"ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்."
"ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு “சேத்திரத் திருவெண்பா” என்னும் நூலை இயற்றியவர்."
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஏகாம்பரநாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஏலவார்குழலி
அவதாரத் தலம் : காஞ்சிபுரம்
முக்தி தலம் : காஞ்சிபுரம்
குருபூஜை நாள் : ஐப்பசி - மூலம்
"தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண்
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்களானவெலாம்
கண்டு இறைஞ்சித் திருத்தொண்டின் கடனேற்ற பணி செய்தே
வண் தமிழின் மொழி வெண்பா ஓர் ஒன்றா வழுத்துவார்."
பாடல் விளக்கம்:
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்
அரனாரின் திருவடித் தொண்டினைப் பேணி அரசாண்டார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். நல்ல தமிழ்ப் புலமை மிக்க இப்பூபாலன் வெண்பா பாடும் திறம் பெற்றிருந்தார். வண்ணத் தமிழ் வெண்பாவால் வேணி பிரானை வழிபட்டார். ஐயடிகள் காடவர்கோன் வடமொழியையும், தென்மொழியையும், இயல், இசை, நாடகத்தையும் வளர்க்க அரும்பாடு பட்டார்.
சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் தோறும் சென்று திருசடை அண்ணலை வழிபட எண்ணினார். சிவ வழிபாட்டில் சித்தத்தைப் பதிய வைத்த மன்னர்க்கு அரசாட்சி ஒரு பெரும் பாரமாகத் தெரிந்தது. ஆட்சிப் பொறுப்பைத் தமது குமாரன் சிவவிஷ்ணு விடம் ஒப்புவித்தார். குமாரனுக்கு முடிசூட்டி மகிழ்ந்த மாமன்னன் ஒருநாள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சிவயாத்திரையைத் தொடர்ந்தார். பற்பல தலங்களுக்குச் சென்று, எம்பெருமானை உள்ளங் குழைந்து உருகி துதித்து, ஆங்காங்கே தம் புலமையால் வெண்பா பல புனைந்தருளிய காடவர்கோன் நாயனார், கண்ணுதலார் திருவடி நீழலை அடைந்து இன்புற்றார்.
"பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்குப் பா அணிந்த
ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக்
கை அணிமான் மழுவுடையார் கழல் பணி சிந்தனை உடைய
செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம்."
பாடல் விளக்கம்:
நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
No comments:
Post a Comment