Saturday, 23 July 2016

22 குலச்சிறை நாயனார் புராணம்

"பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்"

"பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஜெகதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஜெகத்ரட்சகியம்பாள்

அவதாரத் தலம் : மணமேற்குடி

முக்தி தலம் : மதுரை 

குருபூஜை நாள் : ஆவணி - அனுஷம்

"குறியில் நான்கு குலத்தினர் ஆயினும் 
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும் 
அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில் 
செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார்."

பாடல் விளக்கம்:

வினை வழிப்பட்ட நிலையில் தோன்றிய நான்கு குலத்தவர்களாக இருப்பினும், அவ்வவ்வொழுக்க நெறியினின்றும் நீங்கியவர்களாக இருப்பினும், சிவபெருமானிடத்தில் நிலைபெற்ற அறிவுடையவர்கள் என அறியப் பெறின், அவர்களை மனம் பொருந்தப் பணிந்து வணங்கும் செய்கையினை உடையார்.

குலச்சிறை நாயனார் புராணம்



கத்தும் கடலும் அதனில் முத்தும் மூத்த முத்தமிழும் சந்தனமும் செந்தண்மையும் உடைய பாண்டி நாடு என்று பழம்பெரும் புலவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட பாண்டிய நாட்டில் அமைந்துள்ள திருத்தலம் மணமேற்குடி! இத்திருநகரில், சிவனடி போற்றும் தவசீலர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் உயர் குடியில் பிறந்த குலச்சிறையார் என்பவரும் ஒருவராவார். 

இளமை முதற்கொண்டே முக்கண்ணரின் பாத கமலங்களில் தம் சித்தத்தை செலுத்தி, சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு புரிவதில் திண்மையையும், உண்மையையும் உடையவராய் விளங்கினார். தொண்டர்களின் திருவடியே பேரின்ப வீடு பேற்றிற்குப் பாதை காட்டும் நன்னெறி என்பதனை உணர்ந்தார். தம்மை வந்தடையும் அடியார்கள் எக்குலத்தவராயினும் வேற்றுமை பாராது, சிவமாகவே கருதி வழிபட்டு வந்தார். 

உயிரை வளர்த்துப் பக்தியைப் பெருக்கும் சமய ஞானமே சகல நலங்களுக்கும் ஆணிவேர் போல் விளங்குகிறது. அத்தகைய சமய ஞானமற்ற வாழ்வு அஸ்திவாரமில்லா கட்டிடம் போலாகும் என்ற சமயக் கொள்கையின் சிறப்பினை நன்கு கற்றுத் தெளிந்திருந்த வித்தகர் குலச்சிறையார். இவர் மதுரையை ஆண்டு வந்த நின்றசீர் நெடுமாறனிடம் தலைமை அமைச்சராய்ப் பணியாற்றி வந்தார்.

இத்தொண்டர் அமைச்சராகப் பணிபுரிந்து வரும் நாளில் பாண்டிய நாட்டில் சமணர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்ப பல வழிகளில் முயன்றார்கள். குலச்சிறையாரும் சைவ மதக் கொள்கைகளை விடாமல் பற்றிக் கொண்டு ஒழுகினார். அத்தோடு சமணக் கொள்கைகளை மண் மூடுவதற்கு உறுதுணையாகவும் இருந்தார். பாண்டியமாதேவியாருடைய ஒப்பற்ற சிவத்தொண்டிற்கு உண்மைத் தொண்டராகி பணியாற்றினார் குலச்சிறையார். 

குலச்சிறை நாயனார் திருஞானசம்பந்தரை மதுரைக்கு எழுந்தருள செய்து, சைவ மதத்தின் கொள்கையை உலகறியச் செய்தார். குலச்சிறையாரை சுந்தரமூர்த்தி சுவாமிகளும், ஒட்டக் கூத்தரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பதிகங்களில் பாராட்டியுள்ளார்கள். இவ்வாறு சிவநாமத்தைச் சித்தத்தில் பதிய வைத்து சைவ நெறியை உலகமெல்லாம் பரப்பிட வாழ்ந்து காட்டிய குலச்சிறையார் இறுதியில் எம்பெருமானின் தூய மலர்ப் பாதகமலங்களைப் பற்றி வாழும் பேரின்பத்தைப் பெற்றார். 

"வாதில் தோற்ற அமணரை வன்கழுத்
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்
யாது போற்றினேன் மேலினி ஏத்துகேன்
வேத நீதி மிழலைக் குறும்பர்தாள்."

பாடல் விளக்கம்:

பாண்டியன் உற்ற வெப்பு நீக்கம் முதலாக நேர்ந்த மூவகை வாதங்களிலும் தோல்வியுற்ற சமணர்களை, வலிய கழுமரத்தில், அவர்கள் இதுகாறும் செய்து வந்த தீமைகளினின்றும் நீங்க, அதன்கண் ஏற்றுவித்த குலச்சிறையாரின் ஆற்றலை, இதுகாறும் எவ்வகையில் போற்றி செய்து வணங்கினேன்? ஒருவகையிலும் போற்றி செய்தேனல்லேன். இனி நான்மறைகளிலும் கூறப்பெற்ற அறங்களைப் போற்றி மகிழும் பெருமிழலைக் குறும்பரின் திருவடிகளைப் போற்றத் தொடங்குகின்றேன்.


நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment