Thursday 7 December 2017

திருமண வரம் அருளும் திருவேடகம்

‘ஏடகம் கண்டு கை தொழுதலும் கவலை நோய் கழலுமே’ என்று திருஞானசம்பந்தப் பெருமானால் போற்றிப் பாடப்பெற்றதும், சமணர்களிடமிருந்து சைவத்தை மீட்டெடுத்த புகழுடைத்ததுமாகிய திருத்தலம், மதுரை மாவட்டத்தில் உள்ள திருவேடகம். தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத்தலங்களில் நான்காவது தலமாகவும், திருப்புகழ் வைப்புத் தலமாகவும் விளங்குகிறது. வைகை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் திருவேடகம், பல்வேறு சிறப்புகளைக்கொண்ட சிறந்த சிவஸ்தலம் ஆகும்.
பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கவும் சமணம் வீழ்ச்சியுறவும் காரணமாயிருந்த தலம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது திருவேடகம். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புகொண்ட தலம் இது. இங்கே அமைந்திருக்கும் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் திருக்கோயில், சுற்றிலும் சோலைகளும் வயல்களும் தென்னந்தோப்புகளும் நிறைந்து இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அவ்வகையில், கண்களுக்கும் மனதுக்கும் ஆத்மாவுக்கும் ஒருசேர இன்பம் அளிக்கும் சிற்றூர்தான் திருவேடகம் (திரு+ஏடு+அகம்).
ஏடெடுத்த விநாயகர்

சமணத்தின் பிடியில் பாண்டிய நாடு சிக்கியிருந்த சமயம் அதை மீட்டு, சைவத்தைத் தழைக்கச் செய்த சம்பந்தர் வைகை ஆற்றில் விட்ட ஏட்டினை திருவேடகத்தில் தடுத்து நிறுத்தி, கரைசேர்க்கக் காரணமாக இருந்தவர் விநாயகப் பெருமான். ஆற்று நீரை எதிர்த்து வந்த ஏட்டை நான்கு மீன்களாக மாறி, ஏட்டின் மூலைகளில் பாதுகாப்பாக நின்று கரைக்குக்கொண்டு வந்து சேர்த்தவர் முந்தி முதல் கடவுள் பிள்ளையாரப்பன் தான். பின்னர் அந்த ஏட்டை தன் துதிக்கையில் தாங்கிக் கரையிலேயே அமர்ந்துவிட்டார். கோயிலுக்கு வெளியே தனிக்கோயிலில் இருக்கும் இவரை, ‘வாதில் வென்ற விநாயகர்’ என்று அழைக்கின்றனர்.

கோயிலின் அமைப்பு

கோயிலின் தலைவாயிலில் இருப்பது முற்றுப்பெறாத மொட்டைக் கோபுரம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே விஜய நகரப் பேரரசர்களால் தொடங்கப்பெற்ற கோபுரப் பணி, பின்னர் கன்னடியர் மற்றும் முகமதியருடன் நிகழ்ந்த இடையறாத போரினால் முற்றுப்பெறாமலேயே நின்று போய்விட்டது. 

சுவாமிக்கும் அம்பாளுக்கும் இங்கே தனித்தனிக் கோயில், தனித்தனி வாயில். இரு வாயில்களுக்கும் ஐந்து நிலைகொண்ட இரு ராஜகோபுரங்கள். மொட்டைக் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கம்பத்தடி மண்டபம். இங்கே கொடிமரமும் நந்தியும் காட்சி தருகின்றன. கொடிமரம் இருந்தாலும் இக்கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சித்திரை முதல் நாளில் மட்டும் கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது.
சந்நிதியின் நுழைவாயிலில் இருபக்கங்களிலும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்க, உள்ளே லிங்க வடிவில் காட்சி தருகிறார் ‘பத்ரிகா பரமேஸ்வரர்’ என்றழைக்கப்படும் திரு ஏடக நாதர். சற்றே சாய்ந்த நிலையில் இருக்கும் லிங்கத் திருமேனி, நாயன்மார்களாலும் பல்வேறு தேவர்கள் முனிவர்களாலும் வழிபடப்பெற்ற அற்புத மூர்த்தி. அவர் சந்நிதியைச் சுற்றிலும் அனைத்து சிவாலயங்களிலும் இருப்பதுபோல ஆகம விதிப்படி, நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, பாலகணபதி, ஆறுமுகக் கடவுள், சப்தமாதர்கள், இரட்டை விநாயகர், சுப்ரமணியர், துர்கை, சண்டிகேசுவரர் என அனைத்து தெய்வங்களும் வீற்றிருக்கும் காட்சியைக் காண்கிறோம். பின்னும் வலம் வரும்போது, நவகிரகங்கள் உள்ளிட்ட பல தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன. இங்கே அமைந்துள்ள வாராஹி அம்மன் மிகவும் பிரபலமானது.

