ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா ஆகிய மும்மூர்த்தி களும் ஒரே தலத்தில் அருளும் ஒப்பற்ற திருத்தலம் சுசீந்திரம். குமரி மாவட்டத்தின் தொன்மையான ஆலயங்களுள் ஸ்ரீதாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலும் ஒன்று!
சாபத்தில் தவித்த இந்திரன் சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே மூர்த்தமாக வைத்து வழிபட்டு, சாபத்திலிருந்து விமோசனம் பெற்ற தலம் இது. ஆகவே, இங்கு இன்றளவும் அர்த்தஜாம பூஜையை இந்திரனே வந்து நடத்துவதாக ஐதீகம்!
ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக பிராகாரத்தில் பிரமாண்டம் காட்டி, பிரமிப்பூட்டும் திருத்தலம் இது! அதேபோல், தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளும், விளக்கேந்திய சிலைகளும் சிற்பக் கலையின் நுணுக்கத்தைப் பறைசாற்றுவதாக உள்ளன.
மும்மூர்த்திகள் ஒருங்கே இருந்து அருள்பாலிக்கும் தலம் என்றாலும், சுசீந்திரம் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருபவர்… ஸ்ரீஆஞ்சநேயர்தான்!
ஸ்ரீராமபிரானின் சந்நிதிக்கு அருகில், கூப்பிய கரங்களுடன் சுமார் 18 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீஆஞ்சநேயர். இவருக்கு ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் என்று திருநாமம். கேட்ட வரங்களை அள்ளித் தருகிற வரப்பிரசாதி இவர்.
அந்நியர்களின் படையெடுப்பின்போது, பிரமாண்டமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சநேயரின் திரு விக்கிரக மூர்த்தத்தை எங்கே சிதைத்துவிடுவார்களோ எனப் பயந்து, பூமியில் புதைத்து வைத்தனராம். காலங்கள் உருண்டோடின. சுமார் 85 வருடங்களுக்கு முன்பு, இந்த விஷயத்தை அறிந்த அடுத்தடுத்த தலைமுறையினர் ஒன்று சேர்ந்து, புதைத்த இடத்தில் இருந்து ஸ்ரீஆஞ்சநேயரை எடுத்து வந்து, மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினர் என்கிறார்கள் கோயில் ஊழியர்கள்.
இன்னொரு சிறப்புத் தகவல்… ‘காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை’ என இந்திய எல்லையை வரையறுத்துச் சொல்வார்கள், அல்லவா? அப்படி, காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்கள், ஊர்களிலிருந்தும் சுசீந்திரம் தலத்துக்கு வந்து, ஸ்ரீஆஞ்சநேயருக்கு சந்தனக் காப்பு, வடைமாலை, வெண்ணெய்க் காப்பு மற்றும் மாக்காப்பு ஆகியன செய்து வழிபட்டுள்ளனராம்.
சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட இந்தப் பிரமாண்ட விஸ்வரூப அனுமனுக்கு, இலங்கையை எரித்தபோது வாலில் தீப்பிடித்ததால் உண்டான உஷ்ணத்தைத் தணிக்க, வெண்ணெய்க் காப்பு செய்கின்றனர். தவிர, அனுமனுக்கு நெய் தீபாராதனை காட்டப்படுவதும் அரிதான ஒரு நிகழ்வு என்று சிலிர்க்கின்றனர் பக்தர்கள்.
பின்னாளில், எத்தனையோ ஊர்களில் மிகப்பெரிய அளவில் ஸ்ரீஆஞ்சநேயரின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்திருந்தாலும், புராதனமான ஸ்ரீஅனுமன் விக்கிரகம் என்றால், அது சுசீந்திரம் ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர்தான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
நன்றி – சக்தி விகடன்
No comments:
Post a Comment