"சித்தத்தை சிவன்பால் வைத்தார்க்கும் அடியேன்."
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமூலட்டானேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிவகாமியம்மை
அவதாரத் தலம் : தில்லை
முக்தி தலம் : தில்லை
குருபூஜை நாள் : சித்திரை முதல் நாள்
"காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து
பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்
தாரணையால் சிவத்தடைந்த சித்தத்தார் தனி மன்றுள்
ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்."
பாடல் விளக்கம்:
காரண....கடந்து - பிராமன் முதலாகிய காரணக் கடவுளர் ஐவர்க்குமுரிய ஐந்து தாமரைகளுடனிருக்கும் தானங்களைக் கடந்து மேற்சென்று; (அப்பால்) பூரண...தாரணையால் - நிறைவுடையதாய், உள்பொருளாய், சுயஞ்சோதியாய் உள்ள சிவம் ஞான ஒளிவீசி விளங்கும் நாதாந்தத்திற் சித்தத்தை நிறுத்துதலினாலே; சிவத்தடைந்த சித்தத்தார் - சிவத்தினிடத்தே நிறுத்திய சித்தத்தையுடைமையால் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் என்கின்றவர்கள்; தனிமன்றுள்...அடைந்தார் - ஒப்பற்ற திருவம்பலத்தினுள் விளங்கும் வேதகாரணராகிய கூத்தருடைய திருவடித் தொண்டின் வழியிலே நின்று அவரை அடைந்தவர் எனப்படுவர்.
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
No comments:
Post a Comment