Monday 4 July 2016

சுக்கிரன் தலம் கஞ்சனூர் !!

சுக்கிரன் தலம் கஞ்சனூர் :

கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் சுக்ராச்சாரியாரின் தோஷம் நீங்கிய இடம்.
கஞ்சனூர்  அக்னீஸ்வரர் திருக்கோவில் நவக்கிரக கோவில்களில் இது சுக்ரனுக்கு உரிய தலம் ஆகும்.
சுக்கிர பகவான் வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. சுக்கிர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவில் 2000 வருடம் தொன்மை வாய்ந்தது.

சுவாமி : அருள்மிகு அக்னீசுவரர்.
அம்பாள் : அருள்மிகு கற்பகாம்பாள்.
மூர்த்தி : அக்னீசுவரர்.
தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்.
தலவிருட்சம் : பலாசம்.
தேவாரப் பாடல் பெற்ற காவேரி வடகரைத் தலங்களில் இது 36வது தலம். கோவிலின் கோபுரம் 5 நிலையுடன் அம்சமாக உள்ளது.


சுக்ராச்சாரியார் பிரம்ம தேவரின் மானஸபுத்திரராகிய பிருகு முனிவரின் புத்திரர். இவரது அன்னையின் பெயர் பிலோமிசை. இவர் சிறந்த சிவ பக்தர். சிவனை  வேண்டி தவம் இருந்து, இறந்தவர்களையும் பிழைக்க வைக்கும் சஞ்சீவி மந்திரத்தை வரமாகப் பெற்றவர். இவர் வெண்மை நிறம் கொண்டவர். வெண்தாமரையில் வீற்றிருப்பவர். முதலையை தன் வாகனமாக கொண்டவர். அசுரர்களின் குருவாக இருந்தவர்.சுக்ராச்சாரியார் தன்னை நாடி எவர் வந்தாலும், அவர்களுக்கு உரிய கஷ்டங்களை நீக்கிடுவார். மஹாபலி அரசனுக்காக தன் கண்ணையே இழந்தவர்.ஒருமுறை விஷ்ணுவுக்கு சுக்ராச்சாரியாரால் சுக்ர தோஷம் வந்தது. இந்த தோஷம் நீங்க இந்த தலம் வந்து, ஹரதத்தர் என்ற பெயரில் சிவபெருமானிடம் வேண்டி தோஷம் நீங்க பெற்றார். இது புராண வரலாறு. ஹரதத்தர் இங்கு பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்தி சிவாச்சாரியார் ஆக திகழ்ந்தார்.
சுக்ரபகவான் ரிஷப, துலா ராசிக்கு அதிபதி. மற்றும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு உரியவர். சுக்கிர திசை 20 ஆண்டுகள் நடைபெறும். சுக்கிரன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்க ஒரு மாதம் ஆகிறது. இவருக்கு நண்பர்கள் சனியும் புதனும். எதிரிகளாக சூரியனும் சந்திரனும் ஆக கணிக்கப்பட்டுள்ளது. சமநிலையில் செவ்வாயும் குருவும் இருக்கின்றனர்.
எனவே ஜாதகத்தில் இந்த சஞ்சாரத்தின் படி அவரவர்களின் நிலைப்பாடு இருக்கும். சுக்கிரனை வழிபட சுகம் பல கிடைக்கும். தன்னை நம்பியவர்களுக்கு அள்ளி தரும் அண்ணல் என்கின்றனர். உடல் பிணி, சித்தபிரமை, நீங்கி, செல்வம் செழிக்க அருள் பாலிப்பார்.
சிவமே பரமேஸ்வரன்
இது வைணவ தலம் ஆனாலும் சிவனுடைய திருக்கோவிலாக உள்ளது. இதற்கு இங்கு நடைபெற்ற சம்பவங்கள் உண்மையாக்குகிறது.
இந்த ஊரில் வாசுதேவர் என்று ஒரு வைணவர். அவருக்கு ஒரே மைந்தன் சுதர்சனர். அவர் சிறு வயதில் இருந்தே சிவபெருமானை வழிபட்டு சிவநாமத்தையே சொல்லி வர அனைவருக்கும் கோபம் உண்டாயிற்று. அவ்வூர் மக்கள் அனைவரும் இவர் இப்படி இருப்பதில் வெறுப்புற்று, அவரிடம், ‘‘உன் சிவபெருமான் சக்தி படைத்தவர் என்றால், உன்னை பழுக்க காய்ச்சிய இரும்பு இருக்கையில் உட்கார்த்தினால் காப்பாற்றுவாரா’’ என்றனர்.
அதற்கு ஒப்புக்கொண்டு அனலாய் கொதித்த இரும்பு இருக்கையில் அமர்ந்து நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி அனைவருக்கும் சிவபெருமானின் மகிமையை உணர்த்தினார். சிவமே பரம்பொருள் என்று கூறிய அந்த காட்சி இந்த தலத்தில் உள்ள பெருமாள் கோவிலிலும், அக்னீஸ்வரர் கோவில் நடராஜர் சன்னிதியிலும் இருப்பதைக் காணலாம். சுதர்சனருக்கு சிவதீட்சை செய்த தட்சணாமூர்த்தி இவருக்கு ஹரதத்தர் என்ற நாமம் சூட்டினார்.


