Sunday, 24 July 2016

33 சோமாசிமாற நாயனார் புராணம்

"அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்."

"சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பூங்குழலம்மை

அவதாரத் தலம் : அம்பர்

முக்தி தலம் : திருவாரூர்

குருபூஜை நாள் : வைகாசி - ஆயில்யம்

"எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
அத்தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
சித்தம் தெளியச் சிவன் அஞ்சு எழுத்து ஓதும் வாய்மை
நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்."

பாடல் விளக்கம்:
எத்தன்மையராயினும் அவர் சிவபெருமானுக்கு அன்பர் என்றால், அத்தன்மை உடையவர் தாம், நம்மை ஆள்பவர் என்று கொண்டிடும் திறமுடையார், தம்முடைய சித்தம் தெளிவு கொண்டிடச் சிவபெருமானின் நாமமாம் "நமச்சிவாய" எனும் திருவைந்தெழுத்தை ஓதும் வாய்மை ஒழுக்கத்தை, நாளும் தவறாமல் செய்வதைக் கடமையாகப் போற்றும் நெறியில் தலை நின்றார்.

சோமாசிமாற நாயனார் புராணம்



சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் தலத்தில் தூய அந்தணர் மரபிலே பிறந்தவர் தான் மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினார். இவரது திருமேனியிலே எந்நேரமும் திருவெண்ணீறு துலங்கும். நாவிலே நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். பாதங்கள் சிவ ஆலயங்களை எந்நேரமும் வலம் வரும். இவ்வாறு நலம் தரும் நாயகனை நாளெல்லாம் போற்றிப் பணிந்தார் அடிகளார். 

இறைவனின் திருவடி நீழலையே பற்றி வீடு பேற்றை அடைவதற்கான ஒப்பற்ற வேள்விகள் பல நடத்தி வந்தார். இவர் நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும் சோம வேள்வி தான் மிக மிகச் சிறந்தது. எண்ணற்ற சோம வேள்விகளைச் செய்தமையால் தான்  இவருக்குச் சோமாசி மாறர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். 

ஒருமுறை திருவாரூரை அடைந்து தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு திருவாரூருக்கு எழுந்தருளியிருந்தார். அவர்களைக் கண்டதும் நாயனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! சோமாசி மாற நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இவருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பும் அருளும் கிடைத்தது. இவ்வாறு சிவதொண்டு பல புரிந்து வாழ்ந்து வந்த சோமாசி மாற நாயனார் திருவைந்தெழுத்து மகிமையால் விடையில் எழுந்தருளும் சடைமுடிப் பெருமானின் திருவருளைப் பெற்று வாழும் அருந்தவப் பேற்றினைப் பெற்றார்.

"துன்றும் புலன் ஐந்துடன் ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நன்நெறி சேரும் விளக்கம் என்றே
வன்தொண்டர் பாதம் தொழுதான சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார்."

பாடல் விளக்கம்:
உயிர்களிடத்துப் பொருந்திய ஐம்புலன்களுடன், காமம் முதலாக உள்ள அறுவகைக் குற்றங்களையும் வென்று, இவ்வுலகில் நன்னெறி சேர்தற்காம் விளக்கம் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளைத் தொழுதலே எனக்கருதி அப்பணி தலைநின்ற அதனால் வருவதான சிறப்பு வாய்ந்திட, அப்பேற்றால் என்றும் நிலவிய அழிவிலாத சிவலோகத்துச் சென்று இன்புற்றார். அவர் பெயர் சோமாசிமாற நாயனார் என்பதாகும். 

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment