்த களி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் இருந்தால் கொடுங்கள். நான் அடுத்த வேளைக்கு வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்’ என்று கூறினார்.
மூலவர் மேல் களி
சமைத்ததே கொஞ்சம்தான். நாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வது’ என்று சேந்தனார் எண்ணவில்லை. அடியாரின் ஆனந்தமே முக்கியம் என்று நினைத்து இருந்த மீதக் களியையும் வளித்தெடுத்து கொடுக்கும்படி மனைவியிடம் கூறினார். கணவரின் சொல்படியே மீதமிருந்த களியை பொட்டலமாக கட்டி அடியாரிடம் கொடுத்து விட்டு அன்றைய தினம் பட்டினிக் கிடந்தனர் தம்பதியர். மறுதினம் காலை வழக்கம் போல், தில்லை நடராஜப் பெருமான் கோவில் சன்னிதியை திறந்த அர்ச்சகருக்கு, அங்கு கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடராஜரின் திருவாயிலும் திருமேனியெங்கும் களி அப்பி இருந்தது. கருவறை முழுவதும் சிதறியும் கிடந்தது.
யார் கருவறைக்குள் புகுந்தது. களியை யார் நடராஜரின் மேனியில் அப்பியது என்று தெரியாமல் பதற்றம் அடைந்தார். இது பற்றி ஊர் முழுவதும் தெரியவந்தது. பின்னர் இந்த பிரச்னையை அரசரிடம் கொண்டு சென்றனர். அவர்கள் கூறியதை கேட்ட அரசருக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை, மாறாக ஆச்சரியம் ஏற்பட்டது. ஏனெனில் முன்தினம் இரவு அரசனின் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நீ தினமும் எனக்கு படைக்கும் உணவை விட, இன்று சேந்தனார் என்ற தொண்டன் கொடுத்த களி, அமிர்தம் போல் இருந்தது’ என்று கூறியது அரசனுக்கு நினைவுக்கு வந்தது. 

அதுவரை ஏதோ கனவு என்று நினைத்திருந்த அரசன் இப்போது, அது நிஜம் என்பதை உணர்ந்து கொண்டான். உடனடியாக சேந்தனார் யார் என்றும், அவரை தேடி கண்டு வரும்படியும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டான். ராஜாங்க பணியாளர்கள், சேந்தனாரை தேடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சிதம்பர நடராஜ பெருமானுக்கு தேர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தன. விழாவில் அரசரும், மக்களும் கலந்து கொண்டனர். சேந்தனாரும் அந்த விழாவில் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார் மக்களோடு மக்களாக. ஆனால் அவர்தான் சேந்தனார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்போது முன்தினம் பெய்திருந்த மழையின் காரணமாக, சென்று கொண்டிருந்த தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து அழுந்தி நின்று போயின.
திருப்பல்லாண்டு
தேர் மண்ணில் அழுந்தி உருள மறுத்தது அனைவருக்கும் இது ஏதோ ஒரு அபசகுனம் என் எண்ணினர். ஆனால், இறைவன் நடத்தும் விளையாட்டு இது என்று யாருக்கும் தெரியவில்லை. மன்னனின் படையும் ஊர்மக்களும் எவ்வளவு முயன்றும் தேர் சக்கரத்தை மண்ணில் இருந்து விடுவிக்க முடியவில்லை. யானைகள் முட்டித் தள்ளிய போதும், தேரானது இம்மியளவும் உருளவில்லை. இதனால் அரசரும், மக்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த நேரத்தில், ‘சேந்தனாரே! நீர்  பல்லாண்டு பாடுக' என்று வானிலிருந்து ஒரு அசரீரி ஒலிக்க, இது  அனைவருக்கும் கேட்டது.
இது இறைவனின் திருவிளையாடல் என்று அப்போதுதான் அனைவரும் அறிந்து கொண்டனர். இறைவனின் அசரீரிக் குரலைக் கேட்ட சேந்தனாரோ, ‘இறைவா! அடியேன் என்ன பாடுவது?, எனக்கு பதிகம் பாடத் தெரியாதே!’ எனும்போதே தன்னையுமறியாமலே பாடலை பாடிக் கொண்டிருந்தார்.
‘மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல’ என்று தொடங்கி, ‘பல்லாண்டு கூறுதுமே’ என்று பதிமூன்று பாடல்களை பாடி முடித்து தேரின் வடத்தைப் பற்றினார்..
இந்த பாடல்களை கேட்டு மனமகிழ்ந்த இறைவன், மண்ணில் புதைந்திருந்த தேர் சக்கரத்தை விடுவித்தார். தேர் நகரத் தொடங்கியது. அதுவும் வெகு சுலபமாக நகரத் தொடங்கியது. தேரை பஞ்சு மூட்டையை இழுத்துச் செல்வது போல் பக்தர்களின் கரவொலியில் நகன்று நிலை வந்து சேர்ந்தது. 
திருவிளையாடல்
அதுவரை நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னன், சேந்தனாரிடம் நேராக சென்று, ‘தங்கள் வீட்டில் விருந்துண்டது அந்த ஈசன்தான். என் கனவில் தோன்றிய இறைவன், நீங்கள் கொடுத்த களி அமிர்தத்தை விட சுவையாக இருந்ததாக என்னிடம் வந்து கூறினார் என்று சொன்னார். நீங்கள் தான் சேந்தனார் என்பதையும் இறைவன் எனக்கு காண்பித்து கொடுத்து விட்டார் என்று கூறி தனது மகிழ்ச்சியைக் கூறி அவரை வணங்கிக் கொண்டார். இறைவனே தன் வீட்டிற்கு வந்து களியை உண்டது கேட்டு சேந்தனாரின் உள்ளம் பூரித்துப் போனது. சேந்தனாரின் வீட்டிற்கு சிவதொண்டராக சென்று சிவபெருமான் முதன் முதலில் களி சாப்பிட்ட தினம் ‘திருவாதிரை திருநாள்’ ஆகும். ஆகையால் தான் திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
திருவாதிரை நோன்பு
திருவாதிரை நோன்பு  என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைந்திருக்கின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.
ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு.
தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமியைத் தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்தும் அடியார் கூட்டம் வருடந்தோறும் இங்கு வருவது வழக்கம் இருக்கிறது. சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது.
சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியது. சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில், 'மாதங்களில் நான்
மார்கழி' என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் 'மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள்' என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.
சிதம்பர சிறப்பு
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவனின் மீது ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்பர்.
ஆனந்த நடனம் கண்ட பதஞ்சலி முனிவர்
உலக இயக்கத்திற்கு காரணியாக விளங்குவது இறைவனின் இயக்கமே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வாயிலாக உலகை அவன் இயக்கச் செய்து திருநடனம் அருளுகின்றான். அவனின் ஒவ்வொரு அசைகின்ற அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது புராணங்களே எடுத்துத்தரும் உண்மைகள். எனவேதான் *"அவனின்றி அணுவும் அசையாது"*  ( அவன் இல்லாது எதுவுமே அசைவதில்லை.) என சொல்கிறோம். 
சிவபெருமான் நூற்றியெட்டு நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் நாற்பத்தெட்டு நடனங்கள் ஈசன் தனியாக ஆடியது. இந்நடனங்களில் மிக சிறப்பு வாய்ந்த நடனம் திருவாதிரைத் திருத் தினத்தன்று சிவபெருமான் ஆடிய தாண்டவமாகும். தில்லை கொண்ட  சிதம்பர நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜர் நடன கோலத்தில் காட்சியளிப்பது *ஆருத்ரா தரிசனம்* என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தை காண்பதற்கு கோடிக்கண்கள் பத்தாது.
மார்கழி மாதம் என்பது தேவலோகத்தவர்களுக்கு வைகறை (அதிகாலை) பொழுதானதாகும். இந்த நேரத்தில் காலைக் கடன்களை முடித்து நீராடி, இறைவனை தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது. எனவேதான் மார்கழி மாதத்தில் நடைபெறுகின்ற திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தைக் காண தேவ லோக தேவர்கள் அனைவரும் சிதம்பர நகருக்கு வருவார்கள். 
"ஆருத்ரா" என்றால் நனைக்கப்பட்டவை எனப் பொருள். பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர் ஆகிய  இருவரும், திருவாதிரை திருத் தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தை காண வேண்டுமென்பதற்காக தவத்தை மேற்க் கொண்டனர். இவர்களின் தவத்திற்கு பணிந்த ஈசன், தில்லையில் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று தனது திருநடனத்தைக் காட்டி, கருணையால் இரு முனிவர்களையும் நனைத்த நிகழ்வே "ஆருத்ரா தரிசனம்" ஆகும்.
ஒருசமயம் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மாலன், திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார். அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டன.
தன்மீது பாந்தமாக படுத்திருக்கும் மாலன் இன்று ஏன் இவ்வளவு மகிழ்வு கொள்கிறார் என நினைத்த ஆதிசேஷன், அதற்கான காரணத்தை மாலனிடமே கேட்டார். திருவாதிரை திருநாளன்று சிழபெருமான் நடராஜராக ஆடியத் திருத் தாண்டவத்தை நினைத்துப் பார்த்தேன். மகிழ்ச்சியானேன் என்றார் மாலன். பரந்தாமனை இப்படி மகிழ்ச்சி காணச்செய்த அந்தத்  திருநடனத்தை,  தானும் காண வேண்டுமே என நாட்டம் கொண்டான் ஆதிசேஷனும். தன் ஆவலை பரந்தாமனிடம் கூற , மாலன் ஆசி கூறி போய் வர அனுமதிக்கிறார். ஆதிசேஷன் பாதி முனிவவுருவமும், பாதி சர்ப்பவுருவமுமாக மாறி பதஞ்சலி முனிவர் ஆனார். பின்னர் நடராஜரின் திருநடனத்தைக் காண வேண்டி, ஈசனை நினைத்து தவமியற்றினார். பதஞ்சலி முனிவரின் தவம் உச்சஸ்தானம் வரை நீண்டியது. அதனால் அவர் தன்னை (தன் நிலை) மறந்து தவத்திலிருந்தார்.
அப்போது,..... பதஞ்சலி!  பதஞ்சலி!! என சன்னமான குரலில் அழைத்தார் ஈசன்.  குரலொலி கேட்டு கண்விழித்தார் பதஞ்சலி முனிவர். கண் திறந்த போது தன் முன்னே சர்வேசபெருமான் நிற்பதைக்.கண்டார். ஆனந்தித்தார். தாழ் பணிந்தார். தொழுதேத்தினார். 
தவத்தின் நோக்கத்தைக் கூற எத்தனித்த முனிவனை.... கைகளால் தளர்த்தி ஆசீர்வதித்த ஈசன்,..........அறிந்தவை அவருக்கா தெரியாது போயிற்று. ஆளும் இறைவனுக்கு ஆளுகையின் திண்ணம் தெரியாதா என்ன?" 
ஈசனே கூனினார்.....
பதஞ்சலியே! உன்னைப் போன்றே, வியாக்ர பாதனும் திருவாதிரை திருநடனம் காண வேண்டி, என்னை நினைத்து உன் போலும் கடுந்தவம் செய்கிறான். எனவே நீங்களிருவரும் தில்லை வந்து திருவாதிரை திருநடனம் கண்டு மகிழ்வீராக! எனக்கூறி மறைந்தார்.
ஈசன் கூறியபடி, பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும்  தில்லை பதிக்குச் சென்றனர். அங்கு வைத்து மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று தன் திருநடனத்தை அவர்களிருவருக்கும் காட்டியருளினார் சிவபெருமான். இந்தத் தரிசனமே *ஆருத்ரா தரிசனம்* என அழைக்கப் பெறுகிறது. எனவேதான்  தில்லை சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தைக் காண்பது விஷேசம். இந்தத் திருவாதிரை தினத்தில் தில்லை சிதம்பரம் சென்று அங்கு நடனத்தைக்காணச் செல்லுங்கள். இத்திருநடனத் தரிசனத்தைக் காண்பீராவர்க்குஇப்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் விலகும்! இன்பமான வாழ்வு அமையும்!. முக்திக்கு வழி கோலும்.


- கோவை கு.கருப்பசாமி

No comments:

Post a Comment