Thursday, 7 December 2017

சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்!

டல் பருமன், மாறுபட்ட வாழ்க்கை மற்றும் உணவு முறை மற்றும் மரபணு காரணங் களால் நம் தமிழகத்தில் சர்க்கரை நோயாளி களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே போவது கவலை தந்தாலும், அந்த நோயைத் தீர்க்கும் ஈஸ்வரனும் இங்கேதான் குடிகொண்டிருக்கிறான் என்பது இனிப்பான சேதி. அப்படி சர்க்கரை நோய் தீர அருள்பாலிக்கும் இறையனாரின் திருப்பெயர் என்ன தெரியுமா?
கரும்பே உருவான கரும்பேஸ்வரர்!

இந்த இறையனார் உறைந்திருக்கும் திருத்தலம், திருவெண்ணியூர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட கோயில்வெண்ணி. தஞ்சையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலை வில் உள்ளது கோயில்வெண்ணி. கரிகால் சோழப் பேரரசர் வெண்ணிப் போர் நடத்தி, எதிரிகளை வென்ற புகழுடைத்த ஊர் என்று சரித்திரத்திலும் பெரிதும் பேசப்படுகிறது இவ்வூர். புலவர் வெண்ணிக் குயத்தியார் பிறந்த ஊர் எனும் தகவல் மூலம் சங்க காலத்துடன் ஒப்பிட்டு இதன் தொன்மையை அறிய முடிகிறது. சுமார் 2,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம், கோயிலுக்கு எதிரே சூரிய புஷ்கரணி என்ற தீர்த்தம் (குளம்), கோயிலுக்கு வலதுபுறம் சந்திர புஷ்கரணி என்ற தீர்த்தம். இப்படி கோயிலுக்கு அருகே சூரிய, சந்திர தீர்த்தங்கள் அமைந்திருப்பதே வெகு சிறப்பாகக் கருதப்படுகின்றன.
மிகச் சிறிய கோயில்தான். ஆனால், உள்ளே நுழைந்ததும், அந்த அழகும் அமைதியும் பிரமாண்டமாகத் தெரிகின்றன. ராஜ கோபுரத்தைத் தாண்டியதும், பலிபீடமும் நந்ததேவரின் திருவுருவமும் இருக்கின்றன. ஒரே ஒரு பிராகாரம்தான். உள்ளே மகா மண்டபம். வலதுபுறம் விநாயகர். பிறகு, நர்த்தன கணபதி. கருவறையைச் சுற்றி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர்,  ஸ்ரீதுர்கை,  ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் காட்சி தருகின்றனர். கோயில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதால், கன்னிமூல விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணி யர், மகாலட்சுமி ஆகிய திருமூர்த்தங்கள் தற்காலிகமாக மகா மண்டபத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பிராகாரத் தில், பைரவர் சந்நிதியும் நவகிரகங்களும் அமைந்துள்ளன. ஈசான்ய மூலையில், இந்த ஆலயத்தின் தல விருட்சமான நந்தியாவர்த்தம் பசுமையாகக் காட்சி தருகிறது. 

சுவாமி சந்நிதியில், கருவறைக்கு வெளியே அனுக்ஞை விநாயகரும், உபநந்தியும் காட்சியளிக்கின்றனர். கருவறையில் கரும்பே உருவாய் காட்சி தருகிறார் மூலவர். ஆம்... ‘திருமேனி கரும்புக் கட்டுடைத்து’ என்று திருமூலர் பாடியுள்ளபடி, கரும்பேஸ்வரர் என்னும் பெயருக்கேற்றாற்போல், கரும்புக் கட்டுகளைச் சேர்த்து வைத்தாற்போன்ற பாண அமைப்பைக் கொண்டவர் இந்த மூலவர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த வடிவம் நமக்கு நன்றாகப் புலப்படுகிறது. பாணம் அமைந்திருக்கும் ஆவுடை, சதுர் அஸ்த்ர (நான்கு மூலைகளை உடைய சதுர) வடிவமுடையது. இதுபோன்ற திருவடிவம் அபூர்வமானது.
இறைவனின் குரல்!

சிவலிங்கத் திருமேனியின் வலது மேல்புறத் தில், சற்றே வெட்டுப்பட்டது போன்ற அடை யாளம் உள்ளது என்ற தகவல் நம் ஆர்வத்தைத் தூண்ட, அதற்கான காரணத்தைக் கோயில் அர்ச்சகர் பிரபாகர சிவாச்சார்யரிடம் கேட்டோம். 

