Monday, 25 July 2016

38 கணநாத நாயனார் புராணம்

"கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்."

"திருஞானசம்பந்தரை வழிபட்டுத் திருக்கையிலையை அடைந்த மறையவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரியநாயகி

அவதாரத் தலம் : சீர்காழி

முக்தி தலம் : சீர்காழி

குருபூஜை நாள் : பங்குனி - திருவாதிரை

"ஆன தொண்டினில் அமர்ந்தபேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும்
ஞானம் உண்டவர் புண்டரீகக் கழல் அருச்சனை நலம் பெற்றுத்
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால்வரை எய்தி
மான நல்பெரும் கணங்கட்கு நாதராம் வழித் தொண்டின் நிலை பெற்றார்."

பாடல் விளக்கம்:

திருத்தொண்டில் விரும்பியிருந்த பேரன்பரான கணநாதரும், பரந்த மண் உலகத்தில் எந்நாளும் ஞானசம்பந்தரின் தாமரை போன்ற திருவடியை வழிபடுதலான நன்மையை அடைந்து, அதன் பயனாய்த், தூய மணமுடைய கொன்றைப் பூக்களைச் சூடிய சடையுடையவரின் ஒளியுடைய நீண்ட திருக்கயிலை மலையை அடைந்து, பெருமையுடைய நல்ல பெருஞ் சிவகணங்களுக்கு நாதராகும் தலைமை பெற்று, அங்கு வழி வழியாகச் செய்து வரும் திருத்தொண்டில் நிலைபெற்று நின்றார்.

கணநாத நாயனார் புராணம்



திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி என்னும் பெருமைமிக்க நகரில் மறையவர் குலத் தலைவராய்க் கணநாதர் என்னும் பெயருடைய சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் அந்தணர் மரபிற்கு ஏற்ப நாடோறும் சிவாகம விதிப்படி தோணியப்பரை வழிபட்டு வந்தார். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு புரியும் உயர்ந்த அறத்தை உணர்ந்து வாழ்க்கையை நடத்தி வந்தார். இப்பெரியார். 

அடியார்களுக்குச் செய்ய வேண்டிய சிறந்த தொண்டினைப் பற்றிய ஒப்பற்ற உண்மையான தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் தவறவில்லை! திருத்தொண்டு புரிவோர் முவ்வுலகமும் போற்றும் பெருமை பெற்று உயர்வர். அவர்கள் தாங்கள் செய்துவரும் திருத்தொண்டிற்கு இடையூறு நேருங்கால் தங்கள் உயிரையும் விட அஞ்சமாட்டார்கள். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தியதோடு நில்லாமல் தாமும் அதன் வழி நடந்தார். 

கோயிலில் அமைந்துள்ள நறுமலர்ச் சோலைகளைச் சீர்படுத்துவது, பொற்றாமரைக் குளத்தைச் செப்பஞ் செய்து சீர்படுத்துவது முதலியனவற்றைத் தவறாது செய்து வந்தார். திருமந்திர வாக்கின்படி, புண்ணியஞ் செய்வாருக்கு நறுமலர் உண்டு, திருநீருண்டு என்பதை கற்றறிந்து தெளிந்திருந்த இத்தொண்டர், இறைவழிபாட்டிற்கு இன்றியமையாத மலர்களைத் தரும் நந்தவனம் அமைத்தார். மலர்ச் செடிகளை முறைப்படி வளர்த்து மலர்களைப் பறித்து அழகுறத் தொடுத்து எழில் மிகும் பூ மாலையாக்கிப் பரமனின் பொன்னனாற் மேனிதனில் சாத்தி மகிழும் சிவபுண்ணியத்தைப் பெற்றிருந்தார் கணநாதர்.

இவர் திருசடை அண்ணலின் பூங்கழலைப் பணிந்ததோடு திருஞானசம்பந்தரின் திருவடிக் கமலங்களையும் அன்போடு மகிழ்ந்து வழிபட்டு வந்தார். திருமஞ்சனம் செய்தல், கோயிலில் மெழுகிடுதல், விளக்கிடுதல், திருமுறைகளை எழுதுதல், படித்தல் முதலிய திருத்தொண்டுகளையும் தவறாது செய்து வந்தார் இத்திருத்தொண்டர்! மற்றவர்களுக்கும் யார் யாருக்கு எது எது விருப்பமோ அவ்வப்பணியில் அவர்களை ஈடுபடச் செய்தார். அவர்களுக்குப் பக்தியும், நல்ல பழக்கமும் ஏற்படுமாறு செய்ய அரும் பாடுபட்டார். சிவத்தொண்டு புரிந்து வந்த கணநாதருக்குத் தொண்டர்கள் பலர் தோன்றினர். 

இறைவழிபாட்டின் தனிமையான இனிமையை உணர்ந்திருந்த இவர் இல்லறத்தின் இனிமையையும், தனிமையையும் நன்கு உணர்ந்திருந்தார். வள்ளுவன் வகுத்த இல்லற நெறியை நன்கு உணர்ந்து மனையாளோடு கருத்தொருமித்து வாழ்ந்து வந்தார். நாயனாரின் திருத்தொண்டினையும், பக்தியின் மேன்மையையும் கண்டு அவருக்குப் பேரின்ப நிலையை அளிக்கத் திருவுள்ளம் கொண்டார் திருத்தோணியப்பர். தொண்டருக்குத் தொண்டராகி, அரனாருக்கு அன்பராகி, ஆளுடைப்பிள்ளைக்கு அரும்பக்தனாகி வாழ்ந்தவர் கணநாதர்! வித்தகம் பேச வேண்டா, பக்திப் பணி செய்ய வேண்டும் என்ற நெறிமுறையைக் கடைப்பிடித்து வாழ்ந்த அருமையான சிவத்தொண்டர். பூ உலகில் பேரும் புகழும் பெற்று வாழ்ந்த இப்பெரியார், இறைவன் அருளால் பேரின்ப வீடு பெற்றுச் சிவகணங்களுக்குத் தலைமைப் பதவி பெற்றுத் திருத்தொண்டில் நிலையான இன்பத்தைப் பெற்றார்.

"உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய்யுணர்வு எய்தி
அலகில் தொண்டருக்கு அறிவு அளித்து அவர் திறம் அவனியின் மிசையாக்கும்
மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும் கண நாதனார் கழல் வாழ்த்திக்
குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றாம்.

பாடல் விளக்கம்:

உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு நஞ்சையுண்ட சிவபெருமானின் தொண்டின் உண்மைத் திறத்தில் உறுதியான மெய்யுணர்ச்சி பொருந்தப் பெற்று, அளவில்லாத தொண்டர்களுக்கு அவ்வவர் தொண்டிற்கான அறிவை அளித்து, அவர்களின் திறங்களை உலகிலே நிலை நிறுத்தும் விரிந்த பெரும் புகழையுடைய சீகாழியில் தோன்றிய கணநாதரின் திருவடிகளைத் துதித்து, விளங்கும் திருநீற்றுச் சார்பு பூண்ட வண்மையுடைய கூற்றுவ நாயனாரின் இயல்பை உளங் கொண்ட கொள்கையின்படி சொல்லப் புகுகின்றாம். 

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment