"அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்."
"அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்."
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பர்வத சுந்தரி
அவதாரத் தலம் : கீழப் பழையாறை
முக்தி தலம் : திருநல்லூர்
குருபூஜை நாள் : ஆனி - பூரம்
"சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக்
கந்தை கீளுடை கோவணம் கருத்து அறிந்து உதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்."
பாடல் விளக்கம்:
சிவபெருமான் திருவடிகளை அன்றிப் பிறிதொன்றையும் சிந்தியாதவராகிய அவர், மாலைக்காலத்துத் தோன்றும் செவ்வானத்தின் நிறத்தினை உடைய சிவபெருமானின் அடியார்களுக்கு அமுது செய்வித்துக் கந்தையையும், உடையையும், கோவணத்தையும் அவர் திருவுள்ளக் கருத்தறிந்து கொடுத்து, நல்வினைப் பயனால் தமக்குக் கிடைத்த செல்வப் பெருக்கால் அடையும் பயனை நாள்தொறும் பெற்று வருவாராயினர்.
அமர்நீதி நாயனார் புராணம்
பழையாறை என்னும் பழம்பெரும் பதியில் - வணிக குல மரபில் அமர்நீதியார் என்னும் சிவ அன்பர் தோன்றினார். வணிககுல மரபிற்கு ஏற்ப வியாபாரத்தில் வல்லமையுள்ளவராய், மேம்பட்டு விளங்கிய அவரிடமிருந்த பொன்னும், மணியும், முத்தும், வைரமும், துகிலும், அவரது செல்வச் சிறப்பையும், வெளிநாட்டினரோடு அவருக்கிருந்த வர்த்தகத் தொடர்பையும் உலகோர்க்கு எடுத்துக் காட்டின. இத்தகைய செல்வச் சிறப்பு பெற்ற அமர்நீதியார், சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்வதையே, இலட்சியமாகக் கொண்டிருந்தார். அவர் தமது இல்லத்திற்கு வரும் அடியார்களுக்கு அமுது அளித்து, ஆடையும், அரைத் துண்டும், கோவணமும் அளித்து அளவிலா ஆனந்தம் பெற்றார். பழையாறைக்குப் பக்கத்திலே உள்ள சிவத்தலம் திருநல்லூர். இவ்விடத்தில் ஆண்டுதோறும் அங்கு எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானுக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இவ்விழாவிற்கு வெளியூர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டு வருவர். அமர்நீதியாரும் அவ்விழாவிற்குத் தம் குடும்பத்துடன் சென்று இறைவனை வழிபடுவார். அவ்வூரில் அடியார்களுக்கு என்றே திருமடம் ஒன்றை கட்டினார். ஒரு சமயம் அவ்வூர் திருவிழாக்காலத்தில், அமர்நீதியார் தமது குடும்பத்தாரோடு மடத்தில் தங்கியிருந்தார். சிவனடியார்களுக்கு நல்ல பணிகள் புரியும் அமர்நீதியாரின் உயர்ந்த பண்பினை - பக்திப் பெருக்கினை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். அந்தண பிரம்மச்சாரி போன்ற திருவுருவம் பூண்டு, அவர் தங்கியிருந்த மடத்திற்கு எழுந்தருளினார். அமர்நீதியார் அடியாரைப் பார்த்ததும் மகிழ்ச்சயோடு வரவேற்று தேவரீர் இம்மடத்திற்கு இப்போது தான் முதல் தடவையாக வருகிறீர் என்று கருதுகிறேன். அடியார் இங்கே எழுந்தருளுவதற்கு யான் செய்த தவம் தான் என்னவோ! என முகமன் கூறி வரவேற்றார்.
அவர் மொழிந்ததைக் கேட்டு எம்பெருமான், அடியார்களுக்கு அமுதளிப்பதோடு, கந்தை, கீவ், அழகிய வெண்மையான கோவணம் முதலியனவும் தருகின்றீர் என்று கேள்வியுற்றுத்தான் உம்மைப் பார்த்துவிட்டுப் போக வந்தேன் என்று பதிலுரைத்தார். அம்மையப்பரின் அருள்வாக்கு கேட்டு மகிழ்ந்த அமர்நீதியார் உள்ளங்குளிர, மடத்தில் அநதணர்களுக்காக வேதியர்களால் தனியாக அமுது செய்கின்றோம். அதனால் ஐயன் தயவு கூர்ந்து திருவமுது செய்து அருள வேண்டும் என்று பக்திப் பரவசத்தோடு வேண்டினார். நன்று நன்று, உமது விருப்பத்தை யாம் உளமாற ஏற்கின்றோம். முதலில் யாம் காவிரியில் நீராடச் செல்ல இருக்கின்றோம். அதற்கு முன் ஒரு சிறு நிபந்தனை. என்ன சுவாமி! ஒன்றும் இல்லை. வானம் மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் ஒருக்கால் மழை வந்தாலும் வரலாம். இக்கோவணம் இரண்டும் நனைந்து போக நேரிடும். அதனால் ஒன்றை மட்டும் கொடுத்து விட்டுப் போகிறேன்.
பாதுகாப்பாக வைத்திருந்து தரவேண்டும். இந்தக் கோவணத்தைச் சர்வ சாதாரணமாக எண்ணி விடாதீர். இதன் பெருமையைப் பற்றி அப்படி, இப்படி என்று எடுத்து இயம்புவது அரிது. இவ்வாறு சொன்ன பெருமான், தண்டத்தில் இருந்த கோவணங்களில் ஒன்றை அவிழ்த்து, அமர்நீதியாரிடம் கொடுத்துவிட்டு, நீராடி வரக் காவிரிக்குப் புறப்பட்டார். வேதியர் மொழிந்ததை மனதில் கொண்ட அமர்நீதியார் அக்கோவணத்தை மற்ற கோவணங்களோடு சேர்த்து வைக்காமல் தனிப்பட்ட இடத்தில் தக்க பாதுகாப்பாக வைத்தார். அடியார்களைச் சோதிப்பதையே தமது திருவிளையாட்டாகக் கொண்ட பெருமான், திருநீலகண்டரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற திருவோட்டை அன்று மறைத்தது போல், இன்று இவ்வணிகரிடம் கொடுத்த கோவணத்தையும் மாயமாக மறையச் செய்தார்.
அத்தோடு நிறுத்தவில்லை. தமது சோதனையை! அன்று பகீரதனுக்காகக் கங்கையைப் பெருக விட்ட பெருமான் இன்று வணிகனைச் சோதிக்க திடீரென்று மழையையும் வரவழைத்தார். முதல்வோன், கங்கையில் தான் நீராடினாரோ, இல்லை காவிரியில் தான் நீராடினாரோ அல்லது நம் மாமனது திருவிடத்திலே பாய்ந்தோடும் வற்றாத வைகை நதியில் தான் நீராடினாரோ அவருக்குத்தான் வெளிச்சம்! சற்று நேரத்திற்கெல்லாம் மழையில் நனைந்து கொண்டே, மடத்தை வந்தடைந்தார். அதற்குள் அமர்நீதியார், அடியார்க்கு வேண்டிய அறுசுவை உண்டியைப் பக்குவமாகச் சமைத்து வைத்திருந்தார். அடியார் மழையில் நனைந்து வருவதைக் கண்டு மனம் பதறிப்போன அமர்நீதியார், விரைந்து சென்று அடியார் மேனிதனைத் துவட்டிக் கொள்ளத் துணிதனைக் கொடுத்தார். இதெல்லாம் எதற்கு? முதலில் நான் கொடுத்து கோவணத்தை எடுத்து வாரும், எதிர்பாராமல் மழை பெய்ததால் எல்லாம் ஈரமாகி விட்டது என்றார் இறைவன்.
அமர்நீதியார் கோவணத்தை எடுத்து வர உள்ளே சென்றார். வேதியரின் சூது மொழியை, அமர்நீதியார் எப்படி புரிந்து கொள்ள முடியும்? இறைவனின் கொவ்வைச் செவ்வாய் இதழ்களிலே குமிழ்ச் சிரிப்பு சிறிது நேரம் நர்த்தனம் புரிந்தது. அமர்நீதியார் சென்று, கோவணத்தைத் தாம் வைத்திருந்த இடத்தில் பார்த்தார். அங்கு கோவணத்தைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார். எங்குமே காணவில்லை. யாராவது எடுத்திருக்கக் கூடுமோ? என்று ஐயமுற்று அனைவரையும் கேட்டுப் பார்த்தார், பலனேதுமில்லை. அமர்நீதியாரும், அவர் மனைவியாரும் செய்வதறியாது திகைத்தனர். மனைவியோடு கலந்து ஆலோசித்து இறுதியில் மற்றொரு அழகிய, புதிய கோவணத்தை எடுத்துக்கொண்டு, வேதியர் முன் சென்று, வேதனை முகத்தில் தோன்ற, தலைகுனிந்து நின்றார். கண்களில் நீர்மல்க அந்தணரை நோக்கி, ஐயனே! எம்மை அறியாமலே நடந்த தவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்றார் அமர்நீதியார்.
அமர்நீதியார் மொழிந்ததைக் கேட்ட செஞ்சடையான், என்ன சொல்கிறீர்? எமக்கு ஒன்றுமே புரிய வில்லையே! என்றார். ஐயனே! தங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கோவணத்தைப் பாதுகாப்பான இடத்தில் தான் வைத்திருந்தேன். ஆனால், இப்பொழுது போய்ப் பார்த்தால் வைத்திருந்த இடத்தில் அதைக் காணவில்லை. பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. அதனால் தேவரீர் இதனை அணிந்துகொண்டு எம் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று மிகத் தாழ்மையோடு மனம் உருகி வேண்டினார்.
அமர்நீதியாரின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், எம்பெருமானின் திருமுகத்திலே கோபம் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. நன்றாக உளது உமது பேச்சு. சற்று முன்னால் கொடுத்துச் சென்ற கோவணம் அதற்குள் எப்படிக் காணாமற் போகுமாம்? நான் மகிமை பொருந்திய கோவணம் என்று சொன்னதால், அதனை நீரே எடுத்துக்கொண்டு, மற்றொரு கோவணத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றலாம் என்று நினைக்கிறீரோ? இந்த நிலையில் நீர் அடியார்களுக்குக் கோவணம் கொடுப்பதாக ஊரெல்லாம் முரசு முழுக்குகின்றீரோ! கொள்ளை லாபம் கொழிக்க, நீர் நடத்தும் வஞ்சக வாணிபத்தைப்பற்றி இப்போது அல்லவா எனக்குப் புரிகிறது.
உம்மை நம்பி நான் அல்லவா மோசம் போனேன்! மதுரை மீனாட்சி அம்மன் கைப்பிடிக்க, வளையல் வியாபாரியாக வந்த சோமசுந்தரக் கடவுள் அமர்நீதியாரின் வாணிபத்தைப் பற்றி மேற்கண்டவாறு கடிந்து கூறினார். எம்பெருமான் மொழிந்ததைக் கேட்டு அஞ்சி நடுங்கிய அமர்நீதியார், அறியாது நடந்த பிழையை மன்னித்து பொறுத்தருள வேண்டும். இவ்வெளியோன் வேண்டுமென்றே செய்யவில்லை. காணாமற் போன கோவணத்திற்கு ஈடாக அழகிய, விலை உயர்ந்த பட்டாடைகளும், பொன்மணிகளும் எவ்வளவு வேண்டுமாயினும் தருகின்றேன். ஐயன் எங்ஙனமாகிலும் சினம் தணிந்து எம்மைப் பொறுத்தருள வேண்டும். என்று பயபக்தியுடன் பிரார்த்தித்தார்.
பன்முறை மன்னிப்புக் கேட்டார். அடியாரை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார். அமர்நீதியார், கல்லும் கரையக் கெஞ்சுவது கண்டு, சினம் சற்று தணிந்தாற்போல் பாவனை செய்த வேதியர், தண்டில் இருக்கும் நனைந்த கோவணத்தைக் காட்டி, இது உம்மிடம் கொடுத்த கோவணத்தோடு கொடுத்தால் அதுவே போதுமானது. பொன்னும் பொருளும் எமக்கு எதற்கு என்று மொழிந்தார். இறைவனின் தீர்ப்பைக் கேட்டு அமர்நீதியார் சற்று மன அமைதி கொண்டார். உள்ளே சென்று துலாக்கோலை எடுத்து வந்து மறையவர் முன் நாட்டினார். அந்தணரிடமிருந்த கோவணத்தை வாங்கி ஒரு தட்டிலும் தம் கையில் வைத்திருந்த கோவணத்தை மற்றொரு தட்டிலுமாக வைத்தார். நிறை சரியாக இல்லை. அதுகண்டு அமர்நீதியார் அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த கோவணங்களை எடுத்து வந்து வைத்தார். அப்பொழுதும் நிறை சரியாக நிற்கவில்லை.
அமர்நீதி நாயனாரின் தட்டு உயர்ந்தேயிருந்தது. ஒவ்வொன்றாக மற்ற கோவணமனைத்தையும் தட்டில் வைத்துக்கொண்டே வந்தார். எடை சமமாகவே இல்லை. அந்தணரின் கோவணம் இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. அம்மாயத்தைக் கண்டு வியந்தார் அமர்நீதியார். இஃது உலகத்திலே இல்லாத பெரும் மாயையாக இருக்கிறதே என்று எண்ணியவாறு தொடர்ந்து நூல் பொதிகளையும், பட்டாடைகளையும் கீள்களையும் ஒவ்வொன்றாக அடுக்கடுக்காகத் தட்டில் வைத்துக் கொண்டே போனார். எவ்வளவு தான் வைத்தபோதும் எடை மட்டும் சரியாகவே இல்லை. அமர்நீதியார் தட்டு உயர்ந்தும், சிவனார் தட்டு தாழ்ந்தும் இருப்பதைப் பார்க்கும் போது, அமர்நீதியார் அடியார்களிடம் கொண்டுள்ள பக்தியும், அன்பும் உயர்ந்துள்ளது என்பதையும், அத்தகைய பக்திக்கு முன்னால் இறைவனின் சோதனை கூடச் சற்றுத் தாழ்ந்து தான் உள்ளது என்ற உண்மையை உணர்த்துவதுபோல் தோன்றியது.
மடத்திலிருக்கும் அனைவரும் இக்காட்சியைக் கண்டு வியந்து நின்றனர். தராசுத் தட்டின் மீது இறைவனால் வைக்கப்பட்டுள்ள கோவணத்தின் மகிமையை யார் தான் அறிய முடியும்? வேதத்தையல்லவா? ஈரேழு உலகமும் அதற்கு ஈடு இணையாகாதே! அன்பர்களின் அன்பிற்குத் தானே அது கட்டுப்படும்! இறைவனின் இத்தகைய மாய ஜால வித்தையை உணரச் சக்தியற்ற தொண்டர் சித்தம் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார். தொண்டர் நல்லதொரு முடிவிற்கு வந்தார். பொன்னும் பொருளும், வெள்ளியும், வைரமும், நவமணித் திரளும் மற்றும் பலவகையான உலோகங்களையும் கொண்டுவந்து குவித்தார். தட்டுக்கள் சமமாகவில்லை. தம்மிடமுள்ள எல்லாப் பொருட்களையும் தராசு தட்டில் கொண்டுவந்து வைத்து மலைபோல் குவித்தார். இப்படியாக அவரிடமுள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு வழியாகத் தீர்ந்தது. இனிமேல் எஞ்சியிருப்பது தொண்டரின் குடும்பம் ஒன்றுதான்! அமர்நீதியார் சற்றும் மன உறுதி தளரவில்லை. இறைவனை மனதிலே தியானித்தார்.
ஐயனே! எம்மிடம் இருந்த பொருள்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன. நானும், என் மனைவியும், குழந்தையும் தான் மிகுந்துள்ளோம். இந்தக் தராசு சமமான அளவு காட்ட, நாங்கள் தட்டில் உட்கார தேவரீர் இயைந்தருள வேண்டும் என்று வேண்டினார் நாயனார். பிறவிப் பெருங்கடலில் நின்றும் தம் தொண்டனைக் கரையேற்றும் பொருட்டு தராசில் குடும்பத்தோடு சேர்ந்து அமர அனுமதி கொடுத்தார் எம்பெருமான். அமர்நீதியாரும், அவரது மனைவியாரும், மகனும் அடியாரின் பாதங்களில் ஒருங்கே வீழ்ந்து வணங்கி எழுந்தனர். நாங்கள் திருவெண்ணீற்றில் உண்மையான பக்தியுடன் இதுகாறும் பிழை ஏதும் புரியாமல் வாழ்ந்து வந்தோம் என்பது சத்தியமானால் இந்தத் தராசு சமமாக நிற்றல் வேண்டும் என்று கூறினார். திருநல்லூர் பெருமானைப் பணிந்தார். நமச்சிவாய நாமத்தை தியானித்தவாறு தட்டின் மீது ஏறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து மனைவியாரும், மகனும் பரமனை நினைத்த மனத்தோடு ஏறி அமர்ந்தனர். மூவரும் கண்களை மூடிக்கொண்டு, ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தால் முறைப்படி ஓதினர். துலாக்கோலின் இரண்டு தட்டுகளும் சமமாக நின்றன.
மூவரும் கண் திறந்தனர்.அதற்குள் முக்கண்ணன் மாயமாய் மறைந்தார். அந்தணரைக் காணாது அனைவரும் பெருத்த வியப்பில் மூழ்கினார், அப்போது வானத்திலே தூய ஒளி பிரகாசித்தது. நீலகண்டப் பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது காட்சி அளித்தார். விண்ணவர் கற்பக பூக்களை மழைபோல் பொழிய மறைகள் முரசுபோல் முழங்கின. வணிகரும், மனைவியாரும், மகனும் துலாத்தட்டில் மெய்மறந்து இருந்தபடியே சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தனர். இறைவனின் அருளினால் துலாத்தட்டு புட்பக விமானமாக மாறியது. அமர்நீதியார் குடும்பம் அப்புட்பக விமானத்தில் கைலயங்கிரியை அடைந்தது. அமர்நீதியார் இறைவனின் திருவடித்தாமரை நீழலிலே இன்புற்று வாழலானார்.
"நாதர் தம் திருவருளினால் நற்பெருந் துலையே
மீது கொண்டு எழு விமானம் அதுவாகி மேல் செல்லக்
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவபுரியினை அணைந்தார்."
பாடல் விளக்கம்:
இறைவர் தம் திருவருளினால், நன்மையும், பெருமையும் மிக்க அத்துலையே அவர்களை மேலே அழைத்துச் செல்லுகின்ற விமானமாகி, மேற்செல்ல, குற்றமற்ற அன்பராகிய நாயனாரும் அவர்தம் மைந்தரும் மனைவியாருமாகிய குடும்பத்தாரும் எஞ்ஞான்றும் குறைவுபடாததும் அழிவு படாததுமாகிய சிவபதத்தைக் கொடுத்த பெருமானுடன் சிவபுரியை அணைந்தனர்.
"மலர்மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவணப் பழமை காட்டி
உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்
தலைமிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும்."
பாடல் விளக்கம்:
தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும், திருமாலும் காண்பதற்கு அரியவரான சிவபெருமான், பலரும் புகழும் திருவெண்ணெய் நல்லூரில் அடிமையாதற்குரிய ஓலையின் பழமையைக் காட்டி, உலகம் உய்ய ஆட்கொள்ளப்பட்டவரான நம்பியாரூரரின் திருவடிகளை நினைந்து, அத்திருவடிகளின் கீழ்வாழும் தலைமையே நம் தலைமையாகும்.
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
No comments:
Post a Comment