‘‘திருவாரூரில் ஸ்ரீதியாகராஜ சுவாமியைப் பிரதிஷ்டை செய்த பெருமைக்குரிய முசுகுந்த சக்கரவர்த்தி, ஒருமுறை திருவாரூரில் இருந்து தஞ்சைக்குச் செல்லும்போது, வழியில் ஓரிடத்தில் இரு முனிவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். ஒரு முனிவர், ‘இந்த இடம் கரும்புக் காடாக இருப்பதால், இதன் தல விருட்சம் கரும்பு’ என்றும், மற்றொருவர், ‘இல்லையில்லை; இது நந்தியாவர்த்தம் நிறைந்த இடம். எனவே, நந்தியாவர்த்தம்தான் தல விருட்சம்’ என்றும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.     
இவர்களுடைய விவாதத்தைக் கேட்ட மன்னர், ‘இந்த இடத்தில் ஆலயமே இல்லையே... இவர்கள் இருவரும் தல விருட்சம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே!’ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். முனிவர்களின் பேச்சுக்கிடையில் குறுக்கிட்டால் சாபத்துக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தில், அமைதியுடன் அவர்களை நோக்கிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் திடீரென ஓர் அசரீரி ஒலித்தது. ‘கரும்புக் கட்டுகள் சேர்ந்த கரும்பின் சொரூபமாக நான் இங்கே இருக்கிறேன். இங்கே தல விருட்சம் நந்தியாவர்த்தம்!’ என்று இறைவனின் குரலே, உண்மையை ஓங்கி ஒலித்தது. 

உடனடியாக அந்த இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது, லிங்க பாணம் வெளிப்பட்டது. அப்படித் தோண்டும்போது மண்வெட்டியால் விழுந்த வெட்டுத் தழும்புதான் இப்போதும் அவருடைய திருமேனியில் காணப்படுகிறது. சிவலிங்கம் கிடைத்த இடத்தில் உடனே கோயில் கட்ட முடிவு செய்தார் சக்கரவர்த்தி. லிங்கம் இருந்த இடத்தில், அடியில் தோண்டத் தோண்ட அந்த பாணம் போய்க்கொண்டே இருந்ததாம். எனவே, சிறிது உயரமாகவே கட்டலாம் என நினைத்து, 20 அடி உயரத்தில் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார். சொல்லப்போனால், சூரிய புஷ்கரணியில் இருந்து லிங்கம் இருக்குமிடம் 40 அடி உயரம் இருக்கும். மொத்தம் 12 படிகளைத் தாண்டித்தான் சிவனைத் தரிசிக்க வேண்டும். ‘மாடக் கோயில்’ என்று கூட சொல்லலாம்’’ என்று விளக்கினார் சிவாசார்யர்.
வினைகள் நீக்கும் வெண்ணிக் கரும்பே...

முசுகுந்த சக்கரவர்த்தியின் காலம், 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனலாம். ஆனால், அதற்கு முன்னதாக எத்தனை வருடங்களாய் - யுகங்களாய் இந்தக் கரும்பேஸ்வரர் இங்கு மண்ணில் புதையுண்டு கிடந்தாரோ? ஆக, இந்த லிங்கமூர்த்தி எத்தனை காலம் பழைமையானவர் என்பதை கணிக்கவே முடியாது என்பதுதான் உண்மை.

முசுகுந்த சக்கரவர்த்திக்குப் பின்னர், மன்னர் கரிகால் பெருவளத்தான் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார்.  காவிரித் தென்கரையில் இது 102-வது தலம். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பதிகங்கள் இரண்டும், ஆக மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன. சம்பந்தர் தனது பதிகத்தில் (இரண்டாம் திருமுறை) திருவெண்ணியூர் இறைவனை வணங்குபவர்களின் வினைகள் நீங்கும் என்றும், துன்பங்கள் அவர்களை அணுகாது என்றும், இப்பதிகத்தைத் தொடர்ந்து ஓதுபவர்கள் மண்ணுலகினும் மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர் என்றும் பலவாறு குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசரும் தனது பதிகத்தில் இதனையே குறிப்பிடுகிறார். 5-ம் திருமுறையில் உள்ள அவரின் பதிகத்தில் இத்தல இறைவனை தலைதாழ்த்தி வணங்கு பவர்களின் வினைகள் யாவும் நீங்கும் என்று குறிப்பிடுகிறார். சுந்தரர் தனது க்ஷேத்திரக் கோவைப் பதிகத்தில் (7-ம் திருமுறை, 47-வது பதிகம், 5-வது பாடல்) இத்தல இறைவனை `வெண்ணிக் கரும்பே' என்று குறிப்பிட்டுள்ளார்.

‘‘இங்கே பிரார்த்தனை செய்து கொண்டால் சர்க்கரை நோய் தீருகிறது’' என்று கேள்விப்பட் டோமே...!’’ என்று நம்முடைய சந்தேகத்தை சிவாசார்யரிடம் கேட்டோம்.

‘‘ஆமாம். அது உண்மைதான். அமெரிக்காவில் மிக பிரபலமான, இதயநோய் நிபுணர் ஒருவர் சமீபத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமியைத் தரிசித்து வழிபட்டுச் சென்றார். அமெரிக்கா சென்றதும் வழக்கமான சுகர் டெஸ்டுக்குச் சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு வழக்கத்துக்கு மாறாகக் குறைஞ்சிருக்குன்னு ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்களாம். இப்போ ஆரோக்கியமா இருக்கார் அந்த அமெரிக்க டாக்டர். அவ்வளவு சக்தியானவர் இந்தக் கரும்பேஸ்வரர். சர்க்கரை அதிகமா இருக்கிறவங்க கும்பிட்டா, அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை அவர் எடுத்துக்கொள்கிறார் என்பது நம்பிக்கை’’ என்றார் சிவாச்சார்யர்.
சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை...

சித்தர்கள் பாடல்களில் இந்தக் கோயிலில் சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பாட்டி சித்தரும் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது  குறித்துப் பாடியுள்ளார். ‘ரசமணியோடு வெல்லம் கலந்து, கோயிலை வலம் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால், குருதியில் சர்க்கரை குறையும்’ என்று காகபுஜண்டர் பாடியுள்ளார். ஆனால், இன்றைய விலை வாசியில் ரசமணியை வாங்கிப் படைப்பது என்பது சாத்தியமல்ல. எனவே, மக்கள் தங்களால் இயன்றளவு ரவையை வாங்கி, வெல்லம் கலந்து, படைத்து வழிபடுகின்றனர். எறும்புகளுக்கு அது உணவாகிறது. இறைவன் அதை ஏற்று, சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பிக்கை. 

‘‘ரவையும் வெல்லமும் கலந்து இடுவது போல், அன்னதானத்துக்கு அரிசியும் வெல்லம் வாங்கிக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்’’ என்கிறார் பிரபாகர குருக்கள். கோயிலில் கருவறையைச் சுற்றி அகழி அமைப்பு உள்ளது. அந்தக் காலத்தில் இந்த அகழியில் தளும்பத் தளும்ப தண்ணீர் ஓடுமாம். மூலவர் கரும்பின் உருவமாக இருப்பதால், கைகளால் வேகமாகத் தேய்க்க முடியாத அமைப்பு என்பதால், அபிஷேகம் கூட ஒற்றி எடுப்பதுதானாம். இங்கே மூலவரையும் அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம். கிழக்கு நோக்கி கரும்பேஸ்வரரும் தெற்கு நோக்கி அம்பாளும் அருள்பாலிக்கிறார்கள். 

அம்பாள் சௌந்தரநாயகி, பெயருக்கேற்றபடி மிக அழகிய திருக்கோலத் துடன் காட்சி தருகிறாள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு, மழலைப் பேறு அருளும் மகா சக்தி படைத்தவள். குழந்தைக்காகப் பிரார்த் திக்கும் பக்தர்கள், வளையல்களை வாங்கி வந்து அம்பாள் சந்நிதியில் கட்டிவிடுகின்றனர். பெண்கள் வளையல் சார்த்தி வேண்டிக் கொண்டால் கண்டிப்பாகக் கருத்தரிப்பர் என்பது பலர் வாழ்வில் கண்ட உண்மை. இத் தலம் திருக்கருகாவூருக்கு மிக அண்மையில் உள்ளது. இங்கே அம்பாளை வேண்டி கருவுறும் பெண்கள், திருக்கருகாவூரில் கருவைக் கருகாமல் காப்பாற்றிக் குழந்தை நல்லபடியாகப் பிறக்கப் பிரார்த்திக் கொள்கின்றனர். கொடுப்பது அழகிய நாயகி; காப்பது கர்ப்பரட்சாம்பிகை! என்னே அவள் அன்பு, கருணை!

வெண்ணியூரின் சிறப்பு 

ஸ்ரீசுப்பிரமணியர் - தேவசேனா திருமணத்தின்போது, 12 நகரங்களைச் சேர்ந்த மன்னர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். அவர்களில் ஒருவர் வெண்ணி நகர மன்னர் என்று புராணம் கூறுகிறது. 

பிரசித்தி பெற்ற வெண்ணிப் போர் குறித்து நாம் சரித்திரத்தில் படித்திருக்கிறோம். கரிகால் சோழன், பாண்டியர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி வாகை சூடிய இடம் என சங்க இலக்கியத்தில் கூறப்படும் ‘வெண்ணிப் பரந்தலை’ இதுதான். எனவேதான், இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்துள்ளார். போர் முடிந்த பிறகு, கோயில்வெண்ணிக்கு அருகே இரண்டு ஆறுகள் சந்திக்கும் இடத்தில், தான் போரில் பயன்படுத்திய வாளை நீராட்டினார். அந்த இடம் ‘நீராட்டு மங்கலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்பு மருவி ‘நீடாமங்கலம்’ ஆனதாகக் கூறப்படுகிறது.

எப்படி செல்வது?

தஞ்சையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது கோயில் வெண்ணி. தஞ்சையிலிருந்து சாலியமங்கலம் வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில், கோயில் வெண்ணி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கோயிலுக்குச் செல்லலாம்.

No comments:

Post a Comment