சுவாமியின் கருவறைக்கு இணையாக இடப்பக்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஏலவார்குழலி அம்மன் கோயில். இந்த அம்பாளுக்கு ‘சுகந்த குந்தலாம்பாள்’ என்ற பெயரும் உண்டு. அம்மன் சந்நிதியை வலம்வரும்போது, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியோரைக் காண முடிகிறது.

அண்மையில்தான் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருப் பதால் புதுப்பொலிவுடன் திகழ்கிறது, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேல் பழைமையான இத்திருக்கோயில். ஆதிகாலம் தொட்டே தேவகோட்டை நகரத்தாரால் சிறப்பாகப் பராமரிக்கப்படும் இந்த ஆலயத்தின் திருப்பணிச் செலவுக்கு அரசிடமிருந்தோ, பொது மக்களிடமிருந்தோ நிதி உதவியை எதிர்பாராமல் அறங்காவலர் குழுவே ஏற்று நடத்தியுள்ளது. கோயிலின் நந்தவனமும் பசு மடமும் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஏடு தங்கிய ஏடகம்

கி.பி ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய தேசத்தை கூன்பாண்டியன் என்றழைக்கப்பட்ட அரிகேசரி நெடுமாறன் ஆட்சிசெய்து வந்தார். அவர் சமணம் சார்ந்திருந்ததால் பாண்டிய நாட்டில் சைவ நெறி சோம்பித் தளர்ந்தது. இதனால் வருந்திய அவரின் மனைவியான மங்கையற்கரசியார் பெரிது வருந்தினார். 

இந்த நிலையில், திருஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்விப்பட்டு அரசியார் தங்கள் நாட்டில் சைவ ஒளியைப் பரவச் செய்து, மன்னனையும் மக்களையும் காக்குமாறு அவரிடம் சில அடியவர்களை அனுப்பி வேண்டினார். அரசியாரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி மதுரைக்கு விஜயம் செய்தார் திருஞானசம்பந்தர். ஞானசம்பந்தர் வந்ததைக் கண்டு அச்சமுற்ற சமணர்கள், அவர் தங்கியிருந்த திருமடத்துக்குத் தீயிட்டனர். இச்செயலை அறிந்த சம்பந்தர் இறைவனைத் துதிக்க, திருமடத்தில் வைத்த தீ வெப்பு நோயாக மாறி, பாண்டிய மன்னரைத் தாக்கியது. 

அவரது நோயைத் தீர்ப்பதற்கான முயற்சியில் சமணர்கள் தோல்வியுற, ஞானசம்பந்தரும் ‘மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்றுப் பதிகத்தைப் பாடி, தமது திருக்கரத்தால் மன்னருக்குத் திருநீறு பூச, அவருடைய வெப்பு நோய் முற்றிலுமாக நீங்கியது. தொடர்ந்து, ‘சைவம் உயர்ந்ததா, சமணம் உயர்ந்ததா?' என்று போட்டி ஏற்பட, திருஞான சம்பந்தரை அனல் வாதம், புனல் வாதத்துக்கு இழுத்தனர் சமணர்கள். அனல் வாதத்தின்போது, ‘போகமார்த்த பூண்முலை’ என்னும் திருநள்ளாற்றுப் பதிக ஏட்டை சம்பந்தர் நெருப்பில் இட, அது வேகாமல் அப்படியே பளிச்சென்றிருந்தது. ஆனால், சமணர்களின் ஏடு எரிந்து சாம்பலானது.
புனல் வாதத்துக்கு,

‘வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!’


என்று எழுதப்பட்ட திருப்பாசுர ஏட்டை வைகை ஆற்றில் விட்டார் சம்பந்தர் பெருமான். சமணர்கள் இட்ட ஏடு ஆற்றோடு போக, சம்பந்தரின் ஏடு மதுரையிலிருந்து வைகை நீரை எதிர்த்து நீந்திக்கொண்டே சென்று, வில்வ மரங்கள் அடர்ந்து சூழ்ந்த இடத்தில் கரையேறியது. ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு லிங்கமும் கிடந்தது. மன்னரும் மக்களும் மகிழ்வெய்தினர். அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஒரு கோயில் கட்டினார் மன்னர்.
ஏடு தங்கிய அந்த இடமே ‘ஏடகம்’ எனப் பெயர் பெற்றது. அந்த ஏட்டில், ‘வேந்தனும் ஓங்குக’ என்று அருளியதால், அரசனுடைய கூனும் நிமிர்ந்தது. மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்தின் நினைவாக, இங்கே ஆண்டுதோறும் ஆவணி பௌர்ணமி தினத்தில் ‘ஏடு எதிரேறிய திருவிழா’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தலத்தின் பெருமையும் சிறப்புகளும்
திருவேடகத்தில் வைகை நதி தெற்கிலிருந்து வடக்காக ஓடுகிறது. காசியில் கங்கை நதி இவ்வாறு ஓடுவதால், காசிக்கு நிகரான பெருமை கொண்டதாகக் கூறப்படுகிறது. ஏடகப் பெருமானை மனதில் இருத்தி, உள்ளன்போடு தியானித்து வழிபாடு செய்பவர்கள் தங்கள் ஆயுள் முழுவதும் காசியில் வாழ்ந்த புண்ணியத்தை அடைவார்களாம். 

*  இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் திரு ஏடகப் பெருமானை பிரம்மதேவரும் பராசர், வியாசர் ஆகிய ரிஷிகளும் மற்றும் பலரும் வழிபட்டு வரம் பல பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது. 

*  இங்கே பிரம்மன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் மற்றும் கோயில் முன்பு ஓடும் வைகை நதி ஆகிய இரண்டும் தீர்த்தங்களாக இருக்கின்றன. பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, ஏடகநாதனை வழிபாடு செய்தவர்களுக்குச் சித்தபிரமை நீங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்போது தண்ணீரில்லாமல் காய்ந்து போய்க் கிடக்கிறது. 

*  திருஞானசம்பந்தருக்குத் தனிக்கோயில் உள்ளது. 

*  கோயில் மதில் சுவர்களில் உள்ள பழங்காலக் கல்வெட்டுகள், தொல்பொருள் துறையினரால் படியெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன.

*  திருமணம் கூடிவராத ஆண்கள், பெண்கள் இக்கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, அம்பாளுக்கு அணிவித்த பூமாலையைப் பெற்று, தன் கழுத்தில் அணிந்துகொண்டு கோயிலை வலம்வந்து வேண்டிக்கொள்ள வேண்டும். பின்னர், அந்த மாலையை வீட்டுக்கு எடுத்துச்சென்று, சுவாமி அறையில் அல்லது மாடத்தில் வைத்து 41 நாள்கள் கும்பிட வேண்டும். இவ்வாறு செய்து வரும்போதே திருமணம் கூடிவிடும் என்பது இன்றும் நாம் காணக்கூடிய நிகழ்வு. 

*  ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் இந்த ஆலயத்துக்கு வந்து, வழிபாடு செய்து நம்பிக்கையோடு சிவனைத் தியானித்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பல பக்தர்கள் வாழ்வில் கண்ட அனுபவ உண்மை.

*  இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சண்முகப்பெருமானைக் கிருத்திகை தினத்தில் அர்ச்சனை, ஆராதனை செய்து வணங்கினால் புத்திரப்பேறு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

புரட்டாசியில் வரும் நவராத்திரி உற்சவம் தவிர, மற்ற எல்லா விழாக்களுமே இங்கு ஒருநாள் மட்டுமே நடக்கும் என்பது வேறெங்கும் இல்லாத இத்தலத்தில் மட்டுமே உள்ள சிறப்பு. அந்த ஒருநாள் விழாக்களில் பஞ்சமூர்த்திகள் வைகை ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தவாரியும் பின்னர் அவர்களின் திருவுலாக் காட்சியும் நடைபெறும் என்பது மற்றொரு சிறப்பு.

வைகைக் கரையோரம் வீற்றிருந்து, ஏடுகளைக் கரையேறச் செய்து மதத்தைக் காத்த ஏடகநாதரிடம் பக்தியோடும் நம்பிக்கையோடும் செய்யப்படும் ஒவ்வொரு பிரார்த்தனையும் நிறைவேற்றப்படும்!

பக்தர்களுக்குச் செவி சாய்க்கும் விநாயகர்!

இந்த ஆலயத்தில் உள்ள தூண்களில் ஒன்றில், மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்த நிலையில் வித்தியாசமான விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. மக்களின் மனக்குறைகளையும் வேண்டுதல்களையும் கேட்கும் வண்ணம் காதினை மக்களுக்குக் காட்டி அமர்ந்திருக்கும் இவர், ‘செவி சாய்த்த விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.

வயிற்றுவலி தீர்க்கும் சித்தர் அதிஷ்டானம்!

இந்தத் திருத்தலத்தில் அமைந்திருக்கும் சட்டைநாத சித்தரின் அதிஷ்டானம், மிகுந்த நல்ல அதிர்வலைகள் கொண்ட சந்நிதி. சட்டைநாத சித்தர் திருவேடகத்துக்கு வந்த சமயம், அவருடன் தங்கியிருந்த சாதுக்கள் வயிற்றுவலியால் வாடியபோது, நீராகாரத்தில் திருநீற்றைப் போட்டு அருந்தச்செய்து அந்நோயினைத் தீர்த்தார் என்பது வரலாறு. 

இப்போதும் வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் நீராகாரத்தைக் கொண்டுவந்து, சித்தர் அதிஷ்டானத்தின் மேலுள்ள சிவலிங்கத்தின் முன்வைத்து, சித்தரை நினைத்து வணங்கி, திருநீறிட்டு அருந்தினால் வயிற்றுவலி தீருமென்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. ஆடி அமாவாசையன்று சித்தருக்குக் குரு பூஜை நடக்கிறது.

No comments:

Post a Comment