Thursday 28 December 2017

பலா’பலன் !! (மிதுன ராசிக்கு உகந்த விருட்சம் )

அருள்மிகு பூவணநாதர் திருக்கோயில் , திருப்புவனம் - சிவகங்கை

மூலவர் : புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர்

அம்மன்/தாயார் : சௌந்தரநாயகி, மின்னனையாள்

தல விருட்சம் : பலா

தீர்த்தம் : வைகை, மணிறகர்ணிகை

ஆகமம்/பூஜை : இங்கு தினமும் 6 கால பூஜை நடக்கிறது.

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பூவணம்

ஊர் : திருப்புவனம்

பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

தன்னடியார்க்கு அருள்புரிந்த தகவுதோன்றும் சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும் துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்பும் தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும் பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. திருநாவுக்கரசர்

♻ தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டு தலங்களில் இது 11வது தலம்.

முக்கனிகளுள் ஒன்றான பலா, மிதுன ராசிக்காரர்களுக்குப் பலனும் பலமும் தரும் முக்கியமான விருட்சம் ! மிதுன ராசி, புதன் கிரகத்துடன் தொடர்புகொண்டது. எனவே, மிதுன ராசிக்காரர்கள், புதன்கிழமை பிறந்தவர்கள் மற்றும் மே 21 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கு அதிக அளவு பலன் தரக்கூடியது பலா மரம். இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் பலா மரத்தை நட்டு வளர்க்கலாம்.

புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் எனப் போற்றப்படும்
சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். பூவனம் என்பதால் இவ்வூர் திருப்புவனம் ஆயிற்று.

வழிபடுவோர் வினைகளை தீர்ப்பவராக புஷ்பவனேஸ்வரர் விளங்குகிறார். மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றிலும் பெருமையுடைய இக்கோயிலின் ஸ்தல விருட்சமாகப் போற்றப்படுகிறது பலா.

சிவகங்கை மாவட்டம் மதுரையிலிருந்து 18 கி.மீ., தொலைவில் ராமேஸ்வரம் செல்லும் வழியில்  திருப்புவனத்தில் உள்ளது இந்தத் திருக்கோயில்.

திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்து வந்தார். தனது கலை ஞானத்தால் ஈட்டிய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு அமுது படைத்தே காலம் கழித்தாள். சிவ பக்தையான அவளுக்கு அவ்வூரில் உள்ள பூவணநாதரை சொக்க தங்கத்தில் வடிக்க ஆசை இருந்தது.

இவளது ஆசையை நிறைவேற்ற சிவனே சித்தராக மாறி இவள் வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை இரவில் நெருப்பிலிட்டால் பொன்னாக மாறும் என கூறினார்.

பொன்னனையளும் அன்று இரவு செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை நெருப்பிலிட அவை பொன்னாக மாறின. அந்த பொன்னை கொண்டு பூவனநாதரை உருவாக்கினாள்.

அப்போது பூவணநாதர் திருமேனி அழகில் சொக்கி, அவர் கன்னத்தை கிள்ளி பொன்னனையாள் முத்தமிட்டாள். அவள் பதித்த நகக்குறி இன்றும் இங்குள்ள உற்சவரிடம் காணப்படுகிறது.

🅱 புஷ்பமாக மாறிய அஸ்தி  :🅱

புராண காலத்தில் தர்மயக்ஞன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று ஓய்வு எடுக்கும் போது அவனுடன் வந்தவர் கலசத்தை திறந்து பார்க்க புஷ்பமாக இருந்ததாம். தான் பார்த்த இந்த காட்சியை தர்மயக்ஞனிடம் அப்போது அவன் கூறவில்லை. ஓய்வு முடிந்து ராமேஸ்வரம் சென்று கடலில் அஸ்தியை கரைக்க கலசத்தை திறந்த போது அஸ்தியாகவே இருந்தது.

இதனால் அதிர்ச்சியுற்ற உடன் வந்தவன், திருப்பூவனத்தில் தான் பார்த்த காட்சியை தர்மயக்ஞனிடம் சொல்ல, மறுபடியும் அஸ்தி கலசத்துடன் அங்கிருந்து திருப்பூவனத்திற்கு வந்தனர். அங்கு வந்து பார்த்த போது கலசத்தில் அஸ்தி புஷ்பமாக மாறி இருந்ததாம்.

காசியிலும், ராமேஸ்வரத்திலும் அஸ்தியாக இருந்தது இங்கு புஷ்பமாக இருந்ததால் காசி நகரத்தை விட 16 மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. இதை "காசிக்கும் வீசம் அதிகம்' எனும் சமயபெரியோர்கள் கூற்றிலிருந்து அறியலாம்.

காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது.

Ⓜ வழி விட்ட நந்தி:Ⓜ

திருஞான சம்பந்தர் திருப்புவனத்திற்கு வந்த போது ஆற்றுமணல் எல்லாம் சிவலிங்கங்களாக காட்சியளித்தனவாம். அதன் மீது கால் வைக்க அஞ்சிய சம்பந்தர் வைகையாற்றின் மறுகரை மீதிருந்தபடியே சிவனை பாடினார். அப்போது நந்தி லிங்கத்தை மறைத்திருந்தது.

உடனே சம்பந்தர் சிவனை வேண்ட, சம்பந்தருக்காக நந்தியை சற்று விலகி தன்னை மறைக்காமல் இருக்கும்படி சிவன் கேட்டு கொண்டாராம். அதன்படி நந்தி சற்று விலகி இருப்பது தனிச்சிறப்பாகும்.

பலாவின் தாயகம் இந்திய தேசம்தான். கிறிஸ்து பிறப்புக்குச் சுமார் 300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கிரேக்க வரலாற்று அறிஞர் தியோபிராஸ்டிஸ் என்பவர், 'இந்தியாவில் உள்ள ரிஷிகள், பலாப்பழத்தை உணவாகச் சாப்பிட்டு வந்தனர்' என்று தனது பயணக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இத்தனை பழைமை வாய்ந்த பலா, மருத்துவக் குணங்களும் கொண்டது!

பலா இலையைப் பக்குவப் படுத்திச் சாப்பிட்டால் பெரும் வயிறு, படை முதலானவை நீங்கும். இலைக் கொழுந்தை அரைத்துச் சிரங்குகளில் பூசிக்கொள்ள, உடனே குணம் பெறலாம்.

இதன் இலைகளை எரித்து, அந்தச் சாம்பலை ஒரு சிட்டிகை எடுத்து தினமும் காலையில் சாப்பிட்டு வர, அல்சர் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

நெரிக்கட்டிகள், கழலைக் கட்டிகள்மீது பலாவின் பால், பிசினுடன் சிறிது காடி (வினிகர்) கலந்து பூசினால், தானாகவே பழுத்து உடையும்.

பலா வேர் மற்றும் இலையைச் சேர்த்து அரைத்து இரண்டு கிராம் தேனில் கலந்து, பெண்கள் சாப்பிட்டுவர, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

மாலைக்கண் நோய், காயங்கள், சொறி, சிரங்கு, தேமல், கல்லீரல் வீக்கம், அஜீரணம், வாயுத் தொல்லை, விஷப்பூச்சிக் கடி, பல் வலி போன்ற பல நோய்களை நீக்கிக் குணமாக்கும் வல்லமை பலாவுக்கு உண்டு.

பலவு என்றும், வேர்ப் பலா, ஆலடிப்பலா, கோட்டுப் பலா என்றும் சங்க இலக்கியங்களில் பலாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

திருப்புவனம் பூவணநாதர் கோயிலில் மட்டுமின்றி     சீர்காழி தாடாளன் கோயில், கொல்லிமலை ஸ்ரீஆறுமுகப்பெருமான் ஆலயம், திருச்சி திருமங்கலம் ஸ்ரீசமயா தீஸ்வரர் ஆலயம், குற்றாலம் ஸ்ரீகுரும்பலா ஈசர் கோயில் ஆகிய தலங்களிலும் பலா மரம் தல விருட்சமாகப் போற்றப்படுகிறது.

🅱 தாயாரை தரிசித்தால் திருமண தடை விலகும் !🅱

4 யுகங்களைக் கடந்த கோயில், ரசவாதம் செய்த படலம் எனும் 36-வது திருவிளையாடல் நிகழ்ந்த தலம், தேவாரப்பாடல் பெற்ற 201 வது தேவாரத்தலம் எனும் பெருமைமிகு திருக்கோயில்.

புஷ்பவனக் காசி என்று போற்றப்படும் இந்தத் தலத்தில் பித்ருக்களுக்கான கடமையைச் செய்வது கூடுதல் பலனைத் தரும்.  இந்தத் தலத்தில் கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், அனுமதி பெற்றுக் காரியத்தில் இறங்க அனுக்ஞை விநாயகர், மகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், சூரியனார் வழிபட்ட பாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

சூரியனின் சாபம் நீங்கப் பெற்ற தலம் என்கிற பெருமையும் திருப்புவனம் தலத்துக்கு உண்டு.

விநாயகருக்கு அருகில் சூரிய தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு, பாஸ்கர விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி, சவுபாக்கியத்துடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

சௌந்தரநாயகி தாயார், பக்தர்களின் குறைகளைப் பரிவுடன் தீர்த்து வைப்பவள். ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வந்து தாயாரை அர்ச்சித்துத் தரிசித்து, ஸ்தல விருட்சமான பலாமரத்தையும் வணங்கி வழிபட்டால், ஆயுள் விருத்தியாகும்; திருமணத் தடை அகலும்; புத்திர பாக்கியம் கிடைக்கும்; கல்வியில் சிறந்து விளங்க பெறுவர்.

No comments:

Post a Comment