Sunday, 31 July 2016

58 பத்தராய்ப் பணிவார் புராணம்

"பத்தராய்ப் பணிவார் எல்லார்க்கும் அடியேன்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமூலட்டானேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிவகாமியம்மை

அவதாரத் தலம் : தில்லை

முக்தி தலம் : தில்லை

குருபூஜை நாள் : பங்குனி கடைசி நாள்

"ஈசனுக்கே அன்பானார் யாவரையும் தாம் கண்டால்
கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று
ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார்."

பாடல் விளக்கம்:

சிவபெருமானுக்கே அன்பு செலுத்துபவர்கள், அடியவர்கள் எவரையும் தாம் கண்டால் கூசி, மிகவும் உள்ளத்தில் விருப்புற்று மகிழ்ந்து, ஆசையால், தாய்ப்பசுவின் பின்பு கன்று அணைவதைப் போல் சேர்ந்து, அவர்களிடம் பேசுபவை எல்லாம் இனிய சொற்களாகவே பேசுவர்.

பத்தராய்ப் பணிவார் புராணம்



பத்தராய்ப் பணிவார்கள் என்போர் எப்பொழுதும் எம்பெருமான் திருவடிக்கே அன்பு பூண்டு பக்தியுடன் ஒழுகும் அருந்தவத்தினையுடைய தொகையடியார் ஆவர். விடையவர் திருவடியைப் பேணும் சிவனருட் செல்வர். எவரைக் கண்டாலும் தாய்ப்பசுவைக் கண்ட கன்றைப்போல் உள்ளம் உருகி உடல் பூரித்துப் பக்தி வெள்ளம் பெருக இன்மொழி கூறிப் பணிவர்.

எவரேனும் அரனாரை அர்ச்சனை புரியக் கண்டால் அவர்கள்பால் ஆராக்காதல் பூண்டு மகிழ்ந்து சிந்தை குளிர்ந்து வணங்கி இன்புறுவர். எல்லாப் பணிகளையும் சிவார்ப்பணமாக கருதுபவர். புண்ணியத்தையும் புகழையும் விரும்பாமல் மேன் மேலும் உவகை பொங்க வழிபடுவர். சிவக் கதைகளைக் கேட்டுச் சிந்தை மகிழ்வர். பிறவிப் பெருந்துன்பத்தைப் பெற்று அல்லலுறாமல் அன்பினோடு சிவப்பணிகள் புரிந்து புவனம் வியக்கப் பெரும் புகழ் பெற்று ஓங்கி நிற்பர்.

எம்பெருமானுடைய கமலமலர்ப் பாதங்களை அடைவதற்கு இவர்களே உரியவர்கள். சிவபெருமானை மெய்யுருக அபிஷேக ஆராதனை செய்து பூசிப்பர். இச்சிவனரும் செல்வர்க்கு பக்தியால் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகிவரும். அவ்வாறு பெருகி வரும் கண்ணீர் மேனியிலுள்ள திருவெண்ணீற்றை அழிக்கும். எந்நேரமும் சித்தத்தைச் சிவன்பால் அர்ப்பணித்து நிற்கும் ஒப்பற்ற அன்புச் செல்வர்கள் இவர்கள் என்றால் அஃது ஒருபோதும் மிகையாகாது! பத்தராய்ப் பணிவார்கள், நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், துயின்றாலும், விழித்தாலும், இமைத்தாலும் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற ஐயனின் பொன்மலர்ப் பாதங்களையே நினைத்திருக்கும் பெருந்தகையாளர்களாக விளங்குபவர்.

"சங்கரனுக்கு ஆளான தவம் காட்டித் தாமதனால்
பங்கமறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார்."

பாடல் விளக்கம்:

சிவபெருமானுக்கே அடிமையாகிய தவத்தை மேற்கொண்டு, உலகிற்கு அதனை விளக்கித், தாம் அதனால் குற்றம் நீங்கிய பயனைப் பெறுவர்; உலகை விளங்கச் செய்யும் பெருமையை உடையவர்; அங்கணராய சிவபெருமானைத் திருவாரூர் ஆளும் இறைவரின் திருவடிகளை வணங்கி, மேன்மேலும் எழும் பத்திமை உறைப்புடைய பத்தராய் விளங்குவர்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

No comments:

Post a Comment