Sunday, 31 July 2016

52 முனையடுவார் நாயனார் புராணம்

"அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற்கு அடியேன்."

"கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு வழங்கிய வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சோமநாதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ வேதநாயகி

அவதாரத் தலம் : திருநீடூர்

முக்தி தலம் : திருநீடூர்

குருபூஜை நாள் : பங்குனி - பூசம்

"இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள்
சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறுநெய் கறி தயிர் பால் கனி உள் உறுத்த கலந்து அளித்து
மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார்."

பாடல் விளக்கம்:

இவ்வகையால் பெறும் செல்வம் எல்லாவற்றையும், சிவனடியார்கள் தாம் கேட்டவாறு கொடுத்துத், தூய சர்ச்சரை, நறுமணம் பொருந்திய நெய், கறி, தயிர், பால், கனி என்ற இவை எல்லாவற்றையும் கலந்து திருவமுது அளித்து, நிலைபெறும் அன்பு நெறியில் பிறழாத வழித்தொண்டைச் செய்து வந்தார்.

முனையடுவார் நாயனார் புராணம்



சோழவள நாட்டில் உள்ள சிவத்தலங்களில் ஒன்றான திருநீடுர் பதியில் வீர வேளாளர் குடியிலே முனையடுவார் நாயனார் வாழ்ந்து வந்தார். இவர் போர் வீரர்களுக்குத் தலைவராக இருந்து வந்தார். இவர், தம்மோடு வீரமிக்க வேறு சில வீரர்களையும் சேர்த்துக்கொண்டு வீர அணி ஒன்றை அமைத்து வைத்துக்கொண்டு இருந்தார். தங்களை நாடி வரும் மன்னருக்கு உதவியாக களம் சென்று அம்மன்னர்க்கு வெற்றியைத் தேடித் தருவார்.

இஃது ஒரு பழங்கால வழக்கம். இவ்வழக்கத்தையே தமது தொழிலாலக் கொண்டு, வாழ்ந்து வந்த முனையடுவார் தமக்கு கிட்டிய ஊதியத்தைச் சிவன் கோயில் திருப்பணிக்கும், சிவனடியார்கள் திருத்தொண்டிற்கும் பயன்படுத்தினார். திருநீடுர்ப் பெருமான் பேரருளால் பொன்னும் பொருளும் புகழும் சேர்ந்தது. அத்தனையும் ஆண்டவனுக்கும் அடியவர்க்கும் செலவிட்டார். உலகில் பல்லாண்டு காலம் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்தார்.

"யாவர் எனினும் இகலெறிந்தே ஈசனடியார் தமக்கின்பம்
மேவ அளிக்கும் முனையடுவார் விரைப் பூங்கமலக் கழல் வணங்கித்
தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செங்கோல் முறை புரியும்
காவல் பூண்ட கழற்சிங்கர் தொண்டின் நிலைமை கட்டு உரைப்பாம்."

பாடல் விளக்கம்:

எதிர்ப்பவர் யாவராயினும் அவரைப் போரில் வெற்றி கொண்டு, அதனால் பெற்ற அச்செல்வங்களை, இறைவன் அடியார்க்கு அளித்த முனையடுவார் நாயனாரின் மணம் பொருந்திய தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, இனித் தேவர் தலைவரான சிவபெருமானின் சைவநெறி விளங்கச் செங்கோன்மை செய்யும் காவல் பூண்ட கழற்சிங்க நாயனார் தொண்டின் நிலையைச் சொல்வாம்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment