Wednesday, 20 July 2016

03 இயற்பகை நாயனார் புராணம்


"இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்."

"தம் மனைவியையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்"

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பல்லவனேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சௌந்தரநாயகி

அவதாரத் தலம் : பூம்புகார்

முக்தி தலம் : திருச்சாய்க்காடு

குருபூஜை நாள் : மார்கழி - உத்திரம்

"அக்குலப்பதிக் குடிமுதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண்பிறச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர் மறைச் சிலம்பு அடியார்
மிக்க சீரடியார்கள் யாரெனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
இக்கடல்படி நிகழமுன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார்."

பாடல் விளக்கம்:

காவிரிப்பூம்பட்டினத்தின் வணிகர் குலத்தில் முதன்மையுற்று நிற்கும் மிக்க செல்வத்தால் ஆகிய வளத்திற் சிறந்த வரும், வெண்மையான பிறையை அணிந்த சிவந்த திருச்சடையையுடைய சிவபெருமானுக்கு ஆட்படும் அடிமைத்திறம்பூண்ட வரும், மறைகளாகிய சிலம்பினை அணிந்த திருவடிகளையுடைய சிவபெருமானின் சிறப்புடைய அடியவர்கள் எவர் வரினும் அவர்களுக்கு இல்லை என்னாது கடல் சூழ்ந்த இம்மண்ணுலகத்தில் விளக்க முறத் தொடர்ந்து முற்படக் கொடுத்து மகிழும் இயல்புடையவருமானவர் இவ்வுலகில் இயற்பகையார் என அழைக்கப்படும் பெயருடையவராவர்.

இயற்பகை நாயனார் புராணம்


எம்பெருமான் பல்வேறு திருவுருவங்களைத் தாங்கி, பல்வேறு சமயங்களுக்கு அருள்பாலிப்பது போல் சோழவள நாட்டிலே பாய்ந்து ஓடும் காவிரியாறும் பற்பல கிளைகளாகப் பிரிந்து பற்பல இடங்களுக்குப் பெருவளத்தை கொடுக்கிறது. இவ்வாறு பரந்து விரிந்து ஓடும் காவிரியாற்றில் ஒரு கிளை கடலோடு கலக்கிறது. அந்த இடம் தான் காவிரி சங்கமம் எனப்படும் பூம்புகார் பெருநகரம். 

இப்பெரு நகரத்தை தலைநகராகக் கொண்டு அநபாய சோழனது குலத்தில் தோன்றிய மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அக்கொற்றவனின் கொடி நிழலிலே சுபிட்சமாக மக்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வாறு வாழ்ந்து வந்தவர்களுள், வணிக குலத்தைச் சேர்ந்தோர் பலர் இருந்தனர். அவ்வணிகர் குலத்தில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பற்றற்ற பரமஞானி! தனது என்று உலகோர் பற்று கொள்ளும் பாச உணர்ச்சிகளுக்கு இவ்வடியார் பகையாயிருந்தார். அதனால் இவரை இயற்பகையார் என்று அனைவரும் அழைக்கலாயினர். 

இது காரணம் பற்றியே இவரது இயற்பெயர் இன்னதென்பது அறிய முடியாது போனது! இயற்பகையார் என்ற பெயரே நிரந்தரமானது. இயற்பகையார் இறைவனிடம் ஈடில்லா பக்தி கொண்டிருந்தார். இயற்பகையாரும், அவர் தம் மனைவியாரும் இல்லறம் எனும் நல்லறத்தை இனிது நடத்தி வந்தனர். அடியாரைப் பேணுவதையே, தலைசிறந்த அறமாகக் கருதி, இயற்பகையார் சீரோடும், சிறப்போடும், நிறைவோடும் வாழ்ந்து வந்தார். 

தெய்வம் தொழாது கொழுநனையே தொழுதெழுவாள் என்ற குறளுக்கேற்ப வாழ்ந்து வந்த அவரது மனைவியும், இயற்பகையாரோடு சேர்ந்து கொண்டு திருநீரணிந்த மெய்புடை அன்பர்களுக்கு பாதபூசை செய்யத் தவறுவதே இல்லை. வெள்ளி மாமலையை வீடெனக் கொண்ட தேவர்களின் தேவன் இவர்கள் பெருமையை உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளங் கொண்டார். 

அந்தணர் வேடம் தாங்கி, இயற்பகையார் இல்லத்திற்கு எழுந்தருளினார் எம்பெருமான்! இயற்பகையார், அடியாரை வணங்கி வரவேற்று, ஆசனத்தில் அமரச் செய்தார். மனைவீ நீர் வார்க்க பாதங்களைத் தூய நீராட்டினார்; நறுமலர் தூவினார். அன்பர்க்கு அன்பரே! இந்த ஏழையின் குடிசைக்கு தாங்கள் இன்று எழுந்தருளியிருப்பது அடியேன் செய்த பேறுதான் என்று பணிவோடு பகர்ந்தார் இயற்பகையார். 

உமது பக்திக்கு யாம் புளகாங்கிதம் அடைந்தோம். எம்போன்ற சிவனடியார்கள் யாசிப்பதை எல்லாம் இல்லை எனாது அள்ளிக்கொடுக்கும் பண்பினர் நீவிர் என்று கேள்விப் பட்டோம். யாம் விருப்பும் ஒன்றை உம்மிடமிருந்து பெற்றுப் போகலாம் என்று தான் வந்தோம். இந்த அடிமையின் கடமையே அதுதானே! இந்த ஏழை, ஐயன் எதைக் கேட்பினும் மறுக்காமல் கொடுப்பேன் என்பது உறுதி.

அடியாராக வந்த முக்கண்ணன் முகம் மலர புன்னகை புரிந்தார். இயற்பகையாரை ஒரு முறை பார்த்து விட்டு, அவர் அருகே நின்ற அவரது மனைவியாரையும் நோக்கிப் பின்னர் இயற்பகையாரிடம், கேட்டால் மறுக்க மாட்டீரே? என்று திரும்பவும் கேட்டார். அணுத்துணையும் ஐயம் வேண்டாம் ஐயனே! ஆணையிடுங்கள் அடியேன் செய்து முடிக்கிறேன்! உம்மைப் பற்றித்தான் நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேனே! சொன்ன சொல் தவறாதவர் நீர் என்பது! அடியார்களைப் பல வழிகளில் சோதிக்கப் புறப்பட்ட அருட்பெருஞ்சோதி, உம் மனைவியை அழைத்துப் போகவே யான் வந்தேன் என்றார். 

பரமன் மொழிந்ததைக் கேட்டு, இயற்பகையார் சற்றும் திகைப்படையவில்லை. மறுத்து ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. அதற்கு மாறாக, முன்னிலும் மகிழ்ச்சி பொங்க கரம் கூப்பியவாறே, ஐயனே! என்னிடம் உள்ள பொருளையே கேட்டீர்கள். உண்மையிலேயே தங்கள் அருளுக்கும் ஆசிக்கும் இந்த எளியோன் அடிமை என்றார். இயற்பகையார், 

சிவனடியார்களிடத்துக் கொண்டுள்ள பக்தி நிலையைத்தான் என்னென்பது? மனைவியைக் கொடுக்கலாமா? கொடுத்தால் என்ன நேருமோ? என்ற அச்சம் அவர் தம் நெஞ்சத்தைக் கொஞ்சமும் தீண்டவில்லை. நல்ல உறக்கத்தில் இருப்பவன், கையில் இருக்கும் எத்தகைய விலை உயர்ந்த பொருளையும் நழுவ விடுவது போல், இயற்பகையார் தன்னை மறந்த பக்தி நிலையில் மனைவி என்பதையும் மறந்து அடியார்க்கு அளித்த ஆற்றலைத்தான் என்னவென்பது! பக்தி என்றால் இதுவன்றோ பக்தி! இயற்பகையாரின் மனைவியார், கணவரின் விருப்பப்படி அம்மையப்பரின் திருவடியை வணங்கி நின்றாள். 

அடுத்தது யாம் யாது செய்தல் வேண்டும்? என்று இயற்பகையார் கேட்டார். உனது மனைவியை அழைத்துச் செல்வதால் உன் சுற்றத்தார் என் மீது வெறுப்பு கொள்ளலாம். அதனால் இம் மங்கையோடு இவ்வூர் எல்லையை கடக்கும் மட்டும் என்னுடம் துணையாக வருதல் வேண்டும் எனக் கேட்டார் எம்பெருமான். அப்படியே ஆகட்டும், பெரியவரே! இப்பணி எனக்கு கிட்டியது தான் எத்துணைச் சிறப்புடையது என்று விடை பகர்ந்தார். 

வேகமாக உள்ளே சென்றார் நாயனார். போர்க்கோலம் பூண்டு வாளும், கேடயுமும் ஏந்தி வெளியே வந்தவர், மாதொரு பாகனையும் தமது மனைவியையும் முன்னே போகச் செய்து, அவர்களுக்குத் தக்க துணையாகப் பின்னே வீர நடைபோட்டுப் புறப்பட்டார். இச்செய்தியைக் கேட்டு ஊரார் வெகுண்டனர். வில், வாள், வேல், சரிகை, முதலிய படைக்கருவிகளைத் தூக்கிக்கொண்டு ஆர்த்து எழுந்தனர்.

வணிக குலத்திற்கே மாசு கற்பித்து விட்டாரே இயற்பகையார் என்று பொருமினர், தூற்றினர், ஊர்ப் பெரியவர்கள். அஞ்சவில்லை இயற்பகையார்! வெஞ்சினம் கூறினார். அவர்கள் கொதித்து எழுந்தனர். இவர்களிடையே போர் மூண்டது. இயற்பகையாரின் வீரம் விளையாடியது. எதிரிகளின் பலம் சிதறியது - சிதைந்தது சின்னபின்னமானது! திசைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். இயற்பகையார் அனைவரையும் வென்றார். 

உய்ந்தேன் என்று அடியாரை வணங்கி அஞ்சாமல் முன்போல் அடி எடுத்து வைப்பீர்களாக என்று கேட்டுக்கொண்டார். பிறகு மூவரும் அவ்வூரின் எல்லையில் அமைந்துள்ள திருச்சாய்க்காடு என்னும் இடத்தை எவ்வித ஆபத்துமின்றி அடைந்தனர். அவ்விடத்திற்கு வந்ததும் யோகியார், இனிமேல் நீ திரும்பலாம் என்று இயற்பகையாருக்குக் கட்டளையிட்டார். 

வணிகர் குலமகனும் யோகியாரின் மலரடிகளில் வீழந்து வணங்கி அருள் பெற்று வந்த வழியே திரும்பினார். செய்தற்கரிய அரும் பெரும் தியாகத்தைச் செய்து திரும்பும் தொண்டரது செவிகளில் விழுமாறு, இயற்பகையாரே! ஓலம்! ஈண்டும் நீ வருவாய் ஓலம் ஓலம் என்று யோகியார் கூவி அழைத்தார். அடியாரின் ஓலக்குரலைக் கேட்டு இயற்பகையார் வந்தேன் அடியேன்! மீண்டும் தங்களைத் துன்புறுத்த வருவோரை இவ்வாளால் தடுப்பேன் என்று உரக்கக் கூறியபடியே சிவனார் குரல் கொடுத்த திசை நோக்கி விரைந்தார். 

அப்பொழுது வேதியர் வடிவில் வந்த மறையவர் மறைந்தார்! தமது மனைவி மட்டும் நிற்பதைக் கண்டார்! நாயனார் யோகியாரைக் காணாமல் திகைத்தார்! அப்பொழுது வானத்து வீதியிலே ஞானத்து வேத முதல்வோன், உமையாளுடன் விடையின் மேல், அற்புதமான அருட்பெருஞ் சோதியாகத் திருத்தொண்டருக்குக் காட்சி கொடுத்தார். கண்டதும் சிவத்தொண்டர் நிலத்தில் வீழ்ந்தார். எழுந்தார். கரம் குவித்துச் சிரம் தாழ்த்தி வணங்கினார். அவர் தம் அருங்குண மனைவியாரும் கணவரோடு சேர்ந்து வணங்கினார்கள். 

எம்பெருமான் அவர்களைத் திருநோக்கம் செய்து, அன்பனே! உன் எல்லையற்ற அன்பின் திறத்தைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தோம். பாரே வியக்கும் வண்ணம் பரமனிம் பெரும் பக்தி பூண்ட தொண்டனே! நீயும் உன் கற்புடைச் செல்வியும் பூவுலகில் பன்னெடுங் காலம் வாழ்ந்து பின்னர் நம்பால் வந்து அணைவீர்களாக என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். இயற்பகையார் மனைவியுடன் இல்லத்திற்குத் திரும்பினார். எம்பெருமானின் அற்புத திருவிளையாடலைப் பற்றி உணர்ந்த ஊர் மக்கள் இயற்பகையாரின் பக்திக்கு அடிபணிந்தார்கள். இயற்பகையார் எல்லோராலும் தொழுதற்குரிய மகான் ஆவார். இயற்பகையார் மனைவியுடன் பல்லாண்டு காலம் இன்புற்று வாழ்ந்தார்.

"இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடும்
மன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன்."

பாடல் விளக்கம்:

இல்லற இன்பத்தைப் பெறுதற்குக் காரணமாய மனையாளை, மறையவராக வந்தவர் சிவபெருமானின் அடியவர் என்றே கருதி ஒரு சிறிதும் வருந்தாது கொடுத்த இயற்பகை நாயனாருடைய பெருமையை வணங்கி வாழ்த்தி, அன்புமிகுந்த தூய மனத்தால் சிவனடியார்களிடத்து அன்பு செலுத்தும் நிலைபெற்ற புகழினையுடைய இளையான்குடிமாறநாயனாரது பத்திமை நலத்தை வழுத்தத் தொடங்குகின்றேன்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment