Sunday, 24 July 2016

35 சிறப்புலி நாயனார் புராணம்

"சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்."

"திருவைந்தெழுத்தை ஓதி தாம் புரிந்த வேள்வியைச் சிவபெருமானுக்கே தத்தம் செய்த மறையவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ தான்தோன்றியப்பர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வாள்நெடுங்கண்ணீ

அவதாரத் தலம் : ஆக்கூர்

முக்தி தலம் : ஆக்கூர்

குருபூஜை நாள் : கார்த்திகை - பூராடம்

"ஆலை சூழ் பூகவேலி அத்திரு ஆக்கூர் தன்னில்
ஞாலமார் புகழின் மிக்கார் நான்மறைக் குலத்தில் உள்ளார்
நீலமார் கண்டத்து எண் தோள் நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினில் சிறந்த நீரார்."

பாடல் விளக்கம்:
கரும்பு ஆலைகளைச் சூழ்ந்திருக்கும் பாக்கு மரங்கள் வேலி என அமைந்திருக்கின்ற அத்திருவாக்கூரில், உலகில் நிறைந்த புகழால் மிக்கவரும், நான்மறைகளையும் ஓதும் குலத்தில் தோன்றிய வரும், நஞ்சுண்ட கழுத்தையும் எட்டுத் தோள்களையும் உடைய கூத்தப் பெருமானின் தொண்டினை மேற்கொண்டு ஒழுகி வருபவரும் ஆக வாழ்பவர் சிறப்புலி நாயனார் ஆவர்.

சிறப்புலி நாயனார் புராணம்



பொன் கொழிக்கும் பொன்னி வளநாட்டிலே திருவாக்கூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தூயமலர்ச்சோலை, சுடர்தொடு மாடங்களிலும் மாமழை முழக்கம் தாழ மறையொலி முழக்கம் ஓங்கும். அகிற்புகையும், வேள்விச் சாலையிலிருந்து எழும் ஓமப்புகையும் விண்ணும், மண்ணும் பரவும். எம்பெருமானின் திருநாமம் எந்நேரமும் ஒலிக்கும். இத்தகைய மேன்மை மிக்கத் திருவாக்கூர் தலத்தில் நான்மறை ஓதும் அந்தணர் மரபிலே சிறப்புலியார் என்னும் நாமமுடைய சிவனடியார் அவதரித்தார். 

இவர் இளமை முதற்கொண்டே திருசடைப் பெருமானிடத்தும், திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் எல்லையில்லாப் பேரன்பு கொண்டிருந்தார். தினந்தோறும் திருவைந்தெழுத்தினை முக்காலமும் நியமமாக ஓதி முத்தீயினை வளர்த்து ஆனேறும் பெருமானை வழிபட்டு வந்தார். இவர் எண்ணற்ற வேள்விகளை சிவாகம முறைப்படி நடத்தி வந்தார். 

அத்தோடு சிறப்புலி நாயனார் விருந்தோம்பல் இலக்கணமறிந்து சிவனடியார்களை அமுது செய்வித்து அகம் குளிர்ந்தார். இவர் காட்டி வந்த ஈடு இணையற்ற அன்பினாலும் நெறி தவறாத அறத்தினாலும் பிறரால் தொழுவதற்குரியவரானார். இவ்வாறு கொன்றை வேணியர்க்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இச்சிவனருட் செல்வர், நீண்ட காலம் நிலவுலகில் வாழ்ந்தார். எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து வாழும் நிலையான பேரருளினைப் பெற்றுப் புகழுற்றார்.

"அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப்பெரு வள்ளலார் வண் சிறப்புலியார் தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச்செங்காட்டங் குடியினில் செம்மை வாய்த்த
விறல் சிறுத்தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன்."

பாடல் விளக்கம்:
சிவ அறங்களில் மேன்மை மிக்க அந்தணர் வாழும் திருவாக்கூரில் தோன்றிய வேதியரான வண்மையுடைய அச்சிறப்புலியாரை வாழ்த்தி, திருச்செங்காட்டங்குடியில் செம்மையால் திளைக்கும்சிறுத்தொண்ட நாயனாரின் திருச்செயலைக் கூறப் புகுகின்றேன்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment