Sunday, 24 July 2016

28 திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்

"வம்பறா வரிவண்டு மணநாற மலரும் 
மதுமலர் நல் கொன்றையான் அடியலாற் பேணா 
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்."

"ஞானப்பால் உண்டவர், தேவாரம் பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பெரியநாயகி

அவதாரத் தலம் : சீர்காழி

முக்தி தலம் : ஆச்சாள்புரம்

குருபூஜை நாள் : வைகாசி - மூலம்

"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயல் புகலித் திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைகொண்டு திருத்தொண்டு பரவுவாம்."

பாடல் விளக்கம்:
இவ்வுலகில் நான்மறைகளின் நெறிகள் தழைத்து ஓங்கவும், அவற்றுள் மேலாய சைவத் துறைகள் நிலைபெற்று விளங்கவும், உலகுயிர்கள் வழி வழியாகத் தழைத்துச் செழித்து விளங்கவும், தூய திருவாய் மலர்ந்து அழுதவரான, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றியருளிய திருஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளைத் தலைமேற் கொண்டு போற்றி, அம்மலரடிகளின் துணையால் அப்பெருமான் செய்த திருத்தொண்டின் இயல்புகளை எடுத்துச் சொல்லுவோம்.

திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்



பிறையணிந்த பெருமானை வழி வழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம் கொழிக்கும் திருநகரங்கள் பலவற்றுள் சீர்காழியும் ஒன்றாகும். இத்தலத்திற்கு பிரமபுரம், வேணுபுரம், சீர்காழி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராம், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரெண்டு பெயர்கள் உண்டு. 

நிலவளமும், நீர்வளமும், தெய்வவளமும் ஒருங்கே அமையப்பெற்ற இப்பழம்பெரும் பதியிலே சிவனின் சிந்தை மறவாது செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் மரபிலே - கவுணியர் கோத்திரத்திலே - சிவபாதவிருதயர் என்னும் பெயருடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருடைய வாழ்க்கைத் துணைவியார் பெயர் பகவதியார். இவ்விரு சிவனருள் தம்பதியரும் இல்லற இலக்கணமறிந்து திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் இறைவனிடத்தும் எல்லையில்லாப் பக்தி பூண்டு யாவரும் வியக்கும் வண்ணம் இல்லறத்தை இனிமையாக நடத்தி வந்தனர். 

இவ்வாறு, இவர்கள் வாழ்ந்து வரும் நாளில் சைவ சமயமும் சற்று வலிமை குறைந்து இருக்க, பவுத்தமும், சமணமும் வன்மை பெற்று விளங்கிற்று. வேறு சில சமயங்களால் வேதநெறி குன்றியது. இரவையே பகல் போல் பிரகாசமாகத் தோன்றச் செய்யும் திருவெண்ணீற்றின் மகிமையும் பெருமையும் போற்றுதலின்றி நலிந்து காணப்பட்டன. சிவசமயத்திற்கு ஏற்பட்ட இத்தகைய தாங்கொணாத் துயர்கண்டு சிவபாதவிருதயரும் அவரது மனைவியாரும் மிகவும் மனம் வாடினர். அவர்கள் இருவரும் புறச் சமயங்களால் வரும் தீமைகளைப் போக்கித் திருவெண்ணீற்றின் ஆக்கத்தை அகிலமெல்லாம் ஓங்கச் செய்யத்தக்க சிவப்பற்றும் தெய்வ அருளும் மிக்க மகனைப் பெற்றுப் பெருமிதமடைய எண்ணினர். 

இச்சிவ அன்பர்கள் எப்போதும் முழுமுதற் பரம்பொருளின் நினைவாகவே இருந்தனர். அதற்கென அருந்தவம் செய்தனர். திருத்தோணியப்பருக்குத் தொண்டுகள் பல புரிந்தனர். அதன் பயனாக தோணியப்பர் இச்சிவத் தொண்டர்களின் மனக்குறையைப் போக்க மக்கட்பேற்றை அளித்து அருளத் திருவுள்ளம் கொண்டார். பிறைமுடிப் பெருமானின் திருவருளால் பகவதியார் கருவுற்றாள். வைகாசி முதல் நாளன்று - சைவம் தழைக்க திருஞான சம்பந்தப்பெருமான் பகவதியாருக்கும் சிவபாத விருதயருக்கும் திருமகனாய் அவதாரம் செய்தார். 

செல்வன் பிறந்த பேருவகையில் பெற்றோர்கள் பொன்னும் பொருளும் வந்தோர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கினர். அன்பர்களுக்கு அமுது அளித்தனர். ஆலயத்திற்கு முக்காலமும் கோலாகலமாகப் பெருவிழா போல் சிவ வழிபாடுகள் பல செய்தனர். மண்மாதாவின் மடியில் பிறந்த அருந்தவப் புதல்வன் பெற்றோர்களின் மடியிலும் துங்கமணி மாடத்திலும் தூயமணி பீடத்திலும், அணிமிகும் தொட்டிலிலும் விளையாடினான் .செங்கீரை, சப்பாணி, அம்மானை முதலிய பருவங்களைக் களிப்போடு கடந்து, சின்னஞ்சிறு தேர் உருட்டி வீதியிலே தளர் நடை பயிலும் பருவத்தை அடைந்தான். 

இப்படியாகப் பிரபஞ்சத்தில் கமலமலர்ப் பாதங்களைப் பதிய வைத்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்பிறைபோல் வளர்ந்து வந்த தவப்புதல்வருக்கு மூன்றாவது ஆண்டு தொடங்கிற்று. வழக்கம் போல் சிவபாதவிருதயர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடப் புறப்பட்டார். அப்போது தவப்புதல்வன் அழுது கொண்டே தந்தையைப் பின்னே தொடர்ந்து வாயில் வரை வந்தான். பிஞ்சுக் கால்களிலே இனியதான கிண்கிணி ஓசை ஒலிக்க, மெல்ல அடி இட்டு வந்த செல்வன் தாமும் உடன் வருவதாகக் குழலைப் பழிக்கக் கூறி நின்றான். 

மழலை மொழிதனில் உலகை மறந்த சிவபாத விருதயர் தம்மோடு நீராடி மகிழ குழந்தையையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். குளத்தை வந்தடைந்த சிவபாதவிருதயர் குழந்தையைக் கரையிலே உட்கார வைத்துவிட்டு நீராடக் குளத்தில் இறங்கினார்; ஜபதபங்கள் புரிந்து தண்ணீரில் மூழ்கினார். குழந்தை தந்தையாரைக் காணாது மனம் கலங்கியது; கண்களிலே கண்ணீர் கசிய சுற்றும் முற்றும் பார்த்தது! குழந்தை கோபுரத்தை நோக்கி, அம்மே! அப்பா எனத் தன் பவழ வாயால் அழைத்தது. பொருமிப் பொருமி அழுதது. தோணியப்பர், உமாதேவியாரோடு வானவீதியில் பேரொளி பரவ எழுந்தருளினார்.

எம்பெருமான் உமாதேவியாரிடம், தேவி! நமது தொண்டனுக்குச் சிவஞானத்தை குழைத்த பாலைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி ஊட்டுவாயாக என்று அருளினார். அன்னை பராசக்தி குழந்தையின் அருகே வந்தாள். வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மடி மீது அமர்த்திக் கொண்டாள். தமது திருமுலைப் பாலினைப் பொற்கிண்ணத்தில் ஏந்தினாள். அவரது கண் மலரிலே வழியும் நீரைத் துடைத்தாள். சிவஞான அமுதத்தைக் கலந்த பொற்கிண்ணத்தை அவரது கைகளிலே அளித்து பாலமுதத்தினை உண்பாயாக என மொழிந்தாள். 

குழந்தையின் கையைப் பிடித்தவாறு பார்வதி தேவியார் பாலைப் பருகச் செய்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்தி ஆனந்தக் கண்ணீர் பூண்டது. திருத்தோணியப்பராலும் உமாதேவியாராலும் ஆட்கொள்ளப்பெற்ற குழந்தை ஆளுடைப் பிள்ளையார் என்னும் திருநாமம் பெற்றது. அமரர்க்கும் அருந்தவசியர்க்கும் அறிவதற்கு அரிய பொருளாகிய ஒப்பற்றச் சிவஞானச் செல்வத்தைச் சம்பந்தம் செய்ததனாலே சிவஞான சம்பந்தர் என்னும் திருநாமமும் பெற்றார். அப்பொழுதே சம்பந்தர் உவமையில்லாத கலைஞானத்தைப் பெற்று விளங்கும் பெருமகனானார். 

குளத்தில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரையேறினார் சிவபாதவிருதயர். ஒப்பற்ற ஞானத்தோடு பேருணர்வு பெற்று விளங்குகின்றார் பிள்ளை என்ற உண்மையை அவர் அறிந்திலார். குழந்தையருகில் வந்தார் .பிஞ்சுக் கரங்களிலே பொற்கிண்ணமிருப்பதைக் கண்டார். செக்கச் சிவந்த செங்கனி இதழ்களிலே பால் வழிவதனையும் கண்டார். அந்தணர் ஐயமுற்றார். பால் மணம் மாறாப் பாலகனுக்கு எவரோ எச்சிற் பால் ஊட்டிச் சென்றனரே என ஐயமுற்றார். கள்ளமில்லாப் பாலகனை கடுங்கோபத்தோடு பார்த்தார். 

கீழே கிடந்த குச்சியை எடுத்தார் பாலகன் அருகே சென்று, உனக்கு எச்சிற் பாலைக் கொடுத்தது யாரென்று எனக்கு காட்டு என்று மிக்கச் சினத்துடன் கேட்டார். தந்தையின் சுடுமொழியினால் மெய்ஞான சம்பந்தர் விழிகளிலே ஆனந்தக் கண்ணீர் தான் ததும்பியது. சம்பந்தர் ஒரு காலைத் தூக்கி ஒரு திருக்கை விரலை உச்சி மேல் உயர்த்தி விண்ணிலே விடையின் மேல் பேரொளியோடு எழுந்தருளிய பெருமானைச் சுட்டிக்காட்டினார். ஞானசம்பந்தர் தமது ஒப்பற்ற ஞானத் திருமொழியினால் எல்லையில்லா வேதங்கட்கு மூலமாகிய ஓங்காரத்தோடு சேர்ந்த எழுத்தால் இன்பம் பெருகப் பாடத் தொடங்கினார். 

தாம் பாடும் தமிழ்மறை பரமசிவத்தின்பாற் சென்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்ப சிவபிரானது திருச்செவிறைச் சிறப்பித்துச் செவ்விசையோடு, தோடுடைய செவியன் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடலானார். தெய்வத்திருவருள் பெற்ற திருஞானசம்பந்தரை மிரட்டுவதற்காகக் கோலெடுத்து வந்த அந்தணர் திகைத்தார். செயலற்று நின்றார். அவர் கையிலே இருந்த கோல் அவரையறியாமலேயே கை நழுவிக் கீழே விழுந்தது. அந்தணர் ஆனந்தக் கூத்தாடினார். அருந்தமிழ்ப் பதிகத்தால் உண்மையை உணர்த்திய புதல்வரின் முகத்தில் இறைவனின் தோற்றப் பொலிவுதனைக் கண்டு மெய்யுருகினார். 

சம்பந்தப் பெருமான் தோணியப்பர் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்குச் செல்ல மெல்ல தம் சீரடி எடுத்து வைத்தார். தந்தையாரும் பிள்ளையாரைப் பின் தொடர்ந்தார். தோணியப்பர் கோவிலையடைந்த ஞானசம்பந்தர் இறைவனை வணங்கி வழிபட்டார். பதிகம் ஒன்றைப் பாடினார். இந்த அற்புத நிகழ்ச்சி பகலவனின் காலை இளங்கீற்றுப்போல் ஊரெங்கும் பரவியது. ஞானசம் பந்தரின் அருஞ்செயலை நேரில் கண்டு களிப்புற அனைவரும் கோவிலின் வாயிலில் ஒருங்கே கூடினர். ஞானசம்பந்தர் அங்கிருந்த அனைவருக்கும் எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மேல் வந்து தம்மை ஆட்கொண்டு அருளிய திறத்தினை மொழிந்தார். 

அனைவரும் ஞானசம்பந்தரை, காழியர் செய்த தவமே! கவுணியர்தனமே! கலைஞானக் கடலே, அக்கடலிடை தோன்றிய அமுதே! மறைவளர் திருவே! வைதிக நிலையே! வளர்ஞானப் பொறையணி முகிலே! புகலியர் புகலே! காவிரி பெற்ற மணியே! மறையின் ஒளியே! புண்ணிய முதலே! கலை வளரும் திங்களே! கண் கவரும் கதிரொளியே! இசையின் முதலே! மூன்றாண்டிலே சைவந் தழைக்க எம்பெருமான் அருள் பெற்ற செல்வனே! நீ வாழ்க! என வாழ்த்தி மகிழ்ந்தனர். சம்பந்தர் கோவிலை விட்டுத் வீட்டிற்குப் புறப்பட்டார். அன்பர்களும் அடியார்களும் தொடர்ந்து புறப்பட்டனர். 

சிவபாதவிருதயர் தம் தெய்வத் திருமகனைத் தோளிற் சுமந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வீதி வழியே பவனி புறப்பட்டார். கோவிலை மும்முறை வலம் வந்தார். தோணிபுரத்துப் பெருமக்கள் புடை சூழ்ந்து கொண்டு ஞானசம்பந்தரை வாழ்த்தி வணங்கியதோடு தங்களுடைய மேலாடைகளை வானில் எறிந்து அளவு கடந்த ஆரவாரம் செய்தனர். மங்கல மங்கையர்கள் மேல் மாடங்களிலே வந்து நின்று மங்கள மொழிகள் கூறினர். தேன் சிந்தும் நறுமலர்களையும், நறுமணப் பொடியையும் நெற்பொரியோடு கலந்து தூவி வாழ்த்தினர். வீதிதோறும் மணிவிளக்குகள் ஒளியூட்டின. எங்கும் மாவிலைத் தோரணங்கள் அழகு செய்தன. வீடெல்லாம் அழகாக அலங்கரித்தனர். வெண் சிறு கடுகு, முகில் முதலியவற்றால் தூபமெடுத்தார்கள். இப்படியாகத் திருவீதியெங்கும் மறை ஒலியும், மங்கல வாத்தியமும் ஒலிக்க ஆளுடைப்பிள்ளையார் இல்லத்தை அடைந்தார். 

பகவதியார் தமது தவச் செல்வனை ஆரத்தி எடுத்து வாரி அணைத்து எடுத்துக் கொண்டார். முத்தமாரி பொழிந்தார். உலகையே மறந்து உவகை பூண்டார். வியக்கத்தக்கத் திருவருளைப் பரமனருளால் பெற்ற ஞானசம்பந்தர் தந்தையாருடன் சிவத்தலங்கள் தோறும் சென்று ஆலய தரிசனம் செய்ய எண்ணினார். ஒரு நாள் தந்தையாருடன் ஆலய தரிசனம் காணப் புறப்பட்டார். அடுத்துள்ள திருக்கோலக்காவை அடைந்தார். அங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானை வழிபட்டார். கையினால் தாளம் போட்டுக் கொண்டே, மடையில் வாளையாய எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தார். 

பிஞ்சுக்கரம் சிவக்கத் தாளம் போடுவதைப் பார்த்த செஞ்சடைவண்ணர் ஐந்தெழுத்து மந்திரம் எழுதிய பொன்னாலான இரண்டு தாளங்களை ஞானசம்பந்தரின் திருக்கை மலரிலே வந்து தங்குமாறு திருவருள் பாலித்தார். ஞானசம்பந்தர் இறைவனின் கருணையை எண்ணி உள்ளமும் உடலும் பூரித்தார். இறைவன் அருளால் தம் அங்கை மலரிலே வந்து தங்கிய பொற்தாளங்களைச் சிரம் மீது எடுத்து வணங்கினார். அவற்றாலே தாளம் போட்ட வண்ணம் ஏழிசைகளும் தழைத்தோங்குமாறு பக்திப் பெருக்கோடு தமிழிசை பொழிந்து திருக்கடைக் காப்பு சாத்தி நின்றார். 

தேவத் துந்துபிகள் முழங்க விண்ணவர் பூ மழையைப் பொழிந்தனர். தந்தையார் ஞானசம்பந்தரைத் தம் தோள் மீது சுமந்து கொண்டு சீர்காழிக்கு வந்து நின்றார். ஞானசம்பந்தருக்குப் பொன்னாலான தாளம் அளித்தமையால் திருத்தாளமுடையார் கோவில் என்று அத்தலத்திற்குச் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. சீர்காழியில் உள்ள தொண்டர்களும் சுற்றுப்புற ஊர்களிலுள்ள சிவத் தொண்டர்களும் அந்தண சிரேஷ்டர்களும் கூட்டங் கூட்டமாக வந்து ஞான சம்பந்தரை வழிபட்டனர். சம்பந்தர் அனைவரோடும் கோயிலுக்குச் சென்றார். தோணியப்பரை எட்டுப் பதிகங்கள் அடங்கிய கட்டளை ஒன்றில் அமைந்த பூவார் கொன்றை என்ற தேவாரப் பதிகம் பாடி வணங்கினார். 