அந்த ஊரில் இருந்த ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அவருக்கு ஒவ்வொரு இரவிலும் கனவில் சிவபெருமான் காட்சி தருவார். ஒரு நாள் கனவில் ஈஸ்வரன் வரவில்லை. காரணம் வேண்டி அலைந்து பின்னர் ஹரதத்தரிடம் சிவபெருமான் கஞ்சி வாங்கி உண்டதால் வயிறு நிரம்பியதால் வரவில்லை என்று தெரிந்து கொண்டார். ஹரதத்தரின் பெருமையை உணர்ந்து கொண்டார். அவருடைய அடியாராகவே மாறிவிட்டார்.
கல்நந்தி புல்லை சாப்பிட்டது
இங்கு இருந்த ஒரு பிராமணர் ஒருநாள் புல்லுக்கட்டு எடுத்துவந்த பொழுது அது தவறி பசுவின் கன்றின் மீது விழுந்து கன்று இறந்துவிட்டது. அவருக்கு இதனால் பசு தோஷம் வந்ததென கூறினர். அவர் ஹரதத்தரிடம் அவரது தோஷத்தை நீக்க வேண்டினார். அவர் சிவ பஞ்சாட்சரம் கூறி உமது தோஷம் நீங்கிவிட்டது என்றார். ஆனால் ஊரார் ஒப்பவில்லை. ஹரதத்தர் அவரிடம் ஒரு கை புல்லை எடுத்து வரச்சொல்லி அதை கோவிலில் உள்ள கல் நந்தி முன்பு நீட்டச்சொல்ல, கல் நந்தியும் அந்த புல்லை சாப்பிட அனைவரும் வியந்தனர். கல்நந்தி புல் உண்டால், பஞ்சாட்சரம் பாவம் தீர்க்கும் என்று உணர்த்தினார்.
ஹரதத்தரின் இந்த வரலாறை விளக்கவே இவருக்கு இந்ததலத்தில் தனி சன்னிதி உண்டு.
மேலும் சுவாமி சன்னதி செல்லும் வழியில் சுரைக்காய் பகதர் என்னும் அன்பர் தன் மனைவியுடன் காட்சி தருகிறார். இவர் சுரைக்காய் விற்று பிழைத்து வந்தார். மிகவும் ஏழை. சிவபக்தர். ஒருநாள் அனைத்து சுரைக்காய்களும் விற்ற பின்பு ஒரே ஒரு சுரைக்காய் மட்டும் மீதி இருந்தது. அவரும் இதை விதைக்காய்க்கு இருக்கட்டும் என்று குடிசைக்கு திரும்பிவிட்டார்.அவரின் குடிசைக்கு அதிதியாக ஈஸ்வரன் வந்து உணவு கேட்க, சுரைக்காய் அதிதிக்கு அளிக்க முடியாதே என்று கவலை கொண்டார். அப்பொழுது அசரீரியாக “ஒரு பாதி கறிக்கு ஒரு பாதி விதைக்கு” ஒரு குரல் வந்தது. அதன் பின்பு ஈஸ்வரனின் திருவிளையாடல் தெரிந்து அவருக்கு உணவு அளித்து பக்தியால் முக்தி பெற்றனர்.
சந்திரனுக்கு சாபம் நீக்கியது, அக்னிக்கு உண்டான சோகை நோயைத் தீர்த்தது, பராசரருக்கு சித்தபிரமை தீர்த்தது ஆகிய பெருமைகளை உடையது. தல விருட்சம் பலா. கோவிலின் தீர்த்தக்குளம் அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம் என்ற இரண்டு குளங்கள் உள்ளன. இங்கு சிவபெருமான் உயர்ந்த பாணத்துடன் இருக்கிறார். இவர் சுயம்பு மூர்த்தியாக உருவானவர். நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் தனி சிறப்பு வாய்ந்தது. இந்த தலத்தில் பிரம்மனுக்கு ஈசன் திருமணக்கோலத்தை காட்டி அருளிய தெய்வீக அம்சம் கொண்ட தலம்.

மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டபொழுது கமண்டலத்திலுள்ள நீர் வெளியே வராமல் வண்டு உருவம் எடுத்து துவாரத்தை சுக்கிராச்சாரியார் அடைக்க, திருமால் தர்ப்பையால் குத்த, அசுர குருவின் கண் குருடாகியது.  இதனால்தான் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் கண் பார்வை பிரச்னைகள் ஏற்படுகிறது.  இதற்கு சான்றாக பெரியாழ்வார் தம் திருமொழியால் இவ்வாறு உரைக்கிறார். 
இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள்: தை திங்களில் ஹரதத்தர் காட்சி அருளல், ஆடிப்பூரம் திருவாதிரை, மாசிமகம் மற்றும் பிரதோஷம், சிவராத்திரி,   நவராத்திரி, தமிழ்-ஆங்கில வருடப்பிறப்பு, பொங்கல், தீபாவளி ஆகியவை ஆகும்.

தக்கவர் பரவிப் போற்றும் தைத்தியர் குருவை வேண்டிச்
சுக்கிர கவசமென்னும் தோத்திரக் கவிநூல் பாடி
நெக்குநெக்கு உருகு நெஞ்சோர் நினைந்தன யாவும் கூடும்
மக்களும் மனையும் வாழ்வும் வைகலும் பெருகு மாதோ !

-சுக்கிர கவசம்.

No comments:

Post a Comment