Friday, 22 July 2016

வியாழன் (குரு) !



வியாழனுக்கு "குரு" என்றும் "பிரகஸ்பதி" என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு. பிரகஸ்பதி என்றாலே, அறிவில் மிகச்சிறந்தவன் என்ற அர்த்தம் தொனிக்கும். நவக்ரகங்களில் தலை சிறந்தவராக குரு கருதப்படுகிறார்.

பிரகஸ்பதி, தேவர்களுக்கு தலைவராகவும், குருவாகவும் இருப்பவர். பிரம்மாவுக்கும் பிடித்தமானவர்.



மிகச்சிறந்த தபச்வியான ஆங்கிரச முனிவருக்கும் ச்ரத்தா தேவிக்கும் புதல்வராக உதித்தவர் வியாழ பகவான்.

இவருடைய ஸ்வரூப லக்ஷணம் மிகவும் அற்புதமானது.
விந்திய மலைக்கு மேல் குருவிற்கு ஆஸ்ரமம் உண்டு. சிந்துதேச அதிபதியாக இருப்பவர். ஆங்கீரச கோத்ரம் இவருடையது.



வடக்கு ஈசான்ய திக்குகளுக்கு அதிபதி. புஷ்பராக மாலையை கொண்டிருப்பவர். தண்டம், கமண்டலம், மாலை, வரத ஹஸ்தம் உடையவர்.

எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் மேரு மலையை வலம் வருபவர். இவருடைய நன்மதிப்பை பெற வேண்டுமானால் இந்திரனையும், பிரம்மனையும் வழிபட்டு வரவேண்டும்.



சூரியனுக்கு வடக்கில், நீளமான சதுர மண்டலத்தில், வடக்கு முகமாக வீற்றிருப்பவர். பாஷைகளில் சமிஸ்கிரதத்தை தன்னுடையதாக கொண்டவர்.

குளுமையான வஸ்துவில் மிகப் ப்ரியம் உண்டு.
குரு என்ற சொல்லுக்கு அஞ்ஞாநத்தைப் போக்குகிறவர் என்ற பொருள் உண்டு. ஜோதிட சாஸ்த்திரத்தில் "குரு" என்றால் வியாழ பகவானையே குறிக்கும்.

எண்ணகளில் "3" என்கிற மதிப்பை இவருக்கு ஜோதிட சாஸ்த்திரம் கொடுத்துள்ளது.


குரு மூலம் யாராவது எந்த மந்திரத்தைப் பெற்று தினமும் ஜெபித்து வந்தால், அவர்களுக்கு சந்தோஷத்தையும், செல்வத்தையும் கொடுப்பவர்.

பசு மாட்டை ரட்சிக்கிற இடத்தில், குருபகவான் பிரத்தியட்சமாகக் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

"பிரதிதேவோ ஜ்வலக்ரஹம்" என்று வியாழ பகவானை சொல்வார்கள். இதன் அர்த்தம், நம் மனதில் பிரதிபலிக்கின்ற தேஜோமய ஸ்வரூபத்தை கட்டுகிற கிரகம் எதுவென்று கேட்டால் அது குருபகவானுக்குரிய மண்டலம் என்று பளிச்சென்று சொல்லிவிடலாம்.

குருவிற்கு ஐந்து சகோதரர்கள் உண்டு.
பிருஹத் ஜோதிஸ், பிருஹத் பிரம்மா, பிருஹன் மனஸ், பிருஹன் மந்திர, பிருஹத்பாஸ என்பவர்கள் அவர்கள்.

பிருஹஸ்பதியாகிய குருபகவான், தாரா என்பவளை மணந்து கொண்டார். இவர்களுக்கு, சம்யூ நிஸ்யவன், விஸ்வஜித், விச்வபுக், வடபாக்னி, ஸ்விச்ட க்ருதி என்ற புத்திரர்களும், "ஸ்வாகா" என்ற பெண்ணும் உண்டு.

ஒருமுறை பரீட்சித்தின் குமாரனாகிய ஜனமே ஜெயன் ஒரு பெரிய யாகம் செய்ய விரும்பினார். அதற்கு சர்ப்ப யாகம் என்று பெயர்.
அப்படி அந்த யாகத்தை ஜனமே ஜயன் செய்தால், உலகத்தில் உள்ள பாம்புகள் எல்லாம் அழிந்து போகும் என்பதை உணர்ந்த குரு பகவான், ஜனமே ஜயனின் சர்ப்ப யாகத்தை தன அறிவாற்றலால் தடுத்து நிறுத்தினார்.

ஒரு சமயம் இந்திரன், தெய்வத்தின் திருவருளை வேண்டி தீவிரமான த்யானத்தில் ஈடுபட்ட பொழுது, தேவர்களுக்கு சங்கடம் வந்தது. அசுரர்கள் அளவுக்கு மீறி ஆட்டம் போட்டனர்.

இந்த நிலை நீடித்தால், என்ன ஆகுமோ என்று தேவர்கள் பயந்து ப்ரஹஸ்பதியான வியாழ பகவானிடம் வந்து முறையிட்டனர்.

குருபகவான், இந்திரனை, தன் சாமர்த்தியத்தால் சுயநிலைக்கு கொண்டு வந்தார். தேவர் குலம் பிழைத்தது.

குருவுக்கும் சுக்கிரனுக்கும் பல விதத்தில் கருத்து வேறுபாடு உண்டு. இருந்தாலும் குருவின் மகனாகிய அசன் என்ற விஸ்வஜித் சுகிரனிடம் மாணவனாகச் சேர்ந்து "சஞ்சீவனி" என்னும் வித்தையைத் தெரிந்து கொண்டான்.

குருபகவான் காசியில் வெகுகாலம் தங்கியிருந்து, அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அந்த லிங்கத்தின் அருகேயே இருந்து பதினாயிரம் தேவ ஆண்டுகள் பூசித்து, தவம் செய்திருக்கிறார்.

குருபகவானின் தவத்தைக் கண்டு மகிழ்ந்து அவர் முன்னே காட்சி தந்த சிவபெருமான், "மிகப் பெரிய தவத்தைச் செய்து, உன் மனதை இந்த லிங்கத் தானத்திலே நிறுத்திய சாதனைக்காக நீ நித்திய ஜீவனாக என்றென்றும் புகழ் பெற்று விளங்குவாய். அதுமட்டுமல்ல, உன்னுடைய திறமை, அறிவாற்றல், குணங்களினால், இன்றுமுதல் நீவிர் இந்திரனுக்கும் குருவாக விளங்கக் கூடிய பாக்கியம் பெறுவீர்" என்று வரம் கொடுத்தார்.


குருவானவர் பொன் வண்ண மேனியர். நான்கு திருக்கரங்கள் உண்டு. கமண்டலம், அட்சமாலை, யோகதண்டம், அபயம் என்பவற்றை அந்தக் கரங்களில் காணலாம்.

ஆனால், விஷ்ணு தர்மோத்தரம் என்னும் நூலில் ப்ருஹஸ்பதியை இரண்டு கரம் உடையவர் என்றும் அவற்றில் புத்தகமும் அட்சமாளையும் ஏந்திக் கொண்டிருப்பார் என்று செய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சாந்த மூர்த்தியாகத் திகழும் குருபகவான், சதுரமான பீடத்தில் இருப்பவர். கிழக்கு நோக்கி இருப்பவர். முடியுடையவர், பொன்னிறத்தினர், பொன்னிறச் சந்தனம் பூசுபவர், பொன்னிற மலர், பொன்மாலை, பொன்னாய், பொற்குடை, பொன்னிறதுவசம், கொண்டு காட்ச்சியளிப்பவர்.

குருவின் அதிதேவதை பிரம்மன். ப்ரத்யாதி தேவதை இந்திரன் ஆகும். நீதிகாரகர், தாராபதி, கற்க பீடாபஹாரர், சௌம்யா மூர்த்தி, த்ரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர் என்பவை வியாழ பகவானை குறிக்கும் சொற்களாகும்.

ஏழைக்கு இறங்குபவர், பறை, பைசாந்தி, மத்திமை, விகாரி என்ற நான்கு வகை வாக்குகளின் உருவை விளக்கிக் காட்டியவர். கருணைக்கடல், தூயவர், நீதி சாஸ்த்திர ஆசிரியர், களங்கமற்றவர் என்றெல்லாம் குருபகவானை பெருமையுடன் சொல்லப்படுவதுண்டு.

ப்ரஹஸ்பதி நீதி என்ற நூலில் "நகுஷன்" என்ற அசுரன் இந்திரன் மனைவியாகிய இந்திராணியை கவர்ந்து அவளை தன மனைவியாக்கிக் கொள்ள விரும்பினான். செய்தியை அறிந்த குருபகவான், நகுஷனை சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் ஏற்றி தன்னிடம் வரச் சொன்னார்.

தேவர்களின் குருவே தன்னை மதித்து, சப்தரிஷிகளை அனுப்பி, அவர்கள் தூக்கும் பல்லக்கில் வரச் சொன்னதை, கர்வம் கொண்டு திமிர் பிடித்து வந்த பொழுது, தன சக்தியால் நகுஷனை பாம்பாகா மாற்றி காட்டில் அலையை விட்டார், குருபகவான்.

குருவின் பார்வை ஒருவனுக்குக் கிடைக்குமானால், அவன் மூடனாக இருந்தாலும், அறிவாளியாக விளங்குவான்.

விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள ஒரு சுலோகம் குருவிற்காக உள்ளது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து, பக்தி ஸ்ரத்தையோடு சொன்னால், அவர் குருபகவானின் பேரருளைப் பெறுவார்.

ப்ருஹஸ்பதி ஸீராசார்யோ தைவான் சுபலக்க்ஷண:

லோகத்ரய குரு ஸ்ரீமான் சர்வஞ்ஞா: சர்வகோவித:

ஸர்வேச: சர்வா தீபீஷ்ட சர்வஜித் சர்வ பூஜித:

அக்ரோதனோ முனி சிரேஷ்ட நீதிகர்த்தா குரு: பிதா

விஸ்வாத்மா விச்ச ஆரித்தா ச விஸ்வயோனி ரயோனிஜ:

பூர்வ வஸ்ஸுவப்ரபுச் சைவ பார்த்தா சிவமகா பல:

இந்த அற்புதமான ஸ்லோகத்தை, கிருஷ்ணா பகவான், நந்த கோபன் வீட்டில் கூறியதாக வரலாறு.

குருபகவான் இந்த பூலோகத்தில் வந்து இறைவனை பூசித்த திருத்தலங்களில் மூன்று மிகவும் குறிப்பிடத்தக்கவை.

தென்குடித்திட்டை - தஞ்சாவூரிலிருந்து மாயாவரம் செல்லும் இருப்பு பாதையில் ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
திருவலிதாயம் (பாடி) - சென்னைக்குப் பக்கத்தில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 

திருசெந்தூர் - குருபகவான் மிகவும் விரும்பி பூசித்த முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்று. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது.

வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குரு ப்ரசோதயாத்:

இந்த குரு காயத்ரியை தினமும் பாராயணம் செய்கிறவர்களுக்கு எந்த குறையும் வராது, இருக்கின்ற குறைகளும் நீங்கிவிடும்.
தெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும், முக்கரணங்களின் தூய்மைக்கும் பொருளாக உள்ளவர்.
மேதைகள், ஞானிகள், பக்தர்கள் இவர்களுக்கு மூலகர்த்தா.
அந்தணர்களுக்கும், பசுக்களுக்கும் ஆதிமூலவர். உடல் வலிமை, உள வலிமையைத் தருபவரும் இவரே.தலைவணங்கா தலைமைப் பதவியையும் தருபவர். மாபெரும் சாதனைகளை படைப்பவரும் இவர்தான்.
நாட்டை ஆளவைப்பதும், நவீன யுக்திகளை கொடுப்பதும் இவர்தான். மென்மைக்கும், அற்புதமான குணத்திற்கும் சொந்தக்காரர்.
விவேகத்தை அளிப்பவர்,மந்தகாச முகத்தி உடையவர். இனிப்பில் பிரியர். மஞ்சள் நிறத்தவர். உடலில் சதையாக இருப்பவர். வாதம், பித்தம், கபம் இவற்றில் கபம் இவருடைய கையில் உள்ளது.

புஷ்பராக கல்லுக்குரியவர். கஜானாவை விளங்க வைப்பவர். ஆண் கிரகம் இவர். பஞ்ச பூதங்களில் ஆகாயம் இவர்.

வடகிழக்கு இவரது திசை. தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி. கடகம் உச்ச வீடு, மகரம் நீச வீடு.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆக்கிய மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதி. இவர் தசை நடக்கும் பொழுது நன்மைகளே நடக்கும்.

பகலில் இவருக்கு பலம் அதிகம். இவரது பார்வை பட்டால் அத்தனையும் நன்மையாகும்.

தேவானாஞ்ச ரிஷீணாஞ்ச குரும் காஞ்சன சந்நிபம்!
பக்திபூதம் த்ரிலோ கேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!
என்பது இவர் துதி.

சகலவிதமான சம்பத்தும், ஐஸ்வர்யங்களும் நமக்கு வேண்டுமென்றால் சௌந்தர்யலஹரியிலுள்ள கீழ் கண்ட ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.

அவித்யானா மந்தஸ்திமிர மிஹிர த்வீபநகரீ
ஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதி ஜரி
தரித்ராணாம் சிந்தாமணி குண நிகா ஜந்ம ஜலதௌ
நிமக்நா நாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதீ!

No comments:

Post a Comment