சிவனருட் செல்வரின் சுந்தர தரிசனத்தால் சீர்காழி அன்பர்கள் பாலாழியில் மூழ்கிய பேரின்பத்தைப் பெற்றார்கள். இவ்வாறு, எம்பெருமானுக்கு சம்பந்தனார் திருத்தொண்டு புரிந்து வரும் நாளில் திருநனிப்பள்ளி அன்பர்கள் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் என்று சம்பந்தரைக் கேட்டுக் கொண்டார். ஒருநாள் சம்பந்தர், தாயின் ஊராகிய திருநனிப் பள்ளிக்குப் புறப்பட்டார். தந்தையார் தனயனைத் தோளிலே சுமந்து நடந்தார். திருநனிப்பள்ளிப் பெருமானைத் தமிழ்மறை பல பாடி வணங்கியவாறு புறப்பட்டார். திருவலம்புரம், பல்லனீச்சரம், திருச்சாயக்காடு, திருவெண்காடு, திருமுல்லைவாயில் முதலிய சிவத்தலங்களை தரிசித்த வண்ணம் மீண்டும் சீர்காழியை வந்தடைந்தார் திருஞானசம்பந்தர்! ஞானசம்பந்தர் சீர்காழியில் இருந்தவாறே சுற்றுப்புறத்துள்ள பல சிவத் தலங்களைத் தரிசித்துப் பதிகங்கள் பாடி வந்தார். 

சம்பந்தருடைய தெய்வத் திருப்பணியைப் பற்றிக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாராகிய மதங்க சூளாமணியாரும் ஞான சம்பந்தரை தரிசிக்கச் சீர்காழிக்கு வந்தனர். ஞானசம்பந்தர் அவர்கள் தம்மை வீழ்ந்து வணங்கும் முன்பே அன்போடு வீழ்ந்து வணங்கி எழுந்தார். ஞான சம்பந்தர் தேவார அமுதும் பொழிந்தார். அத்தேவார அமுதத்தைப் பாணர் தம்பதியர் யாழிசைத்து மகிழ்ந்தனர். ஞானசம்பந்தர் பாட, பாணர் யாழிசைக்க, பாலும் தேனும் கலந்தாற்போல் எங்கும் தமிழ் மழை பொழிந்தது. 

திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்க சூளாமணியாரும் ஞானசம்பந்தருடனேயே இருந்து அவருடைய பாசுரங்களை யாழிலே இசைக்கும் அரும் பெரும் தொண்டை மனங்குளிர - பரமன் செவி குளிர - கேட்போர் உள்ளம் உருகத் தொடர்ந்து நடத்தி வரலாயினர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் ஞானசம்பந்தருக்குத் தில்லையில் எழுந்தருளியிருக்கும் நடராசப் பெருமானை வழிபட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. 

யாழ்ப்பாணரோடு தந்தையாரையும் அழைத்துக் கொண்டு தில்லைக்குப் புறப்பட்டார் சம்பந்தர். தந்தையார், சம்பந்தரைத் தோளில் சுமந்து கொண்டு மகிழ்வோடு புறப்பட்டார். சீர்காழி மெய்யன்பர்கள் சம்பந்தரை வழி அனுப்பி வைத்தனர். தில்லைவாழ் அந்தணர்கள் ஞானசம்பந்தர் பெருமானைப் பூரண பொற்கும்ப கலசங்கள் வைத்து வரவேற்று வீதி வழியே அழைத்துச் சென்றனர். தில்லைத் திருவீதியையும், எழுநிலைக் கோபுரத்தையும் வணங்கியவாறே ஆலயத்தை வலம் வந்த ஞானசம்பந்தர் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பதிகம் பாடிக்கொண்டே தெற்கு ராஜகோபுரத்தின் வழியாக சென்று நடராஜப் பெருமானை வணங்கினார். 

அவரது பாடல்களை பாணரும் அவரது மனைவியாரும் யாழில் இசைத்தனர். பல நாட்கள் தில்லையில் தங்கி திருப்பணிகளைச் செய்தார் சம்பந்தப் பெருமான்! தில்லையில் தங்கி இருந்த ஞான சம்பந்தர் அருகிலுள்ள திருவேட்களம் சென்றார். அங்கு திருக்கோவிலிலே தங்கி இருக்கும் அரனாரைப் பாடிப் பாடி, உள்ளம் உருகினார். அங்கிருந்தபடியே அடிக்கடி தில்லைக்கு வந்து சிற்றம்பலத்தையும் தரிசனம் செய்து வரலானார். பாணர் வேண்டுகோளுக்கிணங்க அவரது சொந்த ஊராகிய திருஎருக்கத்தம்புலியூருக்கு சம்பந்தர் புறப்பட்டார். ஆங்காங்கே கோவில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டு திருப்பதிகங்களைப் பாடிக் கொண்டே சென்றார். ஞானசம்பந்தருக்கு திருநெல்வாயில் அரந்துறையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. 

இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு உச்சிநாதர் என்று பெயர். அது காரணம் பற்றியே அத்தலத்திற்கு திருவுச்சி என்றும் ஒரு பெயர் உண்டு. திருமகனின் ஆசையை நிறைவேற்ற தந்தையார் அவரைத் தமது தோளில் சுமந்துகொண்டு புறப்பட்டார். தந்தையார் தம்மைத் தூக்கிக் கொண்டு நடப்பது கண்டு சம்பந்தர் மனம் கலங்கினார். தந்தையாரைத் தோளிலே தூக்கிச் செல்ல வேண்டாம் என்று கூறிய ஞானசம்பந்தர், தமது பட்டுப்பாதம் நோவதையும் அறியாது நடக்கலானார். இவர்கள் போகும் வழியே மாறன்பாடி என்னும் தலம் ஒன்று எதிர்ப்பட்டது. இரவு நெருங்கவே அனைவரும் அங்கே தங்கினர். 

திருநெல்வாயில் அரத்துறை அமைந்த இறைவன், ஞான சம்பந்தர் சேவடி நோக நடந்துவருவதை எண்ணி, அவ்வூர் அடியார்களின் கனவில் தோன்றினார். ஞானசம்பந்தன் தளிர் அடிகள் நோக நம்மைத் தரிசிக்க வருகின்றான். அவனை ஏற்றி வருவதற்காக முத்துச் சிவிகையையும், முத்துக் குடையையும், முத்துச் சின்னங்களையும் வைத்திருக்கின்றோம். அவற்றை எடுத்துச் சென்று, இது எமது கட்டளை என்று கூறி அழைத்து வருவீர்களாக! என சிவ பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். எம்பெருமான், ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி, நாம் உனக்கு மகிழ்ந்து அருளும் முத்துச்சிவிகை, முத்துக்குடை முதலியவற்றைப் பெற்றுக் கொள்வாயாக எனத் திருவாய் மலர்ந்தருளினார். 

பொழுது புலர்ந்தது! ஞானசம்பந்தர் இறைவனின் திருவருட் கருணையை எண்ணிப் பதிகம் ஒன்றைப் பாடிப் பரமன் அருளைப் போற்றினார். அதற்குள் மறையோர்கள் முத்துச்சிவிகையோடு வந்தனர். ஞானசம்பந்தப் பெருமானைக் கண்டு இறைவன் திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகத்தைச் சொல்லினர். முத்துச் சிவிகையில் எழுந்தருளப் பிரார்த்தித்தனர். நெல்வாயில் மெய்யன்பர்கள் சம்பந்த பெருமானையும் அவரது தந்தையாரையும் உடன் வந்த அடியார்களையும் நெல்வாயில் அரத்துறைத் திருக்கோவிலுக்கு மேளதாள இன்னிசை முழக்கத்துடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டனர். ஞானசம்பந்தர் அரத்துறை அரனாரை வழிபட்டுப் பதிகம் பலவற்றைப் பாடினார். அவ்வூர் அடியார்கள் விருப்பத்திற்கு இணங்க சில காலம் நெல்வாயிலில் தங்கினார் சம்பந்தர். அங்கிருந்தவாறே அருகிலுள்ள பல சிவன் கோவில்களையும் வழிபட்டு வரலானார். பிறகு சீர்காழியை வந்தடைந்தார். 

சீர்காழிப் பகுதியில் எழுந்தருளியிருந்த சம்பந்தர் அனுதினமும் தோணியப்பரைப் பாடிப் பரவசமுற்றார். ஞானசம்பந்தருக்கு உரிய பருவத்தில் அவரது பெற்றோர்கள், முப்புரி நூலணியும் சடங்கினைச் சீரோடும் சிறப்போடும் நடத்தினர். ஞானசம்பந்தர் சீர்காழியில் தங்கி இருக்கும் நாளில் ஞானசம்பந்தருடைய அன்பையும், அருளையும், ஞானத்தையும், மேன்மையையும் கேள்வியுற்ற திருநாவுக்கரசர் சீர்காழிக்கு வந்தார். அவரது வருகையை முன்னதாகவே தெரிந்துகொண்ட சம்பந்தர் அன்பர் புடைசூழ அப்பரடிகளை எல்லையிலேயே எதிர்கொண்டழைத்தார். 

ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அகமகிழ்ந்து களித்தனர். ஞானசம்பந்தர் கரங்குவித்து இன்பம் பெருக இன்மொழியால் அப்பரே என்றழைக்க நாவுக்கரசர் அவரை நோக்கி அடியேன் என்று உள்ளம் உருக வணங்கினார். இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர். ஞானசம்பந்தருடன் தங்கி இருந்து திருத்தலங்கள் பவலவற்றைத் தரிசித்து வந்த அப்பரடிகள் ஒருநாள் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். ஞானசம்பந்தர் திருத்தோணியப்பரைச் செந்தமிழ் மாலை விகற்பங்களான திருமொழிமாற்று, திருமாலை மாற்று, வழிமொழித் திருவிராகம், திருஏகபாதம், திருவிருக்குறள், திருவெழுக கூற்றிருக்கை, திருவிராகம் போன்ற பற்பல திருப்பதிகங்களை உள்ளம் உருக பாடிப் பரவசம் பூண்டார். இத்திருப்பதிகங்கள், மூல இலக்கியமாக வீடுபேற்றிற்கான உண்மை இயல்பினை உணர்த்தும் சன்மார்க்க பதிகங்களாக அமைந்துள்ளன. 

ஒருநாள் தந்தையாருடன், பிள்ளையார் சிவயாத்திரையைத் தொடர்ந்தார். அதுசமயம் பாணரும் அவரது மனைவியாரும் உடன் சென்றார்கள். சோழ நாட்டிலுள்ள பல சிவத் தலங்களை தரிசித்தவாறு திருப்பாச்சிலாச்சிரமத்தை அடைந்தனர். திருக்கோவிலை வலம் வந்து இறைவனைத் தொழுது நின்ற சம்பந்தர் இறைவன் திருமுன் கிடந்த கொல்லி மழவன் மகளைக் கண்டார். மழநாட்டுத் தலைவன் கொல்லி மழவன் வலிப்பு நோயால் துன்புறும் தன் மகளை இவ்வாலயத்தில் விட்டுச் சென்று விட்டான். இறைவன் அருளால் தன் மகளுக்கு நோய் நீங்கும் என்றெண்ணித்தான் மழவன் இவ்வாறு செய்தான். 

இந்த சமயத்தில், ஞானசம்பந்தர் ஆலயத்திற்கு வந்துள்ளார் என்பதைக் கேள்விப்பட்டான் மன்னன். ஆளுடைப் பிள்ளையாரால் எப்படியும் தன் மகளுக்கு உடல் பூரண குணமடையும் என்று மனம் குளிர்ந்த மழநாட்டுத் தலைவன் ஞானசம்பந்தரைக் காண ஓடோடி வந்தான். தலைவன் ஞானசம்பந்தரிடம் மகளின் உடல் நிலையைக் கூறி வருந்தி உள்ளம் உருகி நின்றான். ஞானசம்பந்தர் துணிவளர் திங்கள் எனத் தொடங்கும் பதிகத்தை, மழவன் மகளின் வலிப்பு நோய் நீங்குமாறு உள்ளம் இரங்கிப் பாடினார். இறைவன் திருவருளால் ஞானசம்பந்தர் பதிகம் பாடி முடிந்ததும் தலைவன் மகள் நோய் நீங்கி, சுய உணர்வு பெற்று எழுந்தாள். 

ஞானசம்பந்தரின் வியக்கத்தக்க இவ்வருட் செயலை எண்ணி உள்ளமும் உடலும் பொங்கிப் பூரித்துப்போன தலைவனும், தலைவன் மகளும் தெய்வத் திருமகனின் தாள்தனில் வீழ்ந்து வணங்கி கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க நின்றனர். ஞானசம்பந்தர் அவர்களை வாழ்த்தினார். அங்கியிருந்து புறப்பட்ட ஞானசம்பந்தர் மேலும் பல கோயில்களை வழிபட்ட வண்ணம் கொங்கு நாட்டை வந்தடைந்தார். கொங்குநாட்டில் மக்களைக் கொல்லும் கொடும் பனியைக் கண்டார். அவ்வினைக்கு இவ்வினை எனத் தொடங்கும் பதிகமொன்றைப் பாடிக் கொடும் பனி அந்த நாட்டினைச் சேரா வண்ணம் பேரருள் புரிந்து மக்களைக் காத்தார். கொங்கு நாட்டு மக்கள் ஞானசம்பந்தரைப் போற்றி புகழ்ந்து வாழ்த்தி வணங்கினர். 

இவ்வாறு இறைவனைத் தரிசித்துப் பதிகங்கள் பல பாடி, பாரோர் புகழ்ப் பற்பல அற்புதங்களை நிகழ்த்தி, ஊர் ஊராகச் சுற்றி வந்த ஞானசம்பந்தர், திருப்பட்டீ சுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் தரிசிக்கத் திருவுள்ளம் கொண்டு அத்திருத்தலம் நோக்கிப் புறப்பட்டார். ஞானசம்பந்தர் வெய்யிலில் நடந்து வரும்பொழுது திருவுளங் கனிந்த இறைவன் அவருக்குப் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அமைத்து நிழல் கொடுக்கச் செய்தார். முத்துப் பந்தலின் நிழலிலே திருப்பட்டீசுரத்தை அடைந்த ஞானசம்பந்தர் எம்பெருமானை வழிபட்டுப் பதிகம் ஒன்றைப் பாடினார். அங்கியிருந்து புறப்பட்டுத் திருவாடுதுறையை வந்தடைந்தார் திருஞான சம்பந்தர். அங்கு தொண்டர்களும், அடியார்களும், அந்தணர்களும், ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து வரவேற்று வணங்கினர். 

ஞானசம்பந்தர் அத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தார். அப்பொழுது, அவருடைய தந்தையார் அவரிடம், சீர்காழியில் வேள்வி நடத்துவதற்குப் பொன்னும் பொருளும் வேண்டும் என்று கேட்டார். ஞானசம்பந்தர் இறைவன் திருவடியை எண்ணித் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். இறைவன் ஒரு பீடத்தில் எடுக்க எடுக்க என்றும் குறையாத ஆயிரம் பொன் நிறைந்த கிழி ஒன்றைக் கொடுத்து அருளினார். தந்தை சிவபாதவிருதயர் மனம் மகிழ அதைக் கொண்டு வேள்வி நடத்துவதற்காகச் சீர்காழியை நோக்கிப் புறப்பட்டார். ஞானசம்பந்தரும் விடை கொடுத்து அனுப்பி வைத்தார். 

திருவாடுதுறையில் தங்கியிருந்த சம்பந்தர் பாடினார். பாணர் யாழ் மீட்டி மகிழ்ந்தார். மெய்யன்பர்கள் இசை வெள்ளத்தில் மூழ்கினர். அவ்வூரிலுள்ள பாணருடைய உறவினர்களும், சுற்றத்தார்களும் தங்கள் அறியாமையால் ஞானசம்பந்தர் பாடும் பதிகங்கள் பாணர் யாழ் மீட்டி வாசிப்பதால் தான் புகழ் பெறுகின்றன என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருந்தனர். அவ்வெண்ணத்தை அவர்கள் பாணரிடமே பெருமையுடன் வெளியிடவும் செய்தனர். அதுகேட்ட பாணர், உளம் துடித்துப் போனார். ஞானப் பாலுண்ட சம்பந்தரிடம், தன் சுற்றத்தாரின் அறியாமையையும் செருக்கையும் அடக்கவேண்டும் என்று உள்ளமுருக வேண்டினார். அதைக் கேட்ட ஞானசம்பந்தர் மாதர் மடப்பிடி எனத் தொடங்கிடும் திருப்பதிகமொன்றைப் பாடினார். 

பாணர் அப்பதிகத்தை யாழில் மீட்டிப் பாட இயலாது செயலற்றுப் போனார். பாணர் கண் கலங்கினார். வேதனை கருணையை உணராது யாழை உடைக்க முற்பட்டது தவறு. இந்தக் கருவியில் முடிந்த அளவுக்கு எவை கிட்டுமோ அவற்றை முன்போல் இதனிலிட்டு வாசிப்பீராக என்று ஞானசம்பந்தர் பாணருக்கு அன்பு கூர்ந்து அருளி வாழ்த்தினார். பாணர் முன்போல் யாழில் பண் அமைத்துப் பதிகம் பாடினார். அதுகண்ட பாணருடைய உறவினர்களும், சுற்றத்தார்களும் தங்கள் தவற்றை உணர்ந்தனர். ஞானசம்பந்தருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி, தங்கள் தவற்றுக்கு மன்னிப்புக் கோரினர். அங்கியிருந்து சிவயாத்திரை புறப்பட்ட ஞானசம்பந்தர் திருச்சாத்த மங்கையை அடைந்து, திருநீலநக்க நாயனாரைக் கண்டு மகிழ்ந்து வேறு பல தலங்களைத் தரிசித்த வண்ணம் செங்காட்டங்குடி வழியாக திருமருகல் என்னும் தலத்தை வந்தடைந்தார். திருமருகல் கோயில் மடத்தில் தங்கியிருந்து எப்போதும் இறைவனை வழிபட்டு வந்தார் 

சம்பந்தர். ஒருநாள் அங்கு வியக்கத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. திருமருகல் கோயில் மடத்தில் ஒரு கன்னிப் பெண்ணும் ஒரு வணிக மகனும் தங்கி இருந்தனர். அக்கன்னிப் பெண்ணின் காதலனான வணிக மகன் ஓர்நாள் அவ்விடத்தில் பாம்பு தீண்டி உயிர் நீத்தான். காதலனுக்கு ஏற்பட்ட கதியை எண்ணிக் கன்னி மகள் துடித்தாள். பெற்றோருக்குத் தெரியாமல் அத்தை மகனை மணக்க வேண்டும் என்று ஓடிவந்த தனது ஆசையில் இப்படியொரு பேரிடி வீழ்ந்ததே என்றெண்ணி தத்தளித்தாள். அப்பெண்மணி வணிக மகனைத் தீண்ட முடியாத நிலையில் தாங்கொணாத் துயரால் பலவாறு சொல்லி புலம்பிக் கொண்டே இருந்தாள். அவளது புலம்பல் கோயிலை நோக்கி வரும் ஞானசம்பந்தர் செவிகளில் விழுந்தது. வாடிய முகத்துடனும், வடிக்கும் கண்ணீருடனும் ஒடிந்து விழுந்த பூங்கொடி போல் தன் நிலை மறந்து நின்ற வணிக மகள், ஞானசம்பந்தரைக் கண்டாள். 

திருமருகல் தெய்வமே எழுந்தருளினாற்போல் சித்தத்தில் கொண்டாள். ஓடிச்சென்று அவரது பாதங்களில் வீழ்ந்தாள். ஞானசம்பந்தர் அப்பெண்மணிக்கு ஆறுதல் மொழி கூறினார். அப்பெண்மணி தனது சோகக் கதையைச் சொல்லத் துவங்கினாள். நான் பிறந்த ஊர் வைப்பூர். தாமன் என்பவர் என் தந்தை. என் தந்தைக்கு என்னுடன் ஏழு பெண்கள் உண்டு. இங்கு இறந்து கிடக்கும் என் அத்தை மகனுக்குத் தன் பெண்களில் ஒருவரைக் கொடுப்பதாகச் சொல்லிய அவர், மற்ற ஆறு பெண்களில் ஒருத்தியைக் கூட இவருக்குக் கொடுக்காமல் ஏமாற்றியதை எண்ணி மனம் பொறாத நான், இவரை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக இங்கு ஓடிவந்தேன். வந்த இடத்தில் விதி எனக்குச் சதி செய்துவிட்டது. என் வாழ்க்கைத் துணைவராக இல்லறத்தில் இருக்க வேண்டிய என் அத்தை மகன் அரவத்தால் தீண்டப்பட்டு எனக்குமில்லாமல் இந்த உலகத்திலும் நில்லாமல் போய்விட்டார் எனச் சொல்லி மேலும் புலம்பிக் கண்ணீர் வடித்தாள். ஞானசம்பந்தர் கால்களில் விழுந்து அழுதாள் அந்த வணிகக் குலப் பெண்மணி! 

ஞானசம்பந்தர் திருமருகல் தெய்வத்தைப் பணிந்து எழுந்து, சடையாய் எனுமால் எனத் தொடங்கி பதிகம் ஒன்றைப் பாடியருளினார். நீலகண்டப் பெருமான் சம்பந்தரின் செந்தமிழ்ப் பண் கேட்டுச் சிந்தை மகிழ்ந்தார். திருமருகல் உறையும் உமையொருபாகன் வணிக மகனைக் காத்தார். இறைவனின் கருணையால் வணிக மகன் உயிர் பெற்று எழுந்தான். அனைவரும் அதிசயித்து சம்பந்த பெருமானை வணங்கி துதித்தனர். வணிக மகனும், வணிக மகளும் ஞானசம்பந்தரின் பாத கமலங்களில் வீழ்ந்து வணங்கினர். சம்பந்தர் இருவரையும், திருமணம் செய்து கொண்டு என்றென்னும் நீடு புகழ் வாழ்வீராக என்று ஆசி கூறி வழி அனுப்பினர். 

ஞானசம்பந்தர் அத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து, சிவ வழிபாட்டை இடையறாது நடத்தி வந்தார். அந்நாளில், அவரைக் காண சிறுத்தொண்ட நாயனார் வந்தார். இருவரும், ஒருவரை ஒருவர் வணங்கி மகிழ்ந்தனர். இருவரும் திருமருகல் நீலகண்டப் பெருமானை வழிபட்டவாறு, அங்கியிருந்து புறப்பட்டு, திருச்செங்காட்டாங்குடிக்கு வந்தனர். அங்கு கோவில் கொண்டுள்ள கணபதீச்சுரரை வணங்கி வழிபட்டு வாழ்ந்து வரலாயினர். சில நாட்களில், அங்கியிருந்து புறப்பட்டுத் திருப்புகலூரை அடைந்தார். அங்கு முருகநாயனார் தங்கியிருந்த திருமடத்தில் தங்கினார். அச்சமயத்தில் அப்பரடிகள் தொண்டர் பலருடன் திருப்புகலூரை வந்தடைந்தார். அப்பரடிகள் திருவாரூர் தரிசனத்தைப் பற்றிச் சிந்தை குளிரும் பதிகத்தால் சிறப்புற எடுத்து இயம்பியதைக் கேட்ட ஞானசம்பந்தருக்குத் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்ட பெருமானைப் போற்றிப் பணிந்து வரவேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. 

ஞானசம்பந்தர் அப்பரடிகளைத் திருப்புகலூரிலேயே சில காலம் தங்கி இருக்கும்படி கூறி விட்டு திருவாரூருக்குப் புறப்பட்டார். ஞானசம்பந்தர் திருவாரூர் செல்லும் வழியே உள்ள சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்து மகிழ்ந்தவாறே திருவாரூரை வந்து அடைந்தார். திருவாரூரில் தியாகேசப் பெருமானைக் கண்குளிரக் கண்டு களித்தார். தமிழ்ப் பாமாலை தொடுத்து இன்புற்றார். சில காலம் தங்கியிருந்து பேரின்பம் கொண்டார். பின்பு திருவாரூரை நீத்துத் திருப்புகலூர் வந்தார். அங்கு அப்பரடிகளோடு தங்கியிருந்து எம்பெருமானை வழிபட்டு வரலானார். திருப்புகலூர்ச் செஞ்சடை வண்ணர் அருள்பெற்று, இன்புற்று ஆளுடைப் பிள்ளையாரும், அப்பரடிகளும் அங்கியிருந்து புறப்பட்டு மற்றும் பல சிவத்தலங்களைத் தரிசித்து வரலாயினர். 

இரு ஞானமூர்த்திகளும் கால்நடையாகவே சென்று கொண்டிருந்தனர். ஞானசம்பந்தர் இறைவன் தமக்களித்த முத்துப்பல்லக்கில் அமர்ந்து வராமல் தம்முடன் நடந்து வருவது, அப்பருக்கு மன வேதனையைக் கொடுத்தது. அப்பரடிகள் ஞானசம்பந்தரை நோக்கி, முத்துச் சிவிகைத்தனித்து வரத் தாங்கள் கால் கடுக்க நடந்து வருதல் ஆகாது. தாங்கள் எம்பெருமான் அருளிச் செய்த முத்துச் சிவிகையில் எழுந்தருள்க என்று அன்போடு வேண்டினார். அது கேட்டு ஞானசம்பந்தர் சிறிதும் மனம் ஒவ்வாத நிலையில் அப்பரிடம், தாங்கள் நடந்துவர நான் மட்டும் முத்துச் சிவிகையில் ஏறி வருவது முறையல்ல என்று கூறினார். 

எனினும் எம்பெருமானின் திருவருட் கருணையை எண்ணிப் பார்த்த ஆளுடைப் பிள்ளையார், தாங்கள் முன்னர் எழுந்தருளுங்கள், தங்கள் பின்னால் நான் மெதுவாக வந்து சேருகிறேன் என்றார். அப்பரடிகளும் அதற்கு இசைந்தார். இவ்வாறாக அப்பரடிகள் முதலில் ஒரு திருத்தலத்தை சேர்வதும், பின்னார் ஆளுடைப்பிள்ளையார் முத்துச்சிவிகையில் அத்தலத்தை அடைவதுமாக, இரு சிவநேசச் செல்வர்களும் தங்கள் சிவ யாத்திரையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருந்தனர். இப்படியாக இரு திருத்தொண்டர்களும் திருக்கடவூர், திருவம்பர் முதலிய தலங்களைத் தரிசித்தவாறு திருவீழிமிழலையை வந்தடைந்தனர். 

அந்நகரத்துத் தொண்டர்களும், அடியார்களும் இவர்களைப் போற்றி வணங்கினர். ஞானசம்பந்தர் வீழிமிழலை எம்பெருமானைப் போற்றி சடையார் புனலுடையார் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றை உள்ளமுருகப் பாடி எம்பெருமானின் சேவடியை வழிபட்டார். ஆளுடை அரசரும் ஆளுடைப் பிள்ளையாரும் தினந் தவறாது அரனாரை, அழகு தமிழ்ப் பாமாலைகள் புனைந்து வழிபட்டு வந்தார்கள். ஊர் மக்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அவர்கள் சிவச் செல்வர்களைப் போற்றிப் பணிந்து பெருமிதம் கொண்டனர். சீர்காழி அந்தணர்கள், திருத்தோணியப்பரைத் தரிசிக்கச் சீர்காழிக்கு வருமாறு அவர்களை வேண்டினர். ஞானசம்பந்தர் திருவீழிமிழலை இறைவன் விடை அளிப்பின் வருவோம் என்று மறுமொழி கூறினார். 

அன்றிரவு பிறைத்திங்களை முடிந்த பேரருளாளர், ஞானசம்பந்தர் கனவிலே எழுந்தருளி, இத்திருத்தலத்திலேயே திருத்தோணியப்பர் திருக்கோலத்தைக் காட்டி அருளுகின்றோம் என்று திருவாய் மலர்ந்தார். பொழுது புலர்ந்தது. ஆளுடைப் பிள்ளையாரும், அப்பரடிகளும், மறையோர்களும் புடைசூழக் கோவிலுக்குச் சென்றனர். திருவீழிமிழலை ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன், தோணியப்பர் திருக்கோலம் விளங்க காட்சியளித்தார். தோணியப்பர் திருக்கோலத்தைக் கண்டு பிள்ளையார் பக்திப் பரவசத்தால் கைம்மரு பூங்குழல் எனத் தொடங்கிப் பாடினார். தோணியப்பரின் பேரருளை எண்ணிப் பார்த்த சீர்காழி அந்தணர்கள், ஞானசம்பந்தரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர். 

ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவீழிமிழலை இறைவனை நாள்தோறும் வழிபட்டு பதிகங்கள் பலவற்றைப் பாடி வந்தனர். இவ்வாறு இருந்துவரும் நாளில் திருவீழிமிழலை நகரத்தில் மழையின்மையால் பஞ்சம் பெருகியது. திருவீழிமிழலைப் பெருமான் இவர்கள் கனவிலே எழுந்தருளி, சிவனடியார்க்கும், மக்களுக்கும் பஞ்சத்தால் துன்பம் வருமோ என்று நீங்கள் அஞ்சற்க! அவர்கட்கு எவ்வித தீங்கும் நேராது. அடியார்களது வாட்டத்தைப் போக்கும் பொருட்டு நாள்தோறும் திருக்கோயில் கிழக்குப் பீடத்திலும், மேற்குப் பீடத்திலும் ஒவ்வொரு பொற்காசுகளை வைத்து அருளுவோம். அவற்றைக் கொண்டு அடியார்களது வறுமை நிலையைப் போக்கி உதவுங்கள் என்று திருவாய் மலர்ந்தார். 

இறைவன் கனவிலே மொழிந்ததற்கேற்ப, தினமும் பொற்பீடத்திலிருந்து பொற்காசுகளைப் பெற்றெடுத்து பிள்ளையும், அரசும் அடியார்களுக்குக் குறைவின்றி அமுதூட்டி இன்புற்றனர். இது நிகழும் நாளில் அப்பரடிகளது திருமடத்திலே மட்டும் தொண்டர்கள் உரிய காலத்தே திருவமுது செய்து களிப்புற, திருஞான சம்பந்தர் திருமடத்தில் உணவு முடிக்கச் சற்றுக் காலதாமதமானது. இதை உணர்ந்த ஞானசம்பந்தர், தமது திருமடத்தில் அமுது படைக்க காலதாமதம் ஆவதின் காரணம் என்ன! என்று அடியார்களிடம் வினவினார். அதற்கு அவர்கள் ஞானசம்பந்தரை நோக்கி, நம்முடைய பொற்காசு நல்ல காசல்ல என்று கூறி பண்டங்களைக் கொடுக்கக் காலதாமதம் செய்கின்றார்கள். ஆனால், நல்ல காசு பெற்ற அப்பர் பெருமானுக்கு வியாபாரிகள் வேண்டும் பொருளை விரைவிலே கொடுத்து விடுகிறார்கள் என்ற உண்மையை விளக்கிக் கூறினர். 

அடியார்கள் இங்ஙனம் மொழிந்தது கேட்டு ஞான சம்பந்தர் சிந்தித்து, அப்பரடிகள் கோயிற் திருப்பணிகள் செய்ததின் பயனே இது என உணர்ந்து எம்பெருமானை வணங்கி வழிபட்டு, வாசிதீரவே காசு நல்குவீர் என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். இறைவன் ஞானசம்பந்தருக்கு நற்காசு கொடுத்தருளினார். அன்று முதல் ஆளுடைப் பிள்ளையும் உரிய காலத்தே விருந்தளித்து அரும்பெரும் தொண்டாற்றி வரலானார். சில நாட்களில் மழை பொழிய பஞ்சம் தணிந்தது. இரு ஞான மூர்த்திகளும் தொடங்கிய தலயாத்திரையின் தொடக்கத்தில் இருவரும் வேதாரண்யத்தை வந்து அடைந்தனர். 

சம்பந்தரும், அப்பரும் திருக்கோயில் கோபுரத்தைத் தாழ்ந்து பணிந்து கோயில் வெளி முற்றத்தைக் கடந்து மறைகளால் காப்பிடப்பட்டிருந்த வாயிலை அடைந்தனர். அங்கு திருவாயில் தாழிடப் பட்டிருப்பதால் அன்பர்கள் பிறிதொரு பக்கம் வாயில் அமைத்து அதன் வழியே உள்ளே சென்று வழிபட்டு வருவதைக் கண்டார்கள். ஞானசம்பந்தர் அடியார்களிடம் வாயில் அடைத்துக் கிடக்கும் காரணத்தை வினவினார். இறைவனை வழிபட்டு வந்த அருமறைகள் வாயிலை அடைத்துச் சென்றுவிட்டன என்ற உண்மையை அவ்வூர் அடியார்கள் வேதனையுடன் எடுத்துக் கூறினர். 

அடியார்கள் மொழிந்ததைக் கேட்ட ஞானசம்பந்தர் அப்பரடிகளைப் பார்த்து, அத்திருக் காப்பு நீங்குமாறு திருப்பதிகம் ஒன்றைப் பாடுவீராக! என்று கேட்டுக் கொண்டார். அப்பர் அடிகள் பதினொரு பாட்டுக்களால் கதவின் தாழ் திறக்கும்படிச் செய்தார். அடியார்கள் எல்லோரும் பெருமகிழ்ச்சியினால் எம்பெருமானின் திருநாமத்தைக் கயிலைமலை எட்டும் வண்ணம் முழக்கம் செய்தனர். உச்சி மீது குவித்த செங்கரங்களோடும், ஆனந்தக் கண்ணீர் பெருகும் கண்களோடும் கோயிலுள் புகுந்து இறைவனைப் பன்முறை வீழ்ந்து வணங்கி எழுந்தனர். இரு ஞான மூர்த்திகளும் நெக்குருக எம்பெருமானைப் பணிந்து திருப்பதிகங்கள் பல பாடிப் பக்தி வெள்ளத்தில் மூழ்கினர். 

அனைவரும் வழிபட்டு வணங்கி வெளிவந்தவுடன் அப்பர் அடிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஞானசம்பந்தர் திறந்த கதவுகளை அடைக்கும் பொருட்டு சதுரம் என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். அக்கணமே வாயிலின் கதவுகள் காப்பு நிரம்பின. அன்று முதல் அத்திருவாயில் திறக்கவும் காப்பிடவும் எளிதாக அமைந்தது. அடியார்கள் அவ்வாயில் வழியாக சிரமமின்றி இறைவனை வழிபடடு வரலாயினர். தலங்கள் தோறும், இறைவன் அருளால் வியக்கத்தக்க பற்பல செயல்களை நிகழ்த்திய இரு ஞானமூர்த்திகளும் இவ்வாறு திருமறைக்காட்டை அடைந்தனர். திருமறைப் பெருமானைப் பணிந்து பதிகம் பாடிப் பரவினர். அத்திருத்தலத்திலேயே தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து வரலாயினர். 

அக்காலத்தில் பாண்டிய நாட்டை கூன்பாண்டியன் நெடுமாறன் என்ற மன்னன் அரசாண்டு வந்தான். பாண்டிய மன்னன் சோழன் மகளாகிய மங்கையர்க்கரசியை மணந்திருந்தான். அவனது முதன் மந்திரியாகப் பணியாற்றியவர் குலச்சிறையார் என்ற பெருந்தகையார். பாண்டியனின் ஆட்சியிலே சைவம் வளர்ச்சி குறைந்து சமணம் சிறுகச் சிறுகப் பரவிக் கொண்டிருந்தது. மன்னன் நெடுமாறன் சமணத்தில் மிக்கப் பற்றுக் கொண்டு சமணத்தை ஊக்குவித்தால் சமணத் தலைவர்கள் செருக்குற்றுச் சைவத்தைக் குறை கூறி வந்தனர். 

அதனால் மாதேவி மங்கையர்க்கரசியாரும், முதன் மந்திரி குலச்சிறையாரும் சைவ சமயத்தைப் பாதுகாக்கத் தங்களால் இயன்றதைச் செய்து வந்தனர். பாண்டிய நாட்டில் முன்போல் சைவம் தழைத்தோங்க வேண்டும் என்று எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த அவர்கள் செவிகளில் அப்பர் அடிகளும், திருஞான சம்பந்தரும் திருமறைக் காட்டில் வந்து தங்கி இருக்கும் செய்தி எட்டியது. அரசியாரும், குலச்சிறையாரும் ஊக்கமும் பெருமகிழ்ச்சியும் கொண்டவர்களாய்த் தம் ஏவலர்கள் சிலரைத் திருமறைக் காட்டிற்கு அனுப்பி ஞான சம்பந்த மூர்த்திகளை அழைத்து வருவதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். 

ஏவலாளர் ஞானசம்பந்தர் வசிக்கும் மடத்தை அடைந்தனர். அடியார்களை வணங்கினர். அரசியார் விருப்பத்தை உரைத்தனர். பாண்டியநாடு சமணர்களிடம் சிக்கித் சிதைந்து வருகிறது. மன்னர் கூடச் சமணர்களின் மாயவலையில் வீழ்ந்து விட்டார். அதனால் தாங்கள் அருள்கூர்ந்து மதுரை மாநகருக்கு எழுந்தருள வேண்டும். சமணரை வென்று தென்பாண்டிய நாட்டில் சிவனடியார்களின் தொண்டு சிறக்கவும் சைவ நெறி தழைக்கவும் திருவுள்ளம் கொண்டருள வேண்டும். அரசியாரும் அமைச்சரும் தங்களிடம் இவ்விவரத்தைச் சொல்லி வருமாறு எங்களை அனுப்பியுள்ளார்கள் என்று பணிவன்போடு கூறினர் பணியாட்கள். 

சீர்காழிப் பிள்ளையார் முக மலர்ச்சியோடு விரைவில் வந்து சேருவதாக அரசியாரிடம் கூறும்படிச் சொன்னார். ஏவலாளர் வணங்கி புறப்பட, சம்பந்தர் ஏவலாளர்களை வாழ்த்தி அனுப்பினார். அவர்களும் மதுரையம்பதி வந்து அரசியாரிடம் சம்பந்தர் வருகையைப் பற்றிக் கூறினர். அரசியாரும் அமைச்சரும் அக மகிழ்ந்தனர். அப்பரடிகள் திருஞான சம்பந்தரிடம் சமணர்களின் தீய வழியினை எடுத்து விளக்கி இப்பொழுது மதுரை போவது உசிதம் அல்லவென்றும், அதற்குத் தான் உடன்படப் போவதில்லை என்றும் சொன்னார். அதற்கு ஆளுடைப்பிள்ளையார், நாம் போற்றுவது பரமனின் பாத கமலங்களே. எனவே நாளும் கோளும் நம்மை என்ன செய்யும்? எம்பெருமான் திருத்தொண்டில் நமக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படாது என்று கூறிப் பரமனைப் போற்றி, வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகத்தை இயம்பினார். 

ஞானசம்பந்தர் அப்பரடிகளை வேழநாட்டிலேயே இருக்கும்படிக் கூறிவிட்டுத் தமது முத்துப் பல்லக்கில் மதுரையம்பதியை நோக்கிப் புறப்பட்டார். திருமறைக்காட்டு தலம் தந்த நாதரின் திருத்தாளியினைச் சித்தத்திலே கொண்டு புறப்பட்ட ஞானசம்பந்தர், இடையிடையே உள்ள தலங்களை வணங்கிப் பதிகங்கள் பல பாடி மகிழ்ந்தார். நெய்தல் நிலத்தைக் கடந்து மருதநிலம் வழியாக முல்லையைத் தாண்டி பாலையில் புகுந்து பாண்டி நாட்டின் பாங்கிலே வந்தடைந்தார் சம்பந்தர். மணம் கமழும் மலர் நிறைந்த மலைகளில் துள்ளி ஓடும் தேனருவிகளைக் கடந்தார். புள்ளினங்கள் துள்ளி விளையாடும் காடுகளைக் கடந்தார். ஒருவாறு ஆளுடைப்பிள்ளையார் திருக்கொடுங்குன்றம் எனும் பிரான்மலை சிவத்தலத்தை வந்தடைந்தார். 

அங்கு மலை மீது எழுந்தருளி இருக்கும், விரிபுனல் அணிந்த வேணியரது அடிபோற்றியவாறு மதுரையை நெருங்கலானார். அரசியாரும் அமைச்சரும் சம்பந்தரை வரவேற்க மதுரை மாநகரைக் கவின்பெற அழகு செய்யத்தக்க ஏற்பாடுகளைச் செய்தனர். உலகிலுள்ள எழிலை எல்லாம் ஒன்று திரட்டிக் கொழித்து வைத்தாற்போல் மதுரையம்பதி அழகுற விளங்கிற்று. மதுரை தெருக்களிலே மறையொலி கேட்டவண்ணமாகவே இருந்து கொண்டிருந்தது. அரங்கிலே அழகு மயில் போல் ஆரணங்குப் பதுமைகள் நடனமாடும் சிலம்பொலி கலீர் கலீர் எனக் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்தணர்கள் வேள்விகள் நடத்தி விண் எட்ட புகை எழுப்பி மறைவேத முழக்கம் செய்தனர். ஓரிடத்தின் எழிலைக்கண்ட கண்கள் வேறிடம் திரும்பாத காட்சியைத் தான் ஒவ்வொரு இடத்திலும் காண முடிந்தது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடியவாறு நகருக்குள் நுழைந்தார். 

அன்பர்கள் பூரண கும்பம் எடுத்தனர். தூப தீபங் காட்டினர். பாலிகைகள் ஏந்தினர். வீதி எங்கும் மணமிக்க மலரையும், நறுமணப் பொடியையும், பொரிகளையும் வாரி வாரி வீசினர். பன்னீர் தெளித்தனர். ஞானசம்பந்தர் வந்தடைந்த செய்தியை ஏவலாளர்கள் கூறியதும், அரசியார் அவர்களுக்கு பொன்னும் பொருளும் சன்மானமாகக் கொடுத்து அனுப்பினார். அரசியார் அமைச்சரை அனுப்பி ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதுவே சமணர்களுக்குத் தீய சகுணங்கள் தோன்றுவதற்கும், குலச்சிறையாருக்கும், மங்கையர்க்கரசியாருக்கும் நல்ல சகுணங்கள் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்தன. சம்பந்தரின் வருகையைக் கேள்வியுற்ற சமணர்கள் ஒன்றுகூடி நிலைமையை விவாதிக்கத் தொடங்கினர். அமைச்சரும், அரசியாரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். 

சமணரால் பாண்டிய நாட்டிற்கு நேர்ந்த தீமையினைப் போக்குவதற்குத் தூய வெண்புனற் கங்கையே பாண்டிய நாட்டை நோக்கி வந்தாற்போல் அடியார்களின் தூய திருவெண்ணீற்றுப் பொலிவு தோன்ற ஞானசம்பந்தர் இறைவனின் திருவருள் ஒளியுடன் முத்துச் சிவிகையில் எழுந்தருளினார். அத்திருக் காட்சியைக் கண்ட குலச்சிறையார் உடல் புளகம் போர்ப்ப கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக தம்மை மறந்து, உலகை மறந்து பக்தியால் கட்டுண்டு அப்படியே முத்துச்சிவிகை முன் வீழ்ந்து பணிந்து எழுந்தார். மீண்டும் சிரமீது கரந்தூக்கி நெஞ்சத்தில் பொங்கி வரும் அன்புப் பெருக்கால் பூமியில் விழுந்து வணங்கினார். ஞானசம்பந்தருடன் வந்த அடியார்கள் அமைச்சரை எழுப்ப முயன்றனர். அமைச்சர் தம்மை மறந்த நிலையில் படுத்திக் கிடந்தார். ஞானசம்பந்தர் முத்துச் சிவிகையினின்று கீழே இறங்கி தமது அருட்கரத்தால் அமைச்சரைத் தொட்டு எழுப்பினர். அமைச்சர் எழுந்து அண்ணலைத் தொழுது அடிபணிந்து போற்றினார். 

ஞானசம்பந்தர் அரசியார் நலம் பற்றி அமைச்சரை வினவ அமைச்சரும் மகிழ்ச்சியோடு, ஐயனை எதிர்கொண்டு அழைக்க அரசியார் பணித்துள்ளார் என்று கூறினார். அமைச்சர் மொழிந்தது கேட்டு அகமகிழ்ந்த ஆளுடைப்பிள்ளையார், முதலில் ஆலவாய் அப்பன் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குச் செல்வோம் என்றார். அமைச்சர் முன்செல்ல அன்பர்கள் புடைசூழ ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டார் ஞானசம்பந்தர். ஞானசம்பந்தர் திருக்கோயிலுக்கு எழுந்தருளப் போகிறார் என்ற செய்தி கேட்டு அரசியாரும் ஆலயத்திற்கு விரைந்தார்கள். இதற்குள் ஞானசம்பந்தர் அமைச்சரும், அடியார்களும் புடைசூழ கோயிலை வந்தடைந்தார். திருவாலவாய்த் திருக்கோயில் உயர் கோபுரத்தைக் கண்ட ஞானசம்பந்தர் வணங்கி எழுந்து மங்கையர்க்கரசி வலவர்கோன் பாவை எனத் தொடங்கும் திருப்பாடலால் அரசியாரையும், அமைச்சரையும் சிறப்பித்தார். பிறகு அச்சிவத் தொண்டர் அன்பர்கள் புடைசூழ அமைச்சருடன் கோயிலை வலம் வந்து சோமசுந்தரப் பெருமானை வழிபட்டார். 

நீலமாமிடற்று ஆலவாயிலான் என்னும் திருப்பாடலால் சிவனை துதித்தார். அடியார்கள் ஆனந்தக் கடலில் மூழ்கித் திளைத்தனர். ஞானசம்பந்தர் தலைச்சங்கப் புலவர்களை வணங்கி வழிபட்டார். கோபுரவாயிலை அடைந்தார். அங்கு அரசியார் வணக்கத்துடன் நிற்பதை அமைச்சர் கண்பித்தார். அரசியார் விரைந்து வந்து ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்தாள். ஞானசம்பந்தர் அரசியாரைத் தமது அருட்கரத்தால் எடுத்து அருளினார். அரசியார் உள்ளமும், உடலும் பொங்கிப் பூரிக்கக் கண்களில் நீர்மல்க நாக்குழற ஞானசம்பந்தரை நோக்கி, யானும் என்பதியும் செய்த தவம் என்கொல் என்று பணிவன்புடன் கூறினார். 

யாழின் மென்மொழி போல் அரசியார் மொழிந்ததைக் கேட்டு நாயனார், சுற்றிலும் மற்ற சமயத்தார்கள் இருந்தும் சிவத்தொண்டினை மேற்கொண்டு வாழும் உம்மைக் காண வந்தனம் என விடை பகர்ந்தார். ஞானமூர்த்தியின் அன்பு மொழியைக் கேட்டு மனம் பூரித்துப் போன மங்கையர்க்கரசியார் மீண்டும் ஞான சம்பந்தரை வணங்கி எழுந்தார். ஞானசம்பந்தரையும் அவருடன் வந்த அடியார்களையும் மடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தார் அரசியார்! அரசியார் ஆளுடைப்பிள்ளையாரிடம் விடை பெற்றுக் கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டார். அமைச்சர் குலச்சிறையார் ஞானசம்பந்தரை மடத்திற்கு அழைத்துச் சென்றார். ஞானசம்பந்தர் தம்முடன் வந்த பரிவாரங்கள், அடிடயார்களுடனும் மடத்தில் தங்கினார். 

ஞானசம்பந்தர் தங்கி இருந்த இடத்தில் இருந்து எழுந்த வேத முழக்கமும், திருப்பதிக ஒலியும் சமணர்களைக் கதிகலங்கச் செய்தது. அவர்கள் வஞ்சனையால் ஆளுடைப்பிள்ளையாரைப் பழிவாங்க எண்ணினர். அவர்கள் மன்னனைக் கண்டு எல்லா விவரமும் கூறினர். மன்னர் அது கேட்டு மனம் குழம்பினார். சமணர்கள் மன்னனிடம் ஞானசம்பந்தர் தங்கி இருக்கும் மடத்திற்குத் தீ மூளச் செய்தல் வேண்டும் என்று ஆலோசனை கூறினர். மன்னன் ஒன்றும் தோன்றாத நிலையில், ஆக வேண்டிய காரியம் எதுவாயினும் உடனே சென்று அதனைச் செய்க என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தான். சமணர்களின் அடாத செயலை அப்படியே செய்ய பணித்த பாண்டியன் நெடுமாறன், எதனாலோ வேதனை மேலிட தீராத மனக்குழப்பத்தோடு பூமலர் தூவிய பட்டு மெத்தையிலும் இருக்க வொண்ணாது படுத்துப் புரண்டு கொண்டிருந்தான். 

முகத்திலே துயரத்தின் ரேகைகள் படர்ந்திருந்தன. அதுசமயம் மங்கையார்க்கரசியார் மன்னன் அருகே வந்தார். மனவாட்டத்தோடு படுத்திருக்கும் மன்னனிடம் என்னுயிர்க்குயிராய் உள்ள இறைவா! உங்களுக்கு ஏற்பட்ட துன்பம் தான் என்ன? சற்றுமுன் இருந்த பெருமகிழ்ச்சி முகத்தில் சற்று கூடக் காணப்பட வில்லையே! உங்கள் மனதில் ஏதோ துயரம் சொல்ல முடியாத அளவிற்கு இருப்பது போல் தோன்றுகிறது. அதனைத் தயைகூர்ந்து என்னிடம் சொல்வீராக என்று கவலையோடு வேண்டினார். மன்னன் அரசியாரிடம் சமணர்கள் வந்து முறையிட்டதையும், அதற்குத் தான் விடையளித்ததையும் கூறினார். அதுகேட்ட மங்கையர்க்கரசியார் திடுக்கிட்டார்கள் வேதனைப்பட்டார்கள். மங்கையர்க்கரசியார் மன்னனை நோக்கி, எனக்கு ஓர் வழி தோன்றுகிறது. சமணர்களுக்கும், சைவர்களுக்கும் வாதம் நடக்கட்டும். வாதில் எவர் வெற்றி பெறுகிறாரோ அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டால் போகிறது என்று கணவனுக்கு அரிய யோசனை கூறினார். 

மன்னனும் இதைப்பற்றிச் சிந்திக்கலானான். அரசியார் அமைச்சரை சந்தித்து நடந்தவற்றைக் கூறினார். அமைச்சர் அரசியாரிடம் ஆளுடைப்பிள்ளையாரின் வருகையால் பெற்ற பேற்றினைப் பெருமிதத்தோடு கூறியபோதிலும் சமணர்களின் சூழ்ச்சியை நினைத்துச் சற்று மனம் அஞ்சினார். அரசியார் மனம் கலங்கினார். ஞானசம்பந்தப் பெருமானுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திடின் அக்கணமே நாமும் உயிர் இழப்போம் என்று அரசியாரும் அமைச்சரும் தங்களுக்குள் உறுதிபூண்டனர். இதற்குள் ஞானசம்பந்தருக்குத் தீமை விளைவிக்கக் கருதிய சமணர்கள் தங்கள் மந்திரத்தால் அவர் எழுந்தருளி இருக்கும் மடத்திற்கு தீ வைக்க முயன்று தோற்றுப் போயினர். தந்திரத்தால் மடத்திற்குத் தீ வைத்தனர். மடத்தில் துயின்று கொண்டிருந்த தொண்டர்கள் கண் விழித்துப் பார்த்துத் திடுக்கிட்டனர். இறைவனின் அருளால் தீ பரவும் முன்பே அதனை அணைத்துவிட்டு ஞானசம்பந்தப் பெருமானிடம் சென்று நடந்தவற்றை எல்லாம் விளக்கிக் கூறினர். 

தொண்டர்கள் மொழிந்ததைக் கேட்ட ஞானசம்பந்தர் மனம் பதைபதைத்துப் போனார். என் பொருட்டுத்தான் அவர்கள் இத்தகையத் தீமையைச் செய்தனர். என்றாலும் அஃது தொண்டர்களுக்கும் அல்லவா தீமையை விளைவித்திருக்கிறது. இது சமணர்களின் குற்றமாக இருந்தாலும் இத்தகைய கொடியவர்கள் வாழும் நாட்டை ஆளும் வேந்தனின் குற்றம் தான் அதனைவிடக் கொடியது எனத் தனக்குள் எண்ணிப் பார்த்தார். மனவேதனைப்பட்டார். செய்யனே திரு ஆலவாய் மேவிய, எனத் தொடங்கும் பாடலைத் திருப்பதிகத்தின் முதலாகக் கொண்டு பல பாடல்களைப் பாடினார். ஒவ்வொரு பாடலின் ஈற்றடியிலும் சமணர் இட்ட தீயானது பாண்டியனைச் சாரட்டும் என்ற கருத்தை வைத்தார். 

ஞானசம்பந்தர் பதிகத்துள் கூறியதுபோல் தீப்பிணி என்னும் வெப்புநோய் மன்னனைப் பற்றிக்கொண்டது. வேந்தர் உடல் நெருப்பிடைப் புழுப்போல் துடிதுடித்தது. தீயின் வெம்மை மேலும் மேலும் ஓங்க கொற்றவனின் உயிர் ஊசலாடியது. மன்னர்க்கு நேர்ந்த விபத்தைக் கண்டு மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் மிகவும் வருந்தினர். அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். மன்னனுக்கு ஏற்பட்ட நிலை கேட்ட சமணர்கள் விரைந்தோடி வந்தனர். சமணர்கள் மந்திரம் கூறி பீலி கொண்டு மன்னன் உடலைத் தடவினர். பீலிகள் எரிந்து சாம்பலாயின. சமணர்கள் திகைத்தனர். பிரம்புகளால் மன்னன் உடல் வேதனையைப் போக்க முயன்றனர். பிரம்புகளால் மன்னன் உடலைத் தீண்டும் மன்னரே அவைகளும் தீய்ந்தன. அரசன் உயிரை வருத்தும் வெப்பு நோய் யாரையும் கிட்டவிடாமல் தடுத்தது. 

மருத்துவ வல்லவர்களாலும் மந்திர மகா மேதைகளாலும், சமண முனிவர்களாலும் மன்னனின் வெப்பு நோயைச் சிறிதளவு கூடத் தணிக்க முடியாமல் போயிற்று. மன்னனுக்குச் சமணர்கள் மீது ஆத்திரம் மேலிட்டது. அவர்களை அவ்விடத்தை விட்டு அகலும்படி கட்டளையிட்டான். ஞானசம்பந்தருக்குச் சமணர்கள் செய்த தீமையின் விளைவு தான் மன்னனை இப்படி வருத்துகிறது என்ற உண்மையை நன்கு உணர்ந்த அரசியாரும், அமைச்சரும் மன்னரிடம், இவ்வேதனை தீர புகலி மன்னர் எழுந்தருள வேண்டும் என்று எடுத்துரைத்தனர். 

மன்னன் மனம் தெளிந்த நிலையில் கண்களிலே நீர் மல்க அரசியாரையும், அமைச்சரையும் நோக்கி, சைவத் தலைவர் வந்து அவருடைய திருவருளால் எனக்கு ஏற்பட்டுள்ள வெப்பு நோய் அகலுமாயின் உங்கள் கருத்தினை நான் ஏற்பேன். அது மட்டுமல்ல; எனக்கு நேர்ந்த இந்நோயைத் தீர்த்து வென்றவர் எவரோ? அவர் பக்கம் யான் சேர்வேன். ஆதலால் உடனே புகலி மன்னரை அரண்மனைக்கு அழைத்து வருவதற்கு ஆவன செய்யுங்கள் என்று கூறினான். மன்னன் மொழிந்ததைக் கேட்டு அமைச்சரும் அரசியாரும் அமிழ்தத்தைப் பருகியதுபோல் ஆனந்தக் களிப்பெய்தினர். 

அமைச்சர் குதிரை மீதேறி மடத்தை நோக்கி முன்னால் விரைந்து புறப்பட, பின்னால் அரசியாரும் சிவிகையில் புறப்பட்டார். அமைச்சர் திருமடத்திலுள்ள அன்பு அடியார்களை வணங்கி, சம்பந்தப் பெருமானைத் தரிசிக்க அரசியார் வருகிறார்கள் என்றார். அமைச்சர் வெளியே காத்திருந்தார். அதற்குள் அரசியாரும் வந்து சேர்ந்தார். அடியார்கள் ஆளுடைப் பிள்ளையாரிடம் சென்று அமைச்சரும், அரசியாரும் வந்துள்ளனர் என்ற செய்தியைக் கூறினர். அடியார்கள் கூறியதைக் கேட்டுப் பிள்ளையார், அவர்களை உள்ளே அழையுங்கள் என்று அன்புக் கட்டளை இட்டதும் அடியார்கள் விரைந்தனர். மடத்தின் வெளியே நின்று கொண்டிருந்த அமைச்சரும், அரசியாரும் மகிழ்ச்சி பொங்க மடத்திற்குள் சென்றனர். 

அங்கே ஞான சம்பந்தர் சிவஞானமே வடிவமாக அமர்ந்திருக்கும் எழில் மிகும் காட்சியைக் கண்டனர். அமைச்சரும், அரசியாரும் அவரது தூய பொற்பாதங்களை சரணம் என்று பற்றிக் கொண்டனர். பிள்ளையார் இருவரையும் எழுந்திருக்கப் பணித்தார். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, உங்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்ததோ! என்று கேட்டார். அமைச்சரும், அரசியாரும் சமணர்கள் செய்த கொடுமையால் மன்னர் படுகின்ற கடும் வேதனையை விளக்கி, வேந்தர் உயிர் வாழ தேவரீர் அரண்மனைக்கு எழுந்தருளி அரசனையும், எங்களையும் காக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். ஞானசம்பந்தர் சற்றும் அஞ்சற்க! யாம் இன்றே வருவோம். நன்றே செய்வோம் என்று கூறி அவர்களைத் தேற்றினார். சற்று நேரத்தில் திருஞான சம்பந்தர் மடத்திலிருந்து புறப்பட்டார். ஆலவாய் அழகனைத் தரிசித்து மகிழ முத்து சிவிகையில் ஏறித் தொண்டர்களுடன் புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து அரசியாரும், அமைச்சரும் புறப்பட்டார்கள். 

கோயிலை அடைந்த ஞானசம்பந்தர், வாது செய்வது உமது திருவுள்ளமே என்னும் கருத்து அமைந்த செந்தமிழ் மாலையைச் செஞ்சடையானுக்குச் சாற்றினார். சம்பந்தரின் பாமாலையைக் கேட்டு அரசியார் மெய்யுருகினார். ஆலகாலத்தை அமுதாக உண்ட அண்ணலின் திருவருள் பெற்ற ஞானசம்பந்தர் திருவாயில் புறத்தே இருந்த முத்துச் சிவிகையில் அமர்ந்து அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார். இவர் அரண்மனையை அணுகிக் கொண்டிருக்கும் போதே, அமைச்சர் குதிரையில் விரைந்து சென்று மன்னனிடம் ஞானசம்பந்தர் எழுந்தருளுகின்றார் என்பதை முன்னதாகவே அறிவித்தார். 

மகா மந்திரியார் மொழிந்ததைக் கேட்டு மனம் குளிர்ந்த மன்னவன் தனது தலைப்பக்கத்தில் ஞானப்பால் உண்ட தவப் புதல்வருக்கு முழுமணி பொற்பீடம் ஒன்று இடும்படிச் செய்தான். மந்திரியாரிடம் சிவனேசரை எதிர்கொண்டு அழைத்துவரக் கட்டளையிட்டான். மந்திரியார் பேருவகையுடன் மன்னனின் ஆணையை நிறைவேற்றப் புறப்பட்டார். இச் செய்தியைக் கேள்வியுற்ற சமணர்கள் மன்னனைக் காண வந்தனர். ஞானசம்பந்தர் வரவை எதிர் பார்த்த வண்ணமாகவே இருந்த மன்னன் சமணர்களைக் கண்டு கடுமையான வெறுப்பு கொண்டான். 

மன்னனின் மனோநிலையைப் புரிந்து கொண்ட சமணர்கள் அஞ்சி நடுங்கியவர்களாய் மன்னனிடம், மன்னா! நமது சமண மதத்தின் நெறியை நீர் காக்கும் முறை இதுதானோ? அரசே! உங்களுக்கு ஏற்பட்டுள்ள வெப்பு நோயைக் குணமாக்குமாறு, எங்களுக்கும் சைவ சமயத்தார்க்கும் ஆணையிடுங்கள். நாங்கள் உங்கள் வெப்பு நோயைத் தீர்க்க முற்படுகின்றோம். ஆனால் ஒன்று சொல்கிறோம். நாளை உங்கள் நோயை ஒருவேளை அவர்களே போக்கினாலும் கூட எங்களால் தான் அந்நோய் தீர்ந்தது என்று நீங்கள் உறுதியாகச் சொல்ல வேண்டும். அதுவே அவர்களை வெல்லும் வழி என்று வஞ்சக மொழி கூறி அரசனைத் தங்கள் வழிக்குத் திருப்ப முயன்றனர். 

பாண்டியன் நெடுமாறன் சமணர்களின் சூழ்ச்சிக்குச் சற்றும் செவிசாய்க்கவில்லை. அரசன் அவர்களிடம், இரு தரப்பினரும் அவரவர்கள் தெய்வ சார்பினால் நோயைத் தீர்க்க முயலுங்கள். அதற்காக நான் மட்டும் பொய் சொல்லமாட்டேன் என்று தனது கருத்தை அறுதியிட்டுக் கூறினான். சமணர்கள் செய்வதறியாது சித்தம் கலங்கினர். இச்சமயத்தில், தொண்டர் குழாத்துடன் ஞான சம்பந்தர், அரசியாரும், அமைச்சரும் புடைசூழ மன்னர் இருக்கும் தனி அறைக்குள் வந்தார். ஞானசம்பந்தரின் அருட் கண்கள் மன்னனைப் பார்த்தன. அந்தப் பார்வையின் ஒளியிலேயே மன்னன் மதி மயங்கினான். 

உண்மையை உணரும் ஆற்றல் பெற்றான். உடலிலே நோய் வருந்துவதையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் ஞானசம்பந்தரை இருகை கூப்பி வணங்கியபடியே தன் தலைப் பக்கத்திலிருக்கும் பொன் ஆசனத்தில் அமரும்படி வேண்டினான். ஞானசம்பந்தர் முகம் மலர ஆசனத்தில் அமர்ந்தார். மயக்கமும், தயக்கமும் கொண்ட சமணர்கள் சிந்தை நொந்து செயலற்றுச் சிலையாயினர். சமணரைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மன்னன் ஞானசம்பந்தரிடம் குசலப்பிரசினம் விசாரித்தான். ஆளுடைப்பிள்ளையார் தான் பிறந்த திருத்தலம் சீர்காழி என்பதனையும் பிரமபுரம் எனத் தொடங்கி சீர்காழித் திருநகரின் பன்னிரண்டு திருநாமங்களையும் அமைத்து செந்தமிழ்ப் பாட்டொன்றால் பதிலுரைத்து அருளினார். 

அப்பெருமானுடைய பொன்மேனிதனைப் பயபக்தியோடு அன்பு மேலிட பார்த்தபொழுது தனது வெப்பு நோய் சற்றுத் தணிந்தது போல் மன்னனுக்குத் தோன்றியது.பொங்கி வரும் பெருநிலவைக் கிரகணம் விழுங்க வந்தாற் போல ஞானசம்பந்தப் பெருமானைப் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்த சமணர்கள் அவர் மீது அகந்தையால் ஆத்திரம் கொண்டனர். அவரை வாதினால் வெல்லக் கருதினர். தங்களுடைய வேத நூலிகளிலிருந்து சிலவற்றை எடுத்துக் கூறி சிறு நரி போல் ஊளையிட்டனர். இச்சூழ்ச்சிக்காரர்களின் கூச்சலைக் கேட்டு ஞான சம்பந்தர், உங்கள் சமய நூற் கொள்கையின் உண்மைக் கருத்துக்களை உள்ளபடிப் பேசுங்கள் என்றார். அவர்கள் துள்ளி எழுந்து ஆளுக்கொரு பக்கமாக ஆர்ப்பரிக்கத் தொடங்கி விட்டனர். 

சமணர்களின் முறை தவறிய செயலைக் கண்ட அரசியார், மன்னன் முகம் நோக்கி, சுவாமி! சமணர்களை வெற்றிகாண வந்திருக்கும் இப்பெருமான் பால்மணம் மாறாப்பாலகர். ஆளுடைப் பிள்ளையார் என்று போற்றப்படும் சிவநேச செல்வர். இவர் ஒருவராக தனித்து வந்துள்ளார். ஆனால் சமணர்களோ வயது முதிர்ந்தவர்கள். கணக்கற்றவர்கள். முதலில் ஆளுடைப் பிள்ளையாரின் அருளினால் தங்கள் உடலில் ஏற்பட்டுள்ள வெப்ப நோய் விலகட்டும். அதன் பிறகு வேண்டுமென்றால் இவர்கள் வாதாடட்டும் என்றார். 

மன்னன் அரசியாரைப் பார்த்து, மங்கையர்க்கரசி! வருந்தற்க! நான் சொல்லப் போவது தான் இதற்கொரு நல்ல தீர்ப்பாகும் என்று ஆறுதல் மொழிந்தான். அரசியார் தன் மீது கொண்டுள்ள அன்பையும், பக்தியையும் எண்ணிப் பார்த்த ஞானசம்பந்தர், மானிநேர் விழி மாதராய் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். அப்பாடலைக் கேட்டு மன்னன் உள்ளம் உருகினான். மன்னனைப் பார்த்து சமணர்கள் பொருமினார்கள். பாண்டியன் நெடுமாறன் சமணர் மீது ஆத்திரம் கொண்டு கோபத்தோடு அவர்களைப் பார்த்து, உங்களின் ஆற்றலை என் உடலில் ஏற்பட்டுள்ள வெப்பு நோயைக் குணப்படுத்துவதின் மூலம் உணர்த்தலாமே என்றான். மன்னன் பணித்ததைக் கேட்டுச் சமணர்கள் மன்னா! எங்கள் முயற்சியின் சக்தியினால் உம்முடைய இடப்பாகத்திலுள்ள வெப்பு நோயைத் தீர்த்து வைப்போம் இங்கு புதிதாக வந்துள்ள இவர், வலப்பாகத்திலுள்ள நோயைத் தீர்க்கட்டுமே பார்க்கலாம்! என்று இறுமாப்புடன் கூறினர். 

தங்களது மந்திரத்தை மொழியத் தொடங்கினர். அவர்கள் பீலியை எடுத்து மன்னன் உடம்பின் இடப்பக்கம் தடவினார்கள். வெப்பு நோயின் அனலின் தன்மையால் பீலி தீய்ந்து வீழ்ந்ததோடல்லாமல் அப்பாகத்தில் வெப்பு நோயின் வெம்மையும் பன்மடங்கு அதிகரித்தது. மன்னன் வேதனை தாங்காமல் துடி துடித்தான். நெடுமாறன் நெஞ்சத்திலே வேதனையை அடக்கிக் கொண்டு ஞானப்பாலுண்ட அருட்புனலை நோக்கினான். ஞானசம்பந்தர் மன்னனின் குறிப்பறிந்து நோயைத் தணிப்பதற்காக, மந்திரமாவது நீறு என்னும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஆலவாய் அண்ணலின் அருட் பக்தியிலே திருநீற்றை எடுத்துத் தம் மென் மலர்க்கரங்களால் மன்னனின் வலப்புறமாகத் தடவினார் சம்பந்தர். வேந்தனின் வலப்பக்கம் குளிர்ந்தது. 

அதே சமயத்தில் இடப்பக்கத்தில் வீசும் அனல் மேலும் அதிகரித்தது. அனலின் வெம்மையைத் தாங்கச் சக்தியற்றச் சமணர்கள் சற்று விலகிச் சென்று ஒதுங்கி நின்றனர். மன்னனுக்கு ஞானசம்பந்தர் மீது அன்பும், பக்தியும் மேலிட்டது. சமணர்கள் மீது அளவிட முடியாத வெறுப்பும், கோபமும் ஏற்பட்டது. சமணர்களைப் பார்த்து, நீங்கள் இவ்விடத்தை விட்டுப் போய்விடுங்கள். நீங்கள் தான் தோற்றுப் போனீர்கள் என்று சீறி விழுந்தான் மன்னன். உடலில் நஞ்சும் அமுதமும் கலந்தாற்போல் வெம்மையும் குளிர்ச்சியும் கலந்திருப்பதை உணர்ந்த மன்னன் ஞானசம்பந்தப் பெருமானை நோக்கி, யான் உய்யும் படி வந்த ஞான வள்ளலே! தங்க திருவருட் கருணையாலே என் உடலில் உள்ள வெப்பம் முழுவதும் தீருமாறு எனக்கு அருள்புரிவீராகுக! என்று வேண்டினான். 

சம்பந்தர் புன்முறுவல் பூத்தார். அருள்வடியும் அந்தனப் பெருமானின் திருமுகத்தில் கருணை மலர்ந்தது. ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சத்திலே தியானித்த வண்ணம் திருநீற்றினை எடுத்து ஒரே ஒருமுறை மன்னனின் இடப்பக்கத்திலே தடவினார். அப்பக்கத்திலிருந்த வெப்பு நோயும் அக்கணமே மன்னன் உடலை விட்டு முற்றிலும் நீங்கியது. அரசியாரும், அமைச்சரும் எல்லையில்லா இன்பப் பெருக்கில் ஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். மன்னனும் தன் உடம்பிலுள்ள வெப்பமெல்லாம் அப்படியே மாறியதும் எல்லையில்லா அன்புப் பெருக்கில் உய்ந்தேன் என்றவாறே அவரது திருவடிகளை வணங்கிப் பெருமகிழ்ச்சி கொண்டான். சமணர்கள் வெட்கித் தலைகுனிந்து செய்வதறியாது திகைத்து நின்றனர். 

அதோடு வெறிபிடித்த சமணர்களின் அகந்தை அடங்கவில்லை. ஞானசம்பந்தரிடம் மந்திரத்தாலும், தந்திரத்தாலும் தோற்ற சமணர்கள் நெருப்பிலும், நீரிலும் தங்களுக்குள்ள ஆற்றலால் வாதமிட்டு அவரை வெல்லலாம் என்று கருதினர். அந்த வீணான எண்ணத்தில் பாண்டிய மன்னனிடம், மன்னா! அவரவர்கள் சமயக் கொள்கைகளை ஏட்டில் எழுதித் தீயிலிட்டு விட வேண்டும். அவ்வேடு எரியாமல் இருக்கிறதோ அந்த ஏட்டினுக்குரியவர் வெற்றி பெற்றவராவார்! என்றனர். சமணர்களின் வார்த்தைகளைக் கேட்டு ஞானசம்பந்தர், நன்று! நீவிர் சொன்னது நன்று! நெருப்பிலே ஏட்டினை இடுவதுதான் உங்கள் கருத்தென்றால் அங்ஙனமே மன்னர் முன்னிலையில் செய்யலாம் என்று தமது சம்மதத்தை வெளிப்படுத்தினார். இரு சமயத்தினரும் மன்னன் முன்னிலையில் கனல் வாதத்திற்குச் சித்தமாயினர். அதற்கென அரங்கம் அமைக்கப்பட்டது. அனைவரும் கூடினர். தீ மூட்டப்பட்டது. நெருப்பும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 

ஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகங்கள் எழுதிய ஏட்டிலிருந்து, போகம் ஆர்த்த பூண் முலையாள் என்ற திருநள்ளாற்றுப் பதிகத்தை எடுத்தார். சிவத்தை மனதிலே தியானித்தவாறே, தளிர் இள வளர் ஒளி எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடி அதனை அனலிலிட்டார். நெருப்பிடை வீழ்ந்த திருப்பதிக ஏடு எரியாது பனிபோல் பசுமையாய் முன்னிலும் பளபளப்போடு பார்ப்போர் வியக்கும் வண்ணம் விளங்கியது. இதுகண்டு சமணர் அச்சங்கொண்டனர். அகந்தையோடு தாங்கள் எழுதிய சமயக் கொள்கைகள் அடங்கிய ஏட்டைத் தீயிலிட்டனர்.அ வ்வேடுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. சமணர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். செய்வதறியாது திகைத்தனர். 

ஞானசம்பந்தர் அனலிடையிட்ட ஏடுகளோ வரையறுத்த காலம் வரை அனலிலே இருந்ததோடல்லாமல் எடுத்த பின்னரும் தொடுத்து முடித்த பூமாலைபோல் அழகுறக் காட்சியளித்தது. அனைவரும் வியந்தனர். ஆலவாய் அண்ணலின் அருள் ஒளியிலே மதுரை மாநகரிலே சைவ சமயம் புத்துயிர் பெறத் தொடங்கியது. சதிமிக்கச் சமணர்களின் தோல்வியைக் கண்டு நெடுமாறன் நகைத்தான். அப்பொழுது சமணர்கள் நெருப்பைத் தண்ணீரால் அணைத்து, அதனின்று நனைந்த தங்களது ஏட்டுச் சாம்பலை எடுத்து கைகளால் பிசைந்தனர். இவ்வாறு செய்த சமணர்களைப் பார்த்து, மன்னன் நகைத்துக்கொண்டே, ஏட்டினை இன்னும் அரித்துப் பார்க்கிறீர்களா? நன்று! பொய்யை மெய்யாக்க முயலுகின்ற நீங்கள் இந்த இடத்தை விட்டு உடனே போய்விடுங்கள். 

வெப்பு நோயினின்றும் நான் நீங்கி பிழைத்தபோதே, நீங்கள் தோற்றுத் தலை தாழ்ந்தீர்கள். அத்தோடு இப்போது தீயிடை வீசிய உங்கள் சமயக் கொள்கையும் எரிந்தது. இதற்கு மேலும் நீங்கள் இங்கிருப்பது முறையல்ல; இன்னும் தோற்றுப் போகவில்லை என்ற எண்ணமோ உங்களுக்கு? என்று அவர்களை இழித்தும் பழித்தும் கூறினான். ஞானசம்பந்தரிடம் தோற்றுப்போன சமணர்கள் அத்துடன் நில்லாமல் ஞானசம்பந்தரைப் புனல் வாதத்திற்கு அழைக்க எண்ணினர். சமணர்களின் அகந்தையைக் கண்டு சினம் கொண்டான் மன்னன். ஞானசம்பந்தரோ அவர்களை நோக்கி, இன்னும் என்ன வாதம் செய்ய வேண்டும் என் வினவினார். சமணர்கள் அவரவர் கொள்கைகளை ஏட்டில் எழுதி, நீரில் விட வேண்டும். எவரது ஏடு நீரோடு ஓடாமல் எதிர்த்துச் செல்கிறதோ, அவ்வேடே உண்மைப் பொருளுடைய சமயத்தை உடையதாகும் என்று எடுத்துரைத்தனர். 

அமைச்சர் இடைமறித்து, இந்த வாதத்திலும் சமணர்கள் தோற்றால் அவர்களை என்ன செய்யலாம்? என்று மன்னனைப் பார்த்துக் கேட்டார். மன்னன் பதிலுரைப்பதற்குள், பொறுத்திருக்க மாட்டாத சமணர்கள், இம்முறை நாங்கள் தோற்றால் எங்களைக் கொற்றவன் கழுவில் ஏற்றட்டும். இது எங்கள் உறுதிமொழி என்று ஆத்திரத்தோடு பதிலுரைத்தார்கள். பகைமையினாலும், பொறாமையினாலும் சமணர்கள் கூறியது கேட்டு நெடுமாறன் அனைவரையும் வைகையாற்றிற்குப் புறப்படுமாறு பணித்தான். ஞானசம்பந்தர் முத்துச் சிவிகையில் ஏறி வைகை ஆற்றிற்குப் புறப்பட்டார். மன்னன் வெண் புரவி மீது ஏறி முன் செல்லப் பின்னால் அமைச்சரும், அரசியாரும் புலவர்களோடும், சேனைகளோடும் புறப்பட்டனர். 

கார்கால மாதலால் வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் வைகை ஆற்றின் கரையில் பொங்கி வரும் வெள்ளமெனத் திரண்டு வந்திருந்தனர். திருவெண்ணீற்று அடியார்களும் அன்பர்களும் திரள் திரளாகக் கூடி இருந்தனர். பாண்டியன் நெடுமாறன், மங்கையர்ச்சரகியார் குலச்சிறையார் ஒருபுறமிருந்தனர். அவர்களுடன் அமைதியே உருவாகி, அருள்வடிவமாய் ஞானசம்பந்தர் பொற்பீடத்தில் அமர்ந்திருந்தார். மறுபுறத்தில் சமணர்கள் சூழ்ச்சியே உருவெடுத்து நின்று கொண்டிருந்தனர். மன்னன் ஏடுகளை வைகையாற்றில் இடுங்கள் என்று சமணர்களைப் பார்த்துச் சினத்துடன் கூறினான். சமணர்கள் தமது கொள்கைகள் தீட்டப்பட்ட அத்தி நாத்தி என்னும் ஏட்டை வைகை ஆற்றில் வீசி எறிந்தனர். 

அத்தி நாத்தி சமணர்களின் மூலமந்திரம். அத்தி என்றால் உள்ளது உண்டு என்றும், நாத்தி என்றால் இல்லாதது இல்லை என்றும் பொருள்படும். உள்ளதை உடன் மறுத்து இல்லதென்று கூறுவதாகும். ஏடு, நீரில் சுற்றிச் சுழன்று ஓடும் நீரோடு ஓடிற்று. நிலை தளர்ந்த சமணர்கள் சிந்தையற்றுச் செயலற்றுச் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஏடு சமணர்களையே நட்டாற்றில் விட்டுச் சென்றது. பாண்டியன் நெடுமாறன் ஞானசம்பந்தரின் உள்ள குறிப்பினை அறியும் பொருட்டு அவரை நோக்கினான். அருள் வடிவாய் எழுந்தருளியிருந்த திருஞான சம்பந்தப் பெருமான், அந்தணர் வானவர் ஆனினம் எனும் கௌசிகப் பண்ணில் அமைந்த பன்னிரண்டு திருப்பாடல்களைக் கொண்ட திருப்பாசுரத்தை திரு ஏட்டில் எழுதி வைகையாற்றில் மிதக்க விட்டார். வைகையாற்றில் வீழ்ந்த ஏடு வெள்ளப் பெருக்கை கிழித்துக் கொண்டு எதிர்நோக்கிச் சென்றது. பிறவிப் பெருங்கடலில் பெருந்தவத்தினையுடைய மெய்ஞ்ஞானியரின் மனமானது, எதிர்த்துச் சென்று வெற்றி காண்பது போல், நீரை எதிர்த்துச் சென்றது ஏடு. 

சைவ சமயமே மெய் சமயம் என்பதை உலகோர்க்கும், சமணர்களின் மங்கிய மூளைக்கும் உணர்த்தியது. கரைபுரளும் வைகையில் ஏடு எதிர்த்துச் செல்லும் அதிசயத்தை அனைவரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பாண்டியன் நெடுமாறனும் ஆனந்தம் மேலிட பக்தியால் உள்ளத்தில் புத்துணர்ச்சி பொங்கி எழ, தன்னையறியாமலேயே உந்தப்பட்டு, சொல்ல முடியாத பெரும் சக்தியால், தலைநிமிர்ந்து, வைகையை எட்டிப் பார்த்தான். அப்பொழுது அவனையறியாமலேரயே கூன் நிமிர்ந்து கூத்தாடினான். வைகையிலிட்ட பாசுரத்தின் முதற் பாட்டில் இறைவன் அருளாலே வேந்தனும் ஓங்குக என்று ஞானசம்பந்தர் பாடியருளியதால் தென்னவனின் கூன் நிமிர்ந்தது. 

பாண்டிய மன்னனின் கூன் நிமிர்ந்தாற் போன்று குன்றியிருந்த சைவம் மீண்டும் நிமிர்ந்தது. சமணத்திற்குக் கூன் விழுந்தது. மேலும் கூனிக் குறுகி, தலை சாய்ந்து இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தே போனது. அமைச்சர் குலச்சிறையார் ஆற்றிலே எதிர்த்துச் செல்லும் ஏட்டினை எடுப்பதற்காகக் குதிரை மீது வேகமாக புறப்பட்டார். வெள்ளத்திலே ஓடம் போல் செல்லும் தெய்வ ஏடு கரையிலே தங்கும் வண்ணம், வன்னியும், மந்தமும் எனத் தொடங்கும் பதிகத்தை ஞானசம்பந்தர் பாடத் தொடங்கியதும் திரு ஏடு திருவேடகம் என்னும் தலத்தில், எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடத்தில் போய்த் தங்கியது. 

அவ்விடத்தை அடைந்த அமைச்சர் பரிதியினின்றும் இறங்கி ஏட்டுச் சுவடிகளை எடுத்தார். திருவேடக இறைவனை வணங்கி குதிரை மீது அமர்ந்து சம்பந்தர் இருக்குமிடத்திற்கு வந்தார். குதிரையினின்றும் இறங்கி ஏட்டுச்சுவடியை சுமந்து வந்து சம்பந்தர் திருமுன் வைத்தார் அமைச்சர். விண்ணவர் தண்மலர் பொழிந்தனர். பல்வகை இன்னிசைக் கருவிகள் ஒருங்கே ஒலித்தன. அன்பர்களும், அடியார்களும் சிவநாமத்தை விண்ணெட்ட முழக்கினர். ஞானசம்பந்தரை வாழ்த்தினர். சமணர்கள் கழுவிலேறி உயிர் நீத்தார்கள். தென்னவன் நெடுமாறன் சைவ சமயத்துக்குப் பணிந்தான். திருவெண்ணீற்றின் உயர்வையும், பெருமையையும் உணர்ந்தான். மங்கையர்க்கரசியாரும், அமைச்சரும் அகமகிழ்ந்தனர். 

திருவாலவாய் அண்ணலைச் சிந்திக்கத் தவறிய தன் தவற்றை எண்ணிக் கலங்கினான். மன்னன் ஞானசம்பந்தரை வணங்கித் திருநீறு பெற்றான்.பாண்டியன், நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற சிறப்புப் பெயர் உலகு போற்ற வாழ்ந்தான். திருஞானசம்பந்தர் சில காலம் மன்னனின் விருந்தினராகத் தங்கியிருந்து, அனுதினமும் ஆலவாய் அண்ணலை வணங்கிப் பல திருப்பதிகங்கள் பாடி வந்தார். இதுசமயம் திருஞானசம்பந்தரின் தந்தை சிவபாத விருதயர் சீர்காழியினின்றும் புறப்பட்டு, மதுரைக்கு வந்தார். சிவக்கொழுந்தை கண்டார். அன்பின் பெருக்கால் ஆரத்தழுவி ஆனந்தக் களிப்பு எய்தினார். தகப்பனாரைக் கண்ட பெருமிதத்தில் ஞானசம்பந்தர் தோணியப்பரைப் போற்றிப் பதிகம் ஒன்றை பாடினார். 

சிறிது காலம் சம்பந்தருடன் தங்கியிருந்து சிவ தரிசனத்தால் சிந்தை மகிழ்ந்த சிவபாதவிருதயர், சீர்காழிக்குத் திரும்பினார்.அதன் பிறகு பாண்டிய நாட்டுத் திருத்தலங்களைத் தரிசிக்க ஞானசம்பந்தர் தென்னவனுடனும், தேவியாருடனும், அமைச்சருடனும் புறப்பட்டார். பாண்டிய நாட்டிலுள்ள திருத்தலங்கள் பலவற்றை தரிசித்துப் பதிகம் பாடிப் களிப்பெய்திய ஞானசம்பந்தர் பாண்டியனிடம் விடைபெற்றுக் கொண்டு சோழ நாட்டை நோக்கிப் புறப்பட்டார். மன்னன் சம்பந்தப் பெருமானுக்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பினார். ஞானசம்பந்தர் சோழ நாட்டை அடைந்தார். ஆங்காங்கே உள்ள கோயில்களைத் தரிசித்து மகிழ்ந்தார். முள்ளிவாய் எனும் ஆற்றின் கரைதனை அடைந்தார். ஆற்றின் எதிர்க்கரையில் அமைந்துள்ள திருக்கொள்ளம் பூதூர் இறைவனைத் தரிசிக்க எண்ணங்கொண்டார். ஆனால் ஆற்றில் வெள்ளம் மிகுந்திருக்கவே ஓடக்காரர்கள் ஓடம் செலுத்த மறுத்து நின்றார்கள். 

ஞானசம்பந்தர், அடியார்களுடன் ஓடமொன்றில் ஏறிக்கொண்டார். அதனை அவிழ்த்து விடச் சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். சம்பந்தர், கொட்டமே கமழும் என்னும் பதிகத்தைப் பாட, ஓடம் தானாகவே சென்று எதிர்கரையை அடைந்தது. அக்கரையை அடைந்த ஞானசம்பந்தர் எம்பெருமானை வணங்கி வழிபட்டார். அங்கியிருந்து பல திருத்தலங்களைத் தரிசித்த வண்ணம் போதி மங்கை என்ற இடத்தை அடைந்தார். சிவநாமத்தை முழக்கிய வண்ணம் வந்து கொண்டிருந்த ஞானசம்பந்தரைக் கண்டு போதி மங்கை பவுத்தர்கள் சினங்கொண்டு தங்கள் தலைவனான புத்தநத்தி என்பவனிடம் சென்று முறையிட்டனர். ஞானசம்பந்தருடன் வந்த அடியார்களின் உள்ளம் பவுத்தர்களின் போக்கைக் கண்டு வருந்தியது. 

அவர்கள் ஞானசம்பந்தரிடம் முறையிட்டார்கள்.அடியார்கள் மொழிந்ததைக் கேட்டுச் சினங்கொண்ட ஞானசம்பந்தர், புத்த நந்தியின் தலையில் இடி விழக்கடவது என்று பதைப்புடன் சபித்தார். மறுகணம் புத்த நந்தி இடியுண்டு அழிந்து மடிந்தான். பவுத்தர்களோ அஞ்சி ஓடினர். இதை மனத்தில் கொண்டு வெகுண்ட பவுத்தர்கள் சாரிபுத்தன் என்பவனைத் தங்கள் தலைவனாகக் கொண்டு ஞானசம்பந்தரை வாதில் வெல்லக் கருதி வந்தனர். சம்பந்தர் அப்புத்தர்களையும் வாதில் வென்று வெற்றிவாகை சூடினார். பவுத்த சமயமும் சமணத்தின் வழி சென்று சம்பந்தரிடம் தோற்றது. ஞானசம்பந்தர் மீண்டும் தமது சிவயாத்திரையைத் தொடர்ந்தார். தொண்டர்களுடன் அவர் சிவிகையில் புறப்பட்டு திருக்கடலூரை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பணிந்து இன்புற்றார். 

ஞானசம்பந்தருக்கு அப்பரடிகளைக் காண வேண்டும் என்ற பேரவா எழுந்தது. அப்பரடிகள் எங்கே இருக்கிறார்கள்? என அடியார்களைக் கேட்டார். அடியார்கள் மூலம் அப்பர் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளி இருப்பதை அறிந்து, அத்தலத்தை நோக்கி அடியார் குழாத்தோடு புறப்பட்டார். ஞானசம்பந்தர் வருவதை முன்பே அறிந்திருந்த அப்பரடிகள், ஞானவள்ளலை எதிர்ச் சென்று வரவேற்று வழிபடப் பேராவல் கொண்டார். தொண்டர்கள் புடைசூழ வந்து கொண்டிருக்கும் ஞானசம்பந்தரைக் கண்டு பேருவகை கொண்ட அப்பரடிகள், எவரும் அறியாத வண்ணம், அவ்வடியார் கூட்டத்திடையே புகுந்து, அவர் எழுந்தருளிவரும் சிவிகையைத் தாங்குவோருடன் ஒருவராய்ச் சேர்ந்துகொண்டு தாமும் சுமந்தார். 

தம்மை எதிர்கொண்டு அழைத்துச் செல்லவரும் தொண்டர் கூட்டத்தைக் கண்டு, களிப்பெய்திய ஞானசம்பந்தர், அக்கூட்டத்திடையே, அப்பரடிகளைக் காணாது, எங்குற்றார் அப்பர்? எனக் கேட்க, அப்பரடிகள் ஒப்பரிய தவம் புரிந்தேன். ஆதலால் உம் அடிகளை இப்பொழுது தாங்கி வரப்பெற்று உய்ந்தேன் என மொழிந்தார்.அப்பரடிகளின் குரலைக் கேட்டு, ஞானசம்பந்தர் சிவிகையினின்று இறங்கி, அப்பர் அடிகளைப் பார்த்து திகைத்து இங்ஙனம் செய்யலாமா? எனக் கேட்டார்.அதற்கு அவர் பின் எவ்வாறு செய்தல் தகும்? என்று கேட்டவாறே பிள்ளையாரை வணங்கினார். அடியார்களும், தொண்டர்களும் மனம் உருகும் இக்காட்சியைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றனர். 

இரு சிவச் செம்மல்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் களித்து மகிழ்ந்தனர். இருவரும் திருப்பூந்துருத்தி எம்பெருமானை வணங்கி வழிபட்டனர். அப்பரடிகள் ஞானசம்பந்தரிடம் தொண்டை மண்டலத்திலுள்ள சிவத்தலங்களைப் பற்றிக் கூறிக்களிப்பெய்தினார். அவர் மொழிந்தது கேட்டு ஞானசம்பந்தருக்குத் தொண்டைநாட்டு சிவத்தலங்களைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை மேலிட்டது. ஓரிரு நாட்களில் ஞானசம்பந்தர் அப்பரடிகளிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். நேராகச் சீர்காழியை அடைந்தார். திருத்தொண்டர்களுடன் சிவபாதவிருதயர் சம்பந்தப்பெருமானை எல்லையிலே வரவேற்று எதிர்கொண்டு அழைத்தார். அனைவரும் கோயிலுக்குச் சென்றனர். திருஞான சம்பந்தர் திருத்தோணியப்பரை வழிபட்டு, உற்று உமைச் சேர்வது மெய்யினையே எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப் பரவசமுற்றார். 

தந்தையாருடன் இல்லத்திற்குச் சென்றார். சீர்காழியில் சில காலம் பெற்றோர்களுடனும், சீர்காழி அன்பர்களுடனும் தங்கியிருந்து தினமும் தோணியப்பரைத் தரிசித்து சந்தோஷித்தார். மீண்டும் சிவ யாத்திரையைத் தொடங்கினார். தில்லை, காஞ்சி மற்றும் பல தலங்களைத் தரிசிக்கத் திருவுள்ளங் கொண்டு அன்பர்கள் புடைசூழ புறப்பட்டார் சம்பந்தர். தில்லைச் சிற்றம்பலத்தை வந்தடைந்த ஞானசம்பந்தர் நடராசப் பெருமானைத் பணிந்து எழுந்தார். அங்கிருந்து புறப்பட்டுத் திருத்தலங்கள் பலவற்றைக் கண்டுகளித்து தேவாரப் பாடல்ளைப் பாடியவாறு திருவோத்தூரை அடைந்து வேதபுரீசரரை வணங்கி வழிபட்டார். 

இத்திருத்தலத்தில் எம்பெருமான் அமரர்க்கு வேதங்களை ஓதுவித்து அருளிச் செய்ததாகவும், வேதங்களுக்கு இறைவன் தமது திருக்கூடத்தினை காட்சி அளித்து அருளியதாகவும் வரலாறு கூறுகிறது. இதுபற்றியே இப்பெயர் பெற்றது. அத்து என்றால் வேதம் என்று பொருள்! திருஞானசம்பந்தர் அத்திருத்தலத்தில் தங்கியிருந்து வேதபுரீசுரரை, தினமும் வணங்கினார். அந்நாளில் வியக்கத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது.அரனாரிடத்தும், அடியார்களிடத்தும் எல்லையில்லாப் பேரன்புடைய திருத்தொண்டர் ஒருவர் திருஞானசம்பந்தரைச் சந்தித்துத் தமது குறையை விளக்கினார். 

சீர்காழிப் பெருமானே! அடியேன் நட்ட சில பனைகள் காய்க்காத பனைகளாக இருக்கின்றன. அதனால் சமணர்கள் எமக்கு வெறுப்பு ஏற்படுமாறு என்னிடம் ஆண் பனை எங்காகிலும் காய்ப்பதுண்டா எனக் கேட்டுக் கேலி செய்கின்றனர் என நெஞ்சு நெகிழக் கூறிக் கலங்கினார். அதுகேட்டு புகலிவேந்தர், பூ தேர்ந்தாய் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாட, அப்போதே ஆண் பனைகள் எல்லாம் நற்பனைகளாக மாறி காய்த்துக் குலைகள் விட்டன. ஞானசம்பந்தரின் அருள் வல்லமையைக் கண்டு அனைவரும் வியந்தனர். இழித்துக் கூறிய சமணர் சிலர் அஞ்சினர். பலர் சைவ மதத்தில் சேர்ந்தனர். சில நாட்களில் அங்கியிருந்து புறப்பட்ட ஞானசம்பந்தர் பல திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டே காஞ்சியை அடைந்தார். 

காஞ்சிபுரத்துக் தொண்டர்கள் புகலி மன்னரை வரவேற்க நகரை கவின்பெற அழகு செய்தனர். கமுகு, வாழை, கொடி, மாலை முதலியவை நிறைந்த எழில்மிகுப் பந்தல்கள் வீதியெங்கும் அமைத்தனர். பாவையர் நீர்தெளித்து வண்ண வண்ண கோலமிட்டு பொன் விளக்குகள் ஏற்றினர். நறுமலர் தூவினர். மங்கள வாழ்த்தொலி எழுப்பினர். மறைவேதம் எங்கும் முழங்கியது. காஞ்சியின் எல்லையிலே அன்பர்களும், தொண்டர்களும் மங்கல மங்கையர்களும் புடை சூழ்ந்து கொண்டு காத்திருந்தனர். எல்லையை வந்தடைந்த ஞானசம்பந்தரை பூரண பொற்கும்ப கலசங்கள் வைத்து எதிர்கொண்டழைத்து, நகருள் எழுந்தருளச் செய்தனர். காமகோட்டம் அழைத்துச் சென்றனர். கண்களிலே பக்தி வெள்ளம் பெருக பதிகம் ஒன்றைப் பாடிப் பரவியவாறு காமக் கோட்டத்தில் காஞ்சி காமாக்ஷியைத் தொழுதெழுந்தார். ஏகாம்பரேசுவரர் ஆலயம் வந்து பெருமானை தூய பதிகத்தால் ஏற்றிப் பணிந்தார். 

காஞ்சியிலுள்கள பல சிவ சந்நதிகளுக்கு விஜயம் செய்தார் சம்பந்தர்! காஞ்சியம்பதியில் சில நாள் தங்கியிருந்து திருப்பணிகள் பலபுரிந்த சம்பந்தர் அங்கியிருந்து புறப்பட்டு மற்றும் பல சிவத்தலங்களைத் தரிசித்துக் கொண்டே திருக்காளத்திமலைத் தரிசனத்தை முடித்துக் கொண்டு, திருவொற்றியூரை வந்தடைந்தார். விடையவன் எனத் தொடங்கும் பாசுரம் ஒன்றைப் பாடியவாறு முத்துச் சிவிகையகன்று இறங்கித் திருக்கோயிலுள் சென்று திருவொற்றியூரான் திருத்தாளினைப் போற்றிப் பணிந்தார். திருவொற்றியூரானை விட்டுப் பிரிய மனம் வராது ஞானசம்பந்தர் சில காலம் அங்குள்ள மடம் ஒன்றில் தங்கியிருந்து நாள்தோறும் இறைவனை வழிபட்டு வரலானார்.

திருமயிலையில் சிவநேசர் என்னும் பெயருடைய வணிகர் குடியில் பிறந்த வள்ளல் ஒருவர் இருந்தார். அவர் சிவனாரிடத்தும், சிவனடியார்களிடத்தும் அன்புடையவராய்த் திகழ்ந்தார். எம்பெருமானினும் மெய்ப் பொருளையே ஆராய்ந்து அறியும் ஆற்றல் மிக்க அருந்தவத்தை உணர்ந்து வாழ்வை நடத்தி வந்தார். பொய்மை இல்லாத இவ்வணிக குலப்பெருந்தகையார் வாணிபம் செய்து பெரும் பொருள் ஈட்டினார். இவர்க்கு அரனார் அருளால் பூமகளைப் போன்ற பொலிவும், நாமகளைப் போன்ற அறிவும் உடைய பூம்பாவை என்னும் பெயருடைய மகள் இருந்தாள். அம்மகள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தாள். ஞானசம்பந்தரை மனதிலே தியானித்து அவரையே தன் குலத்தின் முழுமுதற் கடவுள் எனக் கருதி வந்த சிவநேசர் தமது அருமை மகள் பூம்பாவையையும், பொன்னையும், பொருளையும், தன்னையும் திருஞான சம்பந்தருக்கே அர்ப்பணம் செய்வதாய் உறுதிபூண்டார். 

அதனால் தம் மகளைக் கன்னி மாடத்தில் வளர்த்து வரலானார். ஒருநாள் தோழியருடன் மலர்வனத்திற்கு மலர் கொய்யச் சென்ற பூம்பாவையை அரவம் ஒன்று தீண்டிவிட்டது. சிவநேசர் விஷத்தை நீக்க மந்திரம், வைத்தியம், மாந்திரீகம் எல்லாம் செய்வதும், அனைத்தும் பலிக்காமல் பயனற்றுப் போயின. பூம்பாவை உடல் பூவுலகை விட்டு மறைந்தது. துயரக் கடலிலே ஆழ்ந்த சிவநேசர் செய்வதறியாது திகைத்தார். தகனம் செய்யப்பட்ட மகளின் சாம்பலையும், எலும்பையும் ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் வைத்துக் காப்பிட்டார். இவ்வாறு இருந்து வரும் நாளில் தான் ஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு எழுந்தருளினார். சிவநேசர் மகிழ்ச்சி கொண்டார். தமது தவப் பயனால் தான் அவர் எழுந்தருளினார் என்று எண்ணினார். 

திருவொற்றியூர் சென்று சம்பந்தப் பெருமானைத் திருமயிலைக்கு எழுந்தருளுமாறு பிரார்த்தித்தார். சம்பந்தர் சம்மதித்தார். சிவநேசர் மகிழ்ச்சி மிகப்பூண்டு சம்பந்தப் பெருமானை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கினார். திருவொற்றியூரிலிருந்து மயிலை வரை அலங்காரம் செய்தார். ஞானசம்பந்தரை வரவேற்க பல வகையான ஏற்பாடுகளைச் செய்தார். ஞானசம்பந்தர் மயிலையில் எழுந்தருளியிருக்கும் கபாலீச்சுரரைத் தரிசிக்க அடியார்களுடன் முத்துச் சிவிகையில் புறப்பட்டு வந்து கொண்டே இருந்தார். சிவநேசர், மகிழ்ச்சி பொங்க, எதிர்சென்று ஞானசம்பந்தரை வரவேற்று வணங்கினார். ஞானசம்பந்தர் சிவநேசருடன் மயிலையை அடைந்து கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள் தரும் அம்பிகை கற்பகாம்பாளையும், கருணைக் கடலான கபாலீச்சுரரையும் பைந்தமிழ்ப் பாசுரத்தால் போற்றினார். 

அடியார்கள் மூலம் சிவநேசருக்கு ஏற்பட்ட சோகக்கதையை முன்னதாகவே கேள்விப்பட்டிருந்த ஞான சம்பந்தர் சிவநேசரிடம், உம்முடைய மகளின் எலும்பு நிறைந்த குடத்தை மதிற்புற வாயிலின் முன்பு கொண்டு வருக என்று பணித்தார். சிவநேசர் கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தை எடுத்து வந்து கோயிலுக்குப் புறத்தே ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த முத்துச் சிவிகையின் முன்னால் வைத்தார். ஞானசம்பந்தர் கபாலீச்சுரரைப் பணிந்தவாறு, மட்டிட்ட புன்னையைக் கானல் மடமயிலை என்னும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார். முதல் பாசுரத்திலேயே பூம்பாவாய் என விளித்தார். மண்ணிலே பிறந்தவர்கள் பெறும் பயன் பிறைமதி சூடிய அண்ணலாரின் மலரடிகளுக்கு அமுது செய்வித்தலும், கண்களால் அவர் நல்விழாவைக் காண்பதும்தான் என்பது உண்மையாகும் என்றால் உலகோர் காண நீ வருவாய் என உரைத்தார். 

முதற் பாட்டிலே வடிவு பெற்று அடுத்த எட்டுப் பாட்டுக்களில் பன்னிரண்டு வயதை எய்தினாள் பூம்பாவை. சமணரைக் குறிப்பிட்டு பாடி முடித்ததும் குடம் உடைந்தது. பூம்பாவை பொங்கி எழும் எழிலோடு கூம்பிய தாமரை மலர்ந்தாற்போல் திருமகளை ஒத்தப் பேரழகு மிக்க வடிவோடு எழுந்து நின்றாள் பூம்பாவை குடத்தினின்றும் வெளியே வந்து இறைவனை வழிபட்டு ஞானசம்பந்தரின் திருவடித்தாமரைகளில் வீழ்ந்து வணங்கி எழுந்தாள். சிவநேசரும், அடியார்களும் வியக்கத்தக்க இவ்வருட் செயலைக் கண்டு மெய்யுருகி நின்றனர். சிவநேசர் ஆளுடைப் பிள்ளையாரிடம் தன் மகளை மணம் புரிந்து வாழ்த்தியருள வேண்டும் என பணிவன்போடு பிரார்த்தித்தார். ஞானசம்பந்தர் புன்முறுவல் பூக்கச் சிவநேசரை நோக்கி, உமது மகள் அரவந்தீண்டி இறந்துவிட்டாள். ஆனால் இவளோ அரனார் அருளால் மறுபிறப்பு எடுத்துள்ளாள். எனவே, இவள் என் மகளுக்கு ஒப்பாவாளேயன்றி நான் மணம் செய்ய ஏற்றவளல்ல என மொழிந்தார். 

சிவநேசரும் உண்மையை உணர்ந்து தெளிந்தார். அவர் ஞானசம்பந்தரின் திருவடியை வணங்கி தம் மகளோடு திரும்பினார். பூம்பாவை முன்போல கன்னி மாடத்தில் வாழ்க்கையைத் தொடங்கினாள். சிவனாரை எண்ணித் தவமிருந்து இறுதியில் அவரது திருவடித் தாமரையை அடையும் சிறந்த ஆற்றலையும் பெற்றாள். இவ்வாறு பூம்பாவைக்கு மறுபிறப்பு கொடுத்த ஞானசம்பந்தர் கற்காம்பாள் சமேத கபாலீச்சுரரை வணங்கி விட்டு தமது புண்ணிய யாத்திரையை புனித மண்ணில் துவங்கினார். திருவான்மியூர், திருஇடைச்சுரம், திருக்கழுக்குன்றம், அச்சிரப்பாக்கம், திருவரசிலி, திருப்பனங்காட்டூர் முதலிய தலங்களைத் தரிசித்தவண்ணம் மீண்டும் தில்லையை வந்தடைந்தார். 

தில்லைவாழ் அந்தணர்கள் எதிர்கொண்டு அழைக்கத் திருஞானசம்பந்தர் தில்லை அம்பல நடராசப் பெருமானைத் தரிசித்தார். பைந்தமிழ்ப் பாமாலையால் ஆடும் கூத்தனைக் கொண்டாடினார். அங்கியிருந்து புறப்பட்டு முத்துச்சிவிகையில் தமது பிறந்த ஊரான சீர்காழியை வந்தடைந்தார். பெற்றோர்களும் மற்றோர்களும் மேளதாளத்துடன் பிள்ளையாரை வரவேற்றனர். எல்லையில் நின்றவாறே தோணியப்பரைச் சேவித்து அம்பலத்துள் எழுந்தருளினார். பிரம்மபுரீசுரர் திருமுன் சைவப்பிழம்பாய் நின்று வழிபட்ட ஞானசம்பந்தப்பிரான் அன்பர்களும் தொண்டர்களும் புடைசூழத் தமது திருமாளிகைக்கு எழுந்தருளினார். 

இத்தருணத்தில் திருமுருக நாயனார். திருநீலநக்க நாயனார் முதலிய சிவனருட் செல்வர்கள் மற்றும் அன்பு அடியார்கள் தங்கள் சுற்றத்தாருடன் சீர்காழிக்கு வந்தனர். ஞானசம்பந்தர் அவர்களை வணங்கி வரவேற்றார். ஞானசம்பந்தர் பெருமகிழ்ச்சியோடு அவர்களது வருகையைச் சிறப்பித்துப் பெருமையுற்றார். அவ்வடியார்களும் சம்பந்தரைப் போற்றி பணிந்தனர். அவ்வடியார்களோடு தினந்தோறும் திருத்தோணியப்பரை வழிபட்டு சிவப்பாடல்களைப் பாடி வந்தார் சம்பந்தர். இவ்வாறு சீர்காழியில் தங்கியிருந்து தோணியப்பரின் தாளினுக்குத் தண்தமிழ்ப் பதிகப் பாமாலைகள் பல சூட்டி மகிழ்ந்த ஞானசம்பந்தருக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று பெற்றோர்களும், சுற்றத்தார்களும் தீர்மானித்தனர். 

அவர் ஞானசம்பந்தரை அணுகி, வேதநெறியின் முறைப்படி வேள்விகள் பல செய்வதற்கு இத்தருணத்தில் திருமண வாழ்க்கையை மேற்கொள்வதுதான் மிக்கச் சிறப்புடையதாகும் என்று செப்பினர். அவர்கள் மொழிந்தது கேட்டு, உங்கள் முடிவு உலகோரால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும் என்பதனை நான் மறுப்பதாக இல்லை. இருந்தாலும் தற்போது மண வாழ்க்கையை மேற்கொள்வதை நான் சற்றும் விரும்பவில்லை என்று விடையிறுத்தார். உலகப்பற்று எனும் பாசத் தொடர்பை விட்டு அகலும் அரும்பெரும் நிலையை இறைவன் திருவருளால் அடைந்துவிட்ட ஞானசம்பந்தர் திருமணம் செய்து கொள்ள இசையவே இல்லை. ஆனால் சிவபாதவிருதயரும், மறையவர்களும் மறையவர்களுக்குரிய அறத்தை எடுத்துக்கூறி அவரை வைதீக நெறிப்படி ஒழுகுமாறு வற்புறுத்தினர். இறுதியில் ஞானசம்பந்தர் அவர்களது வேண்டுகோளுக்கு ஒருவாறு இசைந்தார். அனைவரும் பெரும் மகிழ்ச்சி பூண்டனர். 

திருப்பெருண நல்லூரில் வாழும் நம்பியாண்டார் நம்பியின் திருமகளே ஞானசம்பந்தருக்கு மணமகளாக வரத் தகுதியுடையவள் என்பதைத் தீர்மானித்தனர். அக்குலமகளையே மணம் முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். கணித மங்கல நூலோர் வகுத்துக் கொடுத்த சிறந்த ஓரையில் திருமண நந்நாள் குறிக்கப்பட்டது. நாளோலை உறவினருக்கும், சுற்றத்தாருக்கும் அனுப்பப்பட்டது. திருமணத்திற்கு ஏழு நாட்கள் முன்பே சுற்றமும், நட்பும் சிவபாதவிருதயர் பெருமனையில் மகிழ்ச்சி பொங்க வந்து கூடினர். திருஞானசம்பந்தரின் திருமணத்தை விண்ணவர் வியக்குமளவு மிக்கச் சிறப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். எங்கும் விதவிதமான அலங்காரங்கள் செய்தனர். 

முத்து வளைவுகள் அமைத்து அழகிய மாவிலைத் தோரணங்களும், புத்தம் புது மலரால் கட்டப்பட்ட பூமாலைகளும் தொங்க விட்டனர். வீதி முழுவதும், ஆலயத்தைச் சுற்றியும் மிகப் பிரம்மாண்டமான அலங்காரப் பந்தல்கள் போடப்பட்டன. முரசங்கள் முழங்க, இசைக் கருவிகள் ஒலிக்கப் பொன்மணிப் பாலிகை மீது புனித முளையை நிறைத்து பாலும் நீரும் கலந்து தெளித்தனர். மாடமாளிகைகளையும், மணிமண்டபங்களையும் எண்ணத்தைக் கவரும் வண்ண ஓவியங்களால் அழகுற அலங்கரித்தனர். வேதியர் குலப் பெண்கள் வாயிற் புறங்களில் அழகுக் கோலமிட்டனர். தீபங்களை ஏற்றினர். பொற்சுண்ணங்களையும், மலர்த் தாதுக்களையும் எங்கும் தூவினர். புண்ணிய புது நீரைப் பொற்குடங்களில் நிறைத்தனர். 

சிவபாதவிருதயர் சீர்காழியிலுள்ள திருத்தொண்டர்களை வரவேற்று வணங்கினார். திருமணத்திற்கு வருகை தந்துள்ளோரை உபசரித்து மனம் மகிழ்ச்சியுற செய்தார். தான தருமங்களைச் செய்து கொண்டேயிருந்தார். எங்கும் மகிழ்ச்சி வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. திருமணத்திற்கு முதல் நாள் மறையோர்களும், தொண்டர்களும் திருஞான சம்பந்தருக்கு இறைவன் திருவருள் பொருந்திய திருக்காப்பு நாணினைச் செய்து அத்திருக் காப்பு நாணினை நகர்வலம் கொண்டு வந்தனர். தேவகீதம் ஒலிக்க மங்கள முழக்கத்துடன் மணமலரும், சாந்தும், பொன் அணிகளும், அழகிய துகிலும் அணியப்பெற்று, புண்ணியத்தின் திருவுருவத்தைப் போல் மலரணையில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரின் திருக்கையில் மறைமுமைப்படி வேதியர்கள் திருக்காப்பு நாணினைக் கட்டினர். 

மறுநாள் திருமணத்தன்று வைகறைப் பொழுது துயிலெழுந்த ஞானசம்பந்தர் திருத்தோணியப்பர் தரிசனத்திற்குப் பிறகு திருமணச் சடங்கினை மேற்கொள்ளலானார். சீர்காழிப் பதியிலிருந்து பொன்னொளி பொருந்திய முத்துச் சிவிகையில் அமர்ந்து திருநல்லூர்ப் பெருமணம் என்னும் திருப்பதிக்கு எழுந்தருளலானார். இயற்கை அருளோடும், இறைவன் அருளோடும் முத்துச் சிவிகைக்கு முன்னும் பின்னும் மங்கள வாத்தியங்களும், தேவ துந்துபிகளும் முழங்கின. சிவயோகிகள் உற்றார் உறவினர் புடைசூழ திருஞானசம்பந்தர், திருசடைபிரானின் சேவடியைத் தமது திருவுள்ளத்தில் சிந்தித்தவாறு திருநல்லூர்ப் பெருமணம் என்னும் தலத்தை அடைந்தார். 

திருநல்லூர்ப் பெருமணத்து அடியார்களும், பெண்வீட்டார் பலரும் ஞானசம்பந்தரை எதிர்கொண்டழைக்க எல்லையிலேயே காத்திருந்தனர். ஞானசம்பந்தர் முத்துச் சிவிகையில் எல்லையை வந்தடைந்ததும், வீணை ஒலியும் வேத ஒலியும் வாழ்த்தொலிகளும் விண்ணை முட்டின. அடியார்கள் ஞானசம்பந்தரை வரவேற்று திருவீதி வழியாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சிவன் மீது சுந்தரத் தமிழில் பாட்டிசைத்துப் பணிந்து மனம் குளிர்ந்த ஞானசம்பந்தர் பரமன் அருள் பெற்றுப் புறப்பட்டார். கோயிலின் புறத்தே உள்ள மடத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளினார். 

ஞானசம்பந்தரைத் திருமண கோலத்திலே அணிபுனையத் தொடங்கினார். அத்தொழிலில் தேர்ச்சி பெற்ற முதிய அந்தணர்கள் அவரைப் பொற்பீடத்தில் அமரச் செய்து, தூய திருமஞ்சன நீரை எண்ணற்ற பொற்குடத்தில் கொண்டு வந்து திருநீராட்டினர். வெண்பட்டாடையினை அணிவித்தனர். நறுமண மிக்க சந்தனக் கலவையை அவரது திருமேனியில் பூசினர். திருவடிகளிலே முத்துக் கோவைகளையுடைய இரத்தின வளையினைப் புனைந்தனர். முத்து மாலைகளைக் கொத்தாகத் திரட்டிய அணி வடத்தினை மணிக்கட்டிலே அழகுறப் புனைந்தார்கள். 

பொற்கயிற்றிலே பரு முத்துக்களைக் கோர்த்துத் திருவரையில் அரைஞாணாக விளங்கச் செய்தனர். முத்து வடங்களாலாகிய அரைப்பட்டையின் மேல் வீரசங்கிலியினைப் புனைந்தனர். முத்துக் கோரையாலாகிய பூணூலினை முறைப்படி மந்திரம், வேதம் ஓதி மாற்றி அணிவித்தனர். கழுத்திலே முத்துமாலை, விரல்களிலே வயிரமணி மோதிரம், கையிலே முத்துத்தண்டையும், கைவளையும், முழங்கையிலே, மணிவடங்கள், தோளிலே முத்துமணி ஆபரணங்கள், கழுத்திலே உருத்திரச் சண்டிகையும் முத்துவடமும், காதுகளிலே மகரக் குண்டலமும் ,சிரசிலே முத்து வடமும், இவரது வைரமிழைத்த பொன்னாற் மேனிதனிலே நவரத்தின மணிகளாலும், தெய்வத்தன்மை பிரகாசிக்கத் திருமண அலங்காரத்தை ஒளியுறச் செய்தனர். 

அலங்கார வைபவம் முடிந்ததும் ஞானசம்பந்தர் உருத்திராட்ச மாலையினை எடுத்து நமச்சிவாய என்ற திருநாமத்தை மனதிலே தியானித்தவாறு தொழுது தாமே கழுத்தில் அணிந்து கொண்டார். ஞானசம்பந்தர் கோடி சூரிய பிரகாச ஒளியுடன், அன்பர்களும், அடியார்களும், உறவினர்களும் சூழ்ந்துவர, திருமணம் நடக்க இருக்கும் நம்பியாண்டார் நம்பியின் பெருமனைக்குள் எழுந்தருளினார். பந்தலிலே போடப்பட்டிருந்த முத்துக்குடை நிழலின் கீழ் பொற்பலகையில் அமர்ந்தார். சங்கநாதங்களும், சுந்தர கீதங்களும், மங்கல இசைக் கருவிகளும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன. வாழ்த்தொலிகளும், வேத முழக்கங்களும் இடையறாது ஒலித்துக் கொண்டேயிருந்தன. இதே சமயத்தில் நம்பியாண்டார் நம்பியின் அருந்தவப்புதல்விக்குக் காப்பு கட்டிச் சங்கற்பம் முதலிய வேதச் சடங்குகளைச் செய்தனர். 

அப்பவளக் கொடி பெண்ணுக்கு வைரத்தாலும், நவமணிகளினாலும் செய்யப்பட்ட பசும் பொன் ஆபரணங்களை வரிசையாகச் சூட்டி அலங்காரப் பொன் விளக்கு போல் பொலிவு பெறச் செய்தனர். அந்தணர் குலக் குழந்தைகள், ஓங்கி எழுந்த ஓமப்புகையில், வாசனைத் தூளை வீசினர். வேதியர்கள், பொற் கலசத்திலிருந்து நன்னீரையும், அரசிலையும், தருப்பையும் கொண்டு தெளித்தார்கள். அழகு மகளிர் நறுமலர்களைத் தூவினர். குறித்த நேரத்தில் சிவக்கொழுந்தும், அக்கொழுந்தின் கரம்பற்றப் போகும் பொற்கொடி போன்ற நற்குண நங்கையும் ஆதிபூமி என்னும் மணவறையின் உள்ளே அமர்ந்தருளினார். நம்பியாண்டார் நம்பி ஞானசம்பந்தருடைய கரத்தில் மங்கள நீரினை மும்முறை வார்த்துத் தமது மகளைத் தாரை வார்த்துக் கொடுத்தார். 

ஞானசம்பந்தர், மங்கை நல்லாளின் கரம் பற்றி ஓமத்தைச் சுற்றி வலம் வந்தார்.அப்பொழுது அவரது திருவுள்ளத்திலே, எனக்கு ஏன் இந்த இல்லற வாழ்க்கை வந்தமைந்தது? சிற்றின்பத்தில் உழலு வதைவிட, இவளுடன் எம்பெருமானின் திருவடி நீழலை அடைந்தே தீருவது என்று பேரின்ப ஆசை அமிர்தம் போல் சுரந்தது. அத்தகைய மெய்ஞ்ஞான எண்ணத்தோடு, ஞான சம்பந்தர் மனைவியோடும், மற்றவரோடும், உற்றார் உறவினர்களோடும் திருமணப் பெருங்கோயிலை வந்தடைந்தார். சிவனடியார் மலரடியை மனதிலே நிறுத்தி, தன்னை அவரது சேவடியில் சேர்த்துக் கொண்டருள வேண்டும் என்ற கருத்துடன், நல்லூர்ப் பெருமணம் என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடி அருளினார். 

அப்பொழுது விண்வழியே அசரீரியாக எம்பெருமான், நீயும், உன் மனைவியும், உன் புண்ணிய திருமணத்தைக் காண வந்தவர்களும், எம்மிடம் சோதியினுள்ளாகக் கலந்தடையுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருள் செய்தார். எம்பெருமான் மூன்று உலகங்களும் தம் ஒளியால் விளங்கும் வண்ணம் சோதிலிங்கமாக காட்சி அளித்தார். அப்பேரொளி திருக்கோயிலையும் தன்னகத்தே கொண்டு மேலோங்கி ஒளிமயமாக ஓங்கி நின்றது. அச்சோதியிலே ஓர் வாயிலையும் காட்டியருளினார். அன்பும், அறமும், அருளும், திருவும் உருவாகக் கொண்ட உமையாளின் திருமுலைப் பாலுண்ட புண்ணியத்தின் திரு அவதாரமாகிய திருஞானசம்பந்தப் பெருந்தகையார் - சைவத்தை வளர்த்து, செந்தமிழ்ப் பதிகம் பல பாடிய தென்னகத்துத் தெய்வப் புதல்வன் சிவபரஞ் சுடராகிய மனநல்லூர்ப் பெருமானைத் தொழுது போற்றினார். 

தண் தமிழால் பாடிப் பரவசமுற்றார். தேன் தமிழால் அபிஷேகம் செய்தார். பக்தி வெள்ளத்தில் மூழ்கினார். உலகம் உய்ய, சிவஞான நெறியினை எல்லார்க்கும் அளிக்க வல்லது நமச்சிவாய என்னும் திருவைந் தெழுத்துப் பெருமந்திரமாகும் என்று திருவாய் மலர்ந்தருளினார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தினை, விண்ண வரும், மண்ணவரும் கேட்கும் வண்ணம் பாடினார் சம்பந்தர். திருஞான சம்பந்தர் அனைவரையும் நோக்கி, பிறவித் துயரம் தீர யாவரும் இப்பேரொளியிலே புகுவீர்களாக என்று கேட்டுக் கொண்டார். 

சிவாய நம; சிவாய நம என்ற வேத மந்திரத்தினை விண்ணை முட்டும் வண்ணம் பெருமழை போல் கோஷித்து வாழ்த்தினர். எல்லையில்லாத பிறவி என்னும் வெள்ளத்திலே மூழ்கித் தத்தளித்துக்கொண்டு, காற்றடைத்த பையாகிய காயத்திலே அடைபட்டு, உய்ய உணர்வின்றி மயங்கும் மக்களுக்கு பேரின்ப வழிகாட்டிய திருஞான சம்பந்தரின் திருவடியைத் தொழுது, நமச்சிவாய மந்திரத்தை மனதிலே தியானித்த வண்ணம் மக்கள் யாவரும் சோதியினுள்ளே புகுந்தனர். திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், திருநீல கண்ட யாழ்ப்பாண நாயனார், சிவபாத விருதயர், நம்பியாண்டார் நம்பி ஆகிய சிவனருட் செல்வர்கள் தம் இல்லறத்தாருடன் பேரொளியில் புகுந்தனர். ஏனையவர்களும், திருமணத்திற்கு வந்தணைந்தவர்களும், திருமணத்திற்கு பணிகள் செய்தோரும் தத்தம் மனையார்களோடு பேரொளியில் புகுந்தார்கள். 

அருந்தவசிகளும், மறைமுனிகளும், ஆலயம் தொழ வந்த சால்புடை மக்களும் சோதியினுள் கலந்தனர். பேரின்ப வீட்டிற்குப் பெருவழிகாட்டிய ஞான சம்பந்தப் பெருமான் தம் மனைவியாரின் கையைப் பிடித்தவாறே அச்சோதியினை வலம் வந்தார். நமச்சிவாய என்ற நாமத்தை முழக்கியவாறு, சோதியினுள் புகுந்தார்.அதன் பின்பு அப்பேரொளியில் காணப்பட்ட வாயிலும் மூடிக்கொண்டது. தேவர்களும், முனிவர்களும், சிவகணத்தவர்களும் சிந்தை மகிழ்ந்து போற்றித் துதித்தனர். கொன்றை மாலையை அணிந்த செஞ்சடை வண்ணர், உமாதேவியாருடன் விடைமேல் தோன்றி அருளினார். பேரொளி புகுந்த சிவனருட் செல்வர்களைத் தமது திருவடி நீழலை அடைந்து திருப்பணி புரியும் திருப்பேற்றை அளித்தார். வேதங்களையும், ஏழுலகங்களையும் ஈன்று கருணை வடிவமாக நின்ற உமாதேவியாரின் திருமுலைப் பாலினைச் சிவஞான அமுதத்தோடு உண்டு, அருள்பெற்று, சைவத்தை உயர்வித்த அருந்தவச் செல்வன் திருஞான சம்பந்தப் பெருமானையும் அவர் தம் மனைவியாரையும் எம்பெருமான் தமது அருகிலேயே அணைந்து வாழும் நிகரில்லாப் பெருவாழ்வை அளித்தருளினார். 

"அருந்தமிழா கரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம்
தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணிமேல்
பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால்
வரும் தகைமை கலிக்காமனார் செய்கை வழுத்துவேன்."

பாடல் விளக்கம்:
அரிய தமிழுக்கு இருப்பிடமான ஆளுடைய பிள்ளையாரின் வரலாற்றை, அடியேனுக்கு அவருடைய திருவடிகள் அறிவித்தருளிய முறையில் வணங்கிக் கூறினேன். இனிப் பெரிய கொடையும், உறுதிப்பாடான வன்மையும், பேருணர்வும் திருத்தொண்டு செய்த காரணத்தால் பெற்ற அடியவராயஏயர்கோன் கலிக்காம நாயனார் செய்த திருத்தொண்டின் திறங்களைப் போற்றத் தொடங்குவேன். 


நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment