Sunday 31 December 2017

அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு – திருவள்ளூர்

நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய சிவஸ்தலம் ; காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த திருத்தலம் ; சிவபெருமான் நடனமாடிய அற்பூதமான ஷேத்திரம்..

🍁🌸🍁🌸 BRS🍁🌸🍁🌸🍁

தொலைபேசி எண்கள் : +91- 44 -27872074 , 27872443

🌀🌱🌀🌱 BRS🌀🌱🌀🌱🌀

மூலவர் : வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான், ஆலங்காட்டு அப்பர்,  ஊர்த்துவ தாண்டவர்

உற்சவர் : நடராசர்

அம்மன்/தாயார் : வண்டார்குழலி, மகாகாளி

தல விருட்சம் : பலா மரம் , ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது.

தீர்த்தம் : 'சென்றாடு தீர்த்தம்' ("செங்கச்ச உன்மத்ய மோக்ஷபுஷ்கரணி")  ; முக்தி தீர்த்தம் ( மிகப் பெரிய குளம், கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது).

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : பழையனூர், ஆலங்காடு

ஊர் : திருவாலங்காடு

பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்கால் அம்மையார், அருணகிரி நாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள்

🅱 தேவாரப்பதிகம்:🅱

கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாமவேதம் பைம்பொழில் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே.  - திருநாவுக்கரசர்

🌀 தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 15வது தலம்.

🅱 திருவிழாக்கள் :🅱

🍁 மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு.

🍁 பங்குனி உத்திரத்தில் பெருவிழா.

🍁 இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.

🅱 தல சிறப்பு:🅱

🌱 சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

💧 நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலம்.

🌱 நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.

💧 பஞ்ச சபைகளில் நடராஜர், இங்கு மட்டுமே எட்டு கைகளுடன் காட்சி தருகிறார்.

🌱 இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.

💧 இங்குள்ள ஊர்த்துவதாண்ட சிவபெருமானின் செப்புத்திருமேனி சோழர்காலத்தியது ஆகும்.

🌱 வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

💧 காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது.

🌱 தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்' இங்கு தனி சிறப்பு.

💧 சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.

🌱 சுந்தரர் பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பதை, சபையை வலம் வரும்போது காணலாம்.

💧 சிவனும் காளியும் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய இடம்.

🌱 விமானம் செப்புத் தகட்டால் செய்யப்பட்டுள்ளது.

💧 வேளாளர்கள் பழையனூர் நீலிக்குக்கொடுத்த வாக்குப்படி உயிர் கொடுத்து, உண்மையை நிலை நாட்டிய இடம்..

🌱 சிவன் கோவிலாக இருந்தாலும், பெருமாள் கோவில்களைப் போல தீர்த்தம் தருகின்றனர். காளியுடன் சிவன் போட்டி நடனம் ஆடியபோது, அதன் உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து, அவர்களை எழுப்பினார் சிவன். இதனடிப்படையில் தீர்த்தம் தரப்படுகிறது.

💧 அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடம் ஆகும்.

 🌱 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 248 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடைதிறப்பு :🅱

🔑 காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 🔑

🅱 பூசைக்காலம் : 🅱

🌀 காலசந்தி

🌀 உச்சிக்காலம்

🌀 சாயரட்சை

🌀 அர்த்தஜாமம்

🅱 பொது தகவல்:🅱

🎭 வடஆரண்யம் என்றால் ஆலமரக்காடு என்று பொருள்படும். பண்டையக் காலத்தில் இத்தலம் ஆலமரங்கள் நிறைந்திருந்த காடாக காட்சியளித்ததால் இப்பெயர் பெற்றது. இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

🎭 திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் கி.பி.11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனால் திருப்பணி செய்யப்பட்டது.

🎭 முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இங்குள்ள தாய்த்தெய்வத்திற்கு நிலக்கொடையளித்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

🅱 பிரார்த்தனை:🅱

🌸 நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம்.

🌸 கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.

🌸 திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் தலம்.


🅱 நேர்த்திக்கடன்:🅱

🌻 மார்கழி திருவாதிரையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல்.

🅱 தலபெருமை:🅱

🌀 தேவர்களை, அசுரர்கள் கொடுமை செய்த போது, தவத்தில் இருந்த சிவனை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மன்மதனை, அவர் மீது மலர் அம்பு வீசச் செய்தனர். கோபத்துடன் அவர் நெற்றிக் கண்ணைத் திறக்க, மன்மதன் பஸ்பமானான். சிவனின் உக்கிரம் தாங்காத தேவர்களும், மகரிஷிகளும் கோபம் தணியும்படி வேண்டினர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், ஒரு ஆலமரத்தடியில் லிங்க வடிவில் எழுந்தருளினார். இதனால், இந்த ஊருக்கு, “திருவாலங்காடு’ என்றும், சுவாமிக்கு, “வடாரண்யேஸ்வரர்’ (ஆலங்காட்டு அப்பர்) என்றும் பெயர் ஏற்பட்டது.

🌀 நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, “சிதம்பர ரகசியம்’ என்பது போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது.

🅱 காரைக்கால் அம்மையார்: 🅱

🌀 காரைக்கால் அம்மையார் இங்கு தான் முக்தி அடைந்ததாக சொல்லபடுகிறது.காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி.பரமதத்தன் என்ற வணிகரை மணந்து கொள்கிறார்.வணிக விஷயமாக அவரை சந்தித்த நபர் அளித்த இரண்டு மாம்பழங்களை வீட்டுக்கு கொடுத்து அனுப்புகிறார்.அந்த சமயம் பார்த்து ஒரு சிவனடியார் புனிதவதியின் வீட்டுக்கு வருகிறார்.

🌀 சிவ பக்தையான புனிதவதி சிவனடியாருக்கு மதிய உணவு படைக்கிறார்.அப்பொழுது தன கணவர் அனுப்பிய இரண்டு மாம்பழங்களில் ஒன்றை கொடுக்கிறார்.புனிதவதியின் விருந்தோம்பலில் மகிழ்ந்த சிவனடியார் ஆசீர்வாதம் செய்து விட்டு செல்கிறார். மதிய உணவின் பொழுது மிச்சம் இருந்த ஒரு மாம்பழத்தை கணவனுக்கு கொடுக்கிறார். அதன் சுவையில் மயங்கி பரமதத்தர் இன்னொரு மாம்பழம் கேட்கிறார்.

🌀 என்ன செய்வதென்று அறியாத புனிதவதி சிவபெருமானிடம் வேண்டுகிறார்.என்ன அதிசயம்! அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றுகிறது.அதை கணவனுக்கு கொடுக்கிறார். அவர் இந்த மாம்பழம் முதல் பழத்தை விட சுவையாக இருக்கிறதென்று சொல்கிறார். அதை பற்றி அவர் விசாரிக்க புனிதவதி உண்மையை சொல்கிறார்.

🌀 இதை கேட்ட புனிதவதியின் கணவர் தான் அவருக்கு கணவராக இருப்பதற்கு யோக்கியதை அற்றவர் என்று கருதி அவரை விட்டு செல்கிறார். தன் உடலை வருத்தி பேய் உருக் கொண்டு அம்மையார் தலையால் நடந்து திருக்கயிலாயம் சென்றடைந்தார்.

🌀 தலையால் நடந்து வருவதைக் கண்ட அன்னை பார்வதி சிவபெருமானிடம் தெரிவித்தார். பெருமான் புனிதவதியாரை ‘அம்மையே’ என்றழைக்க அம்மையார் சிவபெருமானை ‘அப்பா’ என்றழைத்தார். என்னவரம் வேண்டுமென்று வினவ, அம்மையார், பிறவாமை வரம் வேண்டுமென்றும் மீண்டும் பிறந்தால் ஐயனை மறவாதமனம் வேண்டுமென்றும், ஐயனின் திருவடியின் கீழ் இருக்க வேண்டுமென்றும் வேண்டினார்.

🌀 ‘அம்மையார் திருவாலங்காட்டில் சென்றமர்க' என்று இறைவன் அருளினார்.

🌀 அம்மையாரும் தலையால் நடந்து திருவாலங்காடு சென்றமர்ந்து இறைவனின் புகழ்பாடுகின்றார். திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையாருக்கு சிவ பெருமான் காட்சியளித்து முக்தி கொடுக்கிறார்.

🌀 காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு முத்தபதிகம் 22-ம், திருவிரட்டை மணிமாலையென 20-ம் அற்புத திருவந்தாதி 101 பாடல்களுமென 143 பாடல்களைப் பாடியுள்ளார்.

🅱 கல்வெட்டு : 🅱

🌀 முதலாம் இராஜேந்திர சோழனால் தானமளிக்கப்பட்ட செய்தியைக் கூறும் திருவாலங்காட்டு செப்பேடுகள் இத்தலத்திற்கு உரியதாகும். சோழர் செப்பேடுகளில் பெண் தெய்வத்திற்கு கொடுத்த நிலக்கொடையை எல்லைகளைக் கூறி ஆவணப்படுத்தப்பட்ட செப்பேடு இதுவாகும்.

🌀 நடராசப் பெருமான் திருவரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பெருமானுக்கு வத்ஸ்ராசன் என்பவன் விளக்கெரிக்க நிலம் அளித்துள்ளான். இங்குள்ள மண்டபம் ஒன்று, மூன்றாம் குலோத்துங்கன் காலத்து அம்மை அப்பன் பழி அஞ்சிய பல்லவராயன் என்பவனால் கட்டப்பட்டது.

🌀 இவ்வூரில் உள்ள தென்னையும், பனையும் சான்றார்களால் கள் இறக்கப்படாதவை என்னும் குறிப்புக் காணப்படுகிறது. இது கொண்டே மதுவிலக்குக் குறிப்பு அக்காலத்திலும் நடைமுறையில் இருந்ததை அறிந்து மகிழ்வோமாக.

🌀 பழையனூரைக் கங்கை கொண்ட சோழனும் இராசேந்திரசோழன் திருவாலங்காடுடைய மகாதேவருக்குத் தானமாகக் கொடுத்துள்ளான். இதனை இராஜேந்திர சோழன் வெளியிட்ட திருவாலங்காடு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. பழையனூர் என்பது திருவாலங்காட்டுத் தலத் திற்கு ஒரு கல் தொலைவில் உள்ளது.

🌀 அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 52 உள்ளன. இத்தலம் வடகரை மணவிற்கோட்டத்து மேல்மாலை பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு என்றும், ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மேல்மாலையாகிய பழையனூர் நாட்டுத் திருவாலங்காடென்றும் வழங்கப்படுகின்றது. பெருமான் திருவாலங்காடு உடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார்.

🌀 இத்தலத்துள் ஏதோ ஒரு மண்டபத்தை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த அம்மையப்பன் பழியஞ்சிய பல்லவராயன் கட்டினான்.(468 of 1905) நடராஜப்பெருமான் திருவரங்கில் அண்டம் உற நிமிர்ந்தருளிய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார். இவருக்கு இலத்தூர்நாட்டு அரும்பாக்கத்துக் குன்றத்தூர்க் கோட்டத்து அறநிலை விசாரகன் திரைலோக்கிய மன்னன் வத்ஸராஜன் என்பவன் விளக்குக்காக நிலமளித்தான்.(482 of 1905) அம்மை வண்டார் குழலி நாச்சியார் எனவும், பிரமராம்பாள் எனவும் குறிப்பிடப்படு கிறார்.(495 of 1905)

🌀 ஏனைய கல்வெட்டுக்கள் நிலம் விற்றதையும், தண்ட நாயகருக்கு உத்தரவிட்டதையும் அறிவிப்பன. 477, 476 என்ற விஜய நகர அரசர் கல்வெட்டுக்கள் இம்மடி தர்மசிவாச்சாரியார், பொன்னம் பல சிவாச்சாரியார். அனந்தசிவாச்சாரியார், இவர்களுக்கு விழா நடத்த உத்திரவு அளித்துப் பொன் கொடுத்ததையும் உணர்த்துகின்றன. பராந்தகசோழன் I காலமுதல் விஜயநகர அரசர் காலம் வரையுள்ள இக்கல்வெட்டுகளால் இத்தலத்தின் தொன்மையை அறியலாம்.

🅱 சிற்பங்கள் : 🅱

🌀 கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார்.

🌀 ஊர்த்துவ தாண்டவமாடும் ஆடல்வல்லான் செப்புத்திருமேனி இங்கு உள்ளது சிறப்பு. இந்த திருமேனி சோழர் காலத்தியது.

🌀 காரைக்கால் அம்மையாரின் சுதைச்சிற்பம் மதில் வாயிலில் காட்டப்பட்டுள்ளது.

🌀 காளியின் செப்புத்திருமேனி தனித் திருமுன் கொண்டு விளங்குகிறது.

🌀 இராஜகோபுரத்தின் தளங்களில் சுதைச் சிற்பங்கள் உள்ளன.

🌀 16 கால் மற்றும் 100 கால் மண்டபங்களின் தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

🌀 கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுளும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கில் நான்முகனும் காட்சியளிக்கின்றனர்.

🌀 அர்த்தமண்டப வெளிப்புறச் சுவர் கோட்டங்களில் தெற்கில் ஆடல் கணபதியும், வடக்கில் துர்க்கையும் காட்டப்பட்டுள்ளனர்.

🌀 மேலும் உட்புறசுற்றில் திருமகள், பூமகள் உடன் விஜயராகவப் பெருமாள், கணபதி, அகோர வீரபத்திரர், முருகன், ஏழுகன்னியர், தேவார மூவர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், கார்க்கோடகர், மூஞ்சிகேச முனிவர், பதஞ்சலி, சூரியன், சந்திரன் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

🅱 கோயிலின் அமைப்பு : 🅱

🍁 கிழக்கிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார்.

💧 கோயிலின் முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. முகப்பு வாயிலில் வரசித்தி விநாயகரும், ஊர்த்துவ தாண்டவமும், ரிஷபாரூடரும், வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார்.காளியும் உள்ள சுதை சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

🍁 உள் நுழைந்தால் நான்குகால் மண்டபம் உள்ளது. உள்கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வலப்பால் சித்த வைத்திய சாலை நடைபெறும் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம் மருத்துவச்சாலை தேவஸ்தானச் சார்பில் நடைபெறுகிறது. திங்கள், வியாழன் காலை வேளைகளில் மக்கள் வந்து மருத்துவம் பெற்றுச் செல்கின்றனர். இம் மண்டபத்தில் தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது.

💧 கோபுர வாயிலில் வல்லபை விநயாகர் துதிக்கையுள்ளிட்ட பதினோரு கரங்களடன் காட்சி தருகின்றார். மறுபுறம் வள்ளி தெய்வயானையுடனாகிய ஆறுமுகர் சந்நிதி.

🍁 வெளிப் பிரகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. சந்தன மரங்கள் உள்ளன. கோபுரவாயில் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. வலப்பால் துவஜாரோகண (கொடியேற்ற) மண்டபம், இடப்பால் சுக்கிரவார மண்டபம்.

💧 அடுத்துள்ள ஊள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோபுரத்தில் ஊர்த்துவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டள்ளன.

🍁 வலப்பால் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. உள்ளே நுழைந்தால் எதிரில் மதிற்சுவர்மீது பஞ்ச சபைகள் உரிய நடராச தாண்டவத்துடன் வண்ணத்தில் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

💧 கோபுரத்தில் உள் பக்கத்தில் தசாவதாரச் சிற்பங்கள், கண்ணப்பர் கண்ணை அப்புவது, அரிவாட்டாய நாயனார் மனைவியுடன் செல்வது, முதலிய சிற்பங்கள் உள.

🍁 பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம் - இரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. வலமாக வரும்போது ஆலங்காடு என்னும் பெயருக்கு ஏற்ப மூலையில் பெரிய ஆலமரம் உள்ளது.

💧 அடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது, நினற் திருக்கோலம். இக்கருவறையில் கோஷ்டமூர்த்தங்கள் இல்லை. சிற்பக் கழையழகு வாய்ந்த கல்தூண்கள் காண அழகுடையவை. உற்சவத் திருமேனிகள் பாதுகாக்கப்பட்டள்ளன. அவற்றுள் - பிட்சாடனர், விநாயகர், காரைக்காலம்மையார் (தாளமிட்டுப் பாடும் அமைப்பில்,) சுநந்த முனிவர், கார்க்கோடகன், நால்வர் முதலியவை சிறப்பானவை.

🍁 இரத்தின சபை அழகு வாய்ந்தது. நடராசப் பெருமானின் ஊர்த்துவதாண்டவச் சிறப்பு தரிசிக்கத் தக்கது. அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் 'ரத்ன சபாபதி' என்று அழைக்கப்படுகிறார்.

💧 சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் உள்ளன. பக்கத்தில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் (சபையில்) உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகமுண்டு. திருமுறைப்பேழை உள்ளது. இரத்தினச் சபையை வலம் வரலாம். வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது.

🍁 சுந்தரர் பதிகம் கல்வெட்டில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துக் கட்டளையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

💧 மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்மையார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

🍁 கருவறை நல்ல கற்கட்டமைப்புடையது. கோஷ்ட மூர்த்தமாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உளர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது.

💧 சண்டேசுவரர் சந்நிதி உள்ளது - பஞ்சபூதத்தலலிங்கங்கள் உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத் தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும் உள. உபதேச தக்ஷிணாமூர்த்தி உருவம் மிக்க அழகுடையது. பைரவர் வாகனமின்றி காட்சி தருகின்றார். ஆலயத்துள் அறுபத்து மூவர் சந்நிதிகள் இல்லை.

🍁 மூலவர் சந்நிதி வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். நேரே மூலவர் காட்சி தருகிறார். வலப்பால் ஆனந்தத் தாண்டவ நடராஜர் திருமேனி - சப்பரத்திலுள்ளது. தெற்கு நோக்கியது. எதிரில் வாயிலுள்ளது. நடராசாவுக்குப் பக்கத்தில் மூலையில் சுரங்கப்பாதை உள்ளது. மூடியுள்ள கல்லைத்தூக்க இருவளையங்களையும் மேலே வைத்துள்ளார்கள். சுரங்கம் எங்குச் செல்கிறதோ ? தெரியவில்லை.

💧 துவார பாலகர்களைத் தாண்டிச் சென்றால் மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி. மூலவருக்கு மேல் உருத்திராக்க விதானம் - திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துப்பணி உள்ளது.

🍁 மூலவரின் பக்கத்தில் போக சக்தி அம்மன் உற்சவத் திருமேனி உள்ளது. சிவலிங்கத் திருமேனியின் மீது கோடுகள் அமைந்துள்ளன.

💧 ஊருக்குப் பக்கத்தில் காளிகோயில் உள்ளது. இத்தலத்திற்குத் தொடர்புடைய 'பழையனூர்' கிராமம், பக்கத்தில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள இறைவன் - அம்மையப்பர், இறைவி -ஆனந்தவல்லி. மேற்கு நோக்கிய சந்நிதி.

🍁 பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத்ந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த மண்டபம்' உள்ளது, திருவாலங்காட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலே மண்டபம் தெரிகின்றது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில் இவர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டள்ளன. யாகம் வளர்த்து இறங்குவது போனற் சிற்பம் உள்ளது. இதன் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகச் 'சாட்சி பூதேஸ்வரர்' காட்சியளிக்கின்றார். எதிரில் தீப்பாய்ந்த இடம் உள்ளது.

💧 தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனைத் தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள், இம்மரபைத் பிற்காலத்தோரும் அறியும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற்படியாக வைத்துள்ளனர்.

🍁 இம்மரபினரின் கோத்திரமே 'கூழாண்டார்கோத்திரம்'. அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்குச் சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி நெஞ்சை நெகிழவைக்கின்றது.

💧 கல்வெட்டில் நடராசப்பெருமானின் பெயர் 'அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

"கேடும்பிறவியும் ஆக்கினாரும் கேடிலா
வீடுமாநெறி விளம்பினார்எம் விகிர்தனார்
காடுஞ்சுடலையும் கைக்கொண்டு அல்லில்கணப்பேயோ (டு)
ஆடும் பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளே."

🅱 திருவாலங்காட்டுச் செப்பேடுகள்: 🅱

🌀 தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள், சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.

🅱 மாந்தீஸ்வரர் 🅱

🌀 இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனி பகவானின் இரண்டு மைந்தர்களில் ஒருவர் மாந்தி. ஒருமுறை, மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு திருத்தலம் வந்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றார். மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.

🌀 ஆலயத்தில் மாந்தீஸ்வரருக்கு சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி (8-ல் சனி), அர்த்தாஷ்டம சனி (4-ல் சனி) ஜன்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். ஒருவரின் ஜாதகத்தில் 1, 2, 4, 8, 12 ஆகிய இடங்களில் மாந்தி இருந்தால் அது தோஷமாகக் கருதப்படுகிறது.

🌀 அத்தகைய தோஷம், இங்கு மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜை செய்வதால் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும். கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும்.

🅱 தல வரலாறு:🅱

🔥 சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள்.

🔥 அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார்.

🔥 அவரை கண்ட காளி, ""நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்,''என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.

🔥 இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,""என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,''என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ திருவாலங்காட்டைப் பற்றி பாட மறந்ததை இறைவன் நினைவூட்டியதால் ஞானசம்பந்தர் இறைவனை உணர்த்திப் பதிகம் பாடினார்.

♻ இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த வைத்திய சாலை உள்ளது.

♻ கோஷ்ட மூர்த்தங்களில் துர்க்கைக்கு பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்டமூர்த்தமாக உள்ளது.

♻ பஞ்சபூத தல லிங்கங்கள் உள்ளன.

🅱 இருப்பிடம்: 🅱

✈சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது.

✈திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது.

✈திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.

✈திருவாலங்காடு என்ற பெயரில் தமிழ்நாட்டில் இரண்டு ஊர்கள் உண்டு. இரண்டு ஊர்களிலும் வட ஆரண்யேச்வர் கோவில் உண்டு. இரண்டு ஆலயங்களிலும் வண்டார்குழலி என்பது தான் அம்மன் பெயர்..இரண்டும் புகழ் பெற்ற இரண்டு சிவ ஸ்தலங்கள் ஆகும். இரண்டாவது திருவாலங்காடு மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் உள்ளது.

🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

🍄 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🍄

No comments:

Post a Comment