Sunday, 31 July 2016

71 இசைஞானியார் புராணம்

"இசைஞானி காதலன் அடியார்க்கும் அடியேன்" 

"சுந்தரரின் அன்னையார்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வன்மீகநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கமலாம்பிகை

அவதாரத் தலம் : திருவாரூர்

முக்தி தலம் : திருநாவலூர்

குருபூஜை நாள் : சித்திரை - சித்திரை

"ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்;
அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்;
இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் 
மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால்."

பாடல் விளக்கம்:

குறைவில்லாத பெருமையுடைய சடையனாரின் செல்வம் பொருந்திய மனைவியாரும், யாரானும் எவ்வாற்றானும் அழிக்க இயலாத வலிமையுடைய முப்புரங்களை அழித்த சிவபெருமானால் ஆட்கொள்ளப்பெற்ற நம்பியாரூரரைப் பெற்றவருமாகிய, உயர்வுடைய குலமான சிவவேதியரின் குலத்தில் வந்த இசைஞானிப் பிராட்டியாரை, என்னுடைய இழிந்த சொற்களால் புகழ முடியுமோ? எனக்கு முடியாமையே அன்றி மற்று எவர்க்கும் முடியாதாம்.

இசைஞானியார் புராணம்



அறுபது நாயன்மார்களுடன் இசை ஞானியாரின் குடும்பமும் சேர்ந்து அறுபத்து மூன்று நாயன்மார் ஆயினர். தாம், தம் கணவர், தம் புதல்வர் என்று குடும்பமே நாயன்மார்களாக உள்ள பெருமையைப் பெற்றனர். திருவாரூரிலே கௌதம கோத்திரத்தில் அவதரித்த ஞானசிவாச்சாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார். 

அவர் திருவாரூர் இறைவரது திருவடி மறவாதவர். திருமணப் பருவம் அடைந்ததும் சடையநாயனாரது உரிமைத் திருமனைவியானார். ஆளுடைய நம்பியைப் புத்திரனாகப் பெறும் பேறுபெற்ற இசைஞானிப் பிராட்டியாரின் பெருமை எம்மால் புகழக் கூடியதோ? என்று கூறுமளவு சிவபக்தியில் சிறந்து விளங்கினார். இறைவனின் குழந்தைகளில் ஆண் பெண் என்ற பாகுபாடுகள் கிடையாது.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

No comments:

Post a Comment