ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம். பனி மற்றும் கோடைக் காலத்துக்கு ஏற்ப, தண்ணீரின் அளவை சிறிது குறைத்தோ, அதிகரித்தோ அருந்தலாம். ஒரு லிட்டருக்கும் குறைவாக, தண்ணீர் குடிப்பது நல்லது அல்ல. அதுபோல 5-8 லிட்டர் என அதிகம் குடிப்பதையும் தவிர்க்கலாம்.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தால், உடனடியாகக் கழித்துவிட வேண்டும். அடக்கிவைப்பது தவறு. சிறுநீர் கழித்தவுடன், சுத்தம் காப்பது நல்லது. இதனால் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
வலி நிவாரணி மாத்திரைகளை, மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். எதையும் தொடர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. மாத்திரைகளைச் சாப்பிடும் முன், அதன் அட்டையில் உள்ள தயாரிப்புத் தேதி மற்றும் காலாவதி தேதியை சரிபார்க்கும் பழக்கம் அவசியம்.
ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது, உடற்பயிற்சி செய்வது சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்.
சிறுநீரகத்தில் கல் பிரச்னை இருப்போர், மூளை, மண்ணீரல், ஈரல் போன்ற தனித் தனி உறுப்புகளை (Organ meat) மட்டும் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளலாம்.
சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி என எந்த மாற்று சிகிச்சைக்கு மாறினாலும், அந்த மருத்துவர் கொடுக்கும் மருந்துகள், அரசாங்கத்தின் ஆணைப்படி தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
கொழுப்பு நிறைந்த வெண்ணெய், இறைச்சி, எண்ணெய் சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சோடியம், உப்பு, ஊறுகாய், கருவாடு, பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆயத்த உணவுகள் (Ready to eat) போன்றவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
சரிவிகித உணவும், திரவம் சார்ந்த உணவுகளும் சிறுநீரகத்துக்கு நல்லது. இளநீர், நீர் மோர், பதநீர், நீர் ஆகாரம், கஞ்சி, கூழ் போன்ற இயற்கை முறையில் கிடைக்கும் உணவுகள், சிறுநீரகத்தைக் கவசமாய்காக்கும்.
புகைப் பழக்கம், மதுப்பழக்கம், துரித உணவுகளைச் சாப்பிடும் பழக்கம் ஆகியவை சிறுநீரகத்தைப் பாதிக்கும் செயல்கள் என்பதால், இவற்றை உடனடியாக நிறுத்துவதே சிறந்த வழி.
உங்கள் குடும்பத்தினர் யாருக்கேனும் சிறுநீரகப் பாதிப்பு இருந்து, சிகிச்சை பெற்றிருந்தால், உங்களுக்கும் வர வாய்ப்புகள் இருக்கிறது. எடை மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment