இருபத்தேழு தலைமுறைக்கான புண்ணியங்களை அள்ளித் தரும் அற்புதமான தலம்...
பட்டாபிஷேகம் முடிந்து, எத்தனையோ புண்ணியத் தலங்களுக்குச் சென்று, எவ்வளவோ தான- தருமங்கள் செய்தாலும், எதுவும் பலன் அளிக்கவில்லை. தர்ப்பணத்துக்கு பிடித்து வைக்கப்பட்ட பிண்டங்கள் எல்லாம், தர்ப்பணம் முடிவதற்குள்ளாகவே புழுக்களாக மாறின. தந்தையின் ஆத்மாவுக்குச் சாந்தியளிக்க முடியவில்லையே எனும் வேதனையில் அமைதியின்றித் தவித்தார் ஸ்ரீராமர். தந்தைக்கு இறுதிக்கடன் அளிக்கமுடியாத தனது வருத்தத்தை, சிவனாரிடம் முறையிட்டு வேண்டினார். 'பூலோகத்தில் மந்தார வனத்துக்குச் செல்; அங்கே, தர்ப்பணம் செய்தால், தந்தையின் ஆன்மா ஏற்கும்; அமைதியுறும்’ என அருளினார் ஈசன்.
அதன்படி, மந்தார வனத்துக்கு வந்த ஸ்ரீராமர், நீராடி விட்டு, தந்தைக்கு ஆத்மார்த்தமாகத் தில தர்ப்பணம் செய்யும் காரியத்தில் ஈடுபட்டார் (தில என்றால் எள்). வழக்கம்போல் பிண்டம் வைத்துவிட்டு, கண்மூடி மந்திரங்கள் சொல்லிவிட்டுக் கண் விழித்தவர், ஆச்சரியத்தில் அசந்துபோனார். அங்கே அவர் வைத்த நான்கு பிண்டங்களும் நான்கு சிவலிங்கங்களாகக் காட்சி தந்தன என்கிறது ஸ்தல புராணம்.
இதற்குச் சாட்சியாக, இன்றைக்கும் தரிசனம் தருகின்றன அந்த நான்கு சிவலிங்கங்களும்! காசி, ராமேஸ்வரம் தலங்களுக்கு இணையான இந்தத் தலத்துக்கு வந்து பித்ருக் கடனை அடைப்பவர்களுக்கு முக்தி வழங்கி அருள்கிறார் ஸ்ரீமுக்தீஸ்வரர்.
ஸ்ரீராமர் தில தர்ப்பணம் செய்து வழிபட்ட அந்தத் திருத்தலம், திலதர்ப்பணபுரி. திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது பூந்தோட்டம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதி திருக்கோயில். இந்தக் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணபுரி. தென் கயிலாயம் எனப்போற்றப்படும் இந்தத் திருத்தலத்தில் அருள்கிறார் ஸ்ரீமுக்தீஸ்வரர்.
இந்தத் தலம் நித்திய அமாவாசை தலம் எனப் போற்றப்படுகிறது. அதாவது, காசி, ராமேஸ்வரத்தை அடுத்து இங்குதான் சூரியனும் சந்திரனும் அருகருகில் காட்சி தருகின்றனராம். சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பதுதானே அமாவாசை?! ஆகவே, எல்லா நாளும் இங்கு அமாவாசைக்கு இணையானவை; இங்கே தர்ப்பணம் செய்வதற்கு நாள், நட்சத்திரம், திதி எதுவும் பார்க்கத் தேவையில்லை; எந்த நாளில் வேண்டுமானாலும் திதி கொடுக்கலாம் என் கின்றனர், பக்தர்கள்!
மூர்த்தி, தலம், தீர்த்தம் எனச் சிறந்து விளங்கும் இந்தக் கோயிலில், ஸ்ரீஆதிவிநாயகர் எனும் திருநாமத்துடன், நர முகத்துடன் தும்பிக்கையின்றிக் காட்சி தருகிறார் கணபதி.
ஸ்ரீராமர் வைத்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின அல்லவா?! அவை பித்ரு லிங்கங்கள் என்றே அழைக்கப் படுகின்றன. இந்த லிங்கங்களுக்கு அருகில் ஸ்ரீராமரின் திருவிக்கிரகமும் அமைந்துள்ளது. நற்சோதி மகராஜா இந்த ஆலயத்தைச் செப்பனிட்டு, பித்ருக்களுக்கான கடனைச் செய்தார். எனவே, அவரது சிலையும் இங்கே உள்ளது.
திருஞானசம்பந்தப் பெருமானால் 'திலதைப் பதி’ எனப் போற்றப்பட்ட அற்புதமான இந்தத் தலத்துக்கு வந்து, பித்ரு காரியங்களைச் செய்து, ஸ்ரீமுக்தீஸ்வரரையும் ஸ்ரீசொர்ணவல்லி அம்பாளையும், பித்ரு லிங்கங்களையும் வணங்கி வழிபட்டால், நம் பாவங்கள் மட்டுமின்றி, நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்; மறுபிறப்பற்ற நிலையை அடையலாம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீமந்தார வனேஸ்வரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன் மற்றும் ஸ்ரீபூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீசௌந்தர்ராஜபெருமாள் ஆகியோரும் காட்சி தருகின்றனர். அஷ்டமா ஸித்திகளை உணர்த்தும் வகையில் எட்டுப் படிகளுக்கு மேலே ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருவது, காண்பதற்கு அரிதான ஒன்று எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர், பக்தர்கள்.
தினமும் அதிகாலையில், கோ பூஜை செய்தபிறகே பூஜைகள் துவங்குகின்றன. புராண- புராதனப் பெருமைகள் கொண்ட திலதர்ப்பணபுரி தலத்துக்கு வந்து, ஒரேயரு முறை தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டால், 27 தலைமுறைக்கான புண்ணியங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். இங்கே, பித்ரு தோஷத்துக்காக தீபமேற்றியும் யாகம் செய்தும் வழிபட்டுப் பரிகாரம் செய்வது விசேஷம்.
இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீஆதிவிநாயகர் மட்டும் என்னவாம்?! அருளையும் ஞானத்தையும் அள்ளித் தரும் வள்ளலெனத் திகழ்கிறார் விநாயகப் பெருமான். மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாளில், இவருக்குச் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.
பூலோகத்தைக் 'கர்ம பூமி’ என்கின்றன இதிகாசங்கள். பித்ருக் கடன், ரிஷிக்கடன், தேவக்கடன் என மூன்று வகை கடன்களுடன் வாழ்ந்து வருகிறது, மனித இனம். இறை வழிபாட்டுடன் அற வழியில் ஈடுபட்டுச் சேவையாற்றி வந்தாலும், பித்ருக் கடனைத் தீர்க்கவில்லையெனில், எந்தப் பலனும் இல்லை என்கிறது வேதம்.
ஆகவே, திலதர்ப்பணபுரி தலத்துக்கு வந்து, பித்ருக்கடனை அடைப்போம்; பிறப்பற்ற நிலையை அடைவோம்!
No comments:
Post a Comment