Thursday, 28 December 2017

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில் – திருநெல்வேலி

பரமேஸ்வரன் தன்னுள் அடங்கிய நாராயணரை வெளிப்படையாகத் தனது இடது பாகத்தில் காட்டி அருளிய ஷேத்திரம் ;  சிவத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும் தலம் ; வருடத்தில் இரண்டு முறை அன்னாபிஷேகம் செய்யும் சிவஸ்தலம்...

🍁🌸🍁🌸 BRS🍁🌸🍁🌸🍁

தொலைபேசி எண்கள் : +91 - 4636 – 222265

🌀🌱🌀🌱 BRS🌀🌱🌀🌱🌀

மூலவர் : சங்கரலிங்கம், (சங்கர நாராயணர்)

அம்மன்/தாயார் : கோமதி

தல விருட்சம் : புன்னை மரம்

தீர்த்தம் : நாகசுனை தீர்த்தம் ( இவை தவர ஐந்து தீர்த்தங்கள் உள்ளன என்பது ஐதிகம். ஆவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கௌரி தீர்த்தம் என்பன. சங்கரலிங்கத்திற்கு நிருதி திக்கில் சங்கர தீர்த்தம் உள்ளது. அது இந்திர தீர்த்தமென்றும் பெயர் பெறும்).

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்கள் ׃ பூ கைலாயம், புன்னை வனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழை நகர், புன்னைவனப்பேரி , சங்கரநயினார் கோவில்

ஊர் : சங்கரன்கோவில்

🅱 திருவிழாக்கள் :🅱

🌀 ஆடி மாதம் - ஆடித்தபசு திருவிழா 15 நாட்கள்

🌀 புரட்டாசி மாதம் - நவராத்திரி திருவிழா 9 நாட்கள்

🌀 ஐப்பசி மாதம் – திருக்கல்யாணதிருவிழா 12 நாட்கள்

🌀 மார்கழி மாதம் – திருவெம்பாவைதிருவிழா 10 நாட்கள்

🌀 சித்திரை மாதம் - பிரமோற்சவ திருவிழா 10 நாட்கள்

🌀 ஐப்பசி மாதம் – சஷ்டி 7 நாட்கள்

🌀 கார்த்திகை மாதம் – திருக்கார்த்திகை 3 நாட்கள்

🌀 தை மாதம் – தெப்பத்திருவிழா 3 நாட்கள்

🅱 தல சிறப்பு:🅱

🍄 மூலஸ்தானத்தில் சிவனும், பெருமாளும் ஒன்றாக அருளுகின்றனர்.

🍄 சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.

🍄 உத்ராயண, தட்சிணாயன காலங்களில் சூரிய பகவான் தனது சாலைகளுடன் வந்து சிவபெருமானை பூஜிக்கும் தினத்தில் சூரிய பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

🍄 அந்த காலங்களில் சூரிய பூஜை என்ற விழா கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 21,22,23 மற்றும் செப்டம்பர் 21,22,23 ஆகிய நாட்களில் சங்கரலிங்க மூர்த்தியை சூரிய பகவான் தரிசிப்பதை நாம் இன்றும் காண முடியும்.

🍄 இத்தலத்திற்கு பூகைலாயம் , புன்னைவனம் , சீராசபுரம் போன்ற இதர பெயர்களும் உண்டு.

🍄 தேவேந்திரன் மகனாகிய சயந்தன் காக்கை உருவாகிச் சீதையின் தனத்திலே  கொத்தினான். அதனையறிந்த இராமபிரான் ஓர் அம்பை அவன் மேல் ஏவினார். சயந்தன் காக்கை உருவம் நீங்காமல் வாடி, இந்திரனால் ஏவப்பெற்று அவன் தந்த முத்துமாலையைச் சங்கரலிங்கத்துக்குச் சாத்தி வழிபட்டுத் திருவருளால் முன்னய உருவம் அடைந்தான்.

🍄 பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

🅱 பாண்டிய நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் சங்கரன்கோவில்: 🅱

🍁 சோழ நாட்டில் புகழ் பெற்ற  பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. இதே போன்று பாண்டிய நாட்டிலும் புகழ்  பெற்ற பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. சங்கரன்கோவிலைச் சுற்றிலும் பஞ்ச ஸ்தலங்கள் அமைந்துள்ளது. இதில்

🍁 நிலம் (மண்) ஸ்தலமாக சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி கோவில்.

🍁 நீர் (தண்ணீர்)  ஸ்தலமாக தாருகாபுரம் மத்தியஸ்த நாத சுவாமி கோவில்.

🍁 நெருப்பு ஸ்தலமாக கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவில்.

🍁 காற்று (வாயு) ஸ்தலமாக  தென்மலை திரிபுரநாத சுவாமி கோவில்.

🍁 ஆகாய ஸ்தலமாக தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலும் அமைந்துள்ளது.

🍁 இந்த பஞ்ச ஸ்தல ஆலயங்களில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மஹா சிவராத்திரி அன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் இந்த 5 ஆலயங்களுக்கும் சென்று  இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

🅱 நடைதிறப்பு :🅱

🔑 காலை 5.30 மணி முதல் 12.15 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.🔑

🅱 பூஜை விவரம் : 🅱

🔥 இத்திருக்கோயிலில் காமிக ஆகமப்படியமைந்து பூசைகளும் அதன்படி நடந்து வருகின்றன.  ஒவ்வொரு நாளும் ஏழு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.  அவையாவன :

🔥 திருவனந்தல் - காலை 6.00 மணி,

🔥 விளாபூசை - காலை 6.30 மணி,

🔥 சிறுகாலசந்தி - காலை 8.30 மணி,

 🔥 காலசந்தி - காலை 10.30 மணி,

 🔥 உச்சிக்கால சந்தி - காலை 12.00 மணி,

🔥 சாயரட்சை - மாலை 5.30 மணி,

🔥 அர்த்த சாமம் - இரவு 9.00 மணி.

🅱 பொது தகவல்:🅱

🎭 இங்கு தல விநாயகர் அனுக்ஞை விநாயகர் எனப்படுகிறார்.

🎭 கோமதியம்மை கர்ப்பக்கிருகத்திற்கு எதிரில் அமைந்துள்ள நாகசுனை என்பது சங்கன், பதுமன் என்னும் பாம்பு அரசர்களால் கட்டப்பட்டதாகும். இத்தீர்த்தம் காற்றைப் புசிக்கின்ற பாம்புகளால் கட்டப்பட்டதால் , நண்டு, ஆமை, தவளை, மீன் முதலிய நீரில் வாழும் உயிர்கள் இக்குளத்தில் வசிப்பதில்லை.

🎭 சித்திரை, மார்கழி திருவிழாவின்போது சிவன், ரிஷப வாகனத்தில் அறுபத்து மூவருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று தெப்பத்திருவிழா நடக்கிறது.

🎭 கோயில் நுழைவு வாயிலில் அதிகார நந்தி, தன் மனைவி சுயஜ்ஜாதேவியுடன் காட்சி தருகிறார். சிவன் எதிரேயுள்ள நந்தி ருத்ராட்ச பந்தலின் கீழ் இருக்கிறார்.

🅱 நோய் தீர்க்கும் புற்றுமண் : 🅱

🎭 இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு, புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த புற்று மண்ணை நீரில் கரைத்து குடித்து வந்தால் விரைவில் நோய்கள் தீர்ந்து விடுகின்றன. வீடுகளில் கொடிய விஷ ஜந்துகள் தொல்லை இருந்தால், இறைவனை வேண்டிக்கொண்டு அவற்றின் வெள்ளி உருவங்களை வாங்கி நேர்ச்சையாக செலுத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விஷ ஜந்துகள் தொல்லை தீரும்.

🎭 புற்று மண்ணை வயல் வெளிகளில் தூவினால், பயிர்கள் மிகவும் செழிப்பாக வளரும், அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. புற்று மண்ணை வீட்டிற்கு வெளியே ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால், தீவினைகள், தீய சக்திகளை அண்டவிடாமல் குடும்பத்தை காக்கும்.

🅱 பிரார்த்தனை:🅱

🌸 ஒற்றுமை குணம் உண்டாக, தானே பெரியவன் என்ற எண்ணம் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம்.

🌸 இங்கு கிடைக்கும் புற்று மண்ணைக் கரைத்துப் பூசினால் தோல் வியாதிகள் நீங்குவது யாவரும் அறிந்ததே.

🌸 இத்தலத்திற்கு வந்து நாகசுனையில் மூழ்கி முறையாக வழிபடுவோர் குட்டம் , குன்மம் முதலிய தீராத நோய்களிலிருந்து விடுபட்டு நலம் பெறுகின்றனர்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

🌻 சுவாமி, அம்பாள், சங்கரநாராயணருக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து, நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

🌻 பாம்பு , தேள் போன்ற சிறு விஷ ஜந்துக்களிலிருந்து நமக்கு துன்பம் வராதிருக்க பிராணிகளின் வெள்ளியிலான உருவங்களை வாங்கி உண்டியலில் செலுத்துவர்.

🅱 தலபெருமை:🅱

Ⓜ சங்கரநாராயணர் சிறப்பு: Ⓜ

♻ சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. சங்கர நாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன், திருவாசியில் நாகவடிவில் சங்கன் குடைபிடிக் கிறான்.

♻ திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர்.

♻ பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக் கிறார்கள்.சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.

♻ சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியேபுறப்பாடாகிறார்.

Ⓜ "கோமதி' பெயர்க்காரணம்: Ⓜ

♻ சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், "கோமதி' என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. "ஆ' என்றாலும் "பசு' தான். "பசுக்களை உடையவள்' என்று பொருளுண்டு.

♻ கோமதி அம்பாள் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது. அம்பாள் சன்னிதி முன்புள்ள ஸ்ரீசக்கரம், ‘ஆக்ஞா சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. அதில் உட்கார்ந்து அம்மனை வேண்டி தியானித்தால் சகலமும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். கூடவே நிலையான மன அமைதியும் பெறலாம்.

Ⓜ லிங்கம் வெளிப்பட்ட விதம்: Ⓜ

♻ நாகராஜாக்கள் இருவரும் சங்கர லிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது.  நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தால் மண்ணில் பிறந்து புன்னைவனக் காவலனாக இருந்தான். அவன் காப்பறையன் என்றும், காவற்பறையன் என்றும் பெயர் பெற்றான்.

♻ கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவலன். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான்.

♻ திருநெல்வேலிக்கு மேற்கே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை மீனாட்சியம்மையையும், சொக்கநாதப்பெருமானையும் வழிபடுவது வழக்கம். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. அப்போது காவற்பறையன் ஓடிவந்து அவரிடம் செய்தியைத் தெரிவித்தான்.

♻ உக்கிரபாண்டியர் அங்கு சென்றதும் சங்கரனார் அசரீரியாக ஆணை தர, பாண்டியர் காட்டை நாடாக்கி சங்கரநாராயணர் கோவிலையும் ஊரையும் தோற்றுவித்தார். கோயிலில் கோபுரத்தைத் தாண்டி நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் காவற்பறையனின் திருவுருவம் உள்ளது.

Ⓜ ஆடித்தபசு விசேஷம்: Ⓜ

♻ "தபஸ்' என்றால் "தவம்' அல்லது "காட்சி' எனப்பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாகும். இந்த விழா, 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், ஆடித்தபசு அன்று காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார்.

♻ தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன் சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

Ⓜ சிவத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி !: Ⓜ

♻ சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், இக்கோயிலில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர். துவங்கும் புதிய வருடத்தில் உணவிற்கு பஞ்சமில்லாத நிலை இருக்க வேண்டும் என்பதற்காக சித்திரையிலும், ஐப்பசி புண்ணிய கால துவக்கம் என்பதால் அம்மாதத்தின் முதல் நாளிலும் இந்த அபிஷேகத்தை செய்கிறார்கள்.

♻ பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதுபோல, இங்கும் கொண்டாடப்படுகிறது. இதற்காக கோயிலின் வடக்கு பிரகாரத்தில் சொர்க்கவாசல் இருக்கிறது. அன்று மகாவிஷ்ணு, பல்லக்கில் அனந்த சயனத்தில் எழுந்தருளி, ரதவீதி சுற்றி வருவார். அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

Ⓜ நாகத்தில் அமர்ந்த சிவன்: Ⓜ

♻ சிவன் சன்னதி பிரகாரத்தில் வன்மீகநாதர் சன்னதி இருக்கிறது. புற்று வடிவில் அமைந்த இச்சன்னதியில் சிவன், சுயரூபத்துடன் காட்சி தருகிறார். தலைக்கு மேலே குடை பிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது இவர் அமர்ந்திருப்பது அபூர்வ அமைப்பு. புற்றுக்குள் (வன்மீகம் என்றால் புற்று) இருப்பவர் என்பதால் இவருக்கு இப்பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள். இச்சன்னதி எதிரில் பஞ்ச நாக சிலைகள் இருக்கிறது. பக்தர்கள் இச்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள்.

Ⓜ பல் வலி தீர வழிபாடு!: Ⓜ

♻ சிவன் சன்னதி கோஷ்டத்தின் (கருவறை சுற்றுச்சுவர்) பின்புறத்தில் லிங்கோத்பவர் இருப்பார். சில தலங்களில் திருமால் காட்சி தருவார். ஆனால் இங்கு "யோக நரசிம்மர்' இருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. பல் வலி உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.இக் கோயிலில் "சர்ப்ப விநாயகர்' கையில் நாகத்துடன் காட்சி தருகிறார்.

 ♻ ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிறு ராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயசம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந் தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் வேண்டிக் கொள்கின்றனர்.

♻ பெரும்பாலான முருக தலங்களில் கந்தசஷ் டியின்போது, சூரசம்ஹாரத் திற்கு ஒரு முகம் கொண்ட சுப்பிரமணியராக மட்டுமே முருகன் செல்வார். ஆனால் இங்கு ஆறு முகங்களுடன் சண்முகர் செல்கிறார். சம்ஹாரத்தின்போது முருகன், விஸ்வரூபம் எடுத்ததன் அடிப்படையில் இவ்வாறு செல்வதாகச் சொல்கிறார்கள். மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

🅱 கோவில் அமைப்பு:

🌺 இக்கோவிலின் கிழக்கு வாசலில் 125 அடி உயரமுள்ள 9 நிலை கொண்ட இராஜகோபுரம் அமைந்துள்ளது. இக்கோபுரம் சங்கரலிங்கம் பெருமானின் கர்ப்பகிரகத்திற்கு நேரே தலைவாசலில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சங்கரலிங்க ஸ்வாமி கர்ப்பக்கிரகம் , சங்கரநாராயண ஸ்வாமி கர்ப்பக்கிரகம் , கோமதி அம்மை கர்ப்பக்கிரகம் என்ற மூன்று பெரும் பகுதிகளாக அமைந்துள்ளது.

🅱 சங்கரலிங்கஸ்வாமி கர்ப்பக்கிரகம்: 🅱

🌺 இது கோவிலின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இதைச் சுற்றிலும் அர்த்த மண்டபம் , அந்தராள மண்டபம் , மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம் என வரிசையாக உள்ளன. நாம் கொடிமரம் பலிபீடம் தாண்டி உட்புகுந்தால் அதிகார நந்தி, சுயஜ்ஜா தேவி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனுமதி பெற்று உள்ளே நுழைகிறோம்.

🌺 தெற்குப் பிரகாரத்தில் சமயக் குரவர் நால்வர் , 63 நாயன்மார்கள், சேக்கிழார், மகாவிஷ்ணு, சப்த மாதர்கள், பஞ்சலிங்கங்கள் மற்றும் தென்மேற்கு மூலையில் நாகாயுத விநாயகர் முதலியோரைத் தரிசிக்கிறோம். அடுத்து மேற்கு பிரகாரத்தில், பிச்சாடனர் , சக்தியுடன் பஞ்சலிங்கங்கள் , சரஸ்வதி, மகாலக்ஷ்மி, வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகியோரைத் தரிசிக்கிறோம் .

🌺 வடக்குப் பிரகாரத்தில் ஒரு புற்றில் வள்மீகநாதர் என்னும் நாகாபரண புற்றுலிங்கம் உள்ளது. இதுவே இக்கோவில் உருவாக காரணமான புற்று ஆகும். வடபக்கம் சனிபகவான் , காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவி உள்ளனர். கீழ்ப் பிரகாரத்தில் சூரிய, சந்திரன் உள்ளனர் .

🌺 மகா மண்டபத்தின் மதில் சுவற்றில் பல தெய்வங்களின் சிறு உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டு அக்கால சிற்பக்கலை நுணுக்கங்களை நமக்கு போதிக்கிறது. இம்மதிலின் தென் பக்கம் தட்சிணா மூர்த்தி, மேல் பக்கம் நரசிம்மர், வடபக்கம் ப்ரம்மா உள்ளனர். இவர்களை நாம் தரிசித்துவிட்டு அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் அங்கிருந்து சிறிய உருவில் எழுந்தருளியுள்ள சங்கரலிங்கப் பெருமாளை கண்குளிர தரிசிக்கலாம்.

 🌺 இம்மண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ள நடராஜர் , சிவகாமி அம்மையார், காரைக்காலம்மையார் ஆகியோரைத் தரிசிக்கலாம். சங்கரலிங்க ஸ்வாமிக்கு புன்னைவனநாதன், சங்கரமூர்த்தி, வைத்தியநாதன், சீராசைநாதன் எனப் பல பெயர்கள் உண்டு.

Ⓜ சங்கர நாராயணர் கர்ப்பக்கிரகம்: Ⓜ

🌺 சங்கரலிங்க ஸ்வாமியைத் தரிசித்த பின்னர் , நாம் வெளிவந்தால் அடுத்து நாம் தரிசிக்கப் போவது சங்கர நாராயணர் ஆகும். மகா மண்டபத்தைத் தாண்டி நாம் அர்த்த மண்டபம் சென்றால் அங்கிருந்து கர்ப்பக்கிரகத்தில் , ஸ்ரீ சங்கரநாராயணரைத் தரிசிக்கிறோம். வலது பக்கம் ஈஸ்வரனாகவும், இடது பக்கம் திருமாலுமாக காட்சி தருகிறார்.

🌺 வலப்பக்கத்தில் மழுப்படையும், அபயகரமும் தாங்கிய சிவனும் , இடப்புறத்தில் சக்கரப்படையும் வரதகரமும் உடைய திருமாலும் ஒன்றாக இணைந்துள்ளனர். மகா மண்டபத்தில் தென் பக்கத்தில் விநாயகரின் பல உருவங்களும் , மேல் புறத்தில் பள்ளி கொண்ட பெருமாள் சயனக் கோலமும் , வடபுறத்தில் முருகனின் பல உருவங்களும் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

🌺 இங்கு சங்கர நாராயணர் அருகில் ஒரு வெள்ளி பேழையில் உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு மட்டுமே தினசரி அபிஷேகம் நடைபெறுகிறது.

Ⓜ கோமதி அம்மாள் கர்ப்பக்கிரகம்: Ⓜ

🌺 சங்கரலிங்கர் கோவில் போன்றே கோமதியம்மன் கோவிலிலும், கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம் , அந்தராள மண்டபம் , மா மண்டபம் சுற்று மண்டபங்கள் உள்ளன. கோமதியம்மை கர்ப்பக்கிரகத்திற்கு நேர் எதிரில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன் மேல் மக்கள் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்கிறார்கள். இருபக்கமும் மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.வடக்குப் பிரகாரத்தில் புற்றுமண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

🌺 மக்கள் இம்மண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்று நோய் நீக்கம் பெறுகிறார்கள். இது தோல் நோய்களை நீக்கும் அருமையான மருந்தாகும். அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்து கோமதி அம்மையைத் தரிசிக்கிறோம் .வலது கையில் மலர்ச் செண்டுடன் இடது கையைத் தொங்கவிட்டு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கும் அழகு திருக்கோலம் நம் மனதை விட்டு என்றும் நீங்குவதில்லை . இக்கோவிலில்லிருந்து வெளிவந்தால் ஈசான திக்கில் சண்முகர் கோவிலும் வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீ நடராஜர் சந்நிதியும் உள்ளன.

🅱 தல வரலாறு:🅱

❀ சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் அடிக்கடி சிவன் பெரியவரா ? திருமால் பெரியவரா ? என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். உமாதேவியார் சிவப்பெருமானிடத்தில், “விஷ்ணுமூர்த்தியுடன் நீர் பொருந்தியிருக்குந் திருக்கோலத்தைக் காட்ட வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தாள்.

❀ சிவபெருமான் அவ்வேண்டுகோளுக்கு இணங்கி அம்மையாரை நோக்கி “அகத்திய முனிவரும் பொதிகை மலைப்பக்கத்தில் புன்னை விருக்ஷ வடிவமாக அநேகர் தவம் செய்கின்றனர். அங்கே நீயும் சென்று தவம் செய்வாயானால் நீ விரும்பிய திருஉருக்காட்டுவோம்”  என்று அருளினார்.

❀ உடனே அவருடைய திருவடிகளை வணங்கி உமாதேவியார் அவ்விடத்தை விட்டுப் புறப்படவும் தன்னைப் பணிந்து நின்ற தேவர்கள் தேவியாரை விட்டுப் பிரியமனமில்லாதவராய் “கூடவருவோம்”  எனக்கூற, “நீங்கள் புன்னை வனத்திலே வந்து விருக்ஷ வடிவமாயிருந்து தேன் மிகுந்த மலர்ந்த பூவாலும், கனியாலும் சந்தோஷித்திருப்பித்திருங்கள்”.  முனிவர்களே ! நீங்கள் ஆதிசைவராகி  வந்து எம்மைப் பூசை செய்யுங்கள்.

❀ புன்னைவனத்திலே எல்லா அம்சங்களும் பிரிவுபடாமல் ஒன்றாகவே நம்முடைய தலைவராகிய சிவபெருமான் எழுந்தருளியிருப்பார் என்று சொல்லி புன்னைவன க்ஷேத்திரத்தையடைந்து நெடுங்காலம் தவம் செய்தருளினார். சிவபெருமான் புன்னைவனாத்தில் எழுந்தருளி ஆடிமாதம் பெளர்ணமியன்று சங்கரநாராயணராகிய திருஉருவக்காட்சி கொடுத்தனர்.

❀ உமாதேவியார் அக்காட்சியைக் கண்கள் களிகூறத் தரிசித்துத் வணங்கினாள்.  சிவபெருமான் தேவியாரை நோக்கி உனக்கு வேண்டிய வரங்களை கேட்பாய் என்றார்.  உமாதேவியார்.. சுவாமி ! இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திருஉருக்கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்க சிவபிரான் சிவலிங்க வடிவாகி அந்த உமாதேவியளருடன் புன்னை வனத்திலே எழுந்தருளியிருந்தனர்.

❀ ஆடித்தபசன்று மாலை இறைவன் வீதியில் எழுந்தருளிக்காட்சி கொடுப்பது. தேவியார் விரும்பிய சங்கரநாராயணர் கோலம், இரவு எழுந்தருளிக்காட்சி கொடுப்பது  சங்கரநாராயணர் காட்சி. (உமாதேவி வேண்டிய சிவபெருமானின் திருஉருவம்.)  இதுவே ஆடித்தபசு விழாவின் முக்கிய கருத்தும் சிறப்பும்.

❀ இவ்விதமாகச் சிவபெருமான் சங்கரநாராயணராகக் காட்சியருளியதால் நாராயணர், நான்முகன் முதலிய தேவர்கள் யாவரும் சிவனார் திரு உருவில் அடங்கினவர்களே என்ற உண்மை நிலை பெறுகின்றது. இச்செய்தியை சங்கரநாராயணர் சருக்கத்தில் தென்மொழி வடமொழிப் புராணங்களில் விரிவாகக் காணலாம்.

❀ சங்கன், பதுமன் என்னும் நாகர் இருவர் இருந்தனர். அவர்களில் சங்கன் சிவபெருமானிடத்தும், பதுமன் திருமாலிடத்தும் அன்பு பூண்டு அரன் பெரியவன், அரி பெரியவன் என வாதிட்டுச் சாங்கரநாராயணர் காட்சியைக் கண்டு அரனின் கூறுதான் அரியென்ற உண்மையை உணர்ந்தனர்.

ஐயநின் கூறேமாலும் அயன்முதல் தேவும் என்னும்
மெய் உணர்வே எஞ்ஞான்றும் விளைவுற வேண்டும்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இந்து சமயத்தில் உட்பிரிவுகளான சைவம், வைணவம், சாத்தேயம், கானாபத்தியம், கௌ மாரம், பேரவம் போன்ற யாவும் அன்பே உருவான ஒரே இறைவன் தம் சக்தியை பல உருவங்களில் வெளிப்படுத்தி நம்மை ஆட்கொண்டுள்ளார் எனும் பெருமை நிலை நாட்டப்பட்டு இருப்பதை நாம் இத்திருத்தலத்தின் மூலம் காண முடிகிறது.

♻ கோவிலின் நுழைவு வாயிலின் வடபுறம் அமைந்துள்ள நாகசுனைத் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இதை பாம்பரசர்களான சங்கனும், பதுமனும் ஏற்படுத்தினார்கள். இந்த தெப்பக்குளத்தில் மூழ்கி புற்றுமண் பூசி வழிபடுபவோர்களுக்கு விஷசந்துகளின் தொந்தரவில் இருந்து விடுதலை கிடைக்கும்.

♻ தமிழ்நாட்டில் நாகதோஷங்களை தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குவதற்கு இக்கோயிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் 6 அடி உயரத்தில் சர்ப்பத்தை கையில் பிடித்தபடி சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்தில் விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோயிலின் ஐதீகம்.

🅱 இருப்பிடம்: 🅱

✈மதுரையில் இருந்து 120 கி.மீ., ராஜபாளையத்தில் இருந்து 30 கி.மீ., திருநெல்வேலியில் இருந்து 56 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது.


No comments:

Post a Comment