Sunday, 31 July 2016

45 கலிய நாயனார் புராணம்

"கலியனுக்கும் அடியேன்."

"எண்ணெய்யும் விறகும் இல்லாத போது தமது ரத்தத்தால் விளக்கு எரித்து ஓளி உண்டாக்கிய வாணியர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ தியாகேசர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வடிவுடையம்மை

அவதாரத் தலம் : திருவொற்றியூர்

முக்தி தலம் : திருவொற்றியூர்

குருபூஜை நாள் : ஆடி - கேட்டை

"திருவிளக்குத் திரியிட்டு அங்கு அகல் பரப்பிச் செயல் நிரம்ப
ஒருவிய எண்ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறு அரிய அக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுடன் நேர்வந்து பிடித்தருளி."

பாடல் விளக்கம்:

திருவிளக்குகளுக்கு எல்லாம் திரியை இட்டு அங்கு அகல்களை முறையாகப் பரப்பி, அச்செயல் நிரம்பத் தடையாகும் எண்ணெய்க்கு ஈடாய்த், தம் உடலில் நிறைந்த குருதியைக் கொண்டு நிறைக்க எண்ணிக் கருவி கொண்டு தம் கழுத்தை அரியமுற்பட, அங்ஙனம் அவர் அரிகின்ற கையை, நெற்றிக் கண்ணையுடைய இறைவர், பெருகும் கருணையுடனே வெளிப்பட்டுத் தோன்றி, அச்செயலைச் செய்யவிடாமல் பற்றிப்பிடித்து.

கலிய நாயனார் புராணம்



ஓங்கிய புகழுடைய தொண்டை நன்நாட்டில், எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இங்குள்ள சக்கரப்பாடித் தெருவில் எண்ணெய் வாணிபம் புரியும் வணிகர் குடியில் கலியனார் என்பவர் பிறந்தார். சைவ சமயத்தில் சிறப்புற்று விளங்கிய இச்செம்மல் சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்றார்.

தமது செல்வத்தைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தி வந்தார் நாயனார். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள படம்பக்கநாதருடைய கோயிலில் உள்ளும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை இரவும் பகலும் இடுகின்ற பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்திருந்தார் கலிய நாயனாரது பக்தியின் திறத்தினை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு உமைபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தார்.

வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணிய நாயனார் கோயில் திருப்பணிக்காகக் கூலி வேலை செய்து நாலு காசு சம்பாதிப்பதில் ஈடுபடலானார். இவர் தமது குலத்தவரிடம் எண்ணெய் வாங்கி விற்று பொருளீட்டி வந்தார். செக்கு ஓட்டி அன்றாடம் கூலி வாங்கும் தொழிலில் ஈடுபட்டார். அதில் கிட்டும் வருவாயைக் கொண்டு கோயில் திருப்பணியைத் தொடர்ந்து இனிது நடத்தி வந்தார். சில காலத்துக்குப் பின் அக்கூலி வேலையும் இல்லாமற் போகவே நாயனார் வீட்டிலுள்ள பண்டங்களை ஒவ்வொன்றாக விற்று பொருள் பெற்றார். இறுதியில் மனையை விற்று, மாண்புடைய மனைவியையும் விற்க முன்வந்தார்.

மனைவியாரை பெற்றுக்கொண்டு பொன் கொடுக்க ஆளில்லாமை கண்டு செய்வதறியாது திகைத்தார்; சித்தம் கலங்கினார் அடிகளார். மன வேதனை தாளாமல் மனை நலமிக்க மங்கை நல்லாளையும் அழைத்துக் கொண்டு படம்பக்கநாதர் திருக்கோயிலை அடைந்தார். எம்பெருமானின் திருமுன் பணிந்தெழுந்து, ஐயனே! திருவிளக்குப் பணி நின்று விடுமாயின் இவ்வெளியேன் மாள்வது திண்ணம். அம்பலத்து ஒளிவிடுகின்ற அகல் விளக்குகளை எண்ணெய் வார்த்து ஏற்ற முடியாது போனால் நான் உதிரத்தை வார்த்து விளக்கேற்றுவேன் என்று மகிழ்ச்சி பொங்க மொழிந்தார்.

திருவிளக்குகளை முறையோடு வரிசையாக அமைத்தார். எண்ணெய்க்குப் பதிலாக உதிரத்தைக் கொடுக்க உறுதி பூண்டிருந்த கலிய நாயனார் வாள் எடுத்து வந்து தமது கழுத்தை அரியத் தொடங்கினார். திருத்தொண்டர்களை தடுத்தாட்கொள்ளும் தம்பிரான் எழுந்தருளி நாயனாரது திருக்கரத்தைப் பற்றினார். ஆலயத்துள் பேரொளி எழுந்தது. திருவிளக்குகள் எண்ணெய் வழியப் பிரகாசமாக ஒளிபரப்பின. எங்கும் பிறைமுடிப் பெருமானின் அருள் ஒளி நிறைந்தது.

நாயனார் கழுத்தில் அரிந்த இடம் அகன்று முன்னிலும் உறுதி பெற்றது. நாயனாரும் அவரது மனைவியாரும் மெய்யுருகி நின்றனர். சடைமுடிப் பெருமானார் அன்னையுடன் அலங்கார விடை மீது எழுந்தருளி அன்புத் தொண்டர்க்கு காட்சி கொடுத்தார். கலிய நாயனாரும் அவரது மனைவியாரும் எம்பெருமானை நிலமதில் வீழ்ந்து பலமுறைப் பணிந்து எழுந்தனர். இறைவன் கலிய நாயனாருக்குப் பேரின்பப் பெருவாழ்வு அளித்து இறுதியில் சிவபதம் புகுந்து சிறப்புற்றிருக்குமாறு திருவருள் செய்தார்.

"தேவர் பிரான் திருவிளக்குச் செயல் முட்ட மிடறு அரிந்து
மேவரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியனுலகில்
யாவர் எனாது அரன் அடியார் தமை இகழ்ந்து பேசினரை
நாவரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம்."

பாடல் விளக்கம்:

தேவர் பிரான் வணங்கி தேவர்கள் பெருமானாராகிய இறைவரது கோயிலினில் எரிக்கும் திருவிளக்குப்பணி முட்டியதனால் தமது மிடற்றினை அரிந்து பொருந்துதற்கரிய வினையினைச் செய்து முடித்த கலிய நாயனாரது திருவடிகளை வணங்கி (அத்துணையானே); வியனுலகில் பேசினரை பரந்த உலகத்தில் யாவரே யாயினும் சிவனடியார் தம்மை இகழ்ந்து பேசினவர்களை; நா அரியும்...நலமுரைப்பாம் - நாக்கினை அரியும் சத்தியார் என்னும் நாயனாரது திருத்தொண்டின் நன்மையாகும் வரலாற்றினைச் சொல்வோம்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment