தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பரக்கலக்கோட்டை. இங்கு பொது ஆவுடையார் கோவில் இருக்கிறது. இத்தல இறைவன் ‘பொது ஆவுடையார்’ என்றும், ‘மத்தியபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் அம்மனுக்கு சன்னிதி கிடையாது.
முன் காலத்தில் வான் கோபர், மகா கோபர் என இரண்டு முனிவர்கள் இருந்தனர். அவர்களுக்கு ‘இல்லறம் சிறந்ததா? அல்லது துறவம் சிறந்ததா?’ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு சொல்லும்படி சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவரோ, தற்போது பொது ஆவுடையார் ஆலயம் இருக்கும் இடத்தில் காத்திருக்கும் படியும், அங்கு வந்து தீர்ப்பு கூறுவதாகவும் சொல்லி அனுப்பினார்.
அதன்படி இரண்டு முனிவர்களும் இத்தலம் வந்து புளியமரம் ஒன்றின் கீழ் அமர்ந்தனர்.
முனிவர்களுக்கு திங்கட்கிழமை நள்ளிரவு வேளையில் காட்சி தந்ததால், இந்த ஆலயமும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நள்ளிரவில் மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பகலில் நடைதிறக்கப்படுவதில்லை. திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடைபெறும். அப்போது திரையிட்டு இருப்பதால் இறைவனை தரிசிக்க இயலாது. 11.30 மணி அளவில் மீண்டும் நடை அடைக்கப்பட்டு, நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், ஈசனின் தீர்ப்பைப் பெற்ற இரண்டு முனிவர்களின் சன்னிதிகளில் பூஜை செய்யப்படும். அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் மீண்டும் சுவாமி சன்னிதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடைசாத்தப்பட்டு விடும்.
பகல் நேரத்தில் கோவில் நடை திறக்கப் படுவதில்லை. அந்த நேரங்களில் சுவாமி சன்னிதியின் கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னிதி கதவையே, இறைவனாக நினைத்து மாலைகள் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். பின்னர் பிரகாரத்தில் இருந்தபடி ஆலமரத்தை தரிசித்து விட்டு செல்கின்றனர்.
இத்தலத்தில் இறைவன் வெள்ளால மரத்தின் வடிவில் காட்சி தருகிறார். இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோவில் நடை திறக்கப்படும் போது, வெள்ளால மரத்தின் முன் பக்கத்தின் ஒரு பகுதியில் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்கரிக்கிறார்கள். மூலஸ்தானத்திற்குள் ஆல மரத்திற்கு முன் பாக சிவபெருமானின் பாதம் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளது.
திருமண வரம், புத்திர பாக்கியம் வேண்டும் பக்தர்கள், ஆலயத்தில் உள்ள மரத்திற்கு தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.
மற்ற ஆலயங்களில் நடை அடைக்கப்படும் நேரத்தில் இந்த ஆலயம் திறக்கப்பட்டு நள்ளிரவு வழிபாடு நடத்தப்படுகிறது. பின்னர் சூரிய உதயத்திற்கு முன்பாக நடை அடைக்கப்படும். தமிழர்கள் திருநாளான பொங்கல் அன்று மட்டும் அதிகாலையில் நடை திறக்கப்படும். அன்று இத்தல இறைவனின் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பம்சமாகும்.
குரு தலம் :
சிவபெருமானின் வடிவங்களில் ஒன்று தட்சிணாமூர்த்தி. இவர் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் இறைவனே மரத்தின் வடிவில் காட்சி தருகிறார். எனவே இத்தலம் குரு வழிபாட்டுத் தலமாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் சிவனாக கருதப்படும் அலமரத்தின் இலையே, பிரதான பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இலையைப் பெற்று, வீட்டில் கொண்டு போய் வைத்தால் ஐஸ்வரியம் பெருகும். விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
காணிக்கை :
இந்த ஆலயத்தில் வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பம் காணிக்கையாக செலுத்தும் வித்தியாசமான நேர்த்திக்கடன் உள்ளது. பெண்கள் தங்களின் கூந்தல் வளர்ச்சி காண்பதற்காக இந்தக் காணிக்கையை செலுத்துகின்றனர். தென்னங்கீற்றில் இருந்து குச்சிகளை, தங்களது கையால் கீறி எடுத்து துடைப்பமாக செய்து, அதனையே ஆலயத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இவ்வாறு செய்வதால் தென்னங்கீற்று போலவே கூந்தல் வளரும் என்பது நம்பிக்கை. காணிக்கை செலுத்தப்பட்ட துடைப்பங்கள் மலைபோல் இந்த ஆலயத்தில் குவிந்து கிடக்கின்றன.
No comments:
Post a Comment