Sunday, 31 July 2016

51 வாயிலார் நாயனார் புராணம்

"தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்."

"சிவபெருமானுக்கு மனத்தினாலேயே திருக்கோவில் அமைத்து திருமஞ்சனம் தூபதீபம் செய்து வந்த வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கபாலீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கற்பகாம்பாள்

அவதாரத் தலம் : திருமயிலை

முக்தி தலம் : திருமயிலை

குருபூஜை நாள் : மார்கழி - ரேவதி

"மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும் ஒளி விளக்குச் சுடரேற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்."

பாடல் விளக்கம்:

இறைவரை, மறவாமை எனும் கருவினால் அமைத்த மனமான கோயிலுள் எழுந்தருளச் செய்து, நிலை பெறுமாறு இருத்தி, அவ்விடத்திலேயே பொருந்துமாறு அப்பெருமானை உணரும் ஞானம் என்கின்ற ஒளிவீசும் சுடர் விளக்கை ஏற்றி, அழிவற்ற பேரானந்தமான நீரினால் திருமஞ்சன மாட்டி, அறவாணனக்கு அன்பு என்னும் அமுதை அமைத்து வழிபடுவாராய்.

வாயிலார் நாயனார் புராணம்



தொண்டைவள நாட்டிலுள்ள சிறப்புமிக்கப் பழம் பெரும் பதியாகிய மயிலாபுரி கடல் வளத்தோடு கடவுள் வளத்தையும் பெற்றுச் செல்வச் சிறப்போடு ஓங்கி உயர்ந்து பொலிவு பெற்றிருந்தது. இத்திருநகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு கபாலீசுவரர் என்றும், உமையம்மைக்குக் கற்பகவல்லி என்னும் திருநாமம் உண்டு.

இந்நகரிலே கபாலீசுவரர் கமல மலர் பாதம் போற்றும் அருந்தவத்தினராய் வேளாளர் மரபிலே அவதரித்தவர் தான் வாயிலார் நாயனார் என்பவர். இவர் எம்பெருமானின் திருநாமத்தை உள்ளத்தால் பூஜை புரிந்து வந்தார். இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வு என்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும் திருவமுதத்தால் வழிபட்டு வந்த வாயிலார் நாயனார் சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வு பெற்றார்.

"நீராரும் சடையாரை நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால் அர்ச்சனை செய்து அடியவர்பால்
பேராத நெறி பெற்ற பெருந்தகையார் தமைப்போற்றிச்
சீராரும் திருநீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம்."

பாடல் விளக்கம்:

கங்கை பொருந்திய சடையையுடைய சிவபெருமானைத் தம் நீடிய மனக் கோயிலில் நிறுவி, மிகுந்த அன்புடன் வழிபட்டு, அடியவர்களுடன் இருந்து, நீங்காத வீட்டு நெறியினைப் பெற்ற பெருந்தகையாரான வாயிலார் நாயனாரைப் போற்றி, சிறப்புடைய திருநீடூரில் வாழ்ந்தமுனையடுவாரின் இயல்பை இனிக் கூறுவாம்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment