Sunday, 24 July 2016

34 சாக்கிய நாயனார் புராணம்

"வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே 
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்."

"நாள்தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்திய வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஏலவார்குழலி

அவதாரத் தலம் : சங்கமங்கை

முக்தி தலம் : சங்கமங்கை

குருபூஜை நாள் : மார்கழி - பூராடம்

"எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருளென்றே
துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம்
தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்"

பாடல் விளக்கம்:
எந்த நிலையில் நின்றாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், நிலையான சிறப்பை உடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப்பொருளாகும் எனத் துணிந்து தாம் மேற்கொண்டு ஏற்ற அப்புத்தக் கோலத்தினின்றும் நீங்காமலேயே தூயதாய சிவலிங்கத் திருமேனியை மிக்க அன்புடன் மறவாத நிலையில் போற்றி வருவாராய்,

சாக்கிய நாயனார் புராணம்



திருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார். சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந்தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங்கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார். காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் கண்டு தன் எண்ணத்தைச் செயல்படுத்த முனைந்தார். 

அடிகளார் காஞ்சிபுரத்திலுள்ள சாக்கியர்களுடன் பழகினார். நூல்கள் பல ஆராய்ந்தார். ஆனால் நாயனாரால் நல்ல வகையான நெறியைக் காண முடியவில்லை. அதனால் அடிகளார் மேலும் பற்பல சமய நூல்களைக் கற்கலானார். இறுதியாக சைவ சமய நூல்களையும் கற்றார். அதன் பிறகு அடிகளார் பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவநெறியே சாலச் சிறந்த வழி என்ற ஒப்பற்ற உண்மையைக் கற்றுத் தெரிந்துகொண்டார்! அதனால் அவர் உள்ளத் தெளிவு பெற்றார். மன்னிய சீர்ச் சங்கரன் தாள்தனைப் பணிந்து தூய சிவத்தைச் சித்தத்திலிருத்தி சிந்தை குளிர்ந்தார். 

சாக்கியர் கோலத்திலே இருந்தமையால் தம்மைப் பிறர் அறியா வண்ணம் சிவநாமத்தை அகத்திலேயே எண்ணி ஒழுகிய சாக்கிய நாயனார் பிறர் அறியாத வண்ணம் சிவலிங்க பூசையும் நடத்தி வந்தார். தினமும் சிவலிங்க தரிசன வழிபாட்டிற்குப் பிறகு தான் உண்பது என்ற உயர்ந்த பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் நாயனார் பரந்த நிலவெளி வழியாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது சிவலிங்க உருவம் ஒன்று வழிபாடு எதுவும் இன்றிக் கிடப்பதைக் கண்டு உள்ளமும் உடலும் உருகினார். 

இத்திருத்தொண்டர் சிவலிங்கத்தைத் தூய நீராட்டி, நறுமலர் இட்டு, பூசித்து மகிழத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் அந்த இடத்தில் நீரேது? மலரேது? நல்ல மனம் மட்டும் தானே இருந்தது! சாக்கிய நாயனார் அன்பின் பெருக்கால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே சிவலிங்கத்தின் மீது போட்டார். அன்பினால் எதற்கும் கட்டுண்ட இறைவன், சாக்கிய நாயனார் எறிந்ததை அன்புக் குழவியின் தளிர்க்கரம் பற்றித் தழுவுவது போன்ற இன்பப் பெருக்காக எண்ணினார்.

இல்லாவிடில் சாக்கிய நாயனார் எறிந்த கல் கயிலையில் தேவியுடன் கொலு வீற்றிருக்கும் எம்பெருமானின் திருவடித் தாள்களில் பொன் மலரென விழுமா என்ன? சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்தைக் கண்டு அரனார் ஆனந்தம் கொண்டு சாக்கிய நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். சாக்கிய நாயனார், அன்று முழுவதும் சிவலிங்க தரிசனத்தை எண்ணி எண்ணி எல்லையில்லா மகிழ்வு பூண்டார். 

மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விடத்தை வந்து அடைந்தார்! சிவலிங்கத்தைக் கண்டு, உவகை பூண்டார். அன்பினால் கல்லெறிந்து வழிபட்ட செயலை எண்ணினார். தமக்கு இத்தகைய மனப் பக்குவத்தைத் தந்தருளியது எம்பெருமானின் திருவருட் செயலே என்று உணர்ந்தார். சாக்கியர் வேடத்தில் இருக்கும் நான் மலரால் சிவனாரை வழிபடுவதைப் பிறர் காணில் ஏசுவர். ஆனால், கல்லால் எறிவதை எவராகிலும் காண்கின், வெறுப்பின் மிகுதியால் தான் இவ்வாறு செய்கிறார் என்று எண்ணுவர். 

இதுவும் அரனாரின் அருள் மொழியே அன்றி, வேறொன்றுமில்லை என்று தமக்குள் எண்ணிப் பெருமிதம் கொண்டார். ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு தமது இல்லத்திற்குச் சென்று உண்ணலானார். இவ்வாறு சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்தோறும் நடத்தி வந்தார். ஒருநாள் சாக்கிய நாயனார் அரனார் மீது கொண்டுள்ள பக்திப் பெருக்கால் சிவலிங்க வழிபாட்டைச் சற்று மறந்த நிலையில் திருவமுது செய்ய அமர்ந்து விட்டார். 

சட்டென்று எம்பெருமான் நினைவு கொண்ட சாக்கிய நாயனார் உள்ளம் பதறிப் போனார். எம்பெருமானே! இதென்ன சோதனை! எவ்வளவு தவறான செயலைப் புரிந்துவிட்டேன்! அண்ணலே ஏழையின் பிழை பொறுத்தருள்வீரே! என்று புலம்பி உள்ளம் உருகினார். எழுந்தோடினார்! பரந்த நிலவெளியை அடைந்து சிவலிங்கப் பெருமான் மீது அன்பு மேலிட கல் ஒன்றை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி எறிந்தார். அப்பொழுது சாக்கிய நாயனாரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது எழுந்தருளினார். சாக்கிய நாயனார் கரம் குவித்து நிலந்தனில் வீழ்ந்து பணிந்து, எம்பெருமானை வணங்கினார். இறைவன் சாக்கிய நாயனாருக்குப் பிறவாப் பேரின்பத்தைக் கொடுத்தருளினார்.

"ஆதியார் தம்மை நாளும் கல்லெறிந்து அணுகப் பெற்ற
கோதில்சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும்
சோதியார் அறிதல் அன்றித் துணிவது என் அவர்தாள் சூடித்
தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரைச் செப்பி."

பாடல் விளக்கம்:
பழம்பொருளாய சிவபெருமானை நாள்தோறும் கல் எறிந்து வழிபட்டு அதனால் தம்மை அடைந்த குற்றம் இல்லாத சிறப்புடைய தொண்டரான சாக்கிய நாயனார் திறத்தை, அவருக்கு அருள் செய்யும் சோதியாரான சிவபெருமான் அறிதலல்லாது நாம் துணிவது எவ்வாறு? அவர்தம் திருவடிகளைத் தலைமேற்கொண்டு, சிறப்புலியாரின் வரலாற்றை இனிச் சொல்லத் தொடங்கித் தீமையை நீக்கலுற்றேன்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment