Wednesday, 20 December 2017

சிவாலய ஓட்டம்

Image result for சிவாலய ஓட்டம்
சிவ வழிபாடு பல்வேறு வித வழிபாடுகளைக்கொண்டது. “பன்மையில் ஒற்றுமை , ஒற்றுமையில் பன்மை” எனும் பாரதபண்பாட்டின் ஒரு சிறந்த வெளிப்பாடாகத் திகழ்கிறதுசிவ வழிபாடு. அத்தகைய வழிபாட்டு முறைகளில் ஒன்றுசிவாலய ஓட்டம். சைவ-, வைணவ ஒற்றுமையைவலியுறுத்தும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்கநிகழ்வான அமைந்திருப்பது சிவாலய ஓட்டம். இவ்வழிபாடு மாசி மாதம் நடக்கிறது.
சிவனின் இரவான மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் இந்நிகழ்வில் சிவ பக்தர்கள்‘கோபாலா கோவிந்தா’ எனும் முழக்கத்துடன் குமரி மேற்கு மாவட்டப் பகுதிகளில் உள்ள 12சிவாலயங்களுக்கும் ஓடி இறைவனை இறைஞ்சுகின்றனர்.
தருமரின் பட்டாபிஷேகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டதாம். புருஷாமிருகம் என்பதுஇடுப்பு வரை மனித வடிவமும், அதன் பின் புலியின் உடலும் கொண்ட வித்தியாசமான விலங்கு.புருஷாமிருகத்தின் எல்லைக்குள் அகப்படும் எவரையும் உண்ணும் அதிகாரம் அதற்கு உண்டு. அதன்எல்லைக்கு வெளியே அதைக் கொண்டு வந்தால் அது கொண்டு வந்தவரின் கட்டளைக்கு கட்டுப்படுமாம்.

தன் பலத்தில் கர்வம் கொண்ட பீமன் புருஷாமிருகத்தின் எல்லைக்குள் புகுந்து அதனால் துரத்தப்பட்டுஅதனை அதன் எல்லைக்கு வெளியே கொண்டு வர ஒத்துக்கொண்டான். வழக்கம் போலவேமாயக்கண்ணன் அங்கு வந்து ஒரு உபாயமும் சொன்னான். ‘ஒருவேளை நீ தளர்வடைந்து அந்தபுருஷாமிருகம் உன்னை பிடித்துவிடுமென்றால் இதோ இந்த 12 உத்திராட்சங்களில் ஒன்றைக் கீழே போடு;அது சிவலிங்கமாகிவிடும். புருஷாமிருகம் உடனே அங்கு அமர்ந்து வழிபட்டுவிட்டுதான் உன்னைத்தொடரும். அதற்குள் நீ ஓடி வந்து விட முடியும்.

அத்துடன் தன்னை மறந்து தன் எல்லையைத் தாண்டி புருஷாமிருகம் வரவேண்டுமே…அந்த அளவுஆவேசத்துடன் உன்னைத் தொடர வேண்டுமென்றால் ஒரு வழிதான். அது ஒரு மூர்க்க சிவ பக்தன். நீ‘கோபாலா கோவிந்தா’ என்று சத்தமாக என்னை அழைத்தால் போதும்; அது தனது சிவ எல்லைக்குள்பிறிதொரு பெயரைச் சொல்பவன் எவன் என ஆத்திரத்துடன் கிளம்பி உன்னைத் துரத்த துவங்கும். எனவேகவலையே வேண்டாம்’ என தெரிவித்தார்.

பீமனும் உடன் பட்டான்; புருஷாமிருகத்தின் எல்லைக்குள் சென்றான். “கோபாலா கோவிந்தா” என உரக்கஅழைத்தான். சிவ பூஜையிலிருந்த புருஷாமிருகம் முழு ஆத்திரத்துடன் கிளம்பியது. பீமன் ஓடினான்...ஓடினான்... ஆனால், புருஷாமிருகம் தன்னை விட வேகமாக ஓடுவதை உணர்ந்தான். அவனை பிடிக்கும்நிலை வந்த போது கிருஷ்ணன் கொடுத்த உத்திராட்சங்களில் ஒன்றைக் கீழே போட்டான். அதுசிவலிங்கமாகிவிட புருஷாமிருகம் அங்கேயே அமர்ந்து வழிபடலாயிற்று. பீமனுக்கு கொஞ்சம் ஆசுவாசம்.ஓடினான்.

மீண்டும் “கோபாலா கோவிந்தா” மீண்டும் புருஷாமிருகம் ஆத்திரத்துடன் பாய மீண்டும் பீமன் ஓடமீண்டும் ஒரு உத்திராட்சம். இப்படியாக 12வது உத்திராட்சமும் விழுந்தது. இறுதியில் எல்லைக் கோட்டில்பீமன் காலை வைக்கவும் எல்லைக்கு உள்ளிருந்த ஒரு காலை புருஷாமிருகம் பிடிக்கவும் இந்த ஓட்டம்நின்றது.

புருஷாமிருகம் வெளியே வந்த தன்னை விட்டுவிட வேண்டுமென பீமனும், உள்ளே ஒரு காலிருப்பதால்அவன் தனக்குத்தான் சொந்தமென புருஷாமிருகமும் சொல்ல வழக்கு தருமரிடம் சென்றது. தம்பி என்றும்பாராமல் பீமன் உடலை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியை புருஷாமிருகத்திடம் கொடுக்கச் சொன்னார்தருமர். தருமரின் இந்த நியாய உணர்வை பார்த்து பீமனை விட்டுவிட்டது புருஷாமிருகம்.

அதே நேரத்தில் 12வது உத்திராட்சம் விழுந்த இடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வந்தார். சங்கர நாராயணனாகபுருஷாமிருகத்துக்கு காட்சி அளித்தார். சிவ-விஷ்ணு ஐக்கியத்தை உணர்ந்த புருஷாமிருகம் தன்எல்லையை விட்டு வந்து தருமர் பட்டாபிஷேகத்துக்கு பால் அளிக்க ஒத்துக்கொண்டது. பல கோயில் தூண்சிற்பங்களில் பீமனைத் துரத்தும் புருஷாமிருகத்தை நாம் காணலாம்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் பக்தர்கள் சிவாலய ஓட்டம் நடத்தி வருகின்றனர். காவிஉடையணிந்து “கோவிந்தா கோபாலா” என கோஷமிட்டு வெறுங்காலுடன், பனை ஓலை விசிறியுடன்ஓடும் பக்தர்களால் அந்த 12 சிவாலயப் பிரதேசங்களும் காவி மயமாகி விடுகின்றன. இன்று இரு சக்கரவாகனங்களிலும், வேன்களிலும் கூட மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றாலும், வெறுங்காலுடன் ஓடும்பக்தர்களுக்கு என்றைக்கும் குறைவில்லை.

சிவாலய ஓட்டம் துவங்கும் திருத்தலம் முன்சிறை திருமலை மகாதேவர் கோயில் . சீதையை ராவணன் முதலில் சிறை வைத்த இடம் முன்சிறை எனக் கூறப்படுகிறது. இங்குள்ள சிவத்தலத்தில் ராமர் வழிபட்டார் எனும் செவிவழிக் கதை உண்டு. திருமலைநாயக்கரை அவரது அன்னை கருவுற்றிருந்த போது இக்கோயிலில் வழிபாடு நடத்தினார் எனக் கூறப்படுகிறது. இங்கு சிவ சன்னதிக்கு இடப்புறம் விஷ்ணு சன்னதி உள்ளது. கோயில் தமிழக, மலையாள கட்டட அமைப்புகளுடன் அமைந்தது. சின்னக் குன்றின் மீது எழிலுற அமைந்த இக்கோயிலில் ஒரு சிறு நீர்த்தேக்கமும் உள்ளது.

இரண்டாவதாக முன்சிறையில் இருந்து ஒன்பது கி.மீ., துாரமுள்ள திக்குறிச்சி மகாதேவர் கோயில்.இக்கோயில் குமரி தாமிரபரணி ஆற்றோரம் உள்ளது. இக்கோயில் தூண் சிற்பங்களில் சில ராமாயணசுந்தர காண்ட காட்சிகளை காணலாம். இக்கோயிலில் நந்தி இல்லை. நந்தி தாமிரபரணி ஆற்றுக்குள்இருப்பதாக ஐதீகம்.

திக்குறிச்சியில் இருந்து அருமனை, களியல் வழியாக 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திற்பரப்புமகாதேவர் கோயில். இயற்கை அழகு நிறைந்த திற்பரப்பு அருவியை ஒட்டி கோதையாற்றங்கரையில்அமைந்துள்ளது. மிகப்பழமையான இக்கோயில் கேரள பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள்இளைப்பாற கட்டப்பட்ட கல் மண்டபம் இங்கு இயற்கை சூழலுக்கு மேலும் மெருகேற்றுகிறது.

சிவாலய ஓட்டத்தில் நான்காவது சிவத்தலம் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில். திருவந்திக்கரையில்இருந்து குலசேகரம் கான்வென்ட் ஜங்ஷன் வழியாக எட்டு கி.மீ., தொலைவில் வனப்பகுதியில்அமைந்துள்ள இக்கோயில் கோபுரமும் கேரள பாணியில் அமைந்தது தான்.

இக்கோயிலுக்கு நிரந்தரக் கொடிமரம் இல்லை. சிவராத்திரி விழாவை ஒட்டி மட்டுமே கோயிலுக்குகொடிமரம் இங்கு அமைக்கப்படுவது தொன்றுதொட்ட வழக்கம். கோயிலின் தென்புறம்மலைக்குகையில் குடைவறை சிவன் கோயில் உள்ளது.

அடுத்த சிவாலய ஓட்ட திருக்கோயில் பொன்மனை. இத்திருக்கோயில் சிவபிரானைக் கண்டெடுத்தவர்ஒரு வனவாசி. அவர் பெயர் தீம்பிலான். எனவே அவரது பெயரிலேயே இங்கு குடிகொண்டுள்ள குலங்கள்ஏதுமற்று அனைத்துக் குலங்களுக்கும் சொந்தமான மகாதேவர் தீம்பிலான்குடி மகாதேவர் எனஅழைக்கப்படுகிறார்.


நாகலிங்க பூக்கள் வனப்புடன் பூத்துக்குலுங்க அமைந்திருக்கும் இக்கோயிலில் உட்பிரகாரமண்டபக்கூரையில் மரத்தில் செதுக்கப்பட்டு காட்சியளிக்கும் அழகிய ராமாயணக் காட்சிகள் சைவ,வைணவ ஒற்றுமையை மீண்டும் பறைசாற்றுகின்றன.

ஆறாவது கோயில் திருப்பன்னிப்பாகம் சிவன் கோயில். வயல்களும், குன்றுகளும் சூழ இயற்கையுடன்இணைந்து அழகாக எழுகிறது இக்கோயிலின் சிறு கோபுரம். இங்கு கோயில் கொண்டுள்ள சிவன்கிராதமூர்த்தியாக இருக்கிறார். அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்க சிவன் வேடனாக வந்துபன்றியைக் கொன்ற இடம் இதுவென்பது ஐதீகம்.

ஏழாவது தலம் கல்குளம் எனும் புராதன ஊரில் உள்ள நீலகண்ட சுவாமி கோயில். 12 திருக்கோயில்களில்இக்கோயிலில் மட்டும்தான் திராவிட கட்டடக் கலை பாணி கோபுரம் நெடிதுயர்ந்து நிற்கிறது. இங்குகோயில் கொண்டுள்ள சிவபெருமானின் திருநாமம் நீலகண்ட சுவாமி, அம்மை ஆனந்தவல்லி அம்மன்.அழகிய கோயில் குளம்; மேலும் அழகூட்டும் கல்மண்டபங்கள். பெரும் மரங்கள்; மரத்தடி நாகர்கள்.

எட்டாவது சிவாலயம் குன்றும், வயல்களும் சூழ்ந்த மேலாங்கோடு எனும் அழகிய கிராமத்தில் உள்ளது.இங்கு சிவபெருமான் காலகாலர் என்னும் திருநாமத்தோடு சுயம்புலிங்கமாக கோயில் கொண்டுள்ளார்.பத்மநாபபுரம் கோட்டையின் ஒரு எல்லையில் இத்திருக்கோயில் உள்ளது.

ஒன்பதாவது சிவாலயம் வில்லுக்குறி அருகே திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோயில். இது 1,500ஆண்டுகள் பழமை வாய்ந்ததென ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சுற்றிலும் அழகிய வாய்க்கால்கள்,கால்வாய்கள், வயல்வெளிகள் நிறைந்த பிரதேசம். எளிமையான குடிசைகள்.

திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் பத்தாவது திருத்தலம். இக்கோயிலிலும் நாராயணருக்கு சன்னிதிஉள்ளது. இங்கு வெளிப்பிரகாரத்திலில் உள்ள விளக்கு பாவையரின் சிற்பங்கள் சுற்று வட்டாரங்களில்பிரசித்தி பெற்றவை. மேலும் கஜசம்ஹார மூர்த்தியின் உக்கிரமான சிலை, புருஷாமிருகத்தின் தீர்க்கமானசிலை, ராமாயணக்காட்சிகள் என பல அழகிய தூண் சிற்பங்களை கொண்டது இக்கோயில்.

திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோயில் 11வது திருத்தலம். இது பள்ளியாடி அருகே உள்ளது. இங்குமொகலாய படைகள் வேணாட்டு படைகளால் தோற்கடிக்கப்பட்டன. அவ்வெற்றிக்கு ஈஸ்வரனும்குளவிகள் மூலம் உதவினார் என்பது ஐதீகம். இங்குள்ள மிகப்பழமையான குளமும், அதனை சுற்றிஅமைந்துள்ள மரங்களும் ஒரு மிக அமைதியான சூழலை உருவாக்குகின்றன. குளுமையான காற்றுபக்தர்களை அரவணைத்து கொள்கிறது.

இறுதியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் சிவாலய ஓட்டம் நிறைவு செய்யப்படுகிறது. இந்தசிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவர். 12 சிவாலயங்களில், 11சிவாலயங்களில் பக்தர்களுக்கு திருநீறு வழங்கப்படுகிறது. 12-வது சிவாலயமான திருநட்டாலத்தில்மட்டும் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்படுகிறது.

திருநட்டாலம் கோயிலில் சுவாமி சிவன்-, விஷ்ணு என சங்கரநாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ளார்.இங்குதான் புருஷாமிருகம் சிவ, -விஷ்ணு ஐக்கிய தரிசனத்தை அனுபவித்து சைவ, -வைணவ பேதத்தைவிட்டொழித்தது. பீமனுக்கு தன் தசை வலியின் மீதிருந்த கர்வத்தில் இருந்து விடுதலை கிடைத்தது.

சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மாசி மாத கிருஷ்ணபட்ச ஏகாதசி அன்று மாலைஅணிந்து, ஏகாதசி விரதம் இருந்து தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிடாமல் இளநீர், நுங்கு,வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில்சிவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ’கோவிந்தா! கோபாலா!!’ எனசொல்லியவாறே ஓடுவர்.

இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது கேரளத்தில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் கலந்துகொள்வது மிகச்சிறப்பு.


சிவாலய ஓட்டத்தில் ஈடுபடும் பக்தர்களுக்கு நீர்மோர், நெல்லிக்காய் ஊறுகாய், பானகம், கிழங்கு, கஞ்சி,கடலை, சுக்கு காப்பி போன்றவை செல்லும் வழிகளில் கிடைக்கும். இதனை ஒரு திருச்சேவையாகவேமக்கள் செய்கின்றனர். சிவதாண்டவத்தில் தன்னிச்சையாக எழும் ஒரு நடன அசைவாகவே இந்தசேவைகள் எழுகின்றன.

No comments:

Post a Comment