முருகனின் திருத்தலங்கள் பல தனித்தனிக் காரணங்களுக்காக சிறப்பு பெற்று விளங்குகின்றன.
சுவாமிமலை - முருகன் பிரணவம் உபதேசித்த தலம். திருச்செந்தூர் - சூர வதம் நடந்த தலம். முருகன் கோபம் கொண்டு குடியேறிய தலம் பழனி. முருகன் சக்திவேல் பெற்ற திருத்தலம் சிக்கல்.
இந்த வரிசையில் முருகன் தொட்டிலில் வளர்ந்த தலமாக போற்றப்படுகிறது விளத்தொட்டி என்ற தலம்.
விளத்தொட்டி ஊரின் நடுவே அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். கிழக்கு திசை நோக்கி அமைந்த இந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் பிரம்மபுரீஸ்வரர். இறைவனின் திருநாமம் இட்சுரச நாயகி என்பதாகும். இந்த ஆலயம் தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.
பல நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமை கொண்ட இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், பலிபீடம் உள்ளது. அடுத்து தனி மண்டபத்தில் நந்தி உள்ளது. நந்தியைக் கடந்தால் சிறப்பு மண்டபம் இருக்கிறது. அதற்கு அடுத்தாற்போல் உள்ள மகாமண்டபத்திற்கு செல்லும் வாசலின் இடதுபுறம் தலவிருட்சமான வில்வ மரமும், பிரம்மா பூஜித்த லிங்கமும் உள்ளது. அதன் அருகில் பிள்ளையார் திருமேனி இருக்கிறது.
மகாமண்டபத்தின் இடதுபுறம் வேணுகோபால் பெருமாள், ருக்மணி, சத்யபாமா, கருடாழ்வார் ஆகியோர் அருள்பாலிக்கும் தனிச் சன்னிதி உள்ளது. வலதுபுறம் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக் கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தி, கிழக்கு புறம் லிங்கோத்பவர், வடக்கே துர்க்கை, பிரம்மா ஆகியோர் வீற்றிருக்கின்றனர். உட்பிரகாரத்தில் மேற்கு திசையில் நிருதி விநாயகர், பாலசுப்ரமணியன், வள்ளி, தெய்வானை,கஜலட்சுமி மற்றும் மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித் தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
கிழக்கு பிரகாரத்தில் சனீஸ்வரன், சூரியன், பைரவர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் அம்மன் இட்சுரச நாயகி தனிக் கோவில் கொண்டு கிழக்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் முன் பலி பீடமும், நந்தியும் அழகுற அமைந்துள்ளன.
பிரம்மா படைப்புத் தொழில் வேண்டி, சிவபெருமானை வில்வமரத்தடியில் அமர்ந்து பூஜித்த தலம் இது. இந்த சம்பவத்தை கூறும் கல் சிற்பம் இங்கு உள்ளது. ஒரே ஆலயத்தில் சிவபெருமானையும், பெருமாளையும் வழிபடக்கூடிய பெருமை இந்த ஆலயத்திற்கு உண்டு.
சிவாலயமாக இந்த ஆலயம் திகழ்ந்தாலும் முருகனே இந்த ஆலயத்தில் பிரதானம். முருகப்பெருமான் குழந்தையாய் தொட்டிலில் வளர்ந்த தலம் இது. எனவே வளர் தொட்டில் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், காலப் போக்கில் மருவி விளத்தொட்டி என மாறியுள்ளது.
முருகப்பெருமான் தொட்டிலில் வளர்ந்ததால், இவ்வூர் மக்கள் தங்கள் வீட்டு குழந்தை களை பிறந்து 10 நாட்கள் வரை தொட்டிலில் போடுவதில்லை தூளியில் போட்டுதான் தாலாட்டுகின்றனர்.
‘தொட்டில் முருகன்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் இத்தல முருகப்பெருமான் இவ்வூர் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு குழந்தை மட்டுமல்ல காவல் தெய்வமும் கூட.
நாகை மாவட்டம் பந்தநல்லூருக்கும், மணல்மேட்டிற்கும் இடையே உள்ளது திருச்சிற்றம்பலம் என்ற தலம். இங்கிருந்து இரண்டு கி.மீ. மேற்கே சென்றால் விளத்தொட்டி திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை, மணல்மேடு, பந்தநல்லூர், திருப்பனந்தாள், கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சிற்றம்பலம் வர நிறைய பஸ் வசதி உள்ளது. இங்கிருந்து விளத்தொட்டி செல்ல மினி பஸ் வசதி இருக்கிறது.
No comments:
Post a Comment