Sunday, 31 July 2016

40 பொய்யடிமையில்லாத புலவர் புராணம்

"பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமூலட்டானேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிவகாமியம்மை

அவதாரத் தலம் : தில்லை

முக்தி தலம் : தில்லை

குருபூஜை நாள் : சித்திரை முதல் நாள்

"செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர்
மையணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானார்
பொய்யடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்."

பாடல் விளக்கம்:

செய்யுட்கண் வரும் சொற்களின் அமைவைத் தெளிதலும் சிறந்த நூல்கள் பலவற்றையும் நுணுகி ஆராய்தலும் ஆகிய எல்லாம், மெய்யுணர்வின் பயனாக விளங்கும் செம்பொருளின் அடைவேயாம் எனத் துணிந்து, விளங்கி ஒளிவீசுகின்ற நஞ்சினையுண்ட கழுத்தினையுடைய சிவபெருமானின் மலர் அனைய திருவடிக்கு ஆளானவர்களே, பொய்யடிமையில்லாத புலவர்கள் எனக் குறித்துப்போற்றப் பெற்று விவரிகளாவர்.

பொய்யடிமையில்லாத புலவர் புராணம்



கலைமேவும் நீலகண்டப் பெருமானின் மலரடிக்கே ஆளான பொய்யடிமை இல்லாத புலவர்கள் தில்லைவாழ் அந்தணர்களைப் போன்ற தொகையடியார்கள் ஆவார்கள். இவ்வடியார்கள் செய்யுட்களில் காணும் சொற்களுக்கு நன்கு தெளிவாகப் பொருத்தமான பொருள் கொள்வார்கள். செம்மை தரும் பயனுடைய நூல்கள் பல கற்ற இவ்வடியார்கள் கற்றவர்க்குத் தாம் வரப்பாக விளங்குவார்கள். 

சித்தத்தை சிவனார் சேவடிக்கே அர்ப்பணித்த, மெய்யுணர்வு பெற்ற இவ்வடியார்கள், சிவபெருமானை மட்டுமே முக்காலமும் எண்ணினர். மெய்யன்புடன் அரனார்க்கு அடிமை பூண்டு பக்தி நூல்களை ஓதியுணர்ந்து வேத விதிப்படி அறம் வளர்த்து எம்பெருமானையே தொழுது வாழும் பேறு பெற்றனர். இப்புலவர்களுடைய அருமைகளையும், பெருமைகளையும் அளவிடுவது எங்ஙனம்! பொய்யடிமை இல்லாத இப்புலவர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறவந்த நம்பியாண்டார்  நம்பி, தாம் பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில், கடைச்சங்கப் புலவர்களாகிய கபிலர், பரணர், நக்கீரர் முதலிய நாற்பத்தொன்பது புலவர்களையும் பொய்யடிமையில்லாத புலவர் சிறப்பித்துக் கூறுகின்றார். 

பரமனையே உள்ளுருகிப் பாடும் புலமை பெற்ற இப்புலவர்கள் கயிலை மலையில் திருநடனம் புரியும் பெருமானின் திருவடியை அணைந்து வாழும் பேறு பெற்ற பெருமையை யாது சொல்லி அளவிடுவது!.

"ஆங்கவர்தம் அடியிணைகள் தலைமேல் கொண்டு அவனியெலாம்
தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார்
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த
பூங்கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம்."

பாடல் விளக்கம்:

அத்தன்மையுடைய பொய் அடிமை இல்லாத புலவர்களின் திருவடிகளை எம் தலைமீது கொண்டு வணங்கி, இந்நிலவுலகினைத் தாங்கி அரசளித்த வெண்கொற்றக் குடையை உடைய சோழ மரபினர் செய்த தவப்பயனைப் போன்றவரும், மேலோங்கி வளர்கின்ற தொண்டின் உண்மைத் தன்மையினை உணர்ந்த செயலைச் செய்தவரும், கழல் அணிந்த வெற்றியையுடையவரும் ஆகிய புகழ்ச் சோழ நாயனாரின் திருத்தொண்டைச் சொல்லப் புகுகின்றோம்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment