Thursday, 7 December 2017

வல்லக்கோட்டை முருகனுக்கு கார்த்திகைதோறும் புஷ்பாஞ்சலி!

நீங்கள் சென்னைக்கு அருகிலிருக்கும் புகழ்பெற்ற முருகன் தலமான வல்லக்கோட்டைக்குப் போயிருக்கிறீர்களா? அதுவும் மாதந்தோறும்வரும் கிருத்திகை தினத்தில் போய் தரிசித்திருக்கிறீர்களா? அப்படிப் போயிருப்ப வர்கள் என்றால், கண்டிப்பாகக் கிருத்திகை அன்று கோயிலில் செய்யப் பட்டிருக்கும் மலர் அலங்காரத்தைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். 


கிருத்திகை அன்று காலை 7 மணிக்குள் கோயிலுக்குச் சென்றால், கருவறை தொடங்கி தங்கமுலாம் பூசப்பட்ட கருவறை வாயில், சந்நிதி, தூண்கள், மகா மண்டபத்தில் உள்ள மயில் வாகன மண்டபம், கொடிமரம், பலிபீடம், ராஜகோபுர நிலை என எல்லா இடங்களிலும் கண்கவர் வண்ணங்களில் பூக்கள் மலர்ந்து சிரித்து உங்களை வரவேற்கும்; அந்த மணமும் மலர்களின் நிறமும் சேர்ந்து கண்கொள்ளாக் காட்சி தரும். ‘யார் இந்த அலங்காரங்களை எல்லாம் செய்வது? எப்போது வந்து செய்கிறார்கள்?' என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் ஆச்சர்யமானவை; சுவாரஸ்யமானவை. தாம்பரத்தில் வசித்துவரும் பார்த்திபன், சுசரிதா தம்பதிதான் இந்த மலர் அலங்காரச் சேவைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள். சுசரிதாவிடம் பேசினோம்.
‘‘எனக்கு பூர்வீகம் பட்டுக்கோட்டை. சிவன் கோயில் பக்கத்தில் வீடு. விடியற்காலையில் தேவாரம், திருவாசகம் கேட்டுத்தான் கண் விழிப்பேன். திருமந்திரம் சொன்னால்தான் சுடச்சுட பொங்கல் பிரசாதம் கிடைக்கும். வீட்டைச் சுற்றிலும் வேத பாடசாலை. எந்நேரமும் வேத பாராயணம் காதில் விழுந்துகிட்டே இருக்கும். வளர்ந்ததே இந்த மாதிரிச் சூழல் என்பதால், ஆன்மிக ஈடுபாடு சின்ன வயசிலிருந்தே வந்துருச்சு. 

வயது கூடக் கூட ஆன்மிக நாட்டமும் அதிகமாயிடுச்சு. தாம்பரத்தில் இருக்கிற சேவாசதன் பள்ளியில்தான் ப்ளஸ் டூ படிச்சேன். படிக்கும்போதே வல்லக்கோட்டை கோயிலுக்குப் போக ஆரம்பிச்சேன். அங்கே, கோடை நகர் குமரன் வழிபாட்டு மையத்தின் சார்பில் நடைபெறும் அன்னதானத்தின் போது பரிமாறுவது, சாப்பிட்ட இலைகளை எடுத்து அகற்றுவது போன்ற வேலைகளைச் செய்துட்டு வருவேன். பின்னால் கணவர், குழந்தைகள் ஆன பிறகும் வல்லக்கோட்டைக் கோயிலுக்கு வருவேன்னும் நான் மட்டுமில்லாமல் என்னோட படிச்சு, கல்யாணமாகி வாழ்க்கையில் செட்டிலான பசங்களும் என்கூட வல்லக் கோட்டைக்கு வருவாங்கன்னும் நான் நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை. 

இன்னும்கூட அவங்க என்னோடு வல்லக்கோட் டைக்கு வந்துட்டிருக் காங்க. இப்படித்தான் எனக்கும் வல்லக் கோட்டைக்குமான பந்தம் தொடங்கி வளர்ந்துச்சு. என் கணவரும் தீவிரமான முருக பக்தர் என்கிறதால, திருமணத்துக்குப் பிறகும் வல்லக்கோட்டையில் எங்கள் பணி தொடர்ந்ததுல ஆச்சர்யமில்லை. சொல்லப்போனா என் கணவரும் எங்களுடன் வந்து சேவை செய்றார். 

அந்தக் கோயிலில் அறப்பணிகள் செய்து வரும் ‘கோடை நகர் குமரன் வழிபாட்டு மைய’த்தின் நிறுவனர் லட்சுமணன் ஐயாவின் அறிமுகம் கிடைத்து, அவருடன் சேர்ந்து பழநிக்குத் தொடர்ந்து பாத யாத்திரை போக ஆரம்பிச்சோம்.

எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன்.பையனுக்கு ஒன்றரை வயசு ஆனப்போ அம்மை போட்டது. பேச்சே வராமல் போயிடுச்சு. அப்போதுதான் என் கணவர், ‘குழந்தை பிறந்தால் பழநிக்குத் தூக்கிட்டு வர்றேன்னு வேண்டியிருந் தேன். அதை மறந்துட்டேன். நாம அவனைக் கூட்டிட்டுப் போய்ட்டு வந்துடலாம்’னு சொன் னார். உடனே ரெண்டு குழந்தைகளையும் தூக்கிட்டுப் பழநிக்குப் பாத யாத்திரை போனோம். அப்போதிலிருந்து இப்போது வரை நாங்க நாலு பேரும் பழநிக்கு நடந்து போய்ட்டிருக்கோம். இங்கிருந்து தேவகோட்டைக்கு ரயிலில் போய், அங்கிருந்து யாத்திரையைத் தொடங்குவோம். முதலில் சின்னதாக இருந்த எங்கக் குழு, கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இப்போ 200 பக்தர்களாகப் பெருகிடுச்சு!’’ என்று பக்திப் பரவசத்துடன் பேசுகிறார் சுசரிதா.
‘‘வல்லக்கோட்டையில் பூ அலங்காரம் செய்றதை எப்போ ஆரம்பிச்சீங்க?’’

‘‘பூக்கட்டும் வேலை எனக்குச் சின்ன வயசிலிருந்தே ரொம்பப் பிடிக்கும். எங்கே பூவைப் பார்த்தாலும் அதைத் தொடுத்து, சாமிக்குப் போடுறது மனசுக்குப் பிடிச்ச விஷயம். சின்ன வயசிலிருந்து வல்லக்கோட்டைக்குப் போய்கிட் டிருக்கிற நாங்க, ஆறேழு வருஷங்களுக்கு முன்னால், கோயிலில் சித்திரை வருஷப் பிறப்புக்கு மலர் அலங்காரம் செய்து தர முடியுமான்னு அங்கே இருக்கும் குருக்கள் கேட்டார். அவர் கேட்டது எங்களுக்கு அந்த முருகனே கேட்ட மாதிரி இருந்துச்சு. உடனே செய்ய ஆரம்பிச்சோம். 

மதுரையைச் சேர்ந்த பாதயாத்திரை குருநாதர்  ராஜராஜன் ஐயா, உஷா ஸ்ரீநிவாஸன் மற்றும் முருகன் அடியார்கள் பலபேர் உதவினாங்க. இந்தப் பணிக்கு முருகன் எங்களைத் தேர்ந்தெடுத் திருக்கிறாரேன்னு பரவசமா இருந்துச்சு. எப்போதும் ஆங்கில வருஷப் பிறப்புக்கு முதல் நாள் இரவு 12 மணியிலிருந்து விடியற்காலை 

4 மணி வரை பக்தர்களுக்கு  ஸ்வீட் கொடுப்போம். அதுவே எங்களுக்குப் பெரிய சந்தோஷம். ஆனால், அந்த வருஷம் போனஸாக அலங்காரம் பண்ற பணி கிடைச்சது, அதை எங்கள் அப்பன் முருகன் கொடுத்த வரமாகவே நினைச்சோம். வருஷப் பிறப்பு தினத்தில் ஆரம்பிச்சதை, கிருத்திகை தினத்தில் செய்யலாம்னு குருக்கள் மாத்தினதால், மாதந்தோறும் கிருத்திகையில் அலங்காரம்னு மாத்திட்டோம். அலங்காரம்னு ஆரம்பிச்சதுதான் தாமதம். யார் யாரோ எங்கிருந்தோவெல்லாம் பூ அனுப்புறாங்க. நாங்க மூணு பேராக ஆரம்பிச் சோம். இப்போ 30 பேர் கொண்ட குழுவாகியிருக்கு!’’ என்கிறார் சுசரிதா முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க.

‘‘எங்களுடன் ஒரு பரணி தினத்தில் வல்லக் கோட்டைக்கு வந்து பாருங்க’’ என்று அவர்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து, நாமும் சென்றோம்.
கிருத்திகைக்கு முதல் நாள் பரணி தினத்தில் இரவு 7 மணியிலிருந்தே சுசரிதாவின் வீடு களை கட்டுகிறது. பாரீஸ் கார்னரிலிருந்து கூடை கூடையாகப் பூக்கள் ஆட்டோவில் வந்து இறங்குகின்றன. மதுரையில் இருந்து 20,000 ரூபாய் மதிப்புள்ள மல்லிகை, ரோஜா, சம்பங்கி எல்லாம் சரம் சரமாக விமானத்தில் வந்து இறங்குகிறது. அப்போதுதான் பூத்ததுபோன்ற புத்தம்புதிய மதுரை மல்லிகை. பூங்கொத்து தயாரிப்பதற்கு தேவையான லில்லி, டேலியா, ஜினியா பூக்கள் ஒருபக்கம் வருகின்றன. எல்லாவற்றையும் இரவு சுமார் 10 மணிக்கு வேனில் ஏற்றுகின்றனர். அதன் பிறகு ‘யாத்திரை தோழன்’ குழுவினர், வல்லக் கோட்டைக்குப் புறப்படுகின்றனர். இவர்கள் போய் இறங்கும்போது அங்கே பரணி நட்சத்திர அபிஷேகக் குழுவினர் முருகனுக்கு நடத்தும் அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. உற்சவர் சர்வ அலங்காரத் துடன் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பக்தர்கள் கூட்டம் அந்த இரவிலும் நிரம்பி வழிகிறது. ‘அரோகரா’ என்னும் கோஷம் மெய்சிலிர்க்க வைக்கிறது. சந்தனக்காப்பில் காட்சி தருகிறார், ஆசியாவிலேயே மிக உயரமான உற்சவரான முருகப்பெருமான். பின்னர் விபூதிக்காப்பில் தரிசனம் தந்து ஆட்கொள்கிறார். தீப ஆரத்திக்குப் பின் நடை சார்த்தப்படுகிறது.

கர்ப்பகிரகம் பூட்டப்பட்டு, குருக்கள் கிளம்ப, நள்ளிரவு 12 மணிக்குச் சுறுசுறுப்பாகத் தொடங்கு கிறது சுசரிதா - பார்த்திபன் குழுவினரின் பூ அலங்கார வேலை. சுசரிதாவும் மற்றொரு பெண் தொண்டரும் அமர்ந்து, கடகடவென பூங்கொத்துகள் தயாரிக்கின்றனர். மறுநாள் கோயில் மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் இந்தப் பூங்கொத்துகள் மலர்ந்து சிரிக்கின்றன. ஆண்கள் அனைவரும் சந்நிதி, கர்ப்பகிரக வாயில், கொடிமரம், மயில் வாகனம் எனத் தாங்களே ஒவ்வோர் இடமாகப் பிரித்துக்கொண்டு பூக்களை எடுத்துச்சென்று அலங்காரம் செய்கின்றனர். பார்ப்பதற்கு ஒரு தவம் போல இருக்கிறது.
வேலைகளுக்கிடையே, சுமார் 3 மணியளவில் சூடான சுக்குக் காபியை ஓர் அன்பர் தயாரித்து எடுத்துவந்து அனைவருக்கும் வழங்குகிறார். கோயிலில் பக்தர்கள் மலரலங்கார பணியில் ஈடுபட, கோசாலையில் மாடுகள் மௌனமாக அசை போட, முருகனின் மயில்கள் மட்டும் கழுத்தை நீட்டிச் சுற்றும் முற்றும் பார்த்தபடி நடை பயில... சுற்றுப்புறமே நிசப்தமாக இருக்கும் அந்தச் சூழலே வித்தியாசமாக இருக்கிறது நமக்கு. 

சரியாக 4 மணிக்கு முடிகிறது முழுமையான அலங்காரம். கர்ப்பகிரக வாயிலைப் பார்க்கும்போது கண்களைச் சுழற்றிய தூக்கமெல்லாம் பறந்தோடி, விழிகள் விரிகின்றன. அப்படி ஓர் அழகிய அலங்காரம். சந்நிதியின் மேலே பூப்பந்தல். தூண்களில் பூங்கொத்து. அகஸ்தியர், பட்டினத்தார் சிலைகளுக்கு வித்தியாசமான அலங்காரம். ராஜகோபுர வாசலுக்குப் பெரிய நிலை மாலை. விநாயகர் சந்நிதியில் அறுகம்புல் அலங்காரம். பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. 

‘‘பசங்களைத் தனியா விட்டுட்டு வந்துடுவீங்களா?’’ என்று கேட்டால், ‘‘இதோ பாரு முருகா... நான் உன்னை, உன் வேலையைத்தான் பார்க்கிறேன். இதுக்கே நேரம் சரியா இருக்கு. மத்ததுக்கெல்லாம் நேரமில்லை. நீதான் என் பிள்ளைகளைப் பார்த்துக்கணும்னு முதல்லயே அவன்கிட்ட சொல்லிட்டுத்தானே வேலையையே தொடங்குறோம். எல்லாம் அவன் பார்த்துக்குவான்!’’ என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் சுசரிதா.

ஒவ்வோர் ஆண்டும் சஷ்டி தினத்தில் இந்தத் தம்பதியர் ஆறு நாள்களும் விரதமிருந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முருகன் கோயிலுக்குச் செல்கின்றனர். விரதம் முடிக்கும் நாளன்று, உப்புப் பார்க்காமல் சமைத்து, சுமார் 150 பேருக்கு அன்னதானம் செய்கின்றனர். 

கிருத்திகை தினத்தில் அதிகாலையில் வல்லக்கோட்டை அலங்காரம் மட்டுமல்ல; அன்று மாலையில் யாராவது ஒரு முருக பக்தர் இல்லத்தில் அல்லது கோயிலில் கிருத்திகை பூஜையும் பஜனையும் நடத்துகின்றனர். அதைத் தொடர்ந்து அன்னதானம். இதையும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவருகின்றனர்.

‘‘அவன் சொல்றான்... நாங்க செய்றோம். அதுக்கான சக்தியை மட்டும் அந்த முருகன் கொடுத்தால் போதும். வேறு எதையும் எதிர்பார்க்கவே இல்லை!’’ என்று அடக்கமாகச் சொல்லும் பார்த்திபன் - சுசரிதா குடும்பத்தினருக்கு, பாலமுருகனின் பரிபூரண அருள் என்றென்றும் துணையிருக் கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நீங்களும் ஒரு கிருத்திகை தினத்தில் காலை நேரத்தில் வல்லக்கோட்டை சென்று, ‘யாத்திரை தோழன்’ குழுவினரின் மலர் அலங்காரத்தைக்கண்டு ரசித்து, முருகனின் அருள் பெற்று வாருங்களேன்!

விசாகத்தில் காய்-கனி அலங்காரம்!
வைகாசி விசாகத் தினத்தில் வல்லக்கோட்டை கோயிலின் கர்ப்பகிரக நுழைவாயில், சந்நிதி மற்றும் மண்டபத்தில் காய்கறிகள், கனிகள் என அத்தனை வகைகளையும் கொண்டு அலங்கரிக்கிறது யாத்திரை தோழன் குழு. மார்க்கெட்டில் கிடைக்கும் அத்தனை காய் கனி வகைகளையும் அன்றைய தினம் கொண்டுவந்து குவித்துவிடுகிறார்கள் பக்தர்கள். அவற்றை மாலையாகக் கோத்து, கோயில் முழுவதும் அலங்காரம் செய்யப்படுகிறது.  இது தவிர, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நடக்கும் மகாபிஷேகமும் பார்த்திபன் தம்பதியின் உபயம்தான். 20 லிட்டர் பால், கும்பகோணத்திலிருந்து சந்தனம், வெற்றிலை, விபூதி என்று ஆத்மார்த்தமாகப் பார்த்துப் பார்த்து சேவை செய்கிறார்கள் வல்லக்கோட்டை வள்ளலுக்கு!

No comments:

Post a Comment