Sunday, 31 July 2016

56 புகழ்த்துணை நாயனார் புராணம்

"புடை சூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி 
பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்."

"பஞ்ச காலத்தில் சிவபெருமானின் திருவருள் கிடைத்து அதனால் நாள்தோறும் ஒவ்வொரு பொற்காசு பெற்றவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அழகாம்பிகை

அவதாரத் தலம் : அழகாபுத்தூர்

முக்தி தலம் : அழகாபுத்தூர்

குருபூஜை நாள் : ஆவணி -ஆயில்யம்

"மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது
சாலவுறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக்
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்து அயர்வார்."

பாடல் விளக்கம்:

அவர் (ஒரு நாள்) திருமாலும் நான்முகனும் தேடுதற்கரிய பெருமானை, நீராட்டும் பொழுது, மிகவும் பெருகிய பசியினால் வருந்தி நிலை தளர்ந்து அழகிய நிறைந்த நீரையுடைய குடத்தைத் தாங்கமாட்டாமையால், நஞ்சு அணிந்த கழுத்தையுடைய சிவபெருமானின் முடிமீது அது வீழ்ந்து விடத் தளர்வாராகி.

புகழ்த்துணை நாயனார் புராணம்


செருவல்லிப்புத்தூர் என்னும் தலத்திலே தோன்றியவர் தான் புகழ்த் துணையார் என்னும் சிவத்தொண்டர். இவர் செருவல்லிப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதி சிவாகம முறைப்படி வழிபட்டு வந்தார். ஒருமுறை நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட மக்கள் கோயிலுக்குப் போவதைக் கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் எங்கே? என்று தேடித் தேடி அலைந்தனர்.

ஆனால், ஈசனடியில் நேசம் வைத்த புகழ்த்துணையார் மட்டும், பஞ்சத்தைப் பெரிதாக எண்ணாமல், எம்பெருமானை எப்பொழுதும் போல் பூசித்து வரலானார். ஒருநாள் இவ்வடியார் சிவலிங்கத்துக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகையில் உடல் தள்ளாமையினால் குடத்தைத் தவறவிட்டார். சிவலிங்கத்தின் மீது விழுந்தார். சிவலிங்கத்தின் மீது நாயனார் தலை மோதியதால் வலி தாங்காமல் மயக்கமுற்றார். எம்பெருமான் இவரது மயக்க நிலையை உறக்க நிலையாக்கினார்.

எம்பெருமான் நாயனாரது கனவிலே எழுந்தருளினார். பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் துறந்து சென்ற போதும் நீ மட்டும் எம்மையே அணைந்து எமக்காக வழிபட்டு பணியாற்றியமைக்காக யாம் உமக்கு பஞ்சம் நீங்கும் வரை எமது பீடத்தில் உமக்காகப் படிக்காசு ஒன்றை வைத்து அருள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார் அரனார். துயிலெழுந்த தொண்டர் பீடத்திலிருந்த பொற்காசு கண்டு சிந்தை மகிழ்ந்து, சங்கரரின் சேவடியைப் பணிந்தார். முன்போல் இறைவனுக்குத் திருத்தொண்டு புரியலானார். பஞ்சம் வந்த காலத்தும் பக்தியில் நின்றும் சற்றும் வழுவாமல் வாழ்ந்த நாயனார், பல்லாண்டு காலம் பூவுலகில் வாழ்ந்து பகவானின் திருவடியைச் சேர்ந்தார்.

"பந்தணையும் மெல்விரலாள் பாகத்தார் திருப்பாதம்
வந்தணையும் மனத்துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்திச்
சந்தணியும் மணிப் புயத்துத் தனிவீரராம் தலைவர்
கொந்தணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம்."

பாடல் விளக்கம்:

பந்தைச் சேரும் மென்மையான விரல்களையுடைய உமையம்மையாரை ஒரு கூற்றில் உடைய இறைவரின் திருவடிகளில் வந்து சேர்கின்ற மனத்துணை பெற்றவரான புகழ்த்துணையாரின் திருவடிகளை வாழ்த்திச், சந்தனக் கலவை அணிந்த அழகிய தோள்களையுடைய ஒப்பில்லாதவரும், தலைவருமான மணம் கமழும் மாலை சூடிய கோட்புலியாரின் திருத்தொண்டினை உரைப்பாம்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

No comments:

Post a Comment