"பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்."
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமூலட்டானேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிவகாமியம்மை
அவதாரத் தலம் : தில்லை
முக்தி தலம் : தில்லை
குருபூஜை நாள் : சித்திரை முதல் நாள்
"புரமூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை
உரனில் வரும் ஒருபொருளை உலகனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண்ணார்ந்து நிறைந்தானைப்
பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்."
பாடல் விளக்கம்:
அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவரும், அணிகலனாகப் பாம்புகளை அணிந்தவரும், ஞானம் முதிர்ந்த விடத்து வெளிப்படும் ஒப்பற்ற பொருளானவரும், அனைத்துலகங்களையும் தம் மாயையால் தோற்றுவித்திருப்பவரும், உயிர்களின் அகப் புறக் கருவிகளால் காணப்படாதவராயினும் அவ்வுயிர்களிடத்து நிலைத்து நின்று காட்டுபவருமான பரமனையே பாடுவாரின் பெருமையைப் பாடுவாம்.
பரமனையே பாடுவார் புராணம்
பரமனையே பாடுவார் என்ற தொகையடியார் தென்மொழியிலும் வடமொழியிலும் ஏனைய திசை மொழியிலும் அரவணிந்த அண்ணலின் புகழைப்பாடி பரவசமடைபவர்கள். உலகில் மனிதன் பிறவிப் பயனை உணர வேண்டுமென்றால் அரனாரையும் அவர்தம் அடியார்களையும் வழிபடவேண்டும் என்ற வாழ்க்கை நெறிவழி நின்று பரமனையே பாடுவர். மன்றிலே நடம் புரியும் வள்ளலையே பேரின்பம் காண பேரருள் புரியும் பெருமான் என்று உள்ளத்திலே நிலையாக வைத்து உள்ளம் உருகியபடி இன்புறுவர்.
"தென்தமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம் புரியும் வள்ளலையே பொருளாக
ஒன்றிய மெய்யுணர்வோடும் உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்."
பாடல் விளக்கம்:
தென்தமிழ், வடமொழி, பிறநாட்டு மொழிகள் ஆகிய மொழிகளுள் யாதொன்றில் தமக்குப் பயிற்சியிருப்பினும் அவற்றுள், அம்பலத்தில் கூத்தியற்றும் அருள் வடிவினனாகிய கூத்தப் பெருமானேயே நன்குணர்ந்து உயர்ந்த குறிக்கோளாகிய அவ்வொரு பொருளிலேயே பொருந்திய மனவுணர்வுடன் உள்ளம் உருகிப் பாடுவார்கள், பன்றியான திருமாலுடன் அன்னப் பறவையான நான்முகனும் தேடி அறிய இயலாதவாறு விளங்கும் பரமனையே பாடுவார் ஆவார்.
நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
No comments:
Post a Comment