Monday, 11 December 2017

தூத்துக்குடி வைப்பார் சிவாலயம்

பாவம் பறந்தோடும்!

பித்ருக்கள் எனப்படும் முன்னோருக்கு ஆராதனை செய்வது அவசியம் என வலியுறுத்துகிறது இந்து தர்மம். தை மற்றும் ஆடி அமாவாசைகளில் முன்னோர்களுக்கான காரியங்களைச் செய்தால், அதனால் ஏற்படக்கூடிய பலன், நம்மை மட்டுமின்றி நம் சந்ததியையும் செழிப்புடன் வாழவைக்கும் என்கின்றனர் சான்றோர்.
தென்மாவட்டங்களில், தூத்துக்குடி மாவட்டத்தில் பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலமாகப் போற்றப்படுகிறது, வைப்பார் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் திருக்கோயில். தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில், சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது வைப்பார் கிராமம். இங்கே அமைந்துள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில், புராதன- புராணப் பெருமைகள் வாய்ந்த திருத்தலமாகத் திகழ்கிறது.
தை மற்றும் ஆடி அமாவாசை உள்ளிட்ட நாட்களில், இந்தத் தலத்துக்கு வந்து வணங்கிச் சென்றால், பித்ரு தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள் முத்து நகர் மக்கள்.
முக்கூடல் என அழைக்கப்படும் சங்குமுகத் தீர்த்தக் கடற்கரையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீவிசாலாட்சி. காசிக்கு நிகரான இந்தத் தலத்து இறைவனை வணங்கி வழிபட்டால், பாவமெல்லாம் பறந்தோடும்; பித்ரு தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் எனச் சொல்லிச் சிலாகிக்கின்றனர், பக்தர்கள்.
ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கிழக்கு நோக்கியபடி காட்சி தர, அம்பாள் ஸ்ரீவிசாலாட்சி, சங்குமுகக் கடற்கரையைப் பார்த்தபடி தெற்கு நோக்கி அருள்வது விசேஷமாம்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில், பிரம்ம முகூர்த்த வேளையில், இங்கேயுள்ள சங்குமுகக் கடலில் நீராடி, பித்ரு காரியங்களையும், அவர்களுக்கு உரிய ஆராதனைகளையும் செய்து, சொம்பு ஒன்றில் கடல் தீர்த்தம் எடுத்துக்கொண்டு, ஆலயத்துக்கு வந்து சிவனாருக்கு  அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, ஸ்ரீவிசாலாட்சி அம்மைக்குப் புடவை சார்த்தி வணங்கி வழிபடுவது, பாவங்களைத் தொலைத்து, புண்ணியங்களைப் பெருக்கும் என்கின்றனர். தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற புண்ணிய தினங்களில் இந்த ஆலயத்துக்கு வந்து நெய் விளக்கேற்றி வணங்கினால், நம் சந்ததியினர் சிறப்புடன் வாழ்வர்; முன்னோர்களின் ஆசீர்வாதமும் ஸ்ரீகாசிவிஸ்வநாதரின் பேரருளும் கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம்!
அதேபோல், இங்கு அம்மனின் திருப்பாதத்தில் இருந்து குங்குமம், ஸ்வாமியின் திருவடியில் இருந்து விபூதி ஆகியவற்றைத் தருகின்றனர். இவற்றுடன் கடல் தீர்த்த நீரைக் கலந்து, பசும்பால், கோமியம் ஆகியவற்றையும் சேர்த்து, ஸ்ரீகாசிவிஸ்வநாதரை மனதில் நினைத்தபடி, வீட்டில் தெளித்தால்... குடும்பம் செழிக்கும்; வம்சம் தழைக்கும் என்பது தூத்துக்குடி மக்களின் நம்பிக்கை.
முன்னோர்களுக்குத் திதி மற்றும் தர்ப்பணங்களைச் செய்து, அவர்களின் ஆசீர்வாதங்களையும் ஸ்ரீகாசிவிஸ்வ நாதரின் அருளையும் பெறுவதற்கு கோவில்பட்டி, விளாத்திகுளம், கழுகுமலை, விருதுநகர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து இங்கு பக்தர்கள் திரளாக வருகிறார்கள் எனப் பெருமிதத்துடன் சொல்கிறார், இந்தக் கோயிலின் கணபதி ராம பட்டர்.
வைப்பார் தலத்துக்கு வாருங்கள்! உங்கள் சந்ததியைச் செழிக்க வைப்பார் ஸ்ரீகாசிவிஸ்வநாதர்.

No comments:

Post a